Tamil Bayan Points

தூய்மை – 1

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்

Last Updated on February 1, 2017 by Trichy Farook

தூய்மை – 1

முன்னுரை

இன்று உலகில் எங்கு நோக்கினும் ஆபாசங்களும் அசுத்தங்களும் நம்பிக்கை மோசடியும் நிறைந்து காணப்படுகின்றது. உடலளவிலும் மனதளவிளும் தூய்மையாக வாழ்பவர்கள் விரல்விட்டு எண்ணும் அளவில் மக்களில் கணிசமானவர்களாக இருக்கின்றனர் இஸ்லாம் தூய்மையாக வாழவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது .

தூய்மையாக வாழ்பவன் வெற்றி பெற்றான்.

அல்குர்ஆன் 87:14

தூய்மை என்பது விரிந்த பொருள் கொண்ட வார்த்தையாகும். இது ஒருவன் தன் உடல் மற்றும் அவனுடைய பொருட்கள் மற்றும் சுற்றுப்புற சூழலை தூய்மையாக வைத்திருப்பதையும், பெற்றோர் மற்றும் உறவினர்கள், அண்டை, அயலார் மற்றும் நம் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய அனைவரிடமும் நேர்மையாக, நீதியாக, நம்பிக்கைக்குரியவராக, ஒழுக்கமிக்கவராக இருப்பதையும், மற்றவர்களுக்கு உபதேசம் செய்வதையும் நம்முடைய பொருட்களுக்கான ஜகாத்தை உரிய முறையில் வழங்குவதையும் மொத்தத்தில் அந்தரங்க மற்றும் வெளிப்படையான வாழ்க்கையில் தூய்மையாக இருப்பதையும் குறிக்கும் சொல்லாகும்.

உடல் தூய்மை

காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை இஸ்லாம் நமக்கு தூய்மையாக வாழ கற்றுக்கொடுக்கிறது .ஆன்மீகத்தின் பெயரால் நகங்களை வெட்டாமல் இருப்பதும் முடிகளை சீர்செய்யாமல் இருப்பதும் இஸ்லாத்திற்கு புறம்பான செயலாகும். பல் துலக்குதல், குளித்தல், உளுச்செய்தல், ஆடைகளை துவைத்தல், வீட்டை தூய்மைப்படுத்துதல் போன்ற தூய்மைக்கு முக்கியத்துவப்படுத்தும் விஷயத்திலும் சிலர் அசட்டையாக இருப்பதை நாம் காண்கின்றோம். பாத்திரங்களை கழுவ வேண்டும் என்பதற்காகவே ஹோட்டலில் உணவுப்பொருட்களை வாங்கும் அளவிற்கு சோம்பேறியாக உள்ளனர்.

காலையில் எழுந்தவுடன் கைகளை கழுவுதல் :

காலையில் எழுந்ததும் பல்துலக்காமல் கைகளை கழுவாமல் சாப்பிடும் வழக்கம் மக்களிடத்தில் காணப்படுகின்றது. இது சிறந்த நடைமுறையாகவும் கருதப்படுகின்றது. இதற்கு பெட் காஃபி என்று கூறிக் கொண்டு பலதுலக்காமல் அருந்துவதைப் பார்க்கிறோம். இது தூய்மையற்ற ஒரு நடைமுறையாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் உளூச் செய்தால் தமது மூக்கிற்கு நீர் செலுத்தி (மூக்கை அசைத்து)ச் சிந்தட்டும். மலஜலம் கழித்துவிட்டு கற்களால் சுத்தம் செய்பவர் ஒற்றைப்படையாகச் செய்யட்டும். உங்களில் ஒருவர் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தால் அவர் தாம் உளூ செய்யப்போகும் பாத்திரத்திற்குள் கையை நுழைப்பதற்கு முன்னால் கையை கழுவிக்கொள்ளட்டும். ஏனென்றால் உங்களில் எவரும் இரவில் (உறங்கும்போது) தமது கை எங்கே கிடந்தது என்பதை அறியமாட்டார்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி 162

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் தூக்கத்தி-ருந்து எழுந்து உளூ செய்தால் மூன்று முறை (நீர் செலுத்தி) நன்கு மூக்கைச் சிந்தி (தூய்மைப் படுத்தி)க்கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் (தூங்கும்போது) மூக்கின் உட்பகுதிக்குள் ஷைத்தான் தங்கியிருக்கின்றான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர),

நூல் : புகாரி 3295

பல் துலக்குதல் :

ஹுதைஃபா (ரலி-) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் இரவில் (தொழுகைக்காக) எழும்போது பல்துலக்கு(ம் குச்சியால் வாயை சுத்தம் செய்)வார்கள்.

நூல் : புகாரி 889

ஷுரைஹ் அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ர-) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததும் அவர்கள் செய்யும் முதல் வேலை எது?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “பல் துலக்குவது’ என்று பதிலளித்தார்கள்.

நூல் : முஸ்லிம் :423

கழிவறைக்குச்செல்லும் போது :

கழிவறைக்குச் செல்லும் போது என்ன ஒழுக்கங்களை பேண வேண்டும் என்ற முறைகளை இஸ்லாம் கற்றுகொடுக்கின்றது.

