Tamil Bayan Points

சிரமம் இல்லாத சிறந்த மார்க்கம்! (ரமலான்)

பயான் குறிப்புகள்: சந்தர்ப்ப உரைகள்

Last Updated on January 2, 2022 by Trichy Farook

சிரமம் இல்லாத சிறந்த மார்க்கம்!

சிந்திப்பதற்கும் செயல்படுவதற்கும் இஸ்லாம் ஓர் எளிய  மார்க்கமாகும். ஆனால் அது நடைமுறையில் கடினமான மார்க்கமாக ஆக்கப்பட்டு விட்டது. மார்க்கம் மக்களுக்கு இரண்டு துறைகளில் சட்ட திட்டங்களையும் வழிகாட்டல்களையும் அளித்திருக்கின்றது.

  1. வணக்கவியல்,
  2. வாழ்வியல்.

வணக்கவியல் என்றால் உலூ, தொழுகை, ஜகாத், நோன்பு, ஹஜ் போன்ற வணக்கங்களைக் குறிக்கும். வாழ்வியல் என்றால் திருமணம், விவாகரத்து, மரணம், பாகப்பிரிவினை, வணிகம், விவசாயம் போன்றவற்றைக் குறிக்கும். வணக்கவியல், வாழ்வியலுக்கு இது ஒரு சுருக்கமான விளக்கமாகும்.

இவ்விரண்டு துறைகளிலும் மார்க்கம் எளிமையையும் இலகுவையும் மையமாகக் கொண்டு தான் மக்களுக்கு சட்ட திட்டங்களை, வழிகாட்டல்களை அளித்திருக்கின்றது.

ஆனால் அந்தக் கட்டுரையில் ஜகாத், நோன்பு, ஹஜ் ஆகிய வணக்கங்களில் அல்லாஹ் வழங்கியிருக்கின்ற எளிமையும், இலகுவும் இடம் பெறவில்லை. எனவே, இந்த வணக்கங்களில் இடம் பெற்றிருக்கின்ற எளிமையையும், இலகுவையும் எடுத்துக் கூறும் விதமாக, அதிலும் குறிப்பாக ரமளான் மாதம் வருவதால் நோன்பில் மார்க்கம் காட்டிய இலகுவையும் மக்களால் புகுத்தப்பட்டிருக்கும் சிரமத்தையும் அடையாளம் காட்டும் விதமாக இந்தக் கட்டுரை இங்கு தரப்படுகின்றது.

இரவுத் தொழுகை எட்டா ? இருபதா?

ரமளான் மாதம் ஆரம்பித்ததும் இரவுத் தொழுகை துவங்கி விடும். அந்த ரமளான் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் காட்டியும் கற்றும் தராத  முதுகந்தண்டை முறிக்கச் செய்கின்ற பாரமும் பளுவும் இரவுத் தொழுகையைத்  தொழுபவர்  மீது ஏற்றப்பட்டுள்ளது. அதை இப்போது முதலில் பார்ப்போம்:

அபூ ஸலமா அறிவித்தார்.

ரமலானில் நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ‘நபி (ஸல்) அவர்கள் ரமலானிலும் ரமலான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்’ என்று விடையளித்தார்கள்.

நூல்: புகாரி-1147

இந்த ஹதீஸ் எதை உணர்த்துகின்றது? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வாழ்நாள் முழுவதும் 8+3=11 தான் தொழுதிருக்கின்றார்கள் என்பதைத் தான் உணர்த்துகின்றது.  ஆனால் 20+3=23 என்ற எண்ணிக்கையில் ஜமாஅத்தாகத் தொழுவது மக்கள் மீது ஏற்றப்படுகின்ற, மார்க்கத்தில் இல்லாத பாரமும்  பளுவுமாகும். இந்த ஹதீஸ் அடிப்படையில் 8+3=11 மார்க்கத்தின் இலகுவான வணக்க முறைகளை புரிந்துக் கொள்ள முடிகிறது. 

