Tamil Bayan Points

ஜும்ஆவுக்கு இரண்டு பாங்குகள் உண்டா?

கேள்வி-பதில்: ஜும்ஆ

Last Updated on March 3, 2021 by

ஜும்ஆவுக்கு இரண்டு பாங்குகள் உண்டா?

சுஹைப்

பதில் :

ஜும்ஆ நாளில் இரண்டு பாங்குகள் சொல்லும் வழக்கம் நடைமுறையில் இருக்கின்றது. அனேகமாக எல்லா பள்ளிகளிலும் ஜும்ஆவில் இரண்டு பாங்குகள் கூறுவதை நாம் பார்க்கிறோம்.

ஜும்ஆவுக்கு இரு பாங்குகள் சொல்லுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்களா என்று பள்ளிவாசல் இமாமிடம் கேட்டுப் பாருங்கள்; அல்லது ஜமாஅத் உலமா சபைத் தலைவரிடம் போய் கேட்டுப் பாருங்கள். யாரிடம் கேட்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜும்ஆவுக்கு இரு பாங்குகள் சொல்லுமாறு கூறவில்லை என்று தான் கூறுவார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இரண்டு பாங்குகள் சொல்லப்பட்டன என்று எந்த ஒரு ஆலிமும், எந்த ஒரு மௌலவியும், எந்த ஒரு ஹதீசையும் எடுத்துக் காட்ட முடியாது. மாறாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்கள் மிம்பர் மீது ஏறும் போது சொல்லப்படும் ஒரு பாங்கு தான் நடைமுறையில் இருந்தது.

சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்திலும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரது காலத்திலும் ஜுமுஆ நாளின் முதல் பாங்கு இமாம் சொற்பொழிவு மேடை மீது அமர்ந்ததும் சொல்லப்பட்டு வந்தது. உஸ்மான் (ரலி) அவர்கள் (ஆட்சிக்) காலத்தில் (மதீனாவில்) மக்கள் தொகை அதிகரித்தபோது “ஸவ்ரா’ எனும் கடைவீதியில் (பாங்கு, இகாமத் அல்லாமல்) மூன்றாவது அறிவிப்பை அதிகப்படுத்தினார்கள்.

நூல்: புகாரி 861

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் ஜும்ஆவில் ஒரு பாங்கு தான் சொல்லப்பட்டு வந்தது என்பதை இதன் மூலம் அறியமுடிகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு முரணில்லாத வகையில் உஸ்மான் (ரலி) அவர்களின் செயலைப் பின்வருமாறு விளங்க முடியும்.

உஸ்மான் (ரலி) அவர்கள் அதிகப்படுத்திய தொழுகை அறிவிப்பு என்பது பாங்கு அல்ல. அவர் பாங்கின் வாசகங்களைக் கூறுமாறு உத்தரவிடவில்லை. மாறாக மக்களுக்கு தொழுகையை ஞாபகப்படுத்துவதற்கு பாங்கு போன்று இல்லாத சாதாரண அறிவிப்பை மட்டுமே அதிகப்படுத்தினார்கள் என்று விளங்கிக் கொண்டால் இந்த முரண்பாடு வராது.

ஒரு பேச்சுக்கு உஸ்மான் (ரலி) அவர்கள் பாங்கைத் தான் அதிகப்படுத்தினார்கள் என்று ஏற்றுக் கொண்டாலும் இதனால் இரண்டு பாங்குகள் கூறுவது மார்க்க வழிமுறையாகாது. ஏனென்றால் நபித்தோழர்களின் சொல் செயல் மார்க்க ஆதாரமாக முடியாது. குறிப்பாக நபிமொழிக்கு மாற்றமாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.

எனவே இந்த அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜும்ஆவில் ஒரு பாங்கு கூறியதையே நாம் பின்பற்ற வேண்டும்.

இவ்விஷயத்தில் உஸ்மான் (ரலி) அவர்களைப் பின்பற்றுவதாக கூறும் போலிகள் உண்மையில் உஸ்மான் (ரலி) அவர்களைப் பின்பற்றவில்லை.

உஸ்மான் (ரலி) கடைத்தெருவில் இரண்டாவது அறிவிப்பை அதிகப்படுத்தியதாகவே மேற்கண்ட ஹதீஸில் உள்ளது. இதை இவர்கள் பின்பற்றுவதாக இருந்தால் உஸ்மான் (ரலி) செய்தது போல் கடைத்தெருவில் தான் இரண்டாவது பாங்கு சொல்ல வேண்டும். ஆனால் இரண்டாவது பாங்கு சொல்பவர்கள் யாரும் கடைத் தெருவில் சொல்வதில்லை. மாறாக பள்ளிவாசலுக்குள்ளே சொல்லி வருகிறார்கள்.

அதிகாலையில் இரண்டு பாங்கு

பிலால் (ரலி) அவர்களை ஸஹர் நேரத்தை அறிவிப்பதற்காகவும், அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்களை ஸஹர் முடிவு நேரத்தை, அதாவது சுப்ஹ் நேரத்தை அறிவிப்பதற்காகவும் பாங்கு சொல்ல நபி (ஸல்) அவர்கள் நியமித்திருந்தார்கள் என்ற செய்தி பல்வேறு ஹதீஸ் நூற்களில் காணப்படுகின்றது.

“நீங்கள் ஸஹர் உணவு உண்ணுவதிலிருந்து பிலாலின் பாங்கு உங்களைத் தடை செய்து விட வேண்டாம். இரவில் தூங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்புவதற்காகவும், தொழுது கொண்டிருப்பவர்கள் திரும்பி வருவதற்காகவும் தான் பிலால் பாங்கு சொல்கின்றாரே தவிர சுப்ஹ் நேரம் வந்து விட்டது என்பதை அறிவிப்பதற்காக அன்று” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரி 621

மற்றொரு அறிவிப்பில், இரண்டு பாங்குகளுக்கும் இடையில் எவ்வளவு இடைவெளி இருக்கும் என்பதை விளக்கும் போது, “அவர் பாங்கு சொல்லி விட்டு இறங்குவார், இவர் பாங்கு சொல்வதற்காக ஏறுவார்” என்று இப்னு உமர் (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் விளக்கமளித்துள்ளார்கள்.

இந்த ஹதீஸிலிருந்து ஸஹரின் கடைசிப் பகுதியில் ஸஹர் பாங்கும், ஸஹர் முடிவை அறிவிப்பதற்கு சுப்ஹ் பாங்கும் சொல்லப்பட்டிருப்பதை அறியலாம்.

இன்று ஜும்ஆவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தராத வகையில் இரண்டு பாங்குகள் சொல்லப்பட்டு வருகின்றன. ஆனால் சுன்னத் ஜமாஅத் என்று தங்களைக் கூறிக் கொள்பவர்கள் நபிகளாரின் காலத்தில் ரமளான் மாதத்தில் ஸஹர் நேரத்தில் சொல்லப்பட்டு வந்த இரண்டு பாங்குகளை இன்று சொல்வதில்லை.

இரண்டு பாங்குகள் சொல்ல வேண்டிய இடத்தில் ஒரு பாங்கும், ஒரு பாங்கு சொல்ல வேண்டிய இடத்தில் இரண்டு பாங்குகளும்ம் சொல்லி நபிவழிக்கு மாற்றமாக நடந்து வருகிறார்கள். இதை அவர்கள் புரிந்து திருந்திக் கொண்டால் நல்லது.