Tamil Bayan Points

ஜும்ஆ தொழுகைக்கு முன் பின் சுன்னத்துகள் உண்டா?

கேள்வி-பதில்: ஜும்ஆ

Last Updated on March 3, 2021 by

ஜும்ஆ தொழுகைக்கு முன் பின் சுன்னத்துகள் உண்டா?

ஜும் ஆ தொழுகைக்கு முன் சுன்னத் மற்றும் பின் சுன்னத் தொழுகைகள் உள்ளன.

صحيح البخاري
930 – حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: جَاءَ رَجُلٌ وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ النَّاسَ يَوْمَ الجُمُعَةِ، فَقَالَ: «أَصَلَّيْتَ يَا فُلاَنُ؟» قَالَ: لاَ، قَالَ: «قُمْ فَارْكَعْ رَكْعَتَيْنِ»

930 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாளில் மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருக்கையில் ஒரு மனிதர் வந்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இன்னாரே! தொழுது விட்டீரா? என்று கேட்டார்கள். அதற்கு அவர், இல்லை’ என்றார். எழுந்து, தொழுவீராக! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

ஜும்மாவுக்கு முன் சுன்னத் இல்லை; இது தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகை தான் என்று இந்த ஹதீஸுக்கு விளக்கம் சொல்கிறார்கள். பொதுவாக எப்போது பள்ளிவாசலுக்குள் நுழைந்தாலும் இரண்டு ரக் அத்கள் தொழ வேண்டும். அதைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இதற்கு விளக்கம் சொல்கிறார்கள்.

இந்த விளக்கம் தவறு என்பதை பின்வரும் ஹதீஸில் இருந்து அறியலாம்.

سنن ابن ماجه
1114 – حَدَّثَنَا دَاوُدُ بْنُ رُشَيْدٍ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَعَنْ أَبِي سُفْيَانَ عَنْ جَابِرٍ، قَالَا: جَاءَ سُلَيْكٌ الْغَطَفَانِيُّ وَرَسُولُ اللَّهِ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – يَخْطُبُ، فَقَالَ لَهُ النَّبِيُّ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: “أَصَلَّيْتَ رَكْعَتَيْنِ قَبْلَ أَنْ تَجِيءَ؟ ” قَالَ: لَا. قَالَ: “فَصَلِّ رَكْعَتَيْنِ وَتَجَوَّزْ فِيهِمَا”

நீ (பள்ளிக்கு) வருவதற்கு முன் இரு ரக்அத்கள் தொழுது விட்டாயா என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் இல்லை என்றார். அப்படியானால் இரு ரக்அத்கள் தொழு அதை சுருக்கமாகத் தொழு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகை பள்ளிவாசலில் நுழைவதற்கான தொழுகையாகும். இந்த ஹதீஸில் இங்கே வருவதற்கு முன் அதாவது வீட்டில் இரு ரக்அத்கள் தொழுது விட்டாயா என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டதாக இதில் சொல்லப்பட்டுள்ளது. பள்ளிவாசலில் நுழைவதற்கான தொழுகை என்றால் வீட்டில் தொழுது விட்டாயா என்று கேட்க மாட்டார்கள். வீட்டில் தொழுதது பள்ளிவாசலில் நுழைவதற்கான தொழுகையாக இருக்க முடியாது.

எனவே ஜும்மாவுக்கு முன் பள்ளியிலோ வீட்டிலோ இரண்டு ரக்அத்கள் தொழுவது சுன்னத் என்று அறிந்து கொள்ளலாம்.

பொதுவாக முன் சுன்னத் தொழுகைகள் பாங்குக்குப் பின்னர் தான் தொழ வேண்டும். ஆனால் ஜும்மாவுக்கு அது அவசியம் இல்லை. இமாம் மிம்பரில் ஏறிய பிறகு தான் பாங்கு சொல்வது நபிவழியாகும். எனவே பாங்கு சொல்வதற்கு முன்பே வீட்டில் தொழுது விட்டாயா என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டுள்ளதால் ஜும்மாவின் முன் சுன்னத்தை பாங்குக்கு முன்னரும் தொழலாம் என்று அறியலாம்.

ஜும்மாவுக்குப் பின்னால் நான்கு ரக்அத்களும் தொழலாம். இரண்டு ரக்அத்களும் தொழலாம்.

அதற்கான ஆதாரங்கள்

صحيح البخاري
937 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي قَبْلَ الظُّهْرِ رَكْعَتَيْنِ، وَبَعْدَهَا رَكْعَتَيْنِ، وَبَعْدَ المَغْرِبِ رَكْعَتَيْنِ فِي بَيْتِهِ، وَبَعْدَ العِشَاءِ رَكْعَتَيْنِ، وَكَانَ لاَ يُصَلِّي بَعْدَ الجُمُعَةِ حَتَّى يَنْصَرِفَ، فَيُصَلِّي رَكْعَتَيْنِ»

937 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்களும், பின்பு இரண்டு ரக்அத்களும், மஃக்ரிப் தொழுகைக்குப் பின்பு தமது இல்லத்தில் இரண்டு ரக்அத்களும் தொழுவார்கள். இஷாத் தொழுகைக்குப் பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். ஜுமுஆத் தொழுகைக்குப் பின் தம் இல்லத்திற்குத் திரும்பிச் செல்லாத வரை தொழ மாட்டார்கள். (இல்லத்திற்குச் சென்றதும்) இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.

صحيح مسلم
67 – (881) وحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللهِ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا صَلَّى أَحَدُكُمُ الْجُمُعَةَ فَلْيُصَلِّ بَعْدَهَا أَرْبَعًا»

உங்களில் ஒருவர் ஜும்மா தொழுததும் அதன் பின்னர் நான்கு ரக்அத்கள் தொழட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : முஸ்லிம்