Tamil Bayan Points

06) கேள்விக்கு பதிலளிக்கும் போது கவனிக்கவேண்டியவை

நூல்கள்: பயான் செய்யும் முறைகள்

Last Updated on February 24, 2022 by

கேள்விக்கு பதிலளிக்கும் போது கவனிக்கவேண்டியவை

முதலில், நீங்கள் நிகழ்த்திய உரையில் எதிர்பார்க்கப்படும் கேள்விகளுக்குரிய பதில்களை தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள். எடுத்துவந்த தலைப்பின் கீழுள்ள சட்டங்களே சரியாக தெரியாமல் இருப்பது சரியல்ல. எனவே எதைப் பேசினீர்களோ அதுபற்றி சட்டதிட்டங்களை அறிந்துவைத்துக் கொள்ளுங்கள். இதுதவிர, பதிலளிக்கும் போது, கீழ்காணும் ஒழுங்குமுறைகளை கவனத்தில் கொள்ளுங்கள்.

 

v மார்க்க அறிவு அவசியம்.

பயான் செய்வதற்கு அனைத்து சட்டங்களும் தெரிந்த ஆலிமாக இருப்பது கட்டாயமில்லை என்று இந்த நூலின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தோம். எனினும் கேள்விபதில் நிகழ்ச்சிக்கு இது பொருந்தாது. முன்னரே முடிவுசெய்த தலைப்பிற்கு, வெறும் ஜந்தாறு செய்திகளை மட்டும் தெரிந்துகொண்டு பயான் செய்துவிட முடியும். ஆனால், புதிதுபுதிதாக மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு, மார்க்கத்தீர்ப்பு வழங்கவேண்டுமானால், குர்ஆனையும், ஹதீஸையும், அதிலிருந்து சட்டம் எடுக்கும் விதிமுறைகளையும் கண்டிப்பாக தெரிந்திருக்கவேண்டும்.

எனினும், தாயத்து கட்டலாமா? பேய், பிசாசு உண்டா? முன்பின் சுன்னத்துகள் என்ன? என்பது போன்ற, ஏற்கனவே பலஅறிஞர்களால் ஆராய்ந்து பதிலளிக்கப்பட்ட கேள்விகளுக்கு, ஆதாரங்களோடு கூடிய கையில் இருக்கும் ரெடிமேட் பதிலை, மக்களுக்கு தெரிவிப்பது குற்றமல்ல. எனவே, பதிலை எடுத்துச்சொல்கிறவர்களும், பதில் சொல்கிறவர்களும் கவனத்தில் கொள்ளவேண்டிய சிலவிஷயங்களை மட்டும் இங்கு காண்போம்.

 

v ஒற்றை வரியில் பதில் சொல்லக்கூடாது.

ஏற்கனவே, ”இதுவெல்லாம் தப்பு என்று ஒருவரியில் சாதிக்கப்பார்க்காதீர்கள்” என்ற தலைப்பில் எந்த கருத்தை நிறுவுவதற்கும், ஓரிரு வரிகள் போதாது. என்று விரிவாக விளக்கப்பட்டுள்ளது, கேள்விகளுக்கு பதில் சொல்லும் போதும், ”இதெல்லாம் ஹதீஸில் இல்லை எனவே நாம் செய்யக்கூடாது” என்று பதிலை ஒரிரு வரிகளில் சொல்லிவிட்டு போகாமல், விளக்கமாக சொல்லவேண்டும். உதாரணமாக)

”பல்லி தலையில் விழுந்தால் கெட்ட சகுனமா?” என்று கேட்டால்,
    F முதலில், பல்லி பற்றிய மூடநம்பிக்கைகளை சுட்டிக்காட்ட வேண்டும்.
    F பிறகு சகுனம் இஸ்லாத்தில் இல்லை என்று விளக்கவேண்டும்.
    F பிறகு, பல்லி தலையில் விழுவதை பற்றி நபி(ஸல்) கெட்டதாக கூறவில்லை என விளக்கவேண்டும்.

