Tamil Bayan Points

தவறுகளை ஒப்புக் கொள்வோம்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

Last Updated on October 21, 2023 by Trichy Farook

முன்னுரை

உலகில் உள்ள படைப்புகளில் மிகச்சிறந்த படைப்பு மனிதன் என்பதை சொல்லித் தெரிய வேண்டிய தில்லை. இப்போது காணப்படுகின்ற, மெய்சிலிர்க்கச் செய்கிறபல அரிய கண்டுபிடிப்புகள் யாவும் மனிதர்கள் கண்டுபிடித்தவையே.

இறைவன் அவர்களுக்கு வழங்கிய அறிவு எனும் பொக்கிஷத்தை பயன்படுத்தியே இந்த கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார்கள். என்னதான் அறிவில் சிறந்தவனாக மனிதன் இருந்தாலும், அவனிடம் தவறுகள் நிகழத்தான் செய்யும். நம்மைப்படைத்த இறைவனிடம் மட்டுமே எந்த தவறும் நிகழாது..

மனிதர்கள் தவறு செய்பவர்களே!

மனிதன் என்ற வட்டத்திற்குள் யார் நுழைந்தாலும், அவர்கள் உலகின் மிகச்சிறந்த அறிவாளிகளாக இருந்தாலும், ஏன் இறைவனின் தூதர்களாகவே இருந்தாலும் அவர்களும் தவறு செய்யக்கூடியவர்களே. இறைவனது கரத்தினால் படைக்கப்பட்ட முதல் மனிதரும், மிகச்சிறந்த அறிவாளியுமான, மனித சமுதாயத்தின் ஆதிபிதா என்று அழைக்கப்படுகின்ற ஆதம் (அலை) அவர்கள் கூட தவறு செய்தவர்களே. அவர்களின் பிள்ளைகளாக இருக்கின்ற நாம் அனைவரும் தவறு செய்பவர்கள் என்பதில் ஆச்சரியத்திற்கு ஒன்றுமில்லை.

 كُلُّ بَنِي آدَمَ يُخْطِئُ بِاللَّيْلِ وَالنَّهَارِ ثُمَّ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرُ لَهُ وَلَا أُبَالِي

ஆதமின் சந்ததிகள் அனைவர்களும் இரவிலும், பகலிலும் தவறு செய்யக்கூடியவர்களே என இறைவன் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : அபூதர் (ரலி)
நூல் : அஹ்மத்-21420 (20451)

மனிதர்கள் இயல்பிலேயே தவறு செய்பவர்கள்தான் என்றாலும் அதிலே நிரந்தரமாக உழல்வது ஏற்கத்தக்கதல்ல. மாறாக தவறு செய்பவர்கள், தான் செய்த தவறை ஒப்புக் கொண்டு, மனந்திருந்தி வாழ வேண்டும். மனிதர்களில் இந்த வகையினர்தான் சிறப்புக்குரியவர்கள்.

ஆனால் இதற்கு மாற்றமாக அதிகமானோர் என்ன தவறு செய்தாலும், தான் செய்தது சரி என்பதாக தவறை மழுப்ப பார்க்கின்றனர். அதற்காக மணிக்கணக்கில் பேசி, சால்ஜாப்புகள் கூறுகின்றனர். தாம் செய்த தவறை ஏற்றுக் கொள்ளும் பரந்த மனப்பான்மை நம்மில் பெரும்பாலோனரிடம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இறைவன் விரும்பும் உயரிய பண்பு தவறை ஒப்புக்குக் கொள்ளுதல்

தன்னிடம் ஏற்பட்ட தவறை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை எல்லோருக்கும் வாய்த்து விடாது. இருப்பினும் இந்த உயரிய பண்பை தான் இறைவன் மிகவும் விரும்புகின்றான். நம்மைப்படைத்த இறைவனுக்கு மாற்றமாக ஏராளமான தீய காரியங்களில் ஈடுபடுகின்றோம். அவனது கட்டளைகளுக்கு மாறு செய்கின்றோம். பாவ காரியங்களில் மூழ்கி, உல்லாசமாய் நீந்திக் கொண்டிருக்கின்றோம். இந்த தருணத்தில் நாம் செய்த பாவகாரியங்களுக்காக இறைவனிடம் மன்றாடி பாவ மன்னிப்பு கேட்க வேண்டும்.

இறைவா என்னை மன்னித்து விடு என்ற ஒற்றை வரியில் நாம் மன்னிப்பு கேட்பதை விடவும் இறைவா இத்தனை குற்றங்களை செய்த அற்பன், இந்த அடிமை என்பதாக செய்த தவறுகளை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும், தன் முன்னிலையில் இவ்வாறு தவறுகளை ஒப்புக் கொள்வதை, இறைவன் மிகவும் விரும்புகின்றான்.

فَتَشَهَّدَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- حِينَ جَلَسَ ثُمَّ قَالَ « أَمَّا بَعْدُ يَا عَائِشَةُ فَإِنَّهُ قَدْ بَلَغَنِى عَنْكِ كَذَا وَكَذَا فَإِنْ كُنْتِ بَرِيئَةً فَسَيُبَرِّئُكِ اللَّهُ وَإِنْ كُنْتِ أَلْمَمْتِ بِذَنْبٍ فَاسْتَغْفِرِى اللَّهَ وَتُوبِى إِلَيْهِ فَإِنَّ الْعَبْدَ إِذَا اعْتَرَفَ بِذَنْبٍ ثُمَّ تَابَ تَابَ اللَّهُ عَلَيْهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்தபின், ஏகத்துவ உறுதி மொழி கூறி (இறைவனைப் புகழ்ந்துவிட்டு), “ஆயிஷா! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி வந்தது. நீ நிரபராதியாக இருந்தால், அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று (வஹீயின் மூலம்) அறிவித்து விடுவான். (ஒருகால்) நீ குற்றமேதும் செய்திருந்தால், அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கம் திரும்பிவிடு.

