Tamil Bayan Points

08) சிரியாவில் பார்ப்பது மதீனாவுக்குப் பொருந்தாது

நூல்கள்: பிறை ஓர் விளக்கம்

Last Updated on October 30, 2022 by

தலைப்பிறையைத் தீர்மானிப்பது குறித்த ஆதாரங்களில் கீழ்க்கண்ட ஹதீஸும் முக்கியமான பங்கு வகிக்கின்றது.

உம்முல் ஃபழ்ல் (ரலி) அவர்கள் என்னை சிரியாவிலிருந்த முஆவியா (ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்தனர். நான் சிரியாவுக்குச் சென்று அவரது வேலையை முடித்தேன். நான் சிரியாவில் இருக்கும் போது ரமளானின் தலைப்பிறை தென்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு நான் பிறையைப் பார்த்தேன். பின்னர் அம்மாதத்தின் கடைசியில் மதீனாவுக்கு வந்தேன். இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடம் (பயணம் குறித்து) விசாரித்தார்கள். பின்னர் பிறையைப் பற்றி பேச்சை எடுத்தார்கள். நீங்கள் எப்போது பிறையைப் பார்த்தீர்கள்?” என்று (என்னிடம்) கேட்டார்கள். நாங்கள் வெள்ளிக்கிழமை இரவில் பிறையைப் பார்த்தோம்” என்று கூறினேன். நீயே பிறையைப் பார்த்தாயா?” என்று கேட்டார்கள். ஆம், (நான் மட்டுமல்ல) மக்களும் பார்த்தார்கள். நோன்பு பிடித்தார்கள். முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு பிடித்தார்கள்” என்று கூறினேன். அதற்கவர்கள் ஆனால் நாங்கள் சனிக்கிழமை இரவில் தான் பிறையைப் பார்த்தோம். எனவே நாங்கள் (மறு) பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பது நாட்களை முழுமையாக்கும் வரை நோன்பு பிடித்துக் கொண்டிருப்போம்” என்றார்கள். முஆவியா (ரலி) அவர்கள் பிறை பார்த்ததும் அவர்கள் நோன்பு பிடித்ததும் உங்களுக்குப் போதாதா?” என்று கேட்டேன். அதற்கவர்கள், போதாது! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படித் தான் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: குரைப்

நூல்: முஸ்லிம்

இது வரை எடுத்துக் காட்டிய ஆதாரங்களுடன் தொடர்புடையதாக உள்ளதால் இங்கே இந்த ஹதீஸை இடம் பெறச் செய்துள்ளோம்.

தானும் பிறை பார்த்து முஆவியாவும் பார்த்து மக்களும் பார்த்த விபரத்தை குரைப் கூறுகிறார். இதற்குப் பிறகும் இப்னு அப்பாஸ் (ரலி) ஏற்க மறுக்கிறார்கள். எங்கள் பகுதியில் பிறையை நாங்கள் காண வேண்டும். இல்லாவிட்டால் முப்பது நாட்கள் என்று முடிவு செய்து கொள்வோம் என்று விடையளிக்கிறார்கள்.

இவ்வளவு பேர் பார்த்திருக்கிறோமே அது போதாதா என்று கேட்டதற்கு போதாது என்று விடையளித்து விட்டு இப்படித் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர் எனக் காரணத்தைக் கூறுகிறார்கள்.

சிரியாவை விட அருகில் உள்ள ஊரிலிருந்து வந்த பயணக் கூட்டத்தின் தகவலையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்கவில்லை என்பதை முன்னர் கண்டோம். அதை ஒட்டியே இந்த ஹதீஸ் அமைந்துள்ளது.

அத்துடன் இது வரை நாம் எடுத்துக் காட்டிய அனைத்து ஆதாரங்களுடனும் இது ஒத்துப் போகும் வகையில் அமைந்துள்ளது.

சவூதி பிறைக்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கு இந்த ஹதீஸ் தெளிவான மறுப்பாக அமைந்துள்ளது. இதையும் எப்படியாவது மறுத்தாக வேண்டும் என்று மல்லுக்கட்டிக் கொண்டு மறுக்கின்றார்கள். இந்த ஹதீஸுக்கு அவர்கள் கூறும் விளக்கத்தைப் பார்க்கும் போது இவர்கள் உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் உள்ளார்களா என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.

