Tamil Bayan Points

தயம்மும் சட்டம் இறக்கப்படல்

முக்கிய குறிப்புகள்: குர்ஆன் வசனம் இறங்கிய காரணம்

Last Updated on September 30, 2016 by Trichy Farook

 

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பயணமாகப் புறப்பட்டோம். ‘பைதா’ என்ற இடத்தை நாங்கள் அடைந்த போது எனது கழுத்து மாலை அறுந்து விட்டது. அதைத் தேடுவதற்காக நபி (ஸல்) அவர்கள் அங்கே தங்கினார்கள். அவர்களுடன் மக்களும் தங்கினார்கள். அவர்களின் அருகில் தண்ணீர் இருக்கவில்லை. அவர்களிடமும் தண்ணீர் இல்லை. மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து,

‘(உங்கள் மகள்) ஆயிஷா செய்ததைப் பார்த்தீர்களா? நபிகள் நாயகத்தையும் மக்களையும் தங்க வைத்து விட்டார். அவர்கள் அருகில் தண்ணீர் இல்லை. அவர்களிடமும் தண்ணீர் இல்லை’ என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தமது தலையை எனது தொடையில் வைத்து உறங்கிக் கொண்டிருந்த போது அபூபக்ர் (ரலி) வந்தார்கள். ‘நபி (ஸல்) அவர்களுக்கும் மக்களுக்கும் தடங்கலை ஏற்படுத்தி விட்டாய். அவர்களருகிலும் தண்ணீர் இல்லை. அவர்களிடமும் தண்ணீர் இல்லை’ என்று கூறி என்னைக் கண்டித்தார்கள்.

அவர்கள் எதைக் கூற வேண்டும் என்று அல்லாஹ் நாடினானோ அதையெல்லாம் கூறினார்கள். எனது இடுப்பிலும் தமது கையால் குத்தினார்கள். நபி (ஸல்) அவர்கள் என் தொடை மீது படுத்திருந்ததால் நான் அசையாமல் இருந்தேன். தண்ணீர் கிடைக்காத நிலையில் நபி (ஸல்) அவர்கள் காலைப் பொழுதை அடைந்தார்கள்.

அப்போது தான் தயம்மும் பற்றிய வசனத்தை அல்லாஹ் அருளினான். மக்கள் தயம்மும் செய்தனர். நான் அமர்ந்திருந்த ஒட்டகத்தை எழுப்பிய போது அதன் அடியில் என் கழுத்து மாலை கிடைத்தது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்கள்: புகாரீ 334, 4583. முஸ்லிம் 550