Tamil Bayan Points

தீண்குலப் பெண்களின் பண்புகள்-1

பயான் குறிப்புகள்: குடும்பவியல்

Last Updated on August 14, 2020 by

தீண்குலப் பெண்களின் பண்புகள்

முன்னுரை:-

இவ்வுலகத்தை படைத்த அல்லாஹ் ரப்புல் ஆலமின் அதில் மனிதர்களை வாழ்வதற்கு படைத்து, அவர்கள் தங்கள் வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை முஹம்மது (ஸல்)  அவர்களின் சொல்,செயல்,அங்கீகாரத்தின் மூலமாக விளக்கியுள்ளான்.

நாம் வாழுகின்ற இவ்வுலகம் மிகவும் கவர்ச்சியாகவும்,உள்ளத்தை ஈர்க்கும் விதமாக இருந்தாலும், இவ்வுலக வாழ்க்கை நிரந்தமற்றது என்கிற ஒன்றை மட்டும் நாம் எப்போதும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاءِ وَالْبَنِينَ وَالْقَنَاطِيرِ الْمُقَنْطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَيْلِ الْمُسَوَّمَةِ وَالْأَنْعَامِ وَالْحَرْثِ ۗ ذَٰلِكَ مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا ۖ وَاللَّهُ عِنْدَهُ حُسْنُ الْمَآبِ

பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்க வெள்ளிக் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், விளைநிலங்கள் ஆகிய மனம் கவருபவற்றை நேசிப்பது மனிதர்களுக்குக் கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய புகலிடம்உள்ளது.                                                                          

(திருக்குர்ஆன்:3:14.)

இவ்வுலகத்தில் நாம் படைக்கப்பட்ட நோக்கத்தை இறைவன் திருமறையில் கூறுகிறான்.

الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا ۚ وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ

உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும், வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தவன்; மன்னிப்பவன்.

(திருக்குர்ஆன்:67:2.)

பெண்களாகிய நம்மை வழிகேட்டை நோக்கி ஷைத்தான் அழைக்கும்போதும், தீமையான காரியங்களை செய்ய தூண்டும் போதும், அதிலிருந்து நம்மை பாதுகாத்து கொண்டு தீண்குலப் பெண்மணிகளாக நம்முடைய வாழ்க்கையை ஒவ்வொரு நாளும்  அமைத்துக்கொள்ள சில முக்கியமான பண்புகளை நாம்  இக்கட்டுரையில் காணலாம்.

தீண்குலப் பெண்கள் என்றால் யார்:-

பெண்களாகிய நம்மில் பலர் மதரஸாவில் ஆலிமா பட்டம் வாங்கியவர்கள், மேடை ஏறி பலருக்கும் மார்க்கத்தை எடுத்து சொல்பவர்கள் மட்டும்  தான் தீண்குலப் பெண்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம், இறைவனை அஞ்சி வாழ கூடியவளும், இம்மார்க்கத்தை அறிய இந்த அவசர உலகத்திலும் கூட யார் ஆர்வமாக இருக்கிறார்களோ அவர்களும், ஒவ்வொரு நாளும் தன்னுடைய வாழ்க்கை முழுவதும் இஸ்லாத்தோடு தொடர்பு வைத்திருக்க கூடியவளும் தீண்குலப் பெண் ஆவாள். பல பெண்களின் இன்றைய நிலை!

வாட்ஸ் அப், பேஸ் புக் போன்ற சமூக வலைதளங்களில் மட்டும் தங்களை தீண்குலப் பெண்களாக காண்பித்துக் கொள்கிறார்கள், நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடிக்க தவறிவிடுகிறார்கள். இதைப் பற்றி விரிவாக காண்போம்.

சஹாபிய பெண்களின் வாழ்க்கை:

சஹாபிய பெண்களின் வாழ்க்கை பெண்களாகிய நமக்கு சிறந்த முன்மாதிரியாகவும் பலப் படிப்பினைகளையும் நமக்கு கற்றுத்தருகிறது.ஆனால் நம்மில் பலர் சஹாபிய பெண்களின் வாழ்க்கை வேறு நம்முடைய வாழ்க்கை வேறு அவர்களை போன்று நம்மால் எப்படி வாழ முடியும் என்று நினைக்கின்றோம், அது தவறான முடிவு, அவர்களும் நம்மை போன்ற மனிதர்கள் தான்.

நமக்கு இப்போது இருப்பதை போன்றே அவர்களுடைய வாழ்க்கையிலும் பல தேவைகள் இருந்தன, குடும்பத்திற்காக நேரத்தை செலவிடுவது, பிள்ளைகளை பராமரிப்பது போன்ற பல தேவைகள் இருந்தும் கூட அவர்களின் வாழ்க்கை பயணத்தை புரட்டி பார்த்தால் அனைத்து கட்டங்களிலும் மார்க்கத்தின் கட்டளைகளை செயல்ப்படுத்தி வாழ்ந்துள்ளார்கள்.

حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ: حَدَّثَنِي شَقِيقٌ، عَنْ عَمْرِو بْنِ الحَارِثِ، عَنْ زَيْنَبَ – امْرَأَةِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا – قَالَ: فَذَكَرْتُهُ لِإِبْرَاهِيمَ، ح فَحَدَّثَنِي إِبْرَاهِيمُ، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ عَمْرِو بْنِ الحَارِثِ، عَنْ زَيْنَبَ امْرَأَةِ عَبْدِ اللَّهِ – بِمِثْلِهِ سَوَاءً – قَالَتْ
كُنْتُ فِي المَسْجِدِ، فَرَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «تَصَدَّقْنَ وَلَوْ مِنْ حُلِيِّكُنَّ» وَكَانَتْ زَيْنَبُ تُنْفِقُ عَلَى عَبْدِ اللَّهِ، وَأَيْتَامٍ فِي حَجْرِهَا، قَالَ: فَقَالَتْ لِعَبْدِ اللَّهِ: سَلْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيَجْزِي عَنِّي أَنْ أُنْفِقَ عَلَيْكَ وَعَلَى أَيْتَامٍ فِي حَجْرِي مِنَ الصَّدَقَةِ؟ فَقَالَ: سَلِي أَنْتِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَانْطَلَقْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَوَجَدْتُ امْرَأَةً مِنَ الأَنْصَارِ عَلَى البَابِ، حَاجَتُهَا مِثْلُ حَاجَتِي، فَمَرَّ عَلَيْنَا بِلاَلٌ، فَقُلْنَا: سَلِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيَجْزِي عَنِّي أَنْ أُنْفِقَ عَلَى زَوْجِي، وَأَيْتَامٍ لِي فِي حَجْرِي؟ وَقُلْنَا: لاَ تُخْبِرْ بِنَا، فَدَخَلَ فَسَأَلَهُ، فَقَالَ: «مَنْ هُمَا؟» قَالَ: زَيْنَبُ، قَالَ: «أَيُّ الزَّيَانِبِ؟» قَالَ: امْرَأَةُ عَبْدِ اللَّهِ، قَالَ: «نَعَمْ، لَهَا أَجْرَانِ، أَجْرُ القَرَابَةِ وَأَجْرُ الصَّدَقَةِ»
:அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) உடைய மனைவி ஸைனப் (ரலி) அறிவித்தார்கள்

நான் பள்ளிவாயிலில் இருந்தபோது நபி (ஸல்) அவர்கள், ‘பெண்களே! உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்’ எனக் கூறினார்கள். நான் என் (கணவர்) அப்துல்லாஹ் (ரலி)வுக்கும் மற்றும் என் அரவணைப்பிலுள்ள அனாதைகளுக்கும் செலவழிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம், நான் உங்களுக்காகவும் என்னுடைய அரவணைப்பில் வளரும் அனாதைகளுக்காகவும் என்னுடைய பொருளைச் செலவழிப்பது ஸதாகாவாகுமா என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள் எனக் கூறினேன்.

அப்துல்லாஹ் (ரலி) அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள் எனக் கூறிவிட்டார். எனவே நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் வீட்டுவாயிலில் ஓர் அன்ஸாரிப் பெண் இருந்தார். அவரின் நோக்கமும் என்னுடைய நோக்கமாகவே இருந்தது. அப்போது எங்களிடையே பிலால் (ரலி) வந்தார். அவரிடம் நான் என்னுடைய கணவருக்கும் என்னுடைய பராமரிப்பிலுள்ள அனாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேளுங்கள்; நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்கவேண்டாம் எனக் கூறினோம்.

உடனே அவர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று கேட்ட போது நபி (ஸல்) அவர்கள், ‘அவ்விருவரும் யார்? எனக் கேட்டதற்கு அவர் ‘ஸைனப்’ எனக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் ‘எந்த ஸைனப்?’ எனக் கேட்டதும் பிலால் (ரலி), ‘அப்துல்லாஹ்வின் மனைவி’ எனக் கூறினார். உடனே நபி(ஸல்) ‘ஆம்! ஸைனபுக்கு இரண்டு நன்மைகளுண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததிற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியது’ எனக் கூறினார்கள். 

நூல்: புகாரி:1466

இதை போன்று நம் வாழ்வில் சில கட்டத்தில் நாமும் தர்மம் செய்திருப்போம், ஆனால் அதில் நன்மை கிடைக்குமா?  கிடைக்காதா? என்று சிந்தித்திருக்க மாட்டோம், சஹாபிய பெண்மனிகள் தங்களுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் சிந்தித்து செயல்படுவார்கள் நாமும் அப்படி நம்முடைய சிந்தனையை சீராக்க வேண்டும் நாம் செய்யும் காரியம் நன்மையானதா? தீமையானதா என்று சிந்தித்து செயல்பட வேண்டும்.

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ أَخْبَرَنِي عَمْرُو بْنُ عَاصِمٍ الْكِلاَبِيُّ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ قَالَ: قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ بَعْدَ وَفَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعُمَرَ انْطَلِقْ بِنَا إِلَى أُمِّ أَيْمَنَ نَزُورُهَا كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَزُورُهَا. فَلَمَّا انْتَهَيْنَا إِلَيْهَا بَكَتْ فَقَالاَ لَهَا مَا يُبْكِيكِ مَا عِنْدَ اللَّهِ خَيْرٌ لِرَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَقَالَتْ مَا أَبْكِي أَنْ لاَ أَكُونَ أَعْلَمُ أَنَّ مَا عِنْدَ اللَّهِ خَيْرٌ لِرَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَكِنْ أَبْكِي أَنَّ الْوَحْيَ قَدِ انْقَطَعَ مِنَ السَّمَاءِ. فَهَيَّجَتْهُمَا عَلَى الْبُكَاءِ فَجَعَلاَ يَبْكِيَانِ مَعَهَا.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இறப்புக்குப்பின் (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், “நம்மை (அம்மையார்) உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சந்தித்துவந்ததைப் போன்று நாமும் சந்தித்துவருவோம்” என்று கூறினார்கள். அவ்வாறே உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றபோது அவர்கள் அழுதார்கள்.

