Tamil Bayan Points

திருமணத்திற்கும் வலிமாவிற்கும் அவசியமானது என்ன? 

கேள்வி-பதில்: திருமணம்

Last Updated on September 28, 2021 by

திருமணத்திற்கும் வலிமாவிற்கும் அவசியமானது என்ன? 

திருமணம் செய்வதற்கு பெண்ணின் மீது எந்த பொருளாதாரச் சுமையையும் இஸ்லாம் சுமத்தவில்லை. பெண்ணுக்கு மஹர் வழங்குவது, வலீமா என்ற விருந்தை வழங்குவது போன்ற கடமைகள் ஆண் மீதே சுமத்தப்பட்டுள்ளது.

திருமணம் செய்வதற்காக மணமகன் மணமகளுக்கு வழங்கும் பொருள் மஹர் (மணக் கொடை) எனப்படும்.

ஒரு பெண் திருமண வாழ்வின் மூலம் தனக்கு ஏற்படும் இழப்புகளைக் கருத்தில் கொண்டு எவ்வளவு வேண்டுமானாலும் மஹர் கேட்பதற்கு உரிமை உள்ளது. அதை அவள் மட்டுமே உடமையாக வைத்துக் கொள்வதற்கும் உரிமை உள்ளது.

இல்லற வாழ்க்கையில் அதிகமான இழப்புக்கு ஆளாவது பெண்கள் தான். தங்களின் அழகையும், இளமையையும் இழந்த பின் அவர்கள் விவாகரத்துச் செய்யப்படக் கூடும். அந்த நிலையை எல்லாம் எண்ணிப் பார்த்து மஹர் தொகையைத் தீர்மானிக்கும் உரிமையைப் பெண்களுக்கு இஸ்லாம் வழங்குகின்றது.

மஹர் தொகையை எவ்வளவு வேண்டுமானாலும் பெண்கள் கேட்கலாம். இவ்வளவு தான் கேட்க வேண்டும் என்று வரையறை செய்யும் உரிமை எவருக்கும் இல்லை.

ஆண் பெண்ணுக்கு மஹர் கொடுக்க வேண்டும்

பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும்,மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்!

அல்குர்ஆன் (4 : 4)

ஒரு குவியலையே மஹராக நீங்கள் அவர்களுக்குக் கொடுத்தாலும் அதனைத் திரும்பப் பெறலாகாது எனவும் குர்ஆன் கட்டளையிடுகின்றது.

ஒரு மனைவியை விவாக ரத்துச் செய்து, இன்னொருத்தியை மணந்து கொள்ள நீங்கள் விரும்பினால் அவளுக்கு ஒரு குவியலையே கொடுத்திருந்தாலும் அதில் எதையும் பிடுங்கிக் கொள்ளாதீர்கள்! அக்கிரமமாகவும், பெரும் குற்றமாகவும் உள்ள நிலையில் அதைப் பிடுங்கிக் கொள்கிறீர்களா?

(அல் குர்ஆன் 4:20)

மஹர் தொகையைத் தீர்மானிக்கும் உரிமை பெண்களிடம் விடப்பட்டுள்ளதால் அவர்கள் விரும்பினால் அதை விட்டுத் தரலாம்;

அப்பெண்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக்கொடைகளை கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள். நிர்ணயம் செய்த பின் ஒருவருக் கொருவர் திருப்தியடைந்தால் உங்களுக்குக் குற்றம் இல்லை.

அல்குர்ஆன் (4 : 24)

தன்னிடத்தில் பொருளாதாரம் இருக்கும் பட்சத்தில் அதை மஹராக கொடுப்பது ஆண் மீது கடமை. பொருளாதாரம் இல்லை என்றாலோ அல்லது சிறிதளவு செல்வம் இருந்தாலோ மணமகள் பொருந்திக் கொண்டால் தன்னால் இயன்றதை அவர் கொடுத்து மணமுடிக்கலாம். இதைப் பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.

ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் தம்மை (அர்ப்பணித்து) அன்பüப்புச் செய்துவிட்டதாகக் கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(இனி) எனக்கு எந்தப் பெண்ணும் தேவையில்லை” என்று சொன்னார்கள். அப்போது அங்கிருந்த ஒரு மனிதர் “இந்தப் பெண்ணை எனக்கு மணமுடித்து வையுங்கள்!” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “ஏதேனும் ஆடையொன்றை அவளுக்கு (“மஹ்ர்’ எனும் விவாகக் கொடையாக)க் கொடு!” என்று (அந்த மனிதரிடம்) சொன்னார்கள். அவர், “என்னிடம் இல்லை” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “அவளுக்கு (எதையேனும் மஹ்ராகக்) கொடு! அது இரும்பாலான மோதிரமாக இருந்தாலும் சரியே” என்று சொன்னார்கள். இதைக் கேட்டு அந்த மனிதர் கலங்கினார். எனவே, நபி (ஸல்) அவர்கள், “குர்ஆனிலிருந்து உன்னிடம் என்ன (அத்தியாயம் மனனமாக) இருக்கிறது?” என்று கேட்டார்கள். அவர் இன்ன இன்ன அத்தியாயங்கள் (எனக்கு மனப்பாடமாக) உள்ளன” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள்,  “உம்முடன் இருக்கும் குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு மணமுடித்து வைத்தேன்” என்று சொன்னார்கள். அறிவிப்பவர் : சஹ்ல் பின் சஅத் (ரலி).

நூல் : புகாரி (5029)

வலீமா விருந்து

திருமணத்திற்குப் பின் மணமகன் வழங்கும் விருந்து வலீமா எனப்படுகின்றது. இந்த விருந்து நபிவழியாகும்.

பெண் வீட்டார் விருந்தளிப்பதும் அவர்களிடம் விருந்து கேட்டுப் பெறுவதும் மறைமுகமான வரதட்சணையாகும். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் பெண் வீட்டார் விருந்து கொடுக்கும் பழக்கம் இருந்ததில்லை.

மணமகன் கட்டாயம் விருந்தளிக்க வேண்டுமென்பதோ, கடன் வாங்கியேனும் விருந்தளிக்க வேண்டுமென்பதோ இல்லை. தன் வசதிக்கேற்ப சாதாரண உணவை மிகச் சிலருக்கு வழங்கினாலும் இந்த “சுன்னத்’ நிறைவேறிவிடும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபிய்யாவை மணமுடித்த போது சிறிது மாவு, சிறிது பேரீச்சம் பழம் ஆகியவற்றையே “வலீமா’ விருந்தாக வழங்கினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 371, 2893

ஸைனபைத் திருமணம் செய்த போது விருந்தளித்த அளவுக்கு வேறு எவரைத் திருமணம் செய்த போதும் நபிகள் நாயகம் (ஸல்) விருந்தளித்ததில்லை. ஸைனபை மணந்த போது ஒரு ஆட்டை திருமண விருந்தாக அளித்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 5168, 5171, 7421

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொடுத்த பெரிய “வலீமா’ விருந்தில் ஒரு ஆட்டை “வலீமா’வாகக் கொடுத்தார்கள். இதுதான் அவர்கள் வழங்கிய பெரிய விருந்தாகும்.

எனவே திருமண விஷயத்தில் ஆண்கள் மீதே சில பொருளாதாரக் கடமைகளை இஸ்லாம் வழங்கியுள்ளது. அக்கடமைகள் கூட அவரவர் சக்திக்கு ஏற்ப நிறைவேற்றப்பட வேண்டும்.

ஆனால் இன்றைக்குச் சிலர் பெரிய அளவில் பொருளாதாரம் இருந்தால் தான் திருமணம் செய்ய முடியும் என்று எண்ணுகிறார்கள். திருமணத்தை ஆடம்பரமாக்கி தங்கம் மீதே தேவையற்ற சுமைகளை சுமத்திக்கொள்கிறார்கள்.

இஸ்லாமிய அடிப்படையில் ஒருவர் திருமணம் செய்வதற்கு பொருளாதாரம் எந்த வகையிலும் தடை இல்லை.