எல்லாம் வல்ல  அல்லாஹ் திருக்குர்ஆனில்

وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِى الدِّيْنِ مِنْ حَرَجٍ‌ؕ مِلَّةَ اَبِيْكُمْ اِبْرٰهِيْمَ‌ؕ هُوَ سَمّٰٮكُمُ الْمُسْلِمِيْنَ ۙ مِنْ قَبْلُ وَفِىْ هٰذَا لِيَكُوْنَ الرَّسُوْلُ شَهِيْدًا عَلَيْكُمْ وَتَكُوْنُوْا شُهَدَآءَ عَلَى النَّاسِ‌ ‌ۖۚ فَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاعْتَصِمُوْا بِاللّٰهِؕ هُوَ مَوْلٰٮكُمْ‌ۚ فَنِعْمَ الْمَوْلٰى وَنِعْمَ النَّصِيْرُ

‘‘உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கமான இம்மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. இதற்கு முன்னரும் இதிலும் அவனே உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். எனவே தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வைப் பற்றிப் பிடியுங்கள்! அவனே உங்கள் பாதுகாவலன். அவன் சிறந்த பாதுகாவலன்; சிறந்த உதவியாளன்”  (அல்குர்ஆன் 22:78) என்று சொல்கின்றான்.

مَا يُرِيْدُ اللّٰهُ لِيَجْعَلَ عَلَيْكُمْ مِّنْ حَرَجٍ وَّلٰـكِنْ يُّرِيْدُ لِيُطَهِّرَكُمْ وَ لِيُتِمَّ نِعْمَتَهٗ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ

”அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்”  (அல்குர்ஆன் 5:6)  என்று கூறுகின்றான்.

ஆனால் இவர்களோ மார்க்கத்தில் சிரமத்திற்கு மேல் சிரமத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு எந்தச் சிரமமும் கொடுத்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள். இதை இரவுத் தொழுகை விஷயத்திலேயே வெளிப்படுத்திக் காட்டுகின்றார்கள்.

ஒரு ரமளான் மாதத்தில், நபி (ஸல்) போல் இரவுத் தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுகின்றார்கள். அவ்வளவு தான். பள்ளிவாசல் நிரம்பி வழிய ஆரம்பித்து விட்டது. அதன் விளைவைத் தான் கீழ்க்கண்ட ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் நள்ளிரவில் பள்ளிக்குச் சென்று தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள். விடிந்ததும் மக்கள் இதுபற்றிப் பேசிக் கொண்டார்கள். (மறுநாள்) முதல்நாளை விட அதிகமான மக்கள் திரண்டு நபி (ஸல்) அவர்கள் பின்னால் நின்று தொழுதார்கள். விடிந்ததும் மக்கள் இது பற்றிப் பேசிக் கொண்டார்கள். இந்த மூன்றாம் இரவில் பள்ளிவாசலுக்கு நிறையப் பேர் வந்தனர். நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்து தொழுதார்கள்.

அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதனர். நான்காம் இரவில், பள்ளிவாசல் கொள்ளாத அளவுக்கு மக்கள் திரண்டனர்; ஆனால், நபி(ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுகைக்குத்தான் வந்தார்கள். ஸுப்ஹுத் தொழுகையை முடித்தும் மக்களை நோக்கி, மக்களை நோக்கி, தஷஹ்ஹுத் மொழிந்து, ‘நான் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து கூறுகிறேன்; நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமலில்லை; எனினும், இது உங்களின் மீது கடமையாக்கப்பட்டு, அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடும் என்று நான் அஞ்சினேன்!’ எனக் கூறினார்கள்.