ஏனெனில், அடியான் தனது பாவத்தை ஒப்புக்கொண்டு, (மனம் திருந்தி) பாவ மன்னிப்புக் கோரினால், அவனது கோரிக்கையை ஏற்று அவனை அல்லாஹ் மன்னிக்கின்றான்” என்று சொன்னார்கள்.

அறி : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம்-5349 

மேற்கண்ட ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது மனைவி ஆயிஷா (ரலி) அவர்களை தவறு செய்திருந்தால் இறைவனிடம் மன்னிப்பு கேட்குமாறு பணிக்கின்றார்கள். ஒரு அடியான் இறைவனிடம் மன்னிப்பு கேட் டால் அதை தவறாது மன்னிப்பான் என்று கூறாமல், தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டால் அதை தவறாமல் மன்னிப்பான் என்று விளக்கம் அளிக்கின்றார்கள்.

இந்த செய்தியிலிருந்து வெறுமனே மன்னிப்பு கேட்பதை விடவும், செய்த குற்றங்களை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கோருவது இறைவனுக்கு மிகவும் உவப்பான காரியம் என்பதை விளங்க வேண்டும். இறைவன் நமது கோரிக்கைகளை ஏற்றாக வேண்டும் என்பதை விரும்புபவர்கள், செய்த தவறுகள் அனைத்தையும் இறைவன் முன்னிலையில் ஒப்புக் கொண்டு பிரார்த்திக்க வேண்டும்.

பாவ மன்னிப்பின் தலைசிறந்த துஆ

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பாவ மன்னிப்பின் தலைசிறந்த துஆ என்று ஒன்றை நமக்கு கற்றுத்தந்து, அந்த துஆ நம்மை சொர்க்கத்திற்கே அழைத்து செல்லும் என அதன் சிறப்பையும் எடுத்துக் கூறுகின்றார்கள்.

இறைவனுக்கு மிக மிக பிடித்தமான துஆ என்று எதை நமக்கு கற்றுத் தருகின்றார்களோ அதிலும் நாம் செய்த பாவங்களை, தவறுகளை ஒப்புக் கொண்டு, பின் மன்னிப்பு கேட்கும் வகையில் அதன் வாசக அமைப்பு அமைந்திருக்கின்றது. இந்த துஆ இறைவனுக்கு மிகவும் பிடித்துப்போக, இந்த வாசக அமைப்பும் ஒரு காரணம் என்பதை தெளிவாக அறியலாம்.

حَدَّثَنِي شَدَّادُ بْنُ أَوْسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم
سَيِّدُ الاِسْتِغْفَارِ أَنْ تَقُولَ اللَّهُمَّ أَنْتَ رَبِّي لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ بِذَنْبِي اغْفِرْ لِي فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ قَالَ ، وَمَنْ قَالَهَا مِنَ النَّهَارِ مُوقِنًا بِهَا فَمَاتَ مِنْ يَوْمِهِ قَبْلَ أَنْ يُمْسِيَ فَهُوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ ، وَمَنْ قَالَهَا مِنَ اللَّيْلِ وَهْوَ مُوقِنٌ بِهَا فَمَاتَ قَبْلَ أَنْ يُصْبِحَ فَهْوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹும்ம ! அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கலக்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க, வ வஅதிக்க மஸ்ததஅத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து. அபூஉ லக்க பி நிஅமத்திக்க அலய்ய, வ அபூஉ லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துனூப இல்லா அன்த்த”

என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவ மன்னிப்புக் கோரலாகும்.

(பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை.

நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியை யும் என்னால் இயன்றவரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்.

நீ எனக்கு அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக்கொள்கிறேன். ஆகவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெ வரும் இல்லை.

யார் இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறந்து விடுகின்றாரோ அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்.

யார் இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்துவிடுகின்றாரோ அவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்.

அறி : ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)
நூல் : புகாரி-6306 

தவறை ஒப்புக் கொள்ளத் தயங்காத தோழர்கள்

நம்மில் யாரும் பிறரை பாதிக்கும் வண்ணம் சிறியதொரு தவறை செய்தாலும் அதையும் ஒப்புக் கொள்ள தயாராக இருப்பதில்லை. எங்கே ஒப்புக் கொண்டு விட்டால், மக்கள் நம்மை கேவலமாக பார்ப்பார்களோ என்று இவ்வுலகிற்கு அஞ்சுகின்றோம்.

நாம் செய்த குற்றத்தை மறைக்க, பூசி மொழுக பல பொய்களை கட்டவிழ்த்து விடுவோம். ஆனால் நபிகளாரின் பயிற்சி பட்டறையில் பாடம் பயின்றவர்கள் எத்தனை பாரதூரமான தவறை செய்திருந்தாலும் அதனை கொஞ்சமும் தயங்காமல் ஒப்புக் கொண்டார்கள் என்று சரித்திரம் சான்றளிக்கின்றது.