அப்போது அவர்கள் இருவரும், “ஏன் அழுகிறீர்கள்? (நம்மிடம் இருப்பதைவிட) அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்குச் சிறந்ததாயிற்றே?” என்றுகேட்டார்கள். அதற்கு உம்மு அய்மன் (ரலி) அவர்கள், “அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்குச் சிறந்ததாகும் என்பதை நான் அறியாமல் அழவில்லை. மாறாக, (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இறப்போடு) வானிலிருந்து இறைச் செய்தி (வஹீ) வருவது நின்றுவிட்டதே! (அதற்காகத் தான் அழுகிறேன்)” என்று கூறி, அவர்கள் இருவரையும் அழச்செய்துவிட்டார்கள். அவருடன் சேர்ந்து அவர்கள் இருவருமே அழலாயினர்.

நூல்:முஸ்லிம்:4849

இப்போது நமது நிலையை சிந்திப்போம், மிகவும் கவலைக்குறியதாக இருக்கின்றது, இஸ்லாமிய பெண்ணாக இருத்துக்கொண்டு மார்க்க சட்டங்களை அலட்சியம் செய்கிறோம், மார்க்கத்தை அறிவதற்கு சிறுது நேரம் கூட செலவழிக்காமல் தினந்தோறும் நம்மில் பலர் சமூகவலைதளம் சினிமா பாடல் என்று நேரத்தை செலவிடுகிறோம் ,மறுமை வெற்றியே நமது இலக்கு என்பதை  மறந்து வாழ்ந்து வருகிறோம், சஹாபிய பெண்களின் வாழ்க்கையை முன்னுதாரனமாக கொண்டு செயல்படவேண்டும்.

மார்க்க கல்வியும் நமது நிலையும்:-

நம்மில் பலர் கல்வி என்றால் என்ன என்பதை அறியாமல் இருக்கின்றோம், மதரஸாவுக்கு சென்று கற்று வருவது தான் கல்வி என்று நினைக்கின்றோம், அங்கு சென்று கற்பது சிறந்தது மேலானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதே நேரத்தில் நாம் இப்போது அறிவியல் வளர்ச்சி மிகுந்த காலத்தில் இருக்கின்றோம், நம்முடைய தொலைப்பேசியில்  மூலமாகவே நம்மால் மார்க்க கல்வியை கற்க முடியும் ஆனால் நாம் அதை பொழுதுபோக்கிற்காக உபயோகிக்கின்றோம். உலக விஷயங்களுக்காக நம்முடைய தேவையை நிறைவு செய்வதற்காக நிறைய நேரங்களை செலவுசெய்கின்றோம்.

ஒவ்வொரு நாழும் பத்து நிமிடமாவது மார்க்க கல்வியை கற்க முன்வர வேண்டும் சஹாபிய பெண்கள் கல்வி கற்பதற்காக காட்டிய ஆர்வம் மெய்சிலிர்க்க வைக்கின்றது,                                                                                               

حَدَّثَنَا آدَمُ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ قَالَ: حَدَّثَنِي ابْنُ الْأَصْبَهَانِيِّ قَالَ: سَمِعْتُ أَبَا صَالِحٍ ذَكْوَانَ يُحَدِّثُ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ

قَالَتِ النِّسَاءُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: غَلَبَنَا عَلَيْكَ الرِّجَالُ، فَاجْعَلْ لَنَا يَوْمًا مِنْ نَفْسِكَ، فَوَعَدَهُنَّ يَوْمًا لَقِيَهُنَّ فِيهِ، فَوَعَظَهُنَّ وَأَمَرَهُنَّ، فَكَانَ فِيمَا قَالَ لَهُنَّ: «مَا مِنْكُنَّ امْرَأَةٌ تُقَدِّمُ ثَلاَثَةً مِنْ وَلَدِهَا، إِلَّا كَانَ لَهَا حِجَابًا مِنَ النَّارِ» فَقَالَتِ امْرَأَةٌ: وَاثْنَتَيْنِ؟ فَقَالَ: «وَاثْنَتَيْنِ»

‘(நாங்கள் உங்களை அணுகி மார்க்க விளக்கங்களை கேட்க முடியாதவாறு) தங்களிடம் (எப்போதும்) ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார். எனவே, தாங்களாகவே எங்களுக்கென்று ஒரு நாளை ஏற்பாடு செய்யுங்கள்’ என்று பெண்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அவர்களும் அப்பெண்களுக்கென ஒரு நாளை வாக்களித்து, அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள். (மார்க்கக் கட்டளைகளை) ஏவினார்கள். 

அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார். 

நூல்:புகாரி:101

உலக கல்வியை கற்க நம்முடைய வாழ்க்கையில் அதிகமான நேரத்தை செலவிடுகிறோம், சஹாபிய பெண்களை போன்று இல்லாவிட்டாலும், இயன்றளவு மார்க்க கல்வியை கற்க முன்வரவேண்டும்.