மர்ம உறுப்பை வலது கையால் தொடக்கூடாது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும்போது பிறவிஉறுப்பைத் தமது வலக் கரத்தால் தொட வேண்டாம்; வலக் கரத்தால் சுத்தம் செய்யவும் வேண்டாம். (ஏதேனும் ஒன்றைப் பருகும்போது) பாத்திரத்திற்குள் மூச்சு விடவும் வேண்டாம்.

அறிவிப்பவர் : அபூகத்தாதா (ரலி),

புகாரி :154

குளித்தல்

உடலில் உள்ள அசுத்தங்களை தூய்மை செய்யும் முறையில் மிக முக்கியமான ஒன்று தான் குளிப்பதாகும். அது சாதாரண குளிப்பாக இருந்தாலும், கடமையான குளிப்பாக இருந்தாலும் சரியே !

குளிப்பை நிறைவேற்றிய பிறகே தொழுகை :

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.

அல்குர்ஆன் :5:6

குளிப்பு கடமையாக இருக்கும் போது கடைபிடிக்க வேண்டியது

குளிப்பு கடமையாக இருக்கும் போது உண்ணுவதற்கும் உறங்குவதற்கும் விரும்பினால் உளுச் செய்வது சிறந்ததாகும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி) இருக்கும்போது உண்ணவோ உறங்கவோ விரும்பினால் (முன்னதாக) தொழுகைக்கு அங்கத் தூய்மை (உளூ) செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்துகொள்வார்கள்.

நூல் : முஸ்லிம் : 513

அப்துல்லாஹ்பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள், “எங்களில் ஒருவர் குளியல் கடமையானவராக இருக்கும் நிலையில் (குளிக்காமல்) உறங்கலாமா?” என கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஆம்; உளூ செய்துவிட்டு (உறங்கலாம்.)” என்று பதிலளித்தார்கள்.

நூல் : புகாரி :289

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், இரவு நேரத்தில் தமக்கு பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி) விடுவது பற்றிக் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ” உளூ செய்யுங்கள்; உங்கள் பிறப்புறுப்பைக் கழுவுங்கள்; பிறகு உறங் குங்கள்” என்றார்கள்.

நூல் : புகாரி : 290

கடமையான குளிப்பின் போது :

மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்கள் குளிப்பதற்குத் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தமது வலக் கரத்தால் நீர் அள்ளி இடக்கையின் மீது ஊற்றி இருகைகளையும் கழுவினார்கள்; பிறகு தமது மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். பிறகு தமது கையைப் பூமியில் மண் கொண்டு தேய்த்து பிறகு அதை (நீரால்) கழுவினார்கள். பிறகு வாய் கொப்பளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி (ச் சிந்தி)னார்கள். பிறகு தம் முகத்தைக் கழுவி, தலையில் தண்ணீர் ஊற்றினார்கள். பிறகு சற்று நகர்ந்து தம்மிரு பாதங்களையும் கழுவினார்கள். பிறகு (துடைத்துக்கொள்ள) துண்டு கொடுக்கப் பட்டது. ஆனால் அதன் மூலம் அவர்கள் துடைத்துக் கொள்ளவில்லை.

நூல் : புகாரி : 259

கை நன்றாகச் சுத்தமாவதற்காகக் கையை தேய்த்துக் கழுவுதல்:

மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காக (கடமையானக் குளியலைக்) குளிக்கும்போது (முதரில்) தமது மர்மஸ்தலத்தை கையினால் கழுவினார்கள். பிறகு கையைத் தேய்த்து கழுவினார்கள். பிறகு தொழுகைக்காக உளூ செய்வது போன்று உளூ செய்தார்கள். குளித்து முடித்து (இறுதியில்) தம்மிரு கால்களையும் கழுவினார்கள்.

நூல் : புகாரி : 260

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அஸ்மா பின்த் ஷகல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், மாதவிடாய்க் குளியல் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்களில் ஒருவர் (மாதவிடாய்க் குளியரின் போது) தண்ணீரையும் இலந்தை இலைகளையும் எடுத்து நன்கு சுத்தம் செய்துகொள்ளட்டும். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி நன்றாகத் தேய்த்து தலையின் சருமம் நனையும்வரைக் கழுவட்டும். பிறகு உடம்புக்குத் தண்ணீர் ஊற்றட்டும். அதன் பின்னர் கஸ்தூரி தடவப் பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து சுத்தம் செய்துகொள்ளட்டும்” என்று சொன்னார்கள்.

அதற்கு அஸ்மா (ரலி) அவர்கள், “அதை வைத்து அவள் எவ்வாறு சுத்தம் செய்வாள்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்!). அதனால் சுத்தம் செய்துகொள்ளட்டும்” என்று (மீண்டும்) சொன்னார்கள். உடனே நான், “இரத்தம் படிந்த இடத்தில் தடவிக்கொள்’ என்று -பிறர் காதில் விழாதவாறு அதை இரகசியமாகச்- சொன்னேன்.

மேலும், அஸ்மா நபி (ஸல்) அவர்களிடம், பெருந்துடக்கிற்காகக் குளிக்கும் முறை பற்றிக் கேட்டார். அதற்கு அவர்கள், “தண்ணீர் எடுத்து நன்கு சுத்தம் செய்துகொள். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி தலையின் சருமம் நனையும் அளவுக்கு நன்கு தேய்த்துக்கொள். பின்னர் உன் (மேனியின்) மீது தண்ணீர் ஊற்று!” என்றார்கள்.

நூல் : முஸ்லிம் 552

தூய்மை தொடரும் ….