عَنِ ابْنِ عَبَّاسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ:
لَمَّا أَتَى مَاعِزُ بْنُ مَالِكٍ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لَهُ لَعَلَّكَ قَبَّلْتَ ، أَوْ غَمَزْتَ ، أَوْ نَظَرْتَ قَالَ : لاََ يَا رَسُولَ اللهِ قَالَ أَنِكْتَهَا لاَ يَكْنِي قَالَ فَعِنْدَ ذَلِكَ أَمَرَ بِرَجْمِهِ

மாஇஸ் பின் மாலிக் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்(து தாம் விபச்சாரம் புரிந்து விட்டதாக வாக்குமூலம் அளித்)தபோது, அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “(அவளை) நீர் முத்தமிட்டிருக்கலாம்! அல்லது (கண்ணாலோ கையாலோ) சைகை செய்திருக்கலாம்! அல்லது (ஆசையுடன்) பார்த்திருக்கலாம்!” என்று சொன்னார்கள்.

அவர், “(அவ்வாறெல்லாம்) இல்லை; அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், சாடைமாடையாகக் கேட்காமல் “அவளுடன் நீர் உடலுறவு கொண்டீரா?” என்று (வெளிப்படையாகவே) கேட்டார்கள். அவர், ஆம்’ என்று கூறினார்.

அப்போதுதான் அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

அறி : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி-6824 

عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ
رَأَيْتُ مَاعِزَ بْنَ مَالِكٍ حِينَ جِىءَ بِهِ إِلَى النَّبِىِّ -صلى الله عليه وسلم- رَجُلٌ قَصِيرٌ أَعْضَلُ لَيْسَ عَلَيْهِ رِدَاءٌ فَشَهِدَ عَلَى نَفْسِهِ أَرْبَعَ مَرَّاتٍ أَنَّهُ زَنَى فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « فَلَعَلَّكَ ». قَالَ لاَ وَاللَّهِ إِنَّهُ قَدْ زَنَى الأَخِرُ – قَالَ – فَرَجَمَهُ ثُمَّ خَطَبَ فَقَالَ « أَلاَ كُلَّمَا نَفَرْنَا غَازِينَ فِى سَبِيلِ اللَّهِ خَلَفَ أَحَدُهُمْ لَهُ نَبِيبٌ كَنَبِيبِ التَّيْسِ يَمْنَحُ أَحَدُهُمُ الْكُثْبَةَ أَمَا وَاللَّهِ إِنْ يُمْكِنِّى مِنْ أَحَدِهِمْ لأُنَكِّلَنَّهُ عَنْهُ

மாஇஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டபோது அவர்களை நான் பார்த்தேன். அவர் உயரம் குறைந்த மனிதராகவும் கட்டுடல் கொண்டவராகவும் இருந்தார். அவரது உடல் மேல், துண்டு இருக்கவில்லை. அவர், தாம் விபசாரம் செய்து விட்டதாகத் தமக்கெதிராகத் தாமே நான்கு முறை சாட்சியம் (ஒப்புதல் வாக்குமூலம்) அளித்தார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், நீர் இப்படிச் செய்திருக்கலாம் (முத்தமிட்டிருக்கலாம், அணைத்திருக்கலாம்)’ என்று கூறினார்கள். மாஇஸ் (ரலி) அவர்கள், “இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த அற்பன் விபச்சாரம் செய்துவிட்டான்” என்று கூறினார். ஆகவே, அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார் கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் சமுரா (ரலி)
நூல்: முஸ்லிம்-3494

(ஹதீஸின் தொடர்ச்சி) பிறகு அஸ்த்’ குலத்தின் ஒரு கிளையான ஃகாமித்’ கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தூய்மைப்படுத்துங்கள்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “உனக்குக் கேடுதான்! நீ திரும்பிச் சென்று அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீளுவாயாக” என்று கூறினார்கள்.

அதற்கு அப்பெண், “மாஇஸ் பின் மாலிக்கைத் திருப்பி அனுப்பியதைப் போன்று என்னையும் திருப்பி அனுப்பப் பார்க்கிறீர்கள் என்றே நான் கருதுகிறேன்” என்று கூறினார்.

நபி (ஸல்) அவர்கள் “என்ன அது?” என்று கேட்டார்கள். அப்பெண், “நான் விபசாரத்தால் கர்ப்பமுற்றவள்” என்றார்.

நபி (ஸல்) அவர்கள், “நீயா (அது)?” என்று கேட்டார்கள். அப்பெண் ஆம்’ என்றார். நபி (ஸல்) அவர்கள், “உமது வயிற்றிலுள்ள மகவைப் பெற்றெடுக்கும்வரை (பொறுமையாக இரு; பிறகு வா!)” என்றார்கள். பிரசவிக்கும்வரை அவளைப் பராமரிக்கும் பொறுப்பை அன்சாரிகளில் ஒருவர் ஏற்றுக்கொண்டார். பிறகு அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ஃகாமிதிய்யா குலத்தாளுக்குக் குழந்தை பிறந்துவிட்டது’ என்று கூறினார்.

நபி (ஸல்) அவர்கள், “நாம் இப்போது அவளுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்போவதில்லை.

பாலூட்டும் அன்னையின்றி நிற்கும் சிறு வயதுக் குழந்தையாக அவளது பிள்ளையை விட்டுவிடவும் நாம் விரும்பவில்லை” என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் எழுந்து, அவனுக்குப் பாலூட்டும் பொறுப்பு என்னைச் சேர்ந்தது, அல்லாஹ்வின் தூதரே!” என்றார்.

பின்னர் அந்தப் பெண்ணுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட் டார்கள்.

