Tamil Bayan Points

தூதர் பாராட்டிய சஹாபாக்கள்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 2

Last Updated on October 7, 2023 by Trichy Farook

முன்னுரை

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறுதி தூதராக அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். அவர்களை இறுதி தூதராக தேர்ந்தெடுத்ததற்கு முன்னரே அவர்களின் குணம், பழக்க வழக்கங்கள் அனைத்தும் மற்றவர்கள் பாராட்டி கூறும் அளவிற்கு தான் அவர்கள் நடந்து கொண்டார்கள்.

நபிகள் நாயகத்தின் மனைவி கதீஜாவே நபிகள் நாயகம் அவர்களுக்கு வியாபாரத்தில் இருந்த விசுவாசம், நியாயமான கட்டமைப்பு, வாக்குறுதியில் நேர்மை என அனைத்தும் பார்த்து தான் மணமுடித்து கொண்டார்கள். அதேப் போன்று நபிகள் நாயகம் வாழ்ந்த காலத்திலே வாழ்ந்த பல நபித்தோழர்களை நபி (ஸல்) அவர்கள் பாராட்டி இருக்கிறார்கள். அந்த இனிமையான தருணங்களை இந்த உரையில் பார்போம்..

உமர் (ரலி) கண்டு சைத்தான் விரண்டோடுதல்

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், தனது மனைவி மற்றும் மனைவியின் சகத் தோழிகள் சகஜமாக பேசி சிரித்துக் கொண்டிருக்க உமர் (ரலி) அவர்கள் முகமன் கூறி உள்ளே வர அனைத்து பெண்களும் அலறியபடி ஓடிவிட்டனர். உடனே உமர் (ரலி) அவர்கள் என்னவென்று கேட்க உங்களைப் பார்த்துதான் அனைவரும் பயந்தபடி ஓடிவிட்டனர். என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, நீர் ஒரு தெருவில் நடந்து வந்தால் சைத்தான் அடுத்த தெருவில் ஓடி விடுவான் என்று தனக்கு கொடுக்காத மரியாதையை உமர் (ரலி) அவர்களுக்கு கொடுத்தார்கள்.

(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதரிடம் (அவர்களின் மனைவிமார்களான) குறைஷிப் பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் (ஜீவனாம்சத் தொகையை) அதிகமாகத் தரும்படி தம் குரல்களை உயர்த்தி கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள். உமர் (ரலி) அனுமதி கேட்டபோது அப்பெண்கள் அவரச அவசரமாகத் தங்கள் பர்தாக்களை அணிந்தபடி எழுந்தனர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தபடியே உமர் (ரலி) அவர்களுக்கு (உள்ளே வர) அனுமதி கொடுத்தார்கள்.

உமர் (ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! தங்களை ஆயுள் முழுதும் அல்லாஹ் சிரித்தபடி (மகிழ்ச்சியாக) இருக்கச் செய்வானாக’ என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘என்னிடமிருந்த இந்தப் பெண்களைக் கண்டு நான் வியப்படைகிறேன்.

(என்னிடம் சகஜமாக அமர்ந்திருந்தவர்கள்) உங்கள் குரலைக் கேட்டவுடன் அவரச அவசரமாகப் பர்தா அணிந்தார்களே’ என்றார்கள். உமர் (ரலி), ‘எனக்கு அஞ்சுவதை விட அதிகமாக அஞ்சத் தாங்கள் தாம் தகுதியுடையவர்கள் இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறிவிட்டு, (அப்பெண்களை நோக்கி) ‘தமக்குத் தாமே பகைவர்களாகிவிட்ட பெண்களே! அல்லாஹ்வின் தூதருக்கு அஞ்சாமல் எனக்கா நீங்கள் அஞ்சுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள்.

அதற்கு அந்தப் பெண்கள், ‘ஆம், அல்லாஹ்வின் தூதருடன் ஒப்பிடும்போது நீங்கள் கடின சித்தமுடையவராகவும், அதிகக் கடுமை காட்டக் கூடியவராகவும் இருக்கிறீர்கள்’ என்று பதிலளித்தார்கள். (அப்போது) இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (உமரே!) நீங்கள் ஒரு பாதையில் சென்று கொண்டிருக்கையில் உங்களை ஷைத்தான் கண்டால் உங்களுடைய பாதையல்லாத வேறொரு பாதையில் தான் அவன் செல்வான்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி)
நூல் : புகாரி-3294 

அபூஉபைதா பின் ஜர்ராஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்புகள்

إِنَّ لِكُلِّ أُمَّةٍ أَمِينًا، وَإِنَّ أَمِينَنَا أَيَّتُهَا الأُمَّةُ أَبُو عُبَيْدَةَ بْنُ الجَرَّاحِ

