Tamil Bayan Points

சிறு வயதில் நோன்பு பிடிக்காதவர்கள் என்ன செய்வது?

கேள்வி-பதில்: நோன்பு

Last Updated on October 23, 2016 by Trichy Farook

சிறு வயதிலிருந்தே நோன்பு பிடிக்காதவர்கள் எத்தனை நோன்புகள் விடுபட்டுள்ளன என்பது தெரியாத நிலையில் விடுபட்ட நோன்புகள் எத்தனை நோற்க வேண்டும்? விடுபட்ட நோன்புகளைப் பிடிக்காதவர்கள் சுன்னத்தான நோன்புகளை வைக்கக் கூடாது என்கிறார்களே, இது சரியா?

பதில்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று பேரை விட்டு எழுது கோல் உயர்த்தப் பட்டு விட்டது.

1. தூங்குபவர் விழிக்கின்ற வரை 2. சிறுவன் பெரியவராகும் வரை 3. பைத்தியக்காரர் பைத்தியத்தில் இருந்து தெளிவாகும் வரை.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்கள்: நஸயீ 3378, அபூதாவூத் 3822, இப்னுமாஜா 2031

இந்த ஹதீஸின் அடிப்படையில் நோன்பு உள்ளிட்ட எந்த வணக்கமானாலும் பருவ வயதை அடைந்த பின்னரே கடமையாகின்றது. பருவ வயதை அடைந்த பின்னர் நோன்பு நோற்காவிட்டால் தான் மார்க்க அடிப்படையில் குற்றமாகும்.

பருவ வயதை அடைந்த பின்னர் விடுபட்ட நோன்புகள் எத்தனை என்பது தெரிந்தால் அதைக் கணக்கிட்டு வைத்துக் கொள்ள வேண்டும். விடுபட்டவை எத்தனை என்று தெரியாவிட்டால் அதற்காகப் பாவ மன்னிப்பு தேடுவது தான் இறைவன் காட்டித் தரும் வழிமுறையாகும்.

எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். அவர் செய்த நன்மை அவருக்குரியது. அவர் செய்த தீமையும் அவருக்குரியதே. “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சிரமத்தைச் சுமத்தியது போல் எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு வலிமையில்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி. (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக! (எனவும் கூறுகின்றனர்).

(2:187)

கடமையான நோன்புகள் பாக்கி இருக்கும் நிலையில் சுன்னத்தான நோன்புகளை நோற்பதற்குத் தடை ஏதும் இல்லை. எனினும் சுன்னத்தான நோன்பை நோற்காவிட்டால் அதற்கான நன்மைகள் கிடைக்காதே தவிர குற்றமாகாது. ஆனால் கடமையான நோன்பை நோற்காவிட்டால் இறைவனிடம் குற்றவாளியாகி விடுவோம் என்பதால் அதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.