அறி : புரைதா பின் அல்ஹசீப் (ரலி)
நூல்: முஸ்லிம்-3499 

இந்த ஹதீஸ்கள் நம்முடைய இறையச்சத்தை உரசிப்பார்க்கும் விதத்தில் அமைந்துள்ளதை காணலாம். நம்மில் பலரும் எந்த காரியத்தை செய்ய பெரிதும் தயங்குவோமோ அதை இவர்கள் செய்கின்றனர். ஒரு பெண்ணை ஓரக் கண்ணால் பார்த்ததைக்கூட  நாம் ஒப்புக் கொள்ள மாட்டோம். அதற்கும் ஏதாவது சாக்கு போக்குகளை கூறி வகையாக சமாளிப்போம். நமது நிலை இவ்வாறிருக்கும்போது அருமை ஸஹாபாக்கள் தாம் விபச்சாரம் செய்து விட்டதாக அனைவர் முன்னிலையிலும் ஒப்புக் கொள்கின்றனர். இவ்வுலகில் கேவலப்படுவோம் என்பதை கொஞ்சமும் நினைவில் நிறுத்தவில்லை. மறுமையில் இறைவன் முன்னிலையில் கேவலப்பட்டு விடக்கூடாது என்பதிலேயே குறியாய், கொள்கையாய் இருந்துள்ளார்கள்.

இக்கால கட்டத்தில் இஸ்லாமிய ஆட்சி இல்லை என்பதால் யாரிடத்திலும் நாம் செய்த, இது போன்ற குற்றங்களை ஒப்புக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்பது உண்மையே. ஒரு வாதத்திற்கு ஒப்புக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் வருமேயானால் அதற்கு நாம் தயாரா? என்று ஒவ்வொருவரும் நம் மனதை தொட்டு பதிலளியுங்கள். மீண்டும் ஆழ்ந்த யோசனை நம்மிடையே ஒட்டி உறவாடுகின்றது.

இதன் மூலம் நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு பாவங்களையும் ஊர் ஊராய் மேடை அமைத்து, மைக்கில் விளம்பரபடுத்த வேண்டும் என்று கூற முனைய வில்லை. என் உரையின் நோக்கமும் அதுவல்ல.

நபிகளாரின் அருமையான தோழர்கள் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டால் தங்களது உயிரே காலி என்பதை அறிந்தும், அதையே ஒப்புக் கொள்ள முன் வந்தார்கள் எனும்போது, நமக்கு மத்தியில் ஒருவருக்கொருவர் செய்கின்ற தவறுகளை ஒப்புக் கொள்ள சற்றும் தயங்காமல் முன் வர வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

இந்த மனப்பான்மையை மட்டும் நாம் பெற்றுவிட்டால், நம்மையும் அறியாமல் பல்வேறு நன்மைகளில் நாட்டம் அதிகரிப்பதோடு, தீமைகளின் மீது ஒரு வித வெறுப்புணர்வும் உண்டாகும். இறைவனின் நெருக்கத்தையும் எளிதாக பெற்றுவிடலாம். ஏனெனில் ஏற்கனவே குறிப்பிட்டதை போல தவறுகள் செய்து அதை ஒப்புக் கொள்ளும் அடியானை இறைவன் விரும்பவே செய்கின்றான்.

நண்பர்களுக்கிடையில்…

ஒரு சிலர், நல்ல நண்பர்களாய் இருப்பார்கள். திடீரென இருவரும் எதிரும் புதிருமாக மாறிவிடுவார்கள். ஒருவர் கிழக்கே சென்றால் இன்னொருவர் மேற்கே செல்வார் எனுமளவுக்கு பகைமைத்தீ பற்றி எரியும். நேற்று வரையிலும் நல்ல நண்பர்களாய், ஒரே தட்டில் சாப்பிடுபவர்களாய், ஒரு சட்டையை மாற்றி மாற்றி போடுபவர்களாய்… இவ்வாறு தங்கள் நட்பை ரம்மியமாய் பரிமாறிக் கொண்டவர்கள் ஏன் இப்படி..? என்று சிந்தித்து பார்த்தால் அதில் ஒருவர் தான் செய்த தவறை ஒப்புக் கொள்ள முன்வராததே காரணம் என்பதை சந்தேகமற கூறிவிடலாம்.

செய்த தவறை ஒப்புக் கொள்ள தயங்கினால் இரு நண்பர்கள் மட்டுமல்ல, நட்பை பரிமாறும் நாடுகள் கூட தமக்கிடையில் சண்டையிட்டுக் கொண்டு, பிரிந்து சென்று விடும். நல்ல நண்பர்களை நாம் தக்க வைக்க வேண்டுமெனில் நாம் செய்த தவறை சிறிதும் தயக்கமின்றி ஒப்புக் கொள்ள முன்வர வேண்டும்.

இதோ அருமையான இரு நல்ல நண்பர்களின் சம்பவத்தை கவனியுங்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது முழங்கால் வெயே தெரியுமளவிற்கு ஆடையின் ஒரு பக்கத்தை (தூக்கிப்) பிடித்த படி (எங்களை நோக்கி) வந்தார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், “உங்கள் தோழர் வழக்காட வந்து விட் டார்” என்று சொன்னார்கள்.