அதைப் போன்று மார்க்க கல்வியை கற்க பல வழிகள் இருந்தும், உலக கல்வியை கற்பதில் மட்டுமே நேரத்தையும், பல வருட காலத்தையும் செலவிடுபவர்களை பார்க்கின்றோம், தானாக மார்க்க கல்வி கற்க முன் வரும் பெண்களை விட அவர்கள் பெற்றோர்களாக பார்த்து பெண் பிள்ளைக்கு ஏன் படித்தவரை போதும் மதரஸாவுக்கு போ என்று வரும் பெண்கள் தான் அதிகம், உலகக் கல்வி கற்க கூடாது என்று மார்க்கம் சொல்லவில்லை, ஆனால் மார்க்க கல்வியே மறுமை வெற்றிக்கு வழி வகுக்கும்.

وَمَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ لَهُ بِهِ طَرِيقًا إِلَى الْجَنَّةِ وَمَا اجْتَمَعَ قَوْمٌ فِي بَيْتٍ مِنْ بُيُوتِ اللَّهِ يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ إِلاَّ نَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَحَفَّتْهُمُ الْمَلاَئِكَةُ وَذَكَرَهُمُ اللَّهُ فِيمَنْ عِنْدَهُ وَمَنْ بَطَّأَ بِهِ عَمَلُهُ لَمْ يُسْرِعْ بِهِ نَسَبُهُ)).

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச்  செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான். மக்கள் இறையில்லங்களில் ஒன்றில் ஒன்றுகூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக்கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக்கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள்மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் போர்த்திக்கொள்கிறது. அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். மேலும் இறைவன், அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவுகூருகிறான்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்:முஸ்லிம்:523. 

நல்லதை மட்டும் எடுத்து செயல்படுதல்:-

நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் அதிகம் பயன்படுத்தும் தொலைப்பேசி அதில் நன்மைகளும், தீமைகளும் உள்ளன. கத்தியை போன்று தான் தொலைப்பேசியும் நாம் நல்வழியில் பயன்படுத்தினால் அதன் மூலம் நன்மையான விஷயங்களை அறிந்துக்கொள்ள முடியும், நம்மில் பலர் பயனற்ற வழியில் தான் அதைபயன்டுத்துகிறோம், பெற்றோர், உறவினர், நண்பர்களிடம் கூட நேரத்தை செலவழிப்பதை விட தொலைப்பேசியில் தான் அதிக நேரத்தை செலவிடுகிறோம், நம்மோடு ஒரு நாள் தொலைப்பேசி இல்லையென்றால் ஏதோ இழந்ததை போன்று உணர்கிறோம். 

ஒருவர் தம் நண்பரிடம் இன்று தான் நானும் என் மனைவியும் சந்தோஷமாக பேசிக்கொண்டிருந்தோம், அவர் கேட்டார் ஏன் உன் மனைவிக்கு அன்பளிப்பு வழங்கினாயா என்று,  இல்லை இன்று அவளின் மொபைல் வேலை செய்யவில்லை அதனால் என்னிடம் நேரத்தை ஒதுக்கி பேசினால், என்று சொல்லும் நிலைக்கு நம் சமுதாயப்பெண்களின் பலரின் நிலைமாறிவிட்டது.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ ۚ وَمَنْ يَتَّبِعْ خُطُوَاتِ الشَّيْطَانِ فَإِنَّهُ يَأْمُرُ بِالْفَحْشَاءِ وَالْمُنْكَرِ ۚ وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ مَا زَكَىٰ مِنْكُمْ مِنْ أَحَدٍ أَبَدًا وَلَٰكِنَّ اللَّهَ يُزَكِّي مَنْ يَشَاءُ ۗ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ ﴿21﴾

நம்பிக்கை கொண்டோரே! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! யார் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறாரோ (அவர் வழிகெடுவார்). ஏனெனில் அவன் வெட்கக்கேடானவற்றையும், தீமையையும் தூண்டுகிறான். அல்லாஹ்வின் அருளும், அன்பும் உங்களுக்கு இல்லாதிருந்தால் ஒருபோதும் உங்களில் எவரையும் அவன் பரிசுத்தமாக்கியிருக்க மாட்டான். எனினும் தான் நாடியோரை அல்லாஹ் பரிசுத்தமாக்குகிறான். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

(திருக்குர்ஆன்:24:21.) 

தொலைப்பேசி மூலமாக அறிவியல் சார்ந்த மார்க்கம் சார்ந்த பல விடயங்களையும் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் இருந்தும் அதை தவிர்த்து விட்டு, வீணானகாரியங்களான (சினிமா,பாடல், கேலிக்கைகளுக்கு) பயன்படுத்த ஆரம்பித்ததின் விளைவு நம்மில் பலரை தொழுகை, குர்ஆன் ஓதுதல் இதைப்போன்ற நற்செயல்களை விட்டும் திசைதிருப்பிவிட்டது.