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு சமுதாயத்திற்கும் (அதன்) நம்பிக்கைக்குரியவர் ஒருவர் உண்டு. சமுதாயமே!, நம்முடைய நம்பிக்கைக்குரியவர் அபூஉபைதா இப்னு ஜர்ராஹ் அவர்கள் தாம்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி-3744 

நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்த நம்பிக்கையாளர் அபூஉபைதா (ரலி)

قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَهْلِ نَجْرَانَ: «لَأَبْعَثَنَّ، يَعْنِي عَلَيْكُمْ، يَعْنِي أَمِينًا حَقَّ أَمِينٍ» فَأَشْرَفَ أَصْحَابُهُ، فَبَعَثَ أَبَا عُبَيْدَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ

நபி (ஸல்) அவர்கள் நஜ்ரான் வாசிகளிடம், ‘நம்பகத்தன்மையில் முறையோடு நடந்து கொள்ளும் நம்பிக்கையாளர் (அமீன்) ஒருவரை உங்களுக்கு நிச்சயம் நான் அனுப்புவேன்’ என்று கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் (பலர் அந்த ‘அமீன்’ என்னும் சிறப்பு தமக்கு கிட்டாதா என) பேராவல் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூஉபைதா (ரலி) அவர்களை அனுப்பி வைத்தார்கள்.

அறிவிப்பவர் : ஹுதைஃபா (ரலி)
நூல் : புகாரி-3745 

பிற்காலத்தில் சமாதானத்தை ஏற்படுத்தும் நபிகளாரின் பேரன் ஹஸன் (ரலி)

سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَلَى المِنْبَرِ وَالحَسَنُ إِلَى جَنْبِهِ، يَنْظُرُ إِلَى النَّاسِ مَرَّةً وَإِلَيْهِ مَرَّةً، وَيَقُولُ: «ابْنِي هَذَا سَيِّدٌ، وَلَعَلَّ اللَّهَ أَنْ يُصْلِحَ بِهِ بَيْنَ فِئَتَيْنِ مِنَ المُسْلِمِينَ»

நபி (ஸல்) அவர்கள் மிம்பரின் (மேடை) மீது (உரையாற்றியபடி) இருக்க ஹஸன் (ரலி), நபி(ஸல்) அவர்களின் பக்க வாட்டில் அமர்ந்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை மக்களையும் மறு முறை ஹஸன் (ரலி) அவர்களையும் நோக்கியபடி, ‘இந்த என்னுடைய (மகளின்) மகன் மக்களின் தலைவராவார். முஸ்லிம்களின் இரண்டு குழுவினரிடையே இவர் வாயிலாக அல்லாஹ் சமாதானத்தை ஏற்படுத்தவிருக்கிறான்’ என்று சொல்ல கேட்டேன்.

அறிவிப்பவர் : அபூபக்ரா (ரலி)
நூல் : புகாரி-3746 

காலித் பின் வலீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்புகள்

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، نَعَى زَيْدًا، وَجَعْفَرًا، وَابْنَ رَوَاحَةَ لِلنَّاسِ، قَبْلَ أَنْ يَأْتِيَهُمْ خَبَرُهُمْ، فَقَالَ «أَخَذَ الرَّايَةَ زَيْدٌ، فَأُصِيبَ، ثُمَّ أَخَذَ جَعْفَرٌ فَأُصِيبَ، ثُمَّ أَخَذَ ابْنُ رَوَاحَةَ فَأُصِيبَ، وَعَيْنَاهُ تَذْرِفَانِ حَتَّى أَخَذَ سَيْفٌ مِنْ سُيُوفِ اللَّهِ حَتَّى فَتَحَ اللَّهُ عَلَيْهِمْ»

ஸைத் இப்னு ஹாரிஸா அவர்களும் ஜஅஃபர் இப்னு அபீ தாலிப் அவர்களும் (அப்துல்லாஹ்) இப்னு ரவாஹா அவர்களும் (மூத்தா போர்க்களத்தில்) உயிர் நீத்து விட்ட செய்தியை, அது (மதீனாவிற்கு) வந்து சேர்வதற்கு முன்பே (இறைவனால் அறிவிக்கப் பெற்று மக்களுக்கு) நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். ‘(முதலில்) இஸ்லாமியச் சேனையின் கொடியை ஸைத் (தம் கையில்) எடுத்தார்; அவர் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு, ஜஅஃபர் (தம் கையில்) எடுத்தார். அவரும் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு இப்னு ரவாஹா (தம் கையில் கொடியை) எடுத்தார். அவரும் கொல்லப்பட்டுவிட்டார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்தன. இறுதியில் அக்கொடியை அல்லாஹ்வின் வாட்களில் ஒரு வாள் (காலித் இப்னு வலீத்) எடுத்தது. அல்லாஹ் (அவரின் கரத்தில்) முஸ்லிம்களுக்கு வெற்றியை அளித்துவிட்டான்’ என்று (போர்க்கள நிகழ்ச்சிகளை விவரித்துச்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி-3757 

என்னை (நபியை) சேர்ந்தவர் யார் ?