عَنْ أَبِي الدَّرْدَاءِ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ
كُنْتُ جَالِسًا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِذْ أَقْبَلَ أَبُو بَكْرٍ آخِذًا بِطَرَفِ ثَوْبِهِ حَتَّى أَبْدَى عَنْ رُكْبَتِهِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَمَّا صَاحِبُكُمْ فَقَدْ غَامَرَ فَسَلَّمَ وَقَالَ إِنِّي كَانَ بَيْنِي وَبَيْنَ ابْنِ الْخَطَّابِ شَيْءٌ فَأَسْرَعْتُ إِلَيْهِ ثُمَّ نَدِمْتُ فَسَأَلْتُهُ أَنْ يَغْفِرَ لِي فَأَبَى عَلَيَّ فَأَقْبَلْتُ إِلَيْكَ فَقَالَ يَغْفِرُ اللَّهُ لَكَ يَا أَبَا بَكْرٍ ثَلاَثًا ثُمَّ إِنَّ عُمَرَ نَدِمَ فَأَتَى مَنْزِلَ أَبِي بَكْرٍ فَسَأَلَ أَثَمَّ أَبُو بَكْرٍ فَقَالُوا لاَ فَأَتَى إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَسَلَّمَ فَجَعَلَ وَجْهُ النَّبِيِّ صلى الله عليه وسلم يَتَمَعَّرُ حَتَّى أَشْفَقَ أَبُو بَكْرٍ فَجَثَا عَلَى رُكْبَتَيْهِ فَقَالَ يَا رَسُولَ اللهِ وَاللَّهِ أَنَا كُنْتُ أَظْلَمَ مَرَّتَيْنِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِنَّ اللَّهَ بَعَثَنِي إِلَيْكُمْ فَقُلْتُمْ كَذَبْتَ وَقَالَ أَبُو بَكْرٍ صَدَقَ وَوَاسَانِي بِنَفْسِهِ وَمَالِهِ فَهَلْ أَنْتُمْ تَارِكُو لِي صَاحِبِي مَرَّتَيْنِ فَمَا أُوذِيَ بَعْدَهَا

அபூபக்ர் (ரலி) அவர்கள் (நபி -ஸல்- அவர்களுக்கு) சலாம் கூறிவிட்டு, “அல்லாஹ்வின் தூதரே! எனக்கும் கத்தாபின் மகனா(ர் உம)ருக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. நான் (கோபமாக) அவரை நோக்கி விரைந்தேன். பிறகு (என் செய்கைக்காக) நான் வருந்தி அவரிடம் என்னை மன்னிக்கும்படி கேட்டேன். அவர் என்னை மன்னிக்க மறுத்து விட்டார். ஆகவே உங்களிடம் வந்தேன்” என்று சொன்னார்கள்.

உடனே, நபி (ஸல்) அவர்கள், “அபூபக்ரே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!” என்று மும்முறை கூறினார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் (அபூபக்ர் – ரலி – அவர்களை மன்னிக்க மறுத்து விட்டதற்காக) மனம் வருந்தி அபூபக்ர் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்று, “அங்கே அபூபக்ர் (ரலி) அவர்கள் இருக்கிறார்களா?” என்று கேட்கவிட்டார், “இல்லை” என்று பதிலளித்தார்கள்.

ஆகவே, அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுடைய முகம், (கோபத்தால்) நிறம் மாறலாயிற்று. எனவே, அபூபக்ர் (ரலி) அவர்கள் பயந்துபோய் தம் முழங்கால்களின் மீது மண்டியிட்டு அமர்ந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தான் (வாக்கு வாதத்தை தொடங்கியதால் உமரைவிட) அதிகம் அநீதி இழைத்தவனாகி விட்டேன்.” என்று இருமுறை கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(மக்களே!) அல்லாஹ் என்னை உங்களிடம் அனுப்பினான். பொய் சொல்கிறீர்’ என்று நீங்கள் கூறினீர்கள்.

அபூபக்ர் அவர்களோ, நீங்கள் உண்மையே சொன்னீர்கள்’ என்று கூறினார்; மேலும் (இறைமார்க்கத்தை நிலை நிறுத்தும் பணியில்) தன்னையும் தன் செல்வத்தையும் அர்ப்பணித்து என்னிடம் பரிவுடன் நடந்து கொண்டார். அத்தகைய என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து) விட்டு விடுவீர்களா?” என்று இருமுறை சொன்னார்கள். அதன் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் மன வேதனைக்குள்ளாக்கப்படவில்லை.

அறி.: அபுத்தர்தா (ரலி)
நூல் : புகாரி-3661 

அபூபக்கர் (ரலி) அவர்களுக்கும், உமர் (ரலி) அவர்களுக்கும் சிறிது பிரச்சினை ஏற்படுகின்றது. உடனே அபூபக்கர் (ரலி), உமர் ரலி அவர்களிடம், தான் செய்த தவறை ஒப்புக் கொண்டு, தன்னை மன்னிக்கும்படி கேட்கின்றார்.

அந்நேரத்தில் உமர் அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை. பின்பு, தான் செய்த இந்த தவறுக்காக வருந்தி, இதை ஒப்புக் கொள்ள அபூபக்கரின் வீட்டிற்கே சென்று விடுகின்றார்.

என்ன அருமையான நண்பர்கள்! ஒருவருக்கொருவர் தாம் செய்த தவறை ஒப்புக்கொள்ள போட்டி போட்டுக்கொண்டு வருகின்றார்கள் என்பதை பார்க் கும்போது இதுபோன்ற ஒரு தாராளமான, பரந்து விரிந்த மனப்பான்மையை நாமும் வளர்த்துக் கொள்ள ஆசை கொள்ள வேண்டும். நாம் செய்த தவறை தயங்காமல் ஒப்புக் கொள்ள பழகிட வேண்டும்.

இன்றைய கணவன் மனைவி உறவு…

உலகில் உள்ள உறவுகளில் கணவன் மனைவிக்கிடையில் உள்ள உறவு தான் அந்நியோன்யமானதும், ஒளிவு மறைவில்லாததாகும். கணவன், மனைவி ஒவ்வொருவரும் மற்றவரை அந்நியராக பார்க்கவே கூடாது. தன்னில் ஒருத்தியாக, ஒருவனாக பார்க்கப்பட வேண்டிய உறவு. இப்படிப்பட்ட உறவுகளுக்கு மத்தியில் கூட தவறை ஒப்புக் கொள்ளும் மனப்பான்மையை காண்பது பெரிதும் அரிதாகவே இருக்கின்றது.

