Tamil Bayan Points

செஸ் விளையாட்டு சூதாட்டமா?

கேள்வி-பதில்: நவீன பிரச்சனைகள்

Last Updated on November 22, 2016 by Trichy Farook

செஸ் விளையாட்டு சூதாட்டமா?

விளையாட்டில் பங்கு பெறாதவர் வெற்றி பெற்றவருக்கு பரிசளித்தால் தவறில்லை. விளையாடுபவர்களிடம் இருந்து வெற்றி பெற்றவருக்கு பணம் வந்தால் அது சூதாட்டம்.

சூதாட்டத்திற்கும், விளையாட்டுக்கும் நேரடியாக எந்தச் சம்பந்தமும் இல்லை. எந்த விளையாட்டையும் சூதாட்டமாகவும் ஆக்க முடியும். சூது கலக்காமலும் விளையாட முடியும்.

இப்போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு இன்ன தொகை தரப்படும் என்று போட்டியில் பங்கேற்காதவர்கள் அறிவித்தால் அது பரிசு எனப்படும். இதற்கு மார்க்கத்தில் தடை இல்லை. இவ்வாறு எந்த விளையாட்டையும் விளையாடலாம். அது சூதாட்டமாகாது.

போட்டியில் பங்கு பெறுபவர்கள் ஒவ்வொருவரும் ஒரு தொகையைச் செலுத்தி, யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் மொத்த தொகையையும் எடுத்துக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் விளையாடினால் அது சூதாட்டமாகி விடும். சாதாரண கபடிப் போட்டியைக் கூட இந்த முறையில் நடத்தும் போது அது சூதாட்டமாகி விடுகின்றது.

செஸ் போட்டியானாலும், மல் யுத்தமானாலும் வேறு எந்த விளையாட்டானாலும் இந்த அடிப்படையில் நடத்தும் போது அது சூதாட்டமாகும்.

அந்த விளையாட்டில் சம்பந்தப்படாத மூன்றாம் நபர் வெற்றி பெறுபவர்களுக்கு வழங்குவது பரிசு எனப்படும். அதில் சம்மந்தப்பட்டவர்களே பணம் போட்டு வென்றவர்கள் எடுத்துக் கொள்வது சூதாட்டமாகும்.

செஸ் விளையாட்டு சூதாட்டம் அல்ல. ஆனால் அதைச் சூதாட்டமாகவும் ஆட முடியும்.

பயனற்ற முறையில் நேரம் பாழாவதால் அதைக் கூடாது என்று தான் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். சூது எனும் காரணத்தை அவர்களும் கூறவில்லை. ஆனாலும் மார்க்கம் தடுக்காததால் அதைத் தடுக்க யாருக்கும் அதிகாரமில்லை.

அதே நேரத்தில் இதில் மூழ்கி இறை நினைவை மறக்காமல், தொழுகையை மறந்து விடாமல் இருப்பவர்கள் மட்டுமே இது போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடலாம் என்பதையும் நினைவில் வைக்க வேண்டும்.