 اِسْتَحْوَذَ عَلَيْهِمُ الشَّيْطٰنُ فَاَنْسٰٮهُمْ ذِكْرَ اللّٰهِ‌ؕ اُولٰٓٮِٕكَ حِزْبُ الشَّيْطٰنِ‌ؕ اَلَاۤ اِنَّ حِزْبَ الشَّيْطٰنِ هُمُ الْخٰسِرُوْنَ‏

ஷைத்தான் அவர்களை மிகைத்து விட்டான். அல்லாஹ்வின் நினைவை அவர்களுக்கு மறக்கச் செய்தான். அவர்களே ஷைத்தானின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க! ஷைத்தானின் கூட்டத்தினரே நட்டமடைந்தவர்கள்.

(திருக்குர்ஆன்:58:19.)

ஷாலிஹானவர்களின் பண்பை பற்றிஅல்லாஹ் திருமறையில் கூறும்போது

 وَالَّذِيْنَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَۙ‏
இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.

(திருக்குர்ஆன்:23:3.)

மார்க்கவிஷயங்களை கேட்பதற்கும், படிப்பதற்கும் பெண்களாகிய நம்மில் பலருக்கு ஆர்வமில்லை மிகவும் சோம்பேறிகளாக மாறி வருகிறோம், இதே நிலை தொடர்ந்தால் மறுமை வாழ்க்கை பாழாகிவிடும் என்பதை நினைவில் வைத்து நன்மையான காரியங்களை செயல்படுத்தவேண்டும்.

 تَنْزِيْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِيْنَ‏

اَفَبِهٰذَا الْحَـدِيْثِ اَنْتُمْ مُّدْهِنُوْنَۙ‏

அகிலத்தின் இறைவனிடமிருந்து (இது) அருளப்பட்டது. இந்தச் செய்தியையா அலட்சியம் செய்கிறீர்கள்? (திருக்குர்ஆன்:56:80,81.)

நாம் அல்லாஹ்வின் மார்க்கத்தை அறிவதற்கு நெருங்கினால் அல்லாஹ்வும் நம்மோடு நெருங்கி வருகிறான், நாம் தூரமாக சென்றால் அல்லாஹ்வின் அருளும் நம்மை விட்டு தூரமாகிவிடும் என்பதை உணர்ந்து மார்க்கத்தை அறிய ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

«474» حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ أَنَّ أَبَا مُرَّةَ مَوْلَى عَقِيلِ بْنِ أَبِي طَالِبٍ أَخْبَرَهُ عَنْ أَبِي وَاقِدٍ اللَّيْثِيِّ قَالَ بَيْنَمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ فَأَقْبَلَ ثَلاَثَةُ نَفَرٍ، فَأَقْبَلَ اثْنَانِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَذَهَبَ وَاحِدٌ، فَأَمَّا أَحَدُهُمَا فَرَأَى فُرْجَةً فَجَلَسَ، وَأَمَّا الآخَرُ فَجَلَسَ خَلْفَهُمْ، فَلَمَّا فَرَغَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((أَلاَ أُخْبِرُكُمْ عَنِ الثَّلاَثَةِ أَمَّا أَحَدُهُمْ فَأَوَى إِلَى اللَّهِ، فَآوَاهُ اللَّهُ، وَأَمَّا الآخَرُ فَاسْتَحْيَا، فَاسْتَحْيَا اللَّهُ مِنْهُ، وَأَمَّا الآخَرُ فَأَعْرَضَ، فَأَعْرَضَ اللَّهُ عَنْهُ)).

அபூ வாகித் அல்லைஸீ அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருக்கும்போது மூன்று நபர்கள் வந்தனர். அவர்களில் இருவர் நபி (ஸல்) அவர்களை நோக்கி வந்தனர். ஒருவர் சென்றார். அந்த இருவரில் ஒருவர் (சபையில்) சிறிது இடைவெளியைக் கண்டு அங்கே உட்கார்ந்தார். மற்றவர் சபையினரின் பின்னால் உட்கார்ந்தார். நபி(ஸல்) அவர்கள் (சொல்ல வேண்டியவற்றைச் சொல்லி) முடித்தபோது, ‘அந்த மூவரைப் பற்றியும் நான் உங்களுக்குக் கூறட்டுமா?’ என்று கேட்டுவிட்டு ‘ஒருவர் அல்லாஹ்வின் பக்கம் நெருங்கினார்;

அல்லாஹ்வும் அவரை நெருக்கமாக ஆக்கிக் கொண்டான். மற்றவர் வெட்கப் பட்டார்; அல்லாஹ்வும் அவர் விஷயத்தில் வெட்கப் பட்டான் (அதாவது அவரைக் கருணைக் கண் கொண்டு பார்க்கவில்லை) இன்னொருவரோ அலட்சியமாகச் சென்றார்) அல்லாஹ்வும் அவரை அலட்சியம் செய்துவிட்டான்’ என்றுகூறினார்கள். 

நூல்:புகாரி:474. 

கற்றதை கடைப்பிடித்தல்:- 

அல்லாஹ்வின் அருளால் முஸ்லீம்களாக இருக்கக்கூடிய மக்களிடம் ஏகத்துவ பிரச்சாரத்தினாலும், இன்றைய அறிவியல் தொழில் நுட்பத்தினாலும் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது, மார்க்கத்துடைய சட்டத்திட்டங்களை அனைத்து மக்களும் அறிந்து வைத்திருக்கிறார்கள்.இன்னும் ஒரு படி மேலாய் பலப்பெண்கள் மார்க்க கல்வியை கற்க ஆர்வமாக முன்வந்து பல வருடம் கல்வி பயின்று ஆலிமாக்களாக வளம் வருகிறார்கள்.