குடும்பத்தில் ஒரு தவறு நிகழ்ந்து விட்டால் நான் இல்லை, நீ தான் என்ற மந்திரமே ஒவ்வொரு வீட்டிலும் ஓங்கி ஒலிக்கின்றது. சம்பந்தப்பட்டவர் ஒப்புக் கொள்ள பலமாக மறுக்கின்றார்கள். இதன் மூலம் என் மனைவி எந்த தவறை செய்தாலும் ஒப்புக் கொள்ளவே மாட்டாள் என்ற எண்ணம் கணவனுக்கும், என் கணவன் தான் செய்த தவறை ஒப்புக்கொள்ளமாட்டார் என்ற எண்ணம் மனைவிக்கும் ஏற்படும்.

இவ்வாறு மறுப்பது இருவருக்கிடையில் உள்ள பாசத்தை, அன்பை முறிக்கவே வழி வகுக்கும். இன்னும் சில தம்பதியர்கள் விவகாரத்து வரைக்கும் செல்வதற்கும் இதுவே காரண கர்த்தாவாய் அமைகின்றது. கணவன் மனைவி உறவு நெடுநாள் திகட்டாமல் இனிக்கவும், நீடிக்கவும் தம் தவறை ஒப்புக் கொள்ள இருவரும் முன்வரவேண்டும்.

நீங்கள் ஏதேனும் தவறிழைத்து விட்டால் அதை ஒப்புக் கொண்டு பாருங்கள். உங்களது துணைக்கு உங்கள் மீதுள்ள அன்பும், பாசமும் மென்மேலும் அதிகரிப்பதை உணர்வீர்கள். குறிப்பிட்ட பிரச்சினை தொடர்பாக இருவரில் ஒருவர் “ஏங்க என்னிடம்தான் தவறு. நான்தான் தவறிழைத்து விட்டேன்…” என்று ஒப்புக்கொண்டு விட்டால் மற்றொருவர், “இல்லையில்லை நான் தான் குற்றமிழைத்து விட்டேன். பாவம் நீ என்ன செய்வாய்…?” என்பதாக பாச மழையை பொழிவார்கள். இருவருக்குமிடையில் உள்ள நேசம் முன்பிருந்ததை விட மென்மேலும் அதிகரிக்க நீங்கள் தவறை ஒப்புக் கொள்வது ஒரு இணைப்பு பாலமாக செயல்படும்.

பெரும்பாலும் பெண்கள் தாங்கள் செய்த தவறை சீக்கிரத்தில் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். எனவே இதை உணர்ந்து தாய்மார்கள் செயல்பட வேண்டும்.

தீமைகளின் பிறப்பிடம்…

ஒரு மனிதனிடம் எந்த தவறும் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் தவறைமறுக்கும் தீய குணம் ஒன்று மட்டும் இருக்கும் எனில், வெகு விரைவில் அனைத்து தீமைகளும் அவனிடம் குடிகொள்ள ஆரம்பித்துவிடும். ஆம்! ஒருவன் தான் செய்த தவறை ஒப்புக் கொள்ள மறுக்கும் மனநிலைக்கு தள்ளப்பட்டு விட்டால், அவனது உள்ளம் அதை சரிகாண ஆரம்பித்து விட்டால் எல்லா தீமைகளும் சர்வ சாதாரணமாக புகுந்து, அவனை நாசப்படுத்தி விடும்.

سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ
… أَلاَ وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ ، وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ أَلاَ وَهِيَ الْقَلْبُ

அறிக : உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்றுவிட்டால் உடல் முழுவதும் சீர் பெற்றுவிடும். அது சீர்குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்துவிடும். அறிந்துகொள்ளுங்கள்: அதுதான் உள்ளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல் : புகாரி-52 

ஒரு காலத்திலும் தவறை ஒப்புக் கொள்ள மறுக்கும் நிலைக்கு நமது உள்ளத்தை ஆளாக்கி விடக்கூடாது. மீறி அந்நிலைக்கு நமது உள்ளத்தை தள்ளும் போது, ஒப்புக் கொள்ள மறுக்கும் வேலையை நமது உள்ளத்திற்கு தவறாது வழங்கும்போது உள்ளம் கெட்டு, பல்வேறு தீமைகளையும் துணிந்து செய்பவர்களாய் நம்மை நமது உள்ளமே மாற்றிவிடும். இதைத்தான் மேற்கண்ட செய்தியின் வாயிலாக நம்மை நபிகளார் எச்சரிக்கின்றார்கள். இதை நாமே உணர்கின்றோம்.

ஒரு தவறை மறுக்க வேண்டும் என்பதற்காக முதலில் பொய் சொல்ல ஆரம்பிப்போம். அந்த பொய்யை உண்மையாக்க பல்வேறு துணைப் பொய்களின் தேவையை நாடுவோம். பிறகு பிறர் மீது வீண்பழி சுமத்துபவர்களாக மாறிவிடுவோம். ஆரம்பத்தில் இதை செய்ய நம் மனது உறுத்தினாலும் காலப்போக்கில் இதற்கும் பழகிவிடுவோம்.

இப்படியே ஒவ்வொரு தீமையாய் நம்மிடம் உறவாட ஆரம்பித்து விடும். எனவே தீமைகளின் பிறப்பிடமாக திகழ்கின்ற, தவறை ஒப்புக் கொள்ள மறுக்கும் மோசமான இந்த குணத்தை வேரோடு வேராய் பிடுங்கி எறிய வேண்டும்.