இந்த ஹதீசுக்கு இவர்கள் கூறும் விளக்கத்தைப் பாருங்கள்.

* இந்தச் செய்தியில் குரைப் (ரலி) அவர்கள் பிறை கண்டதாக சாட்சி கூறவில்லை. மாறாகத் தம்மிடம் பிறை பற்றித் துருவித் துருவிக் கேட்ட இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குத் தாம் சிரியாவில் என்றைக்கு முதல் பிறை கண்டோம் என்பதைத் தெரிவிக்கிறார்கள். இது அவ்விருவருக்கும் இடையில் நடந்த உரையாடல்கள் தானே தவிர பிறை கண்ட சாட்சியுரை அல்ல.

குரைப் வந்து சாட்சி சொல்லவில்லை. அதனால் தான் இப்னு அப்பாஸ் (ரலி) ஏற்றுக் கொள்ளவில்லை. அதுவும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் துருவித் துருவிக் கேட்டதால் தான் குரைப் இதைக் கூறினார் என்கிறார்கள். இவர்கள் என்ன சொல்ல வருகின்றார்கள்?

பிறை தெளிவாகத் தெரிந்தாலும் சாட்சி என்ற வார்த்தையைப் பயன்படுத்தினால் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார்களா? இது உரையாடல் என்பதால் சிரியாவில் பிறை பார்த்தது பொய் என்று சொல்கின்றார்களா?

இவர்களது இந்த விளக்கத்தின் அடிப்படையில் யாராவது வந்து சாட்சி சொன்னால் தான் ஏற்க வேண்டும்.

ஆனால் இவர்கள் ஆண்டு தோறும் சவூதிப் பிறையை அறிவிக்கிறார்களே சவூதி மன்னர் வந்து, நானே பார்த்தேன்’ என இவர்களிடம் சாட்சி சொன்ன பிறகு தான் அறிவிக்கின்றார்களா?

இப்னு அப்பாஸ் (ரலி) துருவித் துருவிக் கேட்டார் என்று கிண்டலாகக் கூறியுள்ளார்கள். எதற்காக துருவித் துருவிக் கேட்கிறார்? நேரம் போகாமலா?வெளியூர் தகவல் குறித்த ஒரு சட்டத்தைக் கூறுவதற்காகத் தான் இப்னு அப்பாஸ் (ரலி) கேட்கிறார்கள். இவர்கள் மட்டும் சவூதிக்கு போனுக்கு மேல் போனைப் போட்டு துருவித் துருவித் தானே கேட்கிறார்கள். அதை ஏன் ஏற்க வேண்டும்?

மேலும் இந்த ஹதீஸுக்கு மூளையுள்ள யாரும் ஏற்றுக் கொள்ளாத விளக்கம் தந்து புல்லரிக்க வைக்கிறார்கள்.

* முதல் நாள் இரவிலேயே தகவல் கிடைத்திருந்தால் இப்னு அப்பாஸ் (ரலி) அதைச் செயல்படுத்தியிருப்பார்கள். தற்போது 20 நாட்களுக்கு மேல் கடந்து விட்ட நிலையில் எதுவும் செய்ய இயலாது. எனவே அதைப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் தான் நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றுப்படி பிறை கண்டு நோன்பை விடுவோம் என்று கூறுகின்றார்கள். தொலை தூர நாடுகளிலிருந்து தகவல் பெறுவதற்கேற்ற தொலைத் தொடர்பு சாதனங்கள் இல்லாத காரணத்தால் அந்தச் சூழ்நிலையில் அப்படிச் சொல்ல நேரிட்டது.

ஒரு ஹதீஸை இவர்கள் எப்படியெல்லாம் தங்கள் இஷ்டத்திற்கு வளைக்கிறார்கள். என்னவெல்லாம் சுய விளக்கம் கொடுக்கிறார்கள் என்பதற்கு இந்த உதாரணம் ஒன்றே போதும்.

அந்த ஹதீஸை நன்றாகப் படித்துப் பாருங்கள்!