பட்டம் பெற்ற பிறகு அறிவுரை சொல்ல பலருக்கும் ஆர்வம் இருக்கிறது சொன்னதை  செயல்படுத்த ஆர்வமிருப்பதில்லை. இதுதான் தற்போதைய பலரின் நிலை. இப்படிபட்ட மக்களை அல்லாஹ் கடுமையாக எச்சரிக்கை செய்கிறான்.

62:5 مَثَلُ الَّذِيْنَ حُمِّلُوا التَّوْرٰٮةَ ثُمَّ لَمْ يَحْمِلُوْهَا كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ اَسْفَارًا‌ ؕ بِئْسَ مَثَلُ الْقَوْمِ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِ اللّٰهِ ‌ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ‏

தவ்ராத் சுமத்தப்பட்டு பின்னர் அதைச் சுமக்காமல் (அதன்படி நடக்காமல்) இருந்தார்களே அவர்களது உதாரணம் ஏடுகளைச் சுமக்கும் கழுதையைப் போன்றது. அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யெனக் கருதுவோருக்குரிய உதாரணம் மிகவும் கெட்டது. அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான்.

(திருக்குர்ஆன்:62:5.)

வேதத்தை தெரிந்து வைத்துக்கொண்டே அதை கடைப்பிடிக்காமல் அலட்சியம் செய்பவர்களை அல்லாஹ் கழுதையோடு ஒப்பிடுகிறான், கழுதையில் முதுகில் கல்லை கட்டி வைத்தாலும், வெள்ளிப் பொருள்கள், தங்க காசுகள் வைரம் போன்ற எவ்வளவு விலையுயர்ந்த பொருட்களை வைத்தாலும் அதற்கு அதனுடைய மதிப்பு  தெரியாது, அதுப்போலதான் மார்க்க தெரிந்து வைத்திருக்கும் பலரின் நிலையும், பலருக்கும் மார்க்கத்தை சொல்லிக் கொடுக்கிறார்கள் உரை நிகழ்த்துகிறார்கள் சட்டங்களை மிகத்தெளிவாக விளக்குகிறார்கள் ஆனால் அந்த சட்டங்களை கடைப்பிடிக்க தவறிவிடுகிறார்கள்.

2:269 يُؤْتِى الْحِكْمَةَ مَنْ يَّشَآءُ‌‌ ۚ وَمَنْ يُّؤْتَ الْحِكْمَةَ فَقَدْ اُوْتِىَ خَيْرًا كَثِيْرًا‌ ؕ وَمَا يَذَّكَّرُ اِلَّاۤ اُولُوا الْاَلْبَابِ‏

தான் நாடியோருக்கு ஞானத்தை (அல்லாஹ்) வழங்குகிறான். ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டு விட்டார். அறிவுடையோரைத் தவிர (யாரும்) சிந்திப்பதில்லை.

(திருக்குர்ஆன்:2:269.)

கல்வி ஞானம் வழங்கப்பட்டவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை பிறருக்கு சொல்வதற்காக தேர்தெடுக்கப்பட்டவர்கள், அறிவுரை மட்டும் சொல்லிவிட்டு அதை செயல்படுத்த அலட்சியம் செய்தால் நம்முடைய அறிவுரைக்கு யாரும் செவிசாய்க்க மாட்டார்கள், நமக்கு கொடுக்கப்பட்ட கல்வி பலருக்கும் கிடைக்காமல் இருக்கிறது அல்லாஹ் நம்மை சிறப்பித்துள்ளான் என்பதை உணர்ந்து கற்ற கல்வியை மக்களுக்கு எடுத்து சொல்வது மட்டுமில்லாமல், அதை ஒவ்வொரு நாளும் கடைபிடித்தல் வேண்டும்.

சிறந்த வாழ்க்கை துணையை தேர்வு செய்வது:

உலகில் 4200 மதங்கள் கொள்கைகள் உள்ளன, இஸ்லாமிய மார்க்கம் அனைத்து கொள்கைகள் சிந்தாந்தங்களை விட தனித்து சிறந்து விளங்குகின்றது, இஸ்லாம் பெண்களுக்கு பலயுரிமைகளையும் சுதந்திரத்தையும் வழங்கியிருக்கின்றது, 

وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ

பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன.(திருக்குர்ஆன்:2:228.)

பெண் தன்னுடைய சிறுவயதிலிருந்து தன்னுடைய பெற்றோரை சார்ந்து இருக்கிறாள், பெரியவளாகிய பின் தானாகவே சிந்தித்து செயல்பட ஆரம்பிக்கிறாள்.இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய மிக முக்கியமாக வழங்கிய உரிமைகளில் ஒன்று அவளின் வாழ்க்கைத்துணையை அவளின் சம்பந்தம் இல்லாமல் திருமணம் முடித்து வைக்கக் கூடாது.

«» حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ حَدَّثَنَا هِشَامٌ عَنْ يَحْيَى عَنْ أَبِي سَلَمَةَ أَنَّ أَبَا هُرَيْرَةَ حَدَّثَهُمْ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((لاَ تُنْكَحُ الأَيِّمُ حَتَّى تُسْتَأْمَرَ وَلاَ تُنْكَحُ الْبِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ)). قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ إِذْنُهَا قَالَ: ((أَنْ تَسْكُتَ)).                                           

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள், ‘கன்னிகழிந்த பெண்ணை, அவளுடைய (வெளிப்படையான) உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெறாமல் மணமுடித்துக் கொடுக்கவேண்டாம்” என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்து கொள்வது)” என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அவள் மெளனம் சாதிப்பதே (அவளுடைய சம்மதம்) என்று கூறினார்கள்.

நூல்:புகாரி:5136. 

பெற்றோர்கள் முடிவு எடுத்து செய்து வைத்தால் போதும் என்று இஸ்லாம் கூறவில்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன ஏனென்றால் ஒரு பெண் திருமணத்திற்கு பின் கணவனோடு பல்லாண்டுகள் வாழப்போகிறாள், இன்பம் துன்பம் அனைத்திலும் அவனோடு இணைந்து வாழப்போகிறாள், அதுமட்டுமல்லாமல் அவளின் மறுமை வெற்றியும் அதில் அடங்கியுள்ளது.

அதனால் தான் இஸ்லாம் பெண்ணிற்கு அவளின் அனுமதியில்லாமல் மணமுடித்து வைக்க தடைசெய்துள்ளது. நபியவர்கள் ஆண்கள் பெண்ணை தேர்வு செய்யும்போது அடிப்படை பண்புகளில் ஒன்றாக மார்க்க அறிந்த பெண்ணை தேர்வு செய்து மறுமை வெற்றியை அடைந்துக்கொள் இல்லையேல் உன் இரு கரங்களும் மண்ணாகட்டும்! என்கின்ற அளவிற்கு எச்சரிக்கை செய்தார்கள், அதே சட்டம் பெண்களுக்கும் பொருந்தும்.

ஆனால் இன்றைக்கு நம் சமூகத்தில் இஸ்லாம் வழங்கிய பெண்ணுரிமையை பலப்பெற்றோர்கள் தன்னுடைய பிள்ளைகளுக்கு வழங்குவதில் தயக்கம் காட்டுகிறார்கள், நம்ம பிள்ளைக்கு என்ன தெரியும் நமக்கு பிடித்தால் போதும் என்று செயல்படுகிறார்கள், பிள்ளைகளை விட பெற்றோர்கள் அனுபவம் உடையவர்கள் தான் ஆனால் இது அவளின் வாழ்க்கை வாழப்போகும் பெண் அவள் தனக்கு கணவனாக வருபவனுக்கு இன்னென்ன பண்புகள் இருக்க வேண்டும் என்று ஆசைகள் இருக்கும் என்பதை உணர்ந்து பெண்ணின் சம்மதத்தை கேட்டு மணமுடித்து வைக்க வேண்டும், பெண்ணின் சம்மதம் இல்லாமல் நடைபெறும் திருமணம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள்.

«5138» حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ: حَدَّثَنِي مَالِكٌ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ وَمُجَمِّعٍ ابْنَيْ يَزِيدَ بْنِ جَارِيَةَ عَنْ خَنْسَاءَ بِنْتِ خِذَامٍ الأَنْصَارِيَّةِ أَنَّ أَبَاهَا زَوَّجَهَا وَهْيَ ثَيِّبٌ، فَكَرِهَتْ ذَلِكَ فَأَتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَدَّ نِكَاحَهُ.

கன்ஸா பின்த் கிதாம் அல்அன்சாரியா(ரலி) கூறினார் கன்னி கழிந்த பெண்ணான என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்துவைத்தார்கள். எனக்கு இதில் விருப்பமிருக்கவில்லை. எனவே, நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் போ(ய் என் விருப்பத்தைச் சொன்)னேன். அத்திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் ரத்துச் செய்தார்கள்.                

நூல்: புகாரி :5138. 

வாழ்க்கை துணையை தேர்வும் செய்யும்போது செல்வம்,குலம், நிறம்என, நிரந்தரமற்ற இவைக்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விட, மார்க்கத்திற்கு கட்டுப்பட்டு நடக்கும் துணையை பெண்களாகிய நாம் தேர்வு செய்வதே சிறந்தது.

وَلَا تَنْكِحُوا الْمُشْرِكٰتِ حَتّٰى يُؤْمِنَّ‌ؕ وَلَاَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكَةٍ وَّلَوْ اَعْجَبَتْكُمْ‌ۚ وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِيْنَ حَتّٰى

يُؤْمِنُوْا ‌ؕ وَلَعَبْدٌ مُّؤْمِنٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكٍ وَّلَوْ اَعْجَبَكُمْؕ اُولٰٓٮِٕكَ يَدْعُوْنَ اِلَى النَّارِ  ۖۚ وَاللّٰهُ يَدْعُوْٓا اِلَى الْجَـنَّةِ وَالْمَغْفِرَةِ

بِاِذْنِهٖ‌ۚ وَيُبَيِّنُ اٰيٰتِهٖ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் உங்களை எவ்வளவு கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப்பெண் சிறந்தவள். இணைகற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கத்திற்கும், மன்னிப்பிற்கும் அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.

(திருக்குர்ஆன்:2:221.)