தயங்குவதேன்..?

ஒரு சிலர்கள் தான் என்ன தவறை செய்திருந்தாலும், அதை மறுத்தே பழகுகிறார்கள். தக்க ஆதாரத்தோடு நிரூபித்தாலும் ஒருபோதும் ஒப்புக் கொள்ள முன்வர மாட்டார்கள். இத்தகையோர் தாங்கள் செய்த தவறை ஒப்புக்கொள்ள மறுப்பதற்கு ஆணவமே தலையாய காரணம். ஒரு சில போலி மார்க்க அறிஞர்களிடம் பொதுமக்கள் ஏதேனும் தவறை சுட்டிக்காட்டினால் இதைப்பற்றியெல்லாம் உங்களுக்கு தெரியாது. அரபி படித்து கரைத்து குடித்த, 60 கலைகளை? கற்றறிந்த எங்களுக்குதான் எல்லாம் தெரியும், புரியும் என்று பிதற்ற ஆரம்பிப்பார்கள். தன்னிடம் எந்த தவறும் இல்லை என்று சாதிப்பார்கள்.

வேறு சிலரிடம் அவர்கள் கொண்டிருக்கும் கொள்கை தவறானது என்பதை நிரூபித்தால் “ம்ஹூம் எங்களுக்கு, எங்கள் முன்னோர்களுக்கு தவறு நிகழுமா…?” என்று குதிக்க ஆரம்பிப்பார்கள். இவைகள் அனைத்திற்கும் அவர்களிடம் உள்ள ஆணவமே காரணம். இதுபோன்ற ஆணவம் கொண்டு, தாங்கள் செய்த தவறை ஒப்புக் கொள்ள மறுப்பவர்களுக்கு சொர்க்கம் செல்ல இயலாதென்று இறைத்தூதர் கடுமையான எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.

பெருமை வேண்டாம்

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ

لاَ يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِى قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ ». قَالَ رَجُلٌ إِنَّ الرَّجُلَ يُحِبُّ أَنْ يَكُونَ ثَوْبُهُ حَسَنًا وَنَعْلُهُ حَسَنَةً. قَالَ « إِنَّ اللَّهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ الْكِبْرُ بَطَرُ الْحَقِّ وَغَمْطُ النَّاسِ

நபி (ஸல்) அவர்கள் “யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்” என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், “தமது ஆடை அழகாக இருக்க வேண் டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)” என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகின்றான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும், மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்” என்று கூறினார்கள்.

அறி: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல் : முஸ்லிம்-147 

கௌரவப் பிரச்சினை

பெரும்பாலான மக்கள் தாங்கள் செய்த தவறை ஒப்புக் கொள்ள தயங்குவதற்கு இதை ஒப்புக் கொண்டால் சமூகத்தில், பிற மக்களிடையில் என் அந்தஸ்து என்னாவது? என்ற கௌரவப் பிரச்சைனையும் முக்கிய காரணியாக இருக்கின்றது. தவறிழைத்தவர் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெற்றவராயிருப்பார்.

அல்லது தனது நட்பு, மற்றும் உறவு வட்டத்தில் நற்பெயர் எடுத்தவராய் இருந்திருப்பார். இத்தவறை ஒப்புக் கொண்டு விட்டால், இவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்? நம் அந்தஸ்து இவர்களிடையே குறைந்து விடாதா? என்ற சிந்தனை ஓட்டத்தில் மூழ்கி விடுவதனாலே நாம் செய்த தவறை மன முரண்டாக மறுக்க ஆரம்பிக்கின்றோம்.

இதுபோன்ற சூழ்நிலையில் நபிகளாரின் ஒரு பொன்மொழியை நினைவில் கொண்டு வர வேண்டும். இறைவனுக்காக நம்மை நாம் தாழ்த்திக் கொண்டால் அவன் நமது நிலையை, அந்தஸ்தை மென்மேலும் உயர்த்துகின்றான் என்று நபிகளார் நமக்கு கற்றுத் தருகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

عَنْ أَبِى هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ
 مَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَالٍ وَمَا زَادَ اللَّهُ عَبْدًا بِعَفْوٍ إِلاَّ عِزًّا وَمَا تَوَاضَعَ أَحَدٌ لِلَّهِ إِلاَّ رَفَعَهُ اللَّهُ

தர்மம் செல்வத்தைக் குறைப்பதில்லை. மன்னிப்பதால் ஓர் அடியாருக்கு அல்லாஹ் கண்ணியத்தையே அதிகப்படுத்துகிறான். அல்லாஹ்வுக்காக ஒருவர் பணிவு காட்டினால் அவரை அல்லாஹ் உயர்த்தாமல் இருப்பதில்லை.

அறி : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம்-5047 (5447)

இறைவனுக்காக நமது கௌரவத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று நமக்கு அறிவுரை கூறுவதோடு நின்று விடாமல், தானும் பல்வேறு சமயத்தில் இதுபோன்று நடந்து கொண்டார்கள். தான் ஒரு இறைத்தூதர் ஆயிற்றே. சாதாரண மக்கள் முன்னிலையில் எவ்வாறு தன் தவறை ஒப்புக் கொள்வது என்று ஒரு காலத்திலும் கௌரவம் பார்த்ததாக வரலாறில்லை.

