Tamil Bayan Points

சிறுவனின் உடலில் குர்ஆன் வசனம் எழுதப்பட்டிருப்பது உண்மையா?

கேள்வி-பதில்: நவீன பிரச்சனைகள்

Last Updated on November 22, 2016 by Trichy Farook

சிறுவனின் உடலில் குர்ஆன் வசனம் எழுதப்பட்டிருப்பது உண்மையா?

சமீபகாலமாக இது போன்ற வதந்திகள் அதிகரித்து வருகின்றன. மீன் உடம்பில் லாயிலாஹ் இல்லல்லாஹ் என்று எழுதப்பட்டிருந்தது என்றும் வானத்தில் அல்லாஹ் என்ற வார்த்தையின் வடிவில் மேகக் கூட்டம் திரண்டது எனவும் இன்னும் இது போன்று பல செய்திகள் மக்களுக்கு மத்தியில் பரப்பப்படுகின்றது.

இணையதளத்தில் வெளியிடப்படும் இது போன்ற செய்திகள் நம்புவதற்கு ஏற்ற வகையில் இல்லை. ஒரு பேச்சுக்கு இவையெல்லாம் உண்மை என்று ஏற்றுக் கொண்டாலும் இவை இஸ்லாமியப் பிரச்சாரத்துக்கு எந்த வகையிலும் உதவாது.

ஏனென்றால் மாற்று மதத்தில் உள்ளவர்களும் தங்கள் நம்பிக்கைக்குத் தோதுவாக இது போன்ற நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுகின்றனர். பிள்ளையார் வடிவில் பப்பாளி வந்தது. ஏசுவினுடைய தோற்றத்தில் மேகக் கூட்டங்கள் திரண்டது என்றெல்லாம் பலவாறு கூறப்படுகின்றது.

எதார்த்தமாக அமைந்த நிகழ்வுகளைத் தங்கள் நம்பிக்கைக்கு சாதகமாக ஆக்கிக் கொள்கின்றனர். இவர்களைப் போன்று முஸ்லிம்களாகிய நாமும் நடந்து கொள்ளக்கூடாது.

குர்ஆன் அல்லாஹ்வுடைய வேதம் என்பதற்கு நாம் இது போன்ற பலவீனமான வாதங்களை வைப்பது கூடாது. மாறாக அறிவுப்பூர்வமான உண்மையான சான்றுகள் பலவற்றை குர்ஆனே நமக்கு கற்றுத் தருகின்றது. இந்தச் சான்றுகளே அறிவாளிகளிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.