மதீனாவை விட சிரியாவில் ஒரு நாள் முன்னதாக பிறை பார்த்திருக்கிறார்கள். சிரியாவில் முப்பது நாட்களைப் பூர்த்தி செய்யும் போது மதீனவில் 29 நாட்கள் தான் பூர்த்தியாகியுள்ளது. சிரியாவில் பெருநாள் என்று உறுதியாகத் தெரிந்த பின்னரும் இப்னு அப்பாஸ் (ரலி) அதை ஏற்றுக் கொள்ளாமல், எங்களுக்கு 29 நாட்கள் தான் ஆகிறது. எனவே நாங்கள் பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பது நாட்கள் பூர்த்தியாகும் வரை நோன்பு நோற்போம்’ என்று கூறுகின்றார்கள்.
சிரியாவில் முஆவியா (ரலி) பிறை பார்த்ததன் அடிப்படையில் முப்பது நாட்கள் பூர்த்தியாகி விட்டதே! அதை ஏன் நீங்கள் ஏற்கக் கூடாது?’ என்று குரைப் கேட்கிறார்.

சிரியாவில் பிறை பார்த்தது எங்களுக்குப் போதாது. இப்படித் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்’ என்று கூறுகிறார்கள்.

இந்த ஹதீஸை சாதாரணமாகப் படிப்பவர்களுக்குக் கூட இந்த விளக்கம் புரியும். ஆனால் தங்கள் முடிவுக்கு வேட்டு வைக்கக்கூடிய ஹதீஸ் என்பதால் சிலர் புரியாதது போல் நடிக்கிறார்கள். அல்லது தெளிவாகத் தெரிந்தும் வேண்டுமென்றே மக்களைக் குழப்புகின்றார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அந்தத் தகவலை ஏற்காதது மட்டுமின்றி அதற்கான காரணத்தையும் கூறுகின்றார்கள். நாங்களே பார்க்க வேண்டும் அல்லது முப்பது நாட்களாகப் பூர்த்தி செய்வோம் என்பதே அந்தக் காரணம்! முதல் நாள் இரவில் இத்தகவல் வந்திருந்தாலும் இப்னு அப்பாஸ் (ரலி) ஏற்க மாட்டார் என்பது தெளிவாகவே தெரிகிறது.

20 நாட்கள் கடந்து விட்டதால் எதுவுமே செய்ய இயலாது எனவும் கூறியுள்ளனர். ஏன் எதுவுமே செய்ய முடியாது? 20 நாட்கள் கடந்து விட்டாலும் குரைப் கூறிய தகவலின் அடிப்படையில் பெருநாள் எப்போது என்று தீர்மானிக்கலாமே? விட்ட நோன்பைக் களாச் செய்திருக்கலாமே? எதுவுமே செய்ய இயலாது என்பது வேடிக்கையாக இருக்கிறது. எதுவுமே செய்ய இயலாது என்பதற்காக அவர் குரைபுடைய தகவலை மறுக்கவில்லை. எங்கள் பகுதியில் பார்க்கவில்லை என்பதற்காகவே மறுக்கிறோம் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களே கூறிவிட்ட பின் இந்த உளறல் தேவையா?

குரைபுடைய கேள்வியே பெருநாளைப் பற்றியது தான். முஆவியா (ரலி) பிறை பார்த்த அடிப்படையில் முப்பது நாட்கள் பூர்த்தியாகின்றதே! அது உங்களுக்குப் போதாதா? என்ற கருத்தில் தான் குரைப் கேட்கிறார். அதற்குத் தான் இப்னு அப்பாஸ் (ரலி) போதாது. இப்படித் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என்று கூறுகின்றார்கள்.

சிரியாவில் முப்பது நாட்கள் முழுமையாகி விட்டது என்று குரைப் வந்து நேரடியாகக் கூறுவது தொலைத் தொடர்பு சாதனங்களில் கேட்பதை விட உறுதியான விஷயம். அதை இப்னு அப்பாஸ் (ரலி) மறுக்கின்றார் என்றால் தெலை தூரத்தில் பிறை பார்க்கப்பட்டால் அதை ஏற்கக் கூடாது என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரியவில்லையா?