மாநபியின் பண்பை பாருங்கள்

இன்னும் சொல்வதானால் தவறுகளை ஒப்புக் கொள்வதில் என்றுமே நபிகளாருக்குதான் முதலிடம், அவர்களை விஞ்சிட ஆளில்லை எனுமளவுக்கு நபிகளார் தன் தவறை யார் முன்னிலையிலும் ஒப்புக் கொள்ளக்கூடியவராகவே இருந்தார்கள்.  

அபூஹுரைரா (ரலி) கூறியதாவது:

عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ
، أَنَّ رَجُلاً أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم يَتَقَاضَاهُ فَأَغْلَظَ فَهَمَّ بِهِ أَصْحَابُهُ ، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم دَعُوهُ فَإِنَّ لِصَاحِبِ الْحَقِّ مَقَالاً ثُمَّ قَالَ أَعْطُوهُ سِنًّا مِثْلَ سِنِّهِ قَالُوا : يَا رَسُولَ اللهِ لاَ نَجِدُ إِلاَّ أَمْثَلَ مِنْ سِنِّهِ فَقَالَ أَعْطُوهُ فَإِنَّ مِنْ خَيْرِكُمْ أَحْسَنَكُمْ قَضَاءً

”ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுத்த கடனை வாங்குவதற்காக வந்து தடித்த வார்த்தையைப் பயன்படுத்தினர். நபித்தோழர்கள் அவரைத் தாக்க முயன்றனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவரை விட்டுவிடுங்கள்; கடன் கொடுத்தவருக்கு இவ்வாறு கூற உரிமையுள்ளது.” என்று கூறிவிட்டு அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தின் வயதுடைய ஒர் ஒட்டகத்தைக் கொடுங்கள் என்றார்கள்.

நபித்தோழர்கள், “அதைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தைத் தவிர வேறு இல்லை” என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அதையே கொடுங்கள், அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர் என்றார்கள்.”

நூல் : புகாரி-2306 

இறைவனின் தூதர் (ஸல்) அவர்களே தன்னிடம் தான் தவறு என்பதை கௌரவம் பாராமல் ஒப்புக்கொள்ளும் போது, இதன் மூலம் தவறைஒப்புக் கொள்ள தயங்குபவர்கள், அல்லது மறுப்பவர்கள் மனிதர்களிடம் நமது அந்தஸ்து குறைந்தாலும் கூட, இறைவன் நம்மை உயர்ந்த அந்தஸ்தில் வைத்தே பார்க்கின்றான் என்பதை மறக்காதிருக்க வேண்டும்.

ஒரு எஜமானனின் அடிமைகளிடம் நம் அந்தஸ்து உயர்வது நமக்கு பெரிதாக ஒன்றும் பலன் தரப்போவதில்லை. அதுவே அவர்களின் எஜமானனிடம் நம் அந்தஸ்து உயர்ந்தால் நிச்சயம் நமக்கு பல்வேறு நன்மைகளை அள்ளித்தரும்.

மேலும் மறுமையில் நமது கௌரவமும் பாதுகாக்கப்படும் என்பதை விளங்க வேண்டும். என்ன? இவ்வுலகை விட மறுமையில் தானே நமது கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும்?

தவறை ஒப்புக்கொள்ளாதவர்களின் மறுமை நிலை இறைவனுக்கு செய்ய வேண்டி வணக்க வழிபாடுகளில் தவறு செய்தால் அதை இறைவன் முன் ஒப்புக் கொண்டு, மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவே மனிதர்களுக்கு ஏதேனும் தவறு இழைத்திருந்தால் கொஞ்சமும் தாமதிக்காமல் உடன் சம்பந்தப்பட்ட நபர்களிடம் அவர்களுக்கு நாம் இழைத்த தவறை ஒப்புக் கொண்டு, மன்னிப்பு கேட்க வேண்டும். அவர்கள் மன்னிக்காமல் இறைவன் ஒருக்காலும் மன்னிக்க மாட்டான்.

عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم
مَنْ كَانَتْ لَهُ مَظْلَمَةٌ لأَحَدٍ مِنْ عِرْضِهِ ، أَوْ شَيْءٍ فَلْيَتَحَلَّلْهُ مِنْهُ الْيَوْمَ قَبْلَ أَنْ لاَ يَكُونَ دِينَارٌ ، وَلاَ دِرْهَمٌ إِنْ كَانَ لَهُ عَمَلٌ صَالِحٌ أُخِذَ مِنْهُ بِقَدْرِ مَظْلَمَتِهِ وَإِنْ لَمْ تَكُنْ لَهُ حَسَنَاتٌ أُخِذَ مِنْ سَيِّئَاتِ صَاحِبِهِ فَحُمِلَ عَلَيْهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர், தன் சகோதரனுக்கு அவனது மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ, வெள்ளிக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட் டும்.)

(ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனது அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும்.

அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரது தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும்.

அறி: அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி-2449 

பிறர்களுக்கு செய்துவிட்ட தவறுக்காக இவ்வுலகில் வைத்தே அதை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கோர வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்துகின்றார்கள். அவ்வாறு செய்யாவிடில் மறுமையில் நமது நன்மைகள் பறிபோய்விடும், நன்மை இல்லாத பட்சத்தில் அவர்களின் தீமைகள் நம்மீது சுமத்தப்படும் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.

எனவே தவறுகளை ஒப்புக் கொள்ள மறுத்து மன்னிப்பு கேட்க மறுப்பது, மறுமையில் நமது வாழ்வை நாசப்படுத்தி விடும் என்பதை நினைவில் கொண்டு நாம் பிறருக்கு செய்த தவறை ஒப்புக்கொள்ள முன்வருவோமாக.

அப்துல் கரீம், மேலப்பாளையம்