Tamil Bayan Points

ஜனாஸா தொழுகையில் ஒரு ஸலாம் கொடுக்கலாமா?

கேள்வி-பதில்: ஜனாஸா

Last Updated on February 19, 2023 by Trichy Farook

ஜனாஸா தொழுகையில் ஒரு ஸலாம் கொடுக்கலாமா?

கூடாது.

மூன்று காரியங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்துவந்தார்கள். ஆனால் மக்கள் அவற்றை விட்டுவிட்டனர். (கடமையான) தொழுகையில் ஸலாம் கூறுவது போன்று ஜனாஸாத் தொழுகையில் ஸலாம் கூறுவது அவற்றில் ஒன்றாகும்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),

நூல் : குப்ரா பைஹகீ-6989 (6586) 

கடமையான தொழுகையில் இரண்டு ஸலாம் சொல்லப்படுவது போல் ஜனாஸாத் தொழுகையிலும் இரண்டு ஸலாம் கொடுக்கலாம் என்று மேற்கண்ட செய்தி கூறுகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸாவுக்கு ஒரு ஸலாம் கொடுத்ததாக தாரகுத்னீ, ஹாகிம், பைஹகீ ஆகிய நூல்களில் ஒரு ஹதீஸ் உள்ளது. (பார்க்க: தாரகுத்னீ-1817

கன்னாம் பின் ஹஃப்ஸ், அப்துல்லாஹ் பின் கன்னாம் ஆகிய இருவர் வழியாகவே இந்த ஹதீஸ் அறிவிக்கப்படுகிறது. இவ்விருவரும் யார் என்று அறியப்படாதவர்கள் என்பதால் இது ஆதாரமாகக் கொள்ளத்தக்கது அல்ல.

ஜனாஸாத் தொழுகையில் இமாம் தக்பீர் கூற வேண்டும். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துக் கூற வேண்டும். பிறகு (தொழுகையை) நிறைவுசெய்யும் போது மெதுவாக ஒரு சலாம் கொடுக்க வேண்டும் என்று பல நபித்தோழர்கள் சொன்னதாக அபூஉமாமா அறிவிக்கிறார். இமாம் செய்வது போல் பின்பற்றுபவரும் செய்வது நபிவழியாகும் எனவும் கூறுகிறார். 

அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி) , ஹபீப் பின் மஸ்லமா (ரலி)
நூல் : ஹாகிம்-1331 (1264)

இது ஆதாரப்பூர்வமானது என்றாலும் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதாகக் கூறப்படவில்லை. நபித்தோழர்கள் கூற்றாகவே இது பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இது மார்க்க ஆதாரமாகாது.