Tamil Bayan Points

தலை முடிக்குச் சாயம் அடிக்கலாமா?

கேள்வி-பதில்: நவீன பிரச்சனைகள்

Last Updated on November 22, 2016 by Trichy Farook

தலை முடிக்குச் சாயம் அடிக்கலாமா?

கருப்பு தவிர மற்ற நிறங்களில் அடிக்கலாம்.

தலைமுடி நரைத்தவர்கள் தலைக்கு சாயம் பூசும் நடைமுறை நமது சமுதாயத்தில் இருக்கின்றது. தலைமுடி நரைக்காவிட்டாலும் அழகிற்காக முடியின் நிறத்தை மாற்றிக் கொள்ளும் பழக்கமும் சிலரிடம் இருக்கின்றது.

நரைத்த தலைமுடி கொண்டவர்கள் கருப்பு நிறத்தைத் தவிர்த்து வேறு ஏதாவது ஒரு நிறத்தால் தலைக்கு சாயம் பூச வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். எனவே யாருக்கேனும் வெள்ளை நிறத்தில் முடி இருக்குமேயானால் அவர் அதன் நிறத்தை மாற்றுவது அவசியம். ஆனால் கருப்பு நிறத்தைப் பயன்படுத்தக் கூடாது. இதைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து அறியலாம்.

3462 حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنْ صَالِحٍ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ قَالَ أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ إِنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الْيَهُودَ وَالنَّصَارَى لَا يَصْبُغُونَ فَخَالِفُوهُمْ رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தம் தாடிகளுக்கும் தலைமுடிக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. ஆகவே, நீங்கள் (அவற்றிற்குக் கருப்பு அல்லாத சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

புகாரி (3462)

கருப்பு நிறத்தைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவதிலிருந்து தலைமுடியை எந்நிறத்தில் வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் என்று விளங்க முடிகிறது.

தலைமுடி நரைக்காதவர்கள் தலைக்குச் சாயம் பூசும் வழக்கம் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருக்கவில்லை. எனவே நபிமொழிகளில் இதைப் பற்றி பேசப்படவில்லை.

ஆனால் இது தற்காலத்தில் அலங்காரமாக நவீனவாதிகளிடம் கருதப்படுகிறது. இதை வணக்கம் என்ற அடிப்படையிலோ மதச்சடங்காகவோ இவர்கள் செய்யவில்லை.

வணக்கமாகவோ மதச் சடங்காகவோ ஒருவர் ஒரு காரியத்தைச் செய்தால் அதற்குத் தான் மார்க்கத்தில் ஆதாரம் தேவை. ஆடை அலங்காரம் காலாச்சாரம் போன்ற விஷயங்களில் மார்க்கத்திற்கு மாற்றமான அம்சம் இருந்தாலே அதை நாம் தவிர்க்க வேண்டும். மார்க்கத்திற்கு முரணான அம்சம் இவற்றில் இல்லாவிட்டால் இவற்றைச் செய்தால் குற்றமில்லை.

நரைக்காத முடிக்குச் சாயம் பூசுவது அலங்காரம் என்ற வட்டத்துக்குள் வருவதால் இதற்கு மார்க்கத்தில் தடை இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். இச்செயல் எந்த வகையிலும் மார்க்கத்திற்கு முரண்படவில்லை. எனவே நரைக்காத தலைமுடிக்கு டை அடிப்பது தவறல்ல. அனுமதிக்கப்பட்டதாகும்.