Tamil Bayan Points

தும்மலுக்கு அல்ஹம்துலில்லாஹி துலங்கும் அறிவியல் உண்மை

பயான் குறிப்புகள்: குர்ஆன் கூறும் அறிவியல்

Last Updated on September 17, 2020 by Trichy Farook

தும்மலுக்கு அல்ஹம்துலில்லாஹி துலங்கும் அறிவியல் உண்மை

தும்மல் வரும் போது அடக்குகின்றீர்களா? அவ்வாறு அடக்காதீர்கள். காரணம் தும்மலை   அடக்கினால் அது பேராபத்தில் போய் முடியும் என லண்டனில், மருத்துவர்களின் மருத்துவ ஆய்வுகளையும் அனுபவங்களையும்  வெளியிடுகின்ற  BMJ Case Reports  என்ற மருத்துவ இதழ் தெரிவிக்கின்றது.

அது குறிப்பிடுகின்ற விபரம் வருமாறு:

முன்னர் எந்த நோயினாலும்  பாதிக்கப்படாத ஒரு 34 வயது  நோயாளி, வீங்கிய கழுத்துடன் தனக்கு உணவு எதுவும் விழுங்க முடியவில்லை;  தொண்டையில் ஒரே உறுத்தலாக இருக்கின்றது என்று  குறிப்பிட்டு  லீசெஸ்டர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பகுதியில் அனுமதிக்கப்படுகின்றார்.  அவருக்குத் தொண்டையின் பின்புறம் உடைந்து போய்  பேச்சும் வரவில்லை. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் இது எப்படி ஏற்பட்டது என்று  ஆரம்பத்தில் குழப்பத்திற்குள்ளாயினர்.

லீசெஸ்டர் மருத்துவமனை டாக்டர்கள் அந்த நோயாளியைப் பரிசோதனை செய்யும் போது அவரது உடலுக்குள், காற்றுக் குமிழ்கள் மார்பை நோக்கி விரைகின்ற சப்தத்தின் அறிகுறியாக  கழுத்திலிருந்து விலா எலும்புகள் வரை ஒரு படபடக்கின்ற சப்தத்தைச்  செவியுற்றனர்.  தொற்று நோய் மற்றும் மற்ற சிக்கலான நோய்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்ற கவலையில்  அவருக்குக் குழாய் பொருத்தி அதன் மூலம் ஆண்டிபயாடிக் மருந்துகள் செலுத்தினர்.

தும்மலை அடக்கியதால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த நோயாளி முழுமையாக நிவாரணம் பெற்று வீடு திரும்பி விட்டார். இனி தும்மல் வந்தால் மூக்கைப் பொத்தக் கூடாது என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, காது மூக்கு தொண்டை நிபுணரும் லண்டனில் உள்ள  யுனிவர்ஸிட்டி ஹாஸ்பிடல் லீவிஷம் இயக்குநருமான டாக்டர் அந்தோணி ஐமட் கூறுகையில், “நீங்கள் தும்மும் போது 140 மைல்கள் வேகத்தில் காற்று வெளியேறுகின்றது” என்று குறிப்பிட்டார்.

பாதிப்பு அடைகின்ற நுரையீரல்

தும்மலை அடக்குவதின் மூலம் ஏற்படுகின்ற பிரச்சனைகள் காரணமாக ஆண்டுக்கு ஒரு நோயாளி அல்லது இரு நோயாளிகள் வருகின்றனர். ஆனால் அப்படி வருபவர்கள் அரிதிலும் அரிது என்று ஹவுஸ்டனில் உள்ள யுனிவெர்ஸிட்டி ஆஃப் டெக்ஸாஸ் ஹெல்த் சயின்ஸ் சென்டரில் பணிபுரிகின்ற தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர் ஜி யங் ஜியாங்(Zi Yang Jiang) தெரிவிக்கின்றார்.

ஒரு துப்பாக்கியால் கழுத்தில் சுடும் போது என்ன அதிர்வு, வேதனை ஏற்படுமோ அதுபோன்ற வேதனை தும்மலை நாம் அடக்கும் போது ஏற்பட்டு உடலில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. அந்த அளவுக்குத் தும்மலின் வேகம் அமைந்துள்ளது என்பது ஒரு வினோதமான விஷயமாகும்.