பலப்பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு, செல்வம், அந்தஸ்து,உடைய மணமகனை தேடிப்பிடித்து திருமணம் செய்து வைக்கிறார்கள், தனது மகளுக்கு பார்க்கும் மணமகன் மது அருந்தாமல்,புகை பிடிக்காமல்,நல்ல ஒழுக்கமுடையவனாக, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூததருக்கும் கட்டுப்பட்டு நடக்கின்றானா?,என்பதை பெற்றோர்கள் கவனிக்க தவறிவிடுகிறார்கள்.

செல்வம் இருந்தால் போதும் சந்தோஷமாக தன் பிள்ளை வாழும் என்று நினைத்துக்கொண்டு திருமணம் முடித்து வைக்கிறார்கள், திருமணமாகி சில மாதங்களிலே இருவருக்கும் மத்தியில் பல பிரச்சனைகள், பிளவுகள்ஏற்படுகின்றன, இதற்கு காரணம் ஒருவகையில் அந்த பெண்ணும் தான் செல்வம் இருந்தால் போதும் சந்தோசமாக வாழலாம் என்று பெற்றோர்கள் சொன்ன ஆசைவார்த்தைக்கு கட்டுப்பட்டு கரம்பிடித்தார்கள்.

பெண்களாகிய நாம் சிந்திக்க வேண்டும் குர்ஆன் ஹதிஸீக்கு முக்கியத்துவம் அளிக்காமல் நம்மை திருமணம் செய்வதற்கு சீதனங்கள், வாகனம், ஏசி என அவர்கள் வீட்டுக்கு தேவையான அனைத்து பொருள்களையும், நம்முடைய வீட்டில் வாங்கிக்கொடுக்க சொல்லும் மணமகனின் பெற்றோர்கள், தனது திருமணத்தை வரதட்சணை வாங்காமல் நபிவழியில் செய்து கொள்ள அனைத்து வசதி வாய்ப்புகளும் இருந்தும் கூட மெளனமாக இருக்கும் மணமகன், இன்னும் சொல்வதாக இருந்தால் சில ஊர்களில் பெண் வீட்டில் மணமகனுக்கு புதுவீடுகட்டிகொடுக்க வேண்டும் என சொல்வார்கள் அதைகூடசிலவசதிபடைத்தவர்கள்.

தன்னிடம் இருக்கின்றது என்பதற்காக வரதட்சணையாக கொடுத்து விடுகிறார்கள், ஆனால் பல பெற்றோர்களின் தற்போதைய நிலை வரதட்சணை கொடுக்க முடியாமல் எவ்வளவு பேரிடம் கடன் வாங்குகிறார்கள், நகையை அடகு வைக்கிறார்கள், நிலங்களை விற்கிறார்கள், ஏழை மக்கள் மஹல்லாவில் உதவி கடிதம் வாங்கிக்கொண்டு ஊர் ஊராக பள்ளிவாசல்களாக ஏறி எனது மகளுக்கு திருமணம்செய்ய உதவி செய்யுங்கள் என்று பிச்சை எடுக்கும் அவல நிலை, பெண் பிள்ளையை பரக்கத் (அல்லாஹ்வின் அருள்) என்று சொல்லும் மார்க்கம் இஸ்லாம் ஆனால் இன்று வரதட்சணை கொடுக்க முடியாமல் பல ஏழைப்பெண் பிள்ளைகள் திருமணம் முடிக்க வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள்.

எந்த ஒரு ஆண் மகனின் தந்தையும் தனது மகனுக்கு திருமணம் செய்ய உதவுங்கள் என்று பள்ளிவாசலில் போய் நிர்ப்பது இல்லை, பெண்களாகிய நம்மை பெற்ற பெற்றோர்களுக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலை, இதை மாற்றியமைக்கும் ஆற்றல் நமக்குண்டு என்பதை கவனத்தில் கொண்டு மாற்றத்தைநம்மிடமிருந்தே தொடங்குவோம்.

எந்த மணமகன் அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் கட்டுப்பட்டு வரதட்சணை கேட்காமல்,மஹர் கொடுத்து மணமுடிக்க முன்வருகிறானோ அவனை திருமணம் செய்துக்கொள்ள முன்வருவோம், வரதட்சணை கேட்கும் மணமகனை புறக்கணிப்போம் என்று பெண்களாகிய நாம் உறுதி எடுக்க வேண்டும். மார்க்க சட்டங்களுக்கு மாற்றமாக பெற்றோர்களோ, உறவினர்களோ சொன்னால் கட்டுபடவேண்டிய அவசியம் இல்லை.

وَقَالَ لِلآخَرِينَ: ((لاَ طَاعَةَ فِي مَعْصِيَةٍ، إِنَّمَا الطَّاعَةُ فِي الْمَعْرُوفِ)).

அலீ(ரலி) அறிவித்தார். ‘அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதில் கீழ்ப்படிதல் கிடையாது; கீழ்ப்படிதல் என்பதெல்லாம் நன்மையில்தான்’ என்றார்கள்.

நூல்: புகாரி : 7257. 

இதையெல்லாம் கவனத்தில் கொண்டு ஒவ்வொரு தீண்குலப் பெண்களும் வரதட்சணை கேட்கும் மணமகனை புறக்கனித்து, மஹர் கொடுத்து மணமுடிக்கும் மணமகனை திருமணம் செய்து கொள்ள முன்வந்தால் தான் சமூகத்தில் மாற்றத்தை காணமுடியும்.