Tamil Bayan Points

தலாக் விட்டு 7 மாதம் ஆகிவிட்டது. மீண்டும் சேரலாமா?

முக்கிய குறிப்புகள்: குடும்ப வழக்குகள்

Last Updated on October 18, 2016 by Trichy Farook

மனைவியின் புகார்

? எனக்குத் திருமணம் ஆகி இரண்டு வருடங்களில் எனக்கும் என் கணவருக்கும் இடையே ஏற்பட்ட சிறு பிரச்சனையில் பிரிந்தோம். பெரியவர்களின் பிரச்சனையால் என் கணவர் திடீரென்று முத்தலாக் கொடுத்துவிட்டதாகச் சொல்லி விட்டார். என் கணவர் தலாக் விட்டு ஏழு மாதங்கள் ஆகின்றது. என் வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். ஆனால் முத்தலாக் விட்டுவிட்டால் ஒரு தலாக்காவே கருதப்படும் என்றும் அவரே உம் கணவர் என்றும் வேறு ஒருவரை திருமணம் செய்ய முடியாது என்று கூறுகின்றனர். இது சரியா?

தீர்வு

நபி (ஸல்) அவர்கள் மற்றும் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிக் காலத்திலும், உமர் (ரலி) அவர்களது ஆட்சியின் (முதல்) இரண்டு ஆண்டுகளிலும் முத்தலாக் ஒரு தலாக்காகவே (நடைமுறையில்) இருந்தது. அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி), நூல்: முஸ்லிம் (2932)

அல்லாஹ்வின் தூதர் காலத்தில் முத்தலாக் என்பது ஒரு தலாக்காகவே கருத்தப்பட்டுள்ளதால். நபிவழியின்படி முத்தலாக் ஒரு தலாக்காவே எடுத்துக் கொள்ளப்படும்.

என்றாலும் உங்கள் கணவர் தலாக் கூறி ஏழு மாதங்கள் ஆகி விட்டதால் திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமை நீங்கி விடுகிறது.

இதைத் தெரிந்து கொள்ள சுருக்கமாக தலாக்கின் சட்டத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.

மூன்று மாதவிடாய் ஏற்படுவதற்குள்

ஒருவர் தன் மனைவியை தலாக் கூறினால் அவர்களின் திருமண உறவு அடியோடு முறிந்து விடுவதில்லை. மாறாக முதல் தடவை விவாகரத்துச் செய்த பின் மனைவிக்கு மூன்று மாதவிடாய் ஏற்படுவதற்குள் மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாம்.மனைவி கர்ப்பிணியாக இருந்தால் அவள் பிரசவிப்பதற்குள் சேர்ந்து கொள்ளலாம்.

மூன்று மாதவிடாய் தாண்டிவிட்டால்

இந்தக் காலக் கெடுவுக்குள் மனைவியுடன் கணவன் சேரவில்லையானால் அவர்களுக்கிடையே திருமண உறவு நீங்கி விடும். ஆயினும் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினால் மீண்டும் அவர்கள் புதிதாகத் திருமணம் செய்து கொள்ளலாம். இதற்கு எந்தத் தடையும் இல்லை.

 

உங்கள் பிரச்சனையில்

  • மூன்று மாதவிடாய் காலத்திற்குள் உங்கள் கணவர் உங்களிடம் சேர்ந்து கொள்ளாததால் அவர் திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமையை இழந்து விடுகிறார்.
  • நீங்கள் இருவரும் விரும்பினால் புதிதாக அவரையே திருமணம் செய்து கொள்ளலாம்.
  • இல்லையெனில் புதிதாக இன்னொருவரைத் திருமணம் செய்து கொள்ளலாம்.