நுரையீரல் இதுபோன்ற பாதிப்புக்கு உள்ளானால், அந்த சமயத்தில் தும்மல் அடித்து உடனடியாக வெளியேறுகின்ற காற்றை அது உள்வாங்கிக் கொள்கின்றது. இது நுரையீரல் சந்திக்கின்ற பிரச்சனையாகும்.

தும்மல் வருவதற்குக் காரணமே நம் உடலில் ஏற்பட்டிருக்கின்ற வைரஸ், பாக்டீரியாக்களை வெளியேற்றுவதற்காகத் தான். நாம் அதை நிறுத்தினால் அல்லது அடக்கினால் அந்த வைரஸ்கள் உடலின் ஏதாவது ஒரு பகுதியில் போய் புகுந்து கொள்ளும்.

அதிகமான மக்களிடம் தும்மல் மூலம் உருவாகின்ற உபரியான காற்று பின்னால் உடலால் உள்வாங்கிக் கொள்ளப்படுகின்றது என்று டாக்டர் ஜி யங் ஜியாங் மேலும் குறிப்பிடுகின்றார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நீங்கள் தும்மினல், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (இதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்‘ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நூல்: புகாரி 6224

இறைவனுக்கு மனிதன் எப்போதும் நன்றி செலுத்தும் விதத்தில் பலவிதமான புகழாரங்களை இஸ்லாம் கற்றுத் தருகின்றது. ஒருவர் உணவு உண்ட பிறகு, உறங்கும் போது, உறங்கி எழுந்திருக்கும் போது என்று மனிதனுக்கு வாய்க்கின்ற நற்பேறுகள், நற்பாக்கியங்கள் அனைத்திலும் அல்லாஹ்வைப் புகழச் செய்கின்றது இஸ்லாம்.

சாப்பிட்ட பின் அல்ஹம்துலில்லாஹி என்று ஒருவர் அல்லாஹ்வைப் புகழும் போது அருகில் உள்ளவர் யர்ஹமுக்கல்லாஹு என்று சொல்லுமாறு நபிகள் பணிக்கவில்லை. அதுபோல் உறங்கி எழுந்தவர் அல்ஹம்து லில்லாஹி சொல்லும் போது அருகில் உள்ளவர் யர்ஹமுக்கல்லாஹு என்று சொல்லுமாறு  பணிக்கவில்லை.

ஆனால் தும்மும் போது அல்ஹம்துலில்லாஹி என்று சொல்லும் போது ‘யர்ஹமுக்கல்லாஹு’ என்று சொல்லுமாறு பணிக்கின்றது. இதன் மூலம் மனித சமுதாயத்தை, இந்தத் தும்மலின் பின்னணியில் அடங்கியிருக்கின்ற அல்லாஹ்வின் அருட்கொடையையும் அற்புதத்தையும் சிந்திக்கத் தூண்டுகின்றது.

140 மைல் வேகத்தில் வீசுகின்ற ஒரு காற்று நமது உடற்கூட்டில் நாசி துவாரத்தில் பாய்ந்து நமது உடலில் தொற்றிய வைரஸ், பாக்டீரியாவை வெளியேற்றுகின்றது என்றால் இது சாதாரண விஷயமில்லை என்பதை உணர்த்துகின்றது.

அவ்வளவு வேகமான காற்று மூக்கிலிருந்து வெளியேறியதற்காக தும்மியவர் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் போது, அருகில் உள்ளவர் வைரஸ், பாக்டீரியாக்கள் வெளியேறுவதற்கு இதுபோல் என்றென்றும் அருள் புரிவான் என்று பிரார்த்திக்கும் விதத்தில் அமைந்திருக்கின்றது.

அதற்குப் பதிலாக தும்மியவர், உங்கள் விஷயத்தை இதுமாதிரி சிக்கல் ஏற்படாமல் காப்பானாக என்று பிரார்த்திக்கும் விதத்திலும் அமைந்திருப்பதை நாம் காணமுடிகின்றது.

உறுதியாக நம்புவோருக்கு பூமியிலும், உங்களுக்குள்ளும் பல சான்றுகள் உள்ளன. சிந்திக்க மாட்டீர்களா?

(திருக்குர்ஆன்:51:21)

எல்லாம் வல்ல அல்லாஹ் சொல்வது போன்று உடலில் ஒளிந்திருக்கும் அறிவியல் அற்புதங்களை உள்நோக்கிப் பார்ப்போமாக! உயரிய அந்த நாயனுக்கு உரிய முறையில் நன்றி செலுத்துவோமாக!