«إِنَّ الأَشْعَرِيِّينَ إِذَا أَرْمَلُوا فِي الغَزْوِ، أَوْ قَلَّ طَعَامُ عِيَالِهِمْ بِالْمَدِينَةِ جَمَعُوا مَا كَانَ عِنْدَهُمْ فِي ثَوْبٍ وَاحِدٍ، ثُمَّ اقْتَسَمُوهُ بَيْنَهُمْ فِي إِنَاءٍ وَاحِدٍ بِالسَّوِيَّةِ، فَهُمْ مِنِّي وَأَنَا مِنْهُمْ»

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அஷ்அரீ குலத்தினர் போரின்போது கையிருப்பிலுள்ள பயண உணவு (இருப்பு) குறைந்துவிட்டால் அல்லது மதீனாவில் தங்கள் மனைவி மக்களின் உணவு (இருப்பு) குறைந்து போய்விட்டால் தங்களிடம் (எஞ்சி) இருப்பதை ஒரு துணியில் சேகரித்து, பிறகு, ஒரு பாத்திரத்தைக் கொண்டு சமமாக தங்களுக்கிடையே அதைப் பங்கிட்டுக் கொள்வார்கள். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்; நான் அவர்களைச் சேர்ந்தவன்.

அறிவிப்பவர் : அபூமூஸா அஷ்அரீ (ரலி)
நூல் : புகாரி-2486 

உங்களில் கை நீளமானவரே! முதலில் என்னை (நபியை) வந்து சேர்வார்

أَنَّ بَعْضَ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قُلْنَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّنَا أَسْرَعُ بِكَ لُحُوقًا؟ قَالَ: «أَطْوَلُكُنَّ يَدًا»، فَأَخَذُوا قَصَبَةً يَذْرَعُونَهَا، فَكَانَتْ سَوْدَةُ أَطْوَلَهُنَّ يَدًا، فَعَلِمْنَا بَعْدُ أَنَّمَا كَانَتْ طُولَ يَدِهَا الصَّدَقَةُ، وَكَانَتْ أَسْرَعَنَا لُحُوقًا بِهِ وَكَانَتْ تُحِبُّ الصَّدَقَةَ

நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், ‘உங்களின் மரணத்திற்குப் பின் எங்களில் யார் முதலில் வந்து உங்களைச் சேர்வார்?’ எனக் கேட்டதற்கு, ‘உங்களுள் கை நீளமானவரே!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர்கள் ஒரு குச்சியை எடுத்துத் தங்களின் கைகளை அளந்து பார்த்தபோது ஸவ்தா (ரலி) வின் கைகளே மிகவும் நீளமானவையாக இருந்தன.

(ஸைனப் (ரலி) இறந்த) பிறகுதான் கை நீளமானவர் என்பது, அதிகம் தர்மம் செய்பவரைக் குறிக்கிறது என்பதை அறிந்தோம். (ஸைனப்) அவ்வாறு அதிகம் தர்மம் செய்பவராக இருந்ததால்தான் நபி (ஸல்) அவர்களை முதலில் அடைந்தார். மேலும் அவர் தர்மம் செய்வதை (மிகவும்) விரும்பக் கூடியவராகவும் இருந்தார்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி-1420 

இனிய குரலில் குர்ஆனை ஓதுதல்

يَا أَبَا مُوسَى لَقَدْ أُوتِيتَ مِزْمَارًا مِنْ مَزَامِيرِ آلِ دَاوُدَ

நபி (ஸல்) அவர்கள் (நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி) ‘அபூ மூஸா! (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த (சங்கீதம் போன்ற) இனிய குரல் உங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது’ என என்னிடம் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி)
நூல் : புகாரி-5048 

இன்னும் ஏராளமான நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரின் பாராட்டுகளை பெற்றுள்ளனர். ஒவ்வொரு நபித்தோழர்களும் ஒவ்வொரு விஷயத்தில் சிறந்து விளங்கினர். அவற்றை நாமும் கடைபிடித்து அல்லாஹ்வின் அருளை பெற முயற்சித்து சொர்க்கத்தை அடைய அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.