இப்படி எந்த கேள்விக்கும் விளக்கமாக, ஆதாரங்களை மேற்கோள்காட்டி விளக்கவேண்டும். ஒற்றை வரியில் தவறென்று சொல்வது பயனளிக்காது.

அதே சமயம்,  ”தெரியாம கேட்டுட்டேன். விட்டுடுங்க” என்று மக்கள் பயந்து ஓடும் அளவிற்கும், பதிலை நீட்டிவிடவும் கூடாது. நடுநிலையை கையாளுங்கள். பயானில் கூட சில மக்கள் தூங்குவார்கள், கேள்விபதிலில் பெரும்பாலும் தூங்கமாட்டார்கள். கேள்வி பதிலில் மக்கள் தூங்க ஆரம்பித்தால், (அது மிகப்பெரும் சாதனை தான்!) நீங்கள் மிகஅதிக நேரம் எடுத்து பதில் சொல்கிறீர்கள் என்று பொருள். அதுபோன்ற நேரங்களில் பதிலை சுருக்கிக் கொள்ளுங்கள். ஆடியன்ஸ் இன்ட்ராக்ஷனை அதிகமாக்கிக்கொள்ளுங்கள்.

 

v மூடநம்பிக்கைகளை தகர்க்க

மூடநம்பிக்கைகளை தகர்க்க எந்த செயலை தவறென்று கூறுகிறார்களோ அதையே நல்லது என்று காட்டுவது ஒரு அறிவார்ந்த முறை (உண்மையில் நல்லதாக இருந்தால்). இதன் மூலம் அந்த தவறான நம்பிக்கை இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

உதாரணமாக, ”சாப்பிடும் போது கால் ஆட்டினால் தரித்திரமா?” என்று கேட்டால், ”அப்படி ஹதீஸில் இல்லை” என்று சொல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், ”ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்திருப்பவர்கள், அவ்வப்போது காலை ஆட்டிக்கொண்டு இருப்பது தான் உடலுக்கு நல்லது. இல்லாவிட்டால், DeepVeinThrombosis  என்றழைக்கப்படும் இரத்த உறைவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக அமெரிக்க தேசிய இரத்தநிறுவனம் (nhlbi.nih.gov) தெரிவிக்கிறது” என்று, எந்த செயலை தவறென்று நினைக்கிறார்களோ அதையே நல்லதாக காட்டுவது மக்களின் மனதில் ஆழப்பதியும்.
v பதிலை சுருக்கமாக சொல்விட்டு பிறகு விளக்குவது சிறந்தது.

முடியும் நேரங்களில், கேள்விக்குறிய பதில்களை விளக்குவதற்கு முன், இது கூடும், கூடாது என்பதை ஒருவரியில் சொல்லிவிட்டு பிறகு விளக்கிச் சொல்வது நல்லது.

உதாரணமாக) இணைவைப்பு நடக்கும் பள்ளியில் தொழலாமா? என்று ஒருவர் கேட்டால், முதலில் தொழக்கூடாது என்று ஒருவரியில் சொல்லிவிட்டு பிறகு அதற்குறிய ஆதாரங்களை சொல்லி விளக்குவது சிறந்தது. நாம் என்ன சொல்லவருகிறோம் என்பதை புரிந்து கொள்வதற்கு இந்த ஒருவரி அவசியமானது.

அரைமணி நேரம் பதில் சொல்லிமுடித்த பிறகும் ”என்ன சொன்னாரு? கூடும் என்கிறாரா? கூடாது என்கிறாரா?” என்று கேட்கும் மக்கள் நிறையபேர் இருக்கிறார்கள். எனவே, கேள்விக்குறிய பதிலை ”….கூடும் …கூடாது” என்று ஒருவரியில் சொல்லிவிட்டு, பிறகு ஆதாரங்களை விளக்கும் போது, அந்த பதிலின் அடிப்படையில் ஆதாரங்களை புரிந்துகொள்வார்கள். இதில் விதிவிலக்கான நேரங்களும் உண்டு.