‘நிலைமை இப்படியே இருக்க, (ரமளானின் இரவுத் தொழுகையை மக்கள் தனித் தனியாகவே தொழுது கொண்டிருக்க) நபி(ஸல்) அவர்கள் மரணித்தார்கள்!’ என்று அறிவிப்பாளர் இமாம் ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

நூல்: புகாரி-2012 

பொதுவாக அன்றிலிருந்து இன்று வரை ரமளான் மாதத்தில் அதிகமான நன்மைகளைச் செய்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். நபித் தோழர்களைச் சொல்லவே வேண்டியதில்லை. நபி (ஸல்) அவர்களுடன்  இரவுத் தொழுகைகளை ஜமாஅத்தாகத் தொழ வந்தது அந்த அடிப்படையில் தான். அவர்களின் ஆர்வ மேலீடு நபி (ஸல்) அவர்களை அச்சத்தில் ஆழ்த்தி விட்டது.

அதனால் அவர்கள் தொடர்ந்து தொழுவதை விட்டும் பின்வாங்கி விட்டார்கள். இது நபி (ஸல்) அவர்கள் இந்தச் சமுதாயத்தின் மீது கொண்டுள்ள இரக்கத்தையும் அன்பையும் தான் காட்டுகின்றது. இது தொழுகை தொடர்பாக  மார்க்கம் வழங்கிய சலுகையும் சவுகரியமும் ஆகும்; எளிமையும் இலகுவுமாகும்.

தொடர் நோன்பு  – தூதரின் கண்டனம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர் நோன்பு நோற்பார்கள். அதாவது சூரியன் மறைந்ததும் நோன்பு துறக்கமாட்டார்கள். சஹ்ர் உணவும் சாப்பிடமாட்டார்கள். இப்படித் தொடர் நோன்பு நோற்பார்கள். இதைப் பார்த்து நபித் தோழர்களும் நோற்கலானார்கள். உடனே தோழர்கள் மீது இரக்கம் கொண்டு  நபி (ஸல்) அவர்கள் அதைத் தடுத்தார்கள்.

ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் மக்களின் மீது இரக்கப்பட்டுத் தொடர் நோன்பைத் தடுத்தார்கள். நபித்தோழர்கள், ‘நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நான் உங்களைப் போன்றவன் அல்லன். என் இறைவன் எனக்கு உண்ணவும் பருகவும் வழங்குகிறான்’ என்று கூறினார்கள்.

நூல்: புகாரி-1964 

அவர்கள் மீறியும் தொடர் நோன்பு வைப்பதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள்  இன்னும் கடுமையாக கண்டித்தார்கள்.

அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தொடர் நோன்பைத் தடுத்தார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?’ என்று முஸ்லிம்களில் ஒருவர் கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘உங்களில் என்னைப் போன்றவர் யார் இருக்கிறார்? என் இறைவன் எனக்கு உண்ணவும் பருகவும் தரும் நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன்?’ என்றார்கள்.

தொடர் நோன்பிலிருந்து மக்கள் விலகிக் கொள்ள மறுத்தபோது ஒருநாள் அவர்களைத் தொடர் நோன்பு நோற்கச் செய்தார்கள். பிறகு (அடுத்த மாதத்தின்) பிறையை மக்கள் கண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இம்மாதம் இன்னும் தாமதமாக முடிந்திருந்தால் (தொடர் நோன்பை) இன்னும் உங்களுக்கு நான் அதிகப்படுத்தியிருப்பேன்’ என்று மக்கள் தொடர் நோன்பிலிருந்து விலகிக் கொள்ள மறுத்ததைக் கண்டிப்பதைப் போல் கூறினார்கள்.

நூல்: புகாரி-1965 

இந்த நிகழ்வும் நபித்தோழர்கள் மனிதர்கள் என்ற வட்டத்தைத் தாண்டி, எல்லை தாண்டும் போது அவர்கள் மீது அதாவது ஒட்டுமொத்த தனது சமுதாயத்தின் மீது எல்லை கடந்த இரக்கம் கொண்டதால் அவர்களை இந்தத் தொடர் நோன்பு நோற்பதை விட்டும் தடுத்து விட்டார்கள்.

நோன்புக்கும் ஒரு வரம்பு!

பொதுவாக வணக்கத்தில் வரம்பு தாண்டுவது என்பது மனித இயல்பு. அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓரு போதும் அனுமதிக்கவில்லை. அப்துல்லாஹ்  பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் இதற்கு ஓர் எடுத்துக் காட்டு.

அவர்கள் பகலெல்லாம் நோன்பு நோற்பவர்களாகவும் இரவெல்லாம் நின்று தொழுபவர்களாகவும் இருந்தார்கள். அவர்களுடைய மனைவியின் அதிருப்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தெரிய வரவே, உடனே கூப்பிட்டு அனுப்புகின்றார்கள். அவர்களிடம் விசாரிக்கும் போது ஒப்புக் கொள்கின்றார்கள்.

அதனால் அவர்களின் வேகத்தைக் கவனத்தில் கொண்டு  கீழே இருந்து மேலே வருகின்றார்கள்.  மாதம் 3 நாட்கள் நோன்பு நோற்றுக் கொள் என்று சொன்னதும் அவர் அதுவும் பற்றாது என்று மறுக்கிறார். அப்படியானால் வாரம் 3 என்று நபி (ஸல்) அவர்கள் கொஞ்சம் மேலே வருகின்றார்கள்.

அதை விடவும் கூடுதலாகச் செய்ய முடியும் என்று சொன்னதும் ஒரு நாள் நோன்பு, ஒரு நாள் துறப்பு என்று வரம்பு நிர்ணயித்து விடுகின்றார்கள். அதற்கு மேல் நோன்பு நோற்றால் அது நோன்பல்ல, அதாவது அல்லாஹ்விடம் ஒப்புக் கொள்ளப்படாது என்று  கூறிவிடுகின்றார்கள்.

அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி அல் ஆஸ்(ரலி) அறிவித்தார்.

‘நீர் காலமெல்லாம் நோன்பு நோற்று. இரவெல்லாம் வணங்குகிறீரோ?’ என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். நான் ‘ஆம்!’ என்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘அவ்வாறு நீர் செய்தால், அதன் காரணமாக கண்கள் உள்ளே போய்விடும். (மேலும்) அதனால் உள்ளம் களைந்து (பலவீனமடைந்து) விடும்! காலமெல்லாம் நோன்பு நோற்பவர் நோன்பு நோற்றவராக மாட்டார்!

(மாதந்தோறும்) மூன்று நாள்கள் நோன்பு நோற்பது காமெல்லாம் நோன்பு நோற்பதாகும்!’ என்றார்கள். அதற்கு ‘நான் இதைவிட அதிகமாக (நோற்பதற்கு) சக்தி உள்ளவன்’ என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அப்படியானால் தாவூத் நபியின் நோன்பை நோற்பீராக! அவர்கள் ஒரு நாள்விட்டு ஒருநாள் நோன்பு நோற்பார்கள். (எதிரிகளைச்) சந்திக்கும்போது பின்வாங்கவும் மாட்டார்கள்!’ என்று கூறினார்கள்.

நூல்: புகாரி-1979 

ஓதும் குர்ஆனுக்கும் விதித்த வரம்பு

இதே அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் ஒவ்வொரு இரவிலும் ஒரு குர்ஆனை முடிப்பவர்களாக இருந்தார்கள். அதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வரம்பு நிர்ணயிக்கின்றார்கள். நோன்பைப் போன்று கீழே இருந்து மேலே வருகின்றார்கள். மாதத்திற்கு ஒரு முறை குர்ஆனை முடி என்று சொல்கின்றார்கள்.

அதற்கு மேலும் முடியும் என்று அவர் சொன்னதும்  வாரம் ஒன்று என்று சொல்கின்றார்கள். அதற்கும் கூடுதலாக முடியும் என்று சொன்னதும் 3 நாட்களுக்கு ஒரு குர்ஆன் என்று எல்லை நிர்ணயித்து விடுகின்றார்கள்.

(‘குர்ஆனை) எப்படி ஓதி முடிக்கிறாய்’ என்று கேட்டார்கள். நான், ‘ஒவ்வோர் இரவிலும் (குர்ஆனை ஓதி முடிக்கிறேன்)’ என்று சொன்னேன். அவர்கள், ‘மாதந்தோறும் மூன்று நாள்கள் நோன்பு நோற்றுக்கொள். குர்ஆனை ஒவ்வொரு மாதமும் (ஒரு முறை முழுமையாக) ஓதிக்கொள்’ என்று கூறினார்கள். ‘நான் இதைவிட அதிகமாக (நோன்பு நோற்க) சக்தி பெற்றுள்ளேன்’ என்று கூறினேன். ‘இரண்டு நாள்கள் நோன்பை விட்டுவிட்டு, ஒரு நாள் நோற்றுக்கொள்!’ என்று கூறினார்கள்.

நான் இதைவிடவும் அதிகமாக (நோன்பு நோற்க) சக்தி பெற்றுள்ளேன்’ என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், ‘(இறைத்தூதர்) தாவூத்(அலை) அவர்களின் உயர்ந்த நோன்பு வழக்கப்படி, ஒரு நாள்விட்டு ஒரு நாள் நோன்பு நோற்றுக் கொள்! மேலும், ஒவ்வோர் ஏழு இரவுகளிலும் (ஒரு முறை குர்ஆனை) ஓதி(முடித்து)க் கொள்’ என்று கூறினார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வழங்கிய இந்தச் சலுகையை நான் ஏற்று நடந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும்! காரணம் நான் (இப்போது) தள்ளாமை வயதையடைந்து மிகவும் பலவீனம் அடைந்துவிட்டேன்.

நூல்: புகாரி-5052 

“ஒவ்வொரு மாதமும் (ஒரு தடவை) குர்ஆனை (முழுமையாக) ஓதுவீராக!’’ என்றார்கள். “இதைவிட அதிகமாக(ஓத) எனக்கு சக்தி உள்ளது!’’ என்று நான் கூறினேன். (நான் கேட்கக் கேட்க) குறைத்துக்கொண்டே வந்து முடிவில், “மூன்று நாட்களில் ஒருதடவை குர்ஆனை (முழுமையாக) ஓதுவீராக!’’ என்று கூறினார்கள்.

நூல்: புகாரி-1978 

இவ்வளவு அறிவுரையையும் சொல்லி விட்டு நபி (ஸல்) அவர்கள் அதற்குரிய விளைவையும் சொல்லிக் காட்டுகின்றார்கள்.

அவர்கள், ‘நீங்கள் அப்படிச் செய்தால் உங்கள் கண்கள் பஞ்சடைந்து விடும்; மனம் களைப்படைந்து விடும். எனவே, ஒவ்வொரு மாதத்திலிருந்தும் மூன்று நாள்கள் நோன்பு நோற்பீராக! அது காலமெல்லாம் நோன்பு நோற்றதாகும்’ என்று கூறினார்கள்.

நூல்: புகாரி-3419 

அத்துடன் உனக்கும் உன்னைச் சார்ந்தவர்களுக்கும் நீ செய்ய வேண்டிய கடமை உள்ளது என்று அறிவுறுத்துகின்றார்கள்.

உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன; உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன; உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன; உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன!

ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!’ என்று கூறினார்கள்.

நூல்: புகாரி-1975 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அறிவுரையை ஏற்றுக் கொள்ளாத அவர்கள், பிந்திய காலத்தில் அவர்கள் அளித்த சலுகையை நான் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாதா? என்று வருத்தப்பட்டதை நாம் பார்க்க முடிகின்றது.

‘வாழ்நாள் உனக்கு நீடிக்கும் என்று உனக்கு தெரியாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்கள் கூறிய அந்த நிலைக்கு நான் வந்து விட்டேன். நான் முதுமை அடைந்த போது நபியின் சலுகையை நான் ஏற்றிருக்கக் கூடாதா? என்று நான் சொல்லிக்கொண்டேன்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல் ஆஸ்

நூல்: முஸ்லிம்-2137 (1963)

நபி (ஸல்) அவர்கள் மனிதர்களின் இயல்பை நன்கு புரிந்தவர்கள். அதனால் அந்த இயல்பைத் தாண்டி ஒரு மனிதன் வணக்கத்தில் ஈடுபட்டால் அதன் எதிர்விளைவு எங்கு போய் முடியும் என்பதை நன்கு அவர்கள் கவனித்து தான் வரம்பு கடப்பதை அனுமதிக்கவில்லை.

உணவும் இல்லை! உறவும் இல்லை!

நோன்பு கடமையாக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் நோன்பு துறந்ததும் உணவு உண்ணாமல் தூங்கி விட்டால் அவ்வளவு தான்! அடுத்த நாள் நோன்பு துறக்கும் வரை எதுவும் சாப்பிட முடியாது. அது மட்டுமல்லாமல் நோன்பு துறந்தாலும் இரவில் உடலுறவுக்கும் அனுமதியில்லை. இதைப் பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது.

பராஉ(ரலி) அறிவித்தார்.

(ஆரம்ப காலத்தில்) நபித்தோழர்கள் நோன்பு நோற்று, நோன்பை நிறைவு செய்யும் நேரம் வந்து, அதற்கு முன்பே உறங்கி விட்டிருந்தால் அன்றைய இரவிலும் (தொடர்ந்து) பகலிலும் மாலை வரை எதையும் உண்ண மாட்டார்கள். (ஒரு முறை) கைஸ் இப்னு ஸிர்மா (ரலி) நோன்பு நோற்றிருந்தார்; நோன்பு நிறைவு செய்யும் நேரம் வந்ததும் தம் மனைவியிடம் வந்து, ‘உன்னிடம் உணவு ஏதும் உள்ளதா?’ என்று கேட்டார்.

அவரின் மனைவி, ‘இல்லை! எனினும் நான் சென்று உமக்காக (உணவைத்) தேடி வருகிறேன்!’ என்றார். கைஸ் இப்னு ஸிர்மா (ரலி) அன்றைய தினம் கூலி வேலை செய்துவிட்டு வந்ததால் அவருக்கு உறக்கம் மேலிட்டுவிட்டது. அவரின் மனைவி வந்து அவரைக் கண்டபோது, ‘உமக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டது’ என்றார். நண்பகலானதும் கைஸ்(ரலி) மூர்ச்சையுற்றார்.

இதுபற்றி நபி (ஸல்) அவர்களிடம் கூறப்பட்ட போது, ‘நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற வசனமும் ‘இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்’ என்ற வசனமும் இறங்கின. இதனால் நபித்தோழர்கள் அதிக மகிழ்ச்சியடைந்தார்கள்.

நூல்: புகாரி-1915 

இது தொடர்பாக அல்லாஹ் இறக்கி அருளிய அந்த வசனத்தை இப்போது பார்ப்போம்.

2:187 اُحِلَّ لَـکُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ اِلٰى نِسَآٮِٕكُمْ‌ؕ هُنَّ لِبَاسٌ لَّـكُمْ وَاَنْـتُمْ لِبَاسٌ لَّهُنَّ ؕ عَلِمَ اللّٰهُ اَنَّکُمْ كُنْتُمْ تَخْتَانُوْنَ اَنْفُسَکُمْ فَتَابَ عَلَيْكُمْ وَعَفَا عَنْكُمْۚ فَالْـــٰٔنَ بَاشِرُوْهُنَّ وَابْتَغُوْا مَا کَتَبَ اللّٰهُ لَـكُمْ وَكُلُوْا وَاشْرَبُوْا حَتّٰى يَتَبَيَّنَ لَـكُمُ الْخَـيْطُ الْاَبْيَضُ مِنَ الْخَـيْطِ الْاَسْوَدِ مِنَ الْفَجْرِ‌ؕ ثُمَّ اَتِمُّوا الصِّيَامَ اِلَى الَّيْلِ‌ۚ

நோன்பின் இரவில் உங்கள் மனைவியரிடம் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை. உங்களுக்கு நீங்கள் துரோகம் செய்து கொண்டிருந்தது அல்லாஹ்வுக்குத் தெரியும். எனவே உங்கள் மன்னிப்பை ஏற்று உங்களைப் பிழை பொறுத்தான். இப்போது (முதல்) அவர்களுடன் கூடுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை (சந்ததியை)த் தேடுங்கள்! வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்! பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்!

(அல்குர்ஆன்:2:187)

இப்படி ஒரு சலுகை இல்லையென்றால் நமது நிலை என்னவாக இருக்கும்? என்பதை சிந்தித்துப் பாருங்கள். இங்கு நாம் பயணிக்கின்ற, சிரமம் இல்லாத  அந்த தூய மார்க்கத்தை எண்ணி இறைவனுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

நோயாளியும் நோன்பாளியும்

فَمَنْ كَانَ مِنْكُمْ مَّرِيْضًا اَوْ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَيَّامٍ اُخَرَ‌ؕ وَعَلَى الَّذِيْنَ يُطِيْقُوْنَهٗ فِدْيَةٌ طَعَامُ مِسْكِيْنٍؕ فَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَّهٗ ؕ وَاَنْ تَصُوْمُوْا خَيْرٌ لَّـکُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ
2:185 شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِۚ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَـصُمْهُ ؕ وَمَنْ کَانَ مَرِيْضًا اَوْ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَيَّامٍ اُخَرَؕ يُرِيْدُ اللّٰهُ بِکُمُ الْيُسْرَ وَلَا يُرِيْدُ بِکُمُ الْعُسْرَ

உங்களில் நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அதற்குச் சக்தியுள்ளவர்கள் ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாகும். நன்மைகளை மேலதிகமாகச் செய்வோருக்கு அது நல்லது. நீங்கள் அறிந்தால் நோன்பு நோற்பதே சிறந்தது.

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (இது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அல்லாஹ் உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான். சிரமமானதை உங்களுக்கு நாடமாட்டான்.

(அல்குர்ஆன்:2:184, 185)

இந்த வசனங்கள் மனிதனுக்கு நோன்பை கடமையாக்கியிருக்கின்றன. அதே சமயம் அவ்வசனங்கள் நோயாளி, பயணிக்கு சலுகை அளிக்கின்றன. நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

இந்த சலுகையின் கீழ் மாதவிலக்குப் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் பெண்கள் ஆகியோரும் அடங்குவர்.

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்த காலத்தில் மாதவிடாய் ஏற்பட்டுத் தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பை களாச் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகைகளை களாச் செய்யுமாறு கட்டளையிட மாட்டார்கள்.

அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம்-560 (508)

கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சலுகையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: நஸாயீ-2315 (2276)

களாச் செய்வதற்குரிய அவகாசம் அடுத்த  ஆண்டு வரை அளிக்கப்பட்டிருப்பதும் மார்க்கம் அளித்திருக்கும் மாபெரும் சலுகையாகும். இதைப் பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது.

“ரமளான் மாதத்தில் சில நோன்புகள் தவறி விடும். அதை ஷஅபான் மாதத்தில் தான் என்னால் நோற்க முடியும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளே இதற்குக் காரணம்’’ என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி-1950 

பாரத்தை சுமக்கும் தீராத நோயாளிகள்

மேலே  உள்ள சாரார் ரமளான் முடிந்ததும் களாச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள்.  இன்னொரு சாரார் இருக்கின்றனர், அவர்கள் தள்ளாத முதியவர்கள் மற்றும்  தீராத நோயாளிகள் ஆவர். அவர்கள் நிரந்தரமாக நோன்பு நோற்பதிலிருந்து  விதிவிலக்கு பெற்றவர்கள்.

முதுமையின் காரணமாக நோன்பு நோற்க இயலாத நிலையில் உள்ளதால் எதிர்காலத்தில் நோன்பைக் களாச் செய்ய இவர்களால் இயலாது. ஏனெனில் எதிர்காலத்தில் மேலும் அதிக முதுமையில் இவர்கள் இருப்பார்கள். இவர்கள் நோன்பை விட்டு விடலாம்.

முதுமை என்பதை வயது சம்பந்தப்பட்டதாக மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது. சிலர், எண்பது வயதிலும் திடகாத்திரமாக இருப்பார்கள். வேறு சிலர் அறுபது வயதிலேயே தளர்ந்து விடுவார்கள். முதுமையுடன் நோன்பு நோற்க இயலாத நிலையும் சேர்ந்தால் தான் அவர்களுக்கு விதிவிலக்கே தவிர குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் விதிவிலக்கு இருப்பதாக எண்ணிக் கொள்ளக் கூடாது.

நோன்பு வைப்பதால் மரணம் வரும் அல்லது இருக்கின்ற நோய் அதிகரிக்கும் என்ற நிலையில் நோன்பு நோற்றால் அவர்களின் செயல் இறைவனிடம் நன்மையாகப் பதிவு செய்யப்படாது. அதிகப் பிரசங்கித் தனமாகத் தான் கருதப்படும். இது தான் உயர்ந்த நிலை என்றால் அதை அல்லாஹ்வோ, அவனது தூதரோ சொல்லியிருப்பார்கள்.

பயணம் செய்வோர் வேறு மாதங்களிலும் நோற்கலாம் என்று கூறியது போல் இந்த நோயாளிகள் விஷயத்தில் அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறவில்லை.

தீராத நோய்களுக்கு ஆளானவர்கள் இன்னொரு நாளில் நோற்க இயலாது. ஏனெனில் தீராத நோய் மேலும் அதிகப்பட்டிருக்கும். எனவே இவர்கள் நோன்பை விட்டு விடலாம்.

நோன்பிலிருந்து விதிவிலக்குப் பெற்ற அவர்கள் நோன்பை விட்டதற்குப் பரிகாரம் கொடுக்க வேண்டும் என்று ஒரு சுமையும் பாரமும் அவர்கள் மீது தவறாகச் சுமத்தப்பட்டுள்ளது. அது சரியா? என்பதை இப்போது பார்ப்போம்.

நோன்பு நோற்க இயலாதவர்கள் ஒரு நோன்பை விடுவதற்குப் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்ற கருத்தில் அதிகமான மக்கள் உள்ளனர். நாமும் இக்கருத்தில் தான் இருந்தோம். ஆனால் ஆய்வு செய்யும் போது நோன்பு நோற்க இயலாதவர்களுக்கு நோன்பு நோற்கும் கடமையும் இல்லை. அவர்கள் இதற்காகப் பரிகாரமும் செய்யத் தேவையில்லை என்பது தான் சரியான கருத்தாகத் தெரிகிறது.

ஹஜ் செய்ய வசதியில்லாதவர் ஹஜ் செய்யாவிட்டால் அல்லாஹ் அவரை விசாரிக்க மாட்டான். ஏனெனில் அவருக்கு ஹஜ் கடமையாக ஆகவில்லை.

அது போல் நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர் நோன்பு தான் நோற்க வேண்டும். இயலாதவர் நோன்பும் நோற்க வேண்டியதில்லை. அவருக்கு நோன்பு கடமையாக ஆகாததால் பரிகாரமும் செய்ய வேண்டியதில்லை என்பது தான் சரியான கருத்தாகும்.

இது போன்று நோன்பின் போது அல்லாஹ்வும் அவனது தூதரும் சொல்லாத எத்தனையோ பாரங்களையும் பளுக்களையும் சமுதாயத்தின் மீது மார்க்கம் என்ற பெயரால் சுமத்தியிருக்கின்றார்கள். இஸ்லாம் எனும் மார்க்கம் மிக மிக எளிமையான மார்க்கம். இலகுவான மார்க்கம். பின்பற்ற தகுந்த ஒரு மார்க்கமாக அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்கிறான்.