Tamil Bayan Points

சூனியக்காரர்களுக்கு ஆற்றல் உண்டு என்று முஸ்லிம் நூலில் ஹதீஸ் உள்ளதா

மற்றவை: சூனியம்

Last Updated on October 21, 2016 by Trichy Farook

இல்லை

குர்ஆனை ஓதி வாருங்கள். ஏனெனில், குர்ஆனை ஓதி வருபவர்களுக்கு அது மறுமையில் (இறைவனிடம்) பரிந்துரை செய்யும். இரு ஒளிச்சுடர்களான “அல்பகரா’ மற்றும் “ஆலு இம்ரான்’ ஆகிய இரு அத்தியாயங்களையும் ஓதி வாருங்கள். ஏனெனில், அவை மறுமை நாளில் நிழல் தரும் மேகங்களைப் போன்றோ அல்லது அணி அணியாகப் பறக்கும் பறவைக் கூட்டங்களைப் போன்றோ வந்து தம்மோடு தொடர்புள்ளவர்களுக்காக (இறைவனிடம்) வாதாடும். “அல்பகரா’ அத்தியாயத்தை ஓதி வாருங்கள். அதைக் கையாள்வது வளம் சேர்க்கும். அதைக் கைவிடுவது இழப்பைத் தரும். இவ்வத்தியாயத்திற்கு முன் சூனியக்காரர்கள் செயலிழந்து போவார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அறிவிப்பவர்: அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி)

நூல்: முஸ்லிம் (1470)

இந்தச் செய்தி தொடர்பாக தற்போது முகநூலில் பித்னா பரப்பப்பட்டு வருகிறது. இந்த செய்தியில் சூனியக்காரர்களுக்கு சக்தி இருப்பதாகவும், அது பகரா ஓதுவதன் மூலம் அற்றுப் போவதாகவும் வந்துள்ளது. 

மேலும் முஸ்லிம் நூலின் தமிழாக்கத்தில் இந்த வாசகம் ஒரு அறிவிப்பாளரிடமிருந்து வரவில்லை என்பது போன்றும் ஒரு தகவல் பதியப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியின் உண்மை நிலை என்ன? என்பதை தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பதில்

புகாரி முஸ்லிம் நூல்களை மேற்கோள் காட்டும் போது ஏற்கனவே தமிழில் வெளியிடப்பட்ட மொழிபெயர்ப்புகளில் இருந்துதான் ந்மது கட்டுரையாளர்கள் எடுத்துக் காட்டுவார்கள். அந்த அடிப்படையில் ஏற்கனவே வெளியிடப்பட்ட தமிழாக்கத்தில் உள்ளதை கட்டுரையாளர் அப்படியே எடுத்து எழுதியதால் நீங்கள் சுட்டிக் காட்டுவது போன்ற கருத்து ஏற்படுகின்றது.

மேலும் தமிழில் வெளியிடப்பட்ட அந்த ஹதீஸை முழுமையாக வெளியிட்டு இருந்தால் இந்தச் சந்தேகத்தை நீக்கும் சொற்கள் அதில் இடம்பெற்றுள்ளதை மக்கள் அறிந்து கொள்வார்கள். கட்டுரையாளரும் அதைக் கவனிக்கவில்லை. நாமும் கவனிக்கவில்லை.

அந்த ஹதீஸின் அரபுமூலம் இதுதான்

صحيح مسلم (2/ 197)

1910 – حدثنى الحسن بن على الحلوانى حدثنا أبو توبة – وهو الربيع بن نافع – حدثنا معاوية – يعنى ابن سلام – عن زيد أنه سمع أبا سلام يقول حدثنى أبو أمامة الباهلى قال سمعت رسول الله -صلى الله عليه وسلم- يقول « اقرءوا القرآن فإنه يأتى يوم القيامة شفيعا لأصحابه اقرءوا الزهراوين البقرة وسورة آل عمران فإنهما تأتيان يوم القيامة كأنهما غمامتان أو كأنهما غيايتان أو كأنهما فرقان من طير صواف تحاجان عن أصحابهما اقرءوا سورة البقرة فإن أخذها بركة وتركها حسرة ولا تستطيعها البطلة ». قال معاوية بلغنى أن البطلة السحرة.

صحيح مسلم (2/ 197)

1911 – وحدثنا عبد الله بن عبد الرحمن الدارمى أخبرنا يحيى – يعنى ابن حسان – حدثنا معاوية بهذا الإسناد. مثله غير أنه قال « وكأنهما ». فى كليهما ولم يذكر قول معاوية بلغنى.

எனவே மற்றவர்களால் வெளியிடப்பட்ட இதன் தமிழாக்கத்தை முதலில் பாருங்கள்

1470 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனை ஓதிவாருங்கள். ஏனெனில், குர்ஆன் ஓதிவருபவர்களுக்கு அது மறுமையில் வந்து (இறைவனிடம்) பரிந்துரை செய்யும். இரு ஒளிச்சுடர்களான “அல்பகரா’ மற்றும் “ஆலு இம்ரான்’ ஆகிய இரு அத்தியாயங்களையும் ஓதி வாருங்கள். ஏனெனில், அவை மறுமை நாளில் நிழல்தரும் மேகங்களைப் போன்றோ அல்லது அணி அணியாகப் பறக்கும் பறவைக் கூட்டங்களைப் போன்றோ வந்து தம்மோடு தொடர்புள்ளவர்களுக்காக (இறைவனிடம்) வாதாடும். “அல்பகரா’ அத்தியாயத்தை ஓதிவாருங்கள். அதைக் கையாள்வது வளம் சேர்க்கும். அதைக் கை விடுவது இழப்பைத் தரும். இவ்வத்தியாயத்திற்கு முன் சூனியக்காரர்கள் செயலிழந்துபோவார்கள்.

இதை அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) முஆவியா பின் சல்லாம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) “அல் பத்தலாஎனும் சொல்லுக்கு “சூனியக்காரர்கள்என்று பொருள் என எனக்குத் தகவல் கிட்டியது.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் (அவை மேகங்களைப் போன்று அல்லது பறவைக் கூட்டங்களைப் போன்று என்பதற்கு பதிலாக) “அவை மேகங்களைப் போன்றும் பறவைக் கூட்டங்களைப் போன்றும் வந்து வாதாடும்’ என்று இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பில் முஆவியா பின் சல்லாம் (ரஹ்) அவர்கள் தமக்குக் கிட்டியதாகக் கூறிய சொற்பொருள் இடம்பெறவில்லை.

இதிலிருந்து கிடைக்கும் கிடைக்கும் கருத்துக்களைப் பாருங்கள்.

சூனியக்காரர்கள் என்று தமிழாக்கம் செய்யப்பட்ட இட்த்தில் அல் பதலத் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இதன் நேரடிப் பொருள் வீனர்கள் என்பதாகும். இது பாத்தில் என்ற சொல்லின் பன்மைச் சொல்லாகும். தவறானவை என்பதையும் அசத்தியம் என்பதையும் குறிக்க பாத்தில் என்ற சொல் குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 8:8, 17:81, 21:18, 22:62, 31:30, 34:49, 41:42, 42:24, 47:3 ஆகிய வசன்ங்களில் பாத்தில் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எந்த இடத்திலும் சூனியம் என்ற பொருளில் இந்தச் சொல் பயன்படுத்தப்படவில்லை. அதன் பன்மைச் சொல்லாகிய பத்தலத் என்பதற்கு நேரடிப் பொருள் வீனர்கள் பொய்யர்கள் என்பது தான்.

நேரடிப் பொருள் இதுதான் என்ற போதும் இது சூனியக்கார்ர்களைக் குறித்தே சொல்லப்பட்டுள்ளது என்பது முஆவியா என்ற மூன்றாவது அறிவிப்பாளரின் கருத்தாகத் தான் சொல்லப்பட்டுள்ளது. வீனர்கள் பொய்யர்கள் என்ற கருத்தில் சூனியக்காரர்களும் அடங்குவார்கள். அவர்கள் அல்லாத அனைத்து பொய்யர்களும் வீனர்களும் அடங்குவார்கள். ஆனால் அதன் நேரடிப் பொருள் சூனியக்காரர்கள் என்பது கிடையாது.

பொய்யர்கள் என்று பொதுவாகச் சொல்லப்பட்டு இருக்கும் போது அது சூனியக்காரர்களைத் தான் குறிக்கிறது என்று அல்லாஹ்வின் தூதர் சொன்னதாக இவர் சொல்லவில்லை. எனக்குத் தகவல் கிடைத்தது என்றுதான் கூறுகிறார். எனவே பொய்யர்கள் என்பது சூனியக்காரர்களைத் தான் குறிக்கிறது என்பது யார் என்று தெரியாத ஒருவரின் கருத்தாகும். அந்தக் கருத்தை முஆவியா என்பவர் எடுத்துச் சொகிறார்.

எனவே வீனர்கள் என்று தான் அதற்கு மொழி பெயர்த்திருக்க வேண்டும். வீனர்கள் என்பதன் கருத்து சூனியக்காரகள் என்று முஆவியா என்பவர் கூறுகிறார் என்று சொல்வது அப்போதுதான் பொருத்தமாக அமையும்.

பாத்த்தில் என்ற சொல் குர்ஆனில் பொதுவாக பொய்யையும், வீனானதையும் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளதை அடிப்படையாகக் கொண்டு பொருள் செய்வது முஆவியா என்ற அறிவிப்பாளர் ஆதாரமில்லாமல் சொன்ன கருத்தை விட சரியானது.

ஒரு அறிவிப்பில் இவ்வாறு சொல்லப்பட்டு உள்ளது மற்றொரு அறிவிப்பில் இதன் பொருள் சூனியக்க்காரகள் என்று சொல்லாமல் உள்ளது. அதன்படி வீனர்கள் என்றுதான் பொருள் கொள்ள முடியும்.

இதை நாம் இந்த ஹதீஸை ஒட்டி விளக்கி இருக்க வேண்டும். கவனக்குறைவை ஒப்புக் கொள்கிறோம்.