Ì  மிகப்பெரிய பேச்சாளர்களெல்லாம் பேசஆரம்பிக்கும் போது, ”எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிற தலைப்பு மறுமைவாழ்க்கை” என்று முதலில் ஒருவரியில் தலைப்பை சொல்லிவிட்டு, பிறகு பேசுவது மேற்குறிப்பிட்ட காரணத்திற்காகத்தான். தலைப்பை சொல்லிவிட்டு பிறகு பேசும்போது, சொல்லும் செய்திகளை மக்கள் அந்த தலைப்பின் அடிப்படையில் புரிந்துகொள்வார்கள்.


v
மீன் பிடிக்க கற்றுக்கொடுங்கள்.

பதிலளிக்கும் போது, பல மார்க்க அறிஞர்கள், ”ஒரு அடிப்படையை முதலில் விளங்கிக் கொள்ளவேண்டும்” என்று சொல்லி பதிலை ஆரம்பிப்பார்கள். இயன்ற அளவு, கேட்கப்படும் கேள்விகளுக்கு இதுபோன்று, அவர்களாகவே பதிலை கண்டுபிடிக்கும் அடிப்படையை சொல்லிக் கொடுங்கள்.

  • வாந்தி எடுத்தால் நோன்பு முறியுமா என்று கேட்டால், ”வாந்தி எடுத்தால் நோன்பு முறியாது” என்று மட்டும் சொல்லி நிறுத்திவிடாமல், நோன்பை முறிக்கும் காரணிகளை பட்டியலிட்டு விட்டு, இதைத்தவிர வேறு எதனாலும் நோன்பு முறியாது. இதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளலாம். என்று பதில் கண்டுபிடிக்கும் வழியை சொல்லித்தாருங்கள்.
  • லுஹர் பின் சுன்னத் தொழாம விட்டுட்டேன். பாவமா? என்று கேட்டால், ”அதெல்லாம் பாவம் இல்லை” என்று முடித்துக்கொள்ளாமல், ”சுன்னத் தொழுகையை பொறுத்தவரையில் தொழுதால் நன்மை. தொழாவிட்டால் குற்றமில்லை. புறக்கணித்தால் தான் குற்றம் ஏற்படும்” என்று அடிப்படையை சொல்லிக்கொடுங்கள். இல்லாவிட்டால், இன்று லுஹர் சுன்னத்தை பற்றி கேட்டவர், நாளை மஃரிப் சுன்னத்தை பற்றி கேட்பார். ஃபார்முலாவை சொல்லிக் கொடுத்துவிட்டால், அது அவர்களுக்கு நிரந்தரமாக பயன்படும்.

எனவே ஒவ்வொரு தடவையும் மீனை பிடித்து கையில் கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக்கொடுங்கள். சட்டத்தின் அடிப்படையை கற்றுக்கொடுத்த நன்மையும் உங்களுக்கு கிடைக்கும்.

 

v ஆர்வமூட்டுவதாக நினைத்துக்கொண்டு, ஃபரளாக்கிவிடாதீர்கள்.

 

வழியுறுத்தப்பட்ட சுன்னத்தை பர்ளு போன்று காட்டும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. இது கூடாது. வித்ரு தொழுகையை பற்றி சொன்னாலும் சரி, பஜ்ருடைய முன் சுன்னத்தை பற்றி சொன்னாலும் சரி, முக்கியத்துவம் வாய்ந்த வேறு செயல்களை பற்றி சொன்னாலும் சரி, கடமையானது என்பது வேறு, சுன்னத்தானது என்பது வேறு.

ஒரு அமலின் சிறப்புகளை எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். முக்கியத்துவம் வாய்ந்தது என்ற காரணத்திற்காக, ”அதை ஒருபோதும் விடக்கூடாது” என்று சொல்லி பர்ளை போன்று காட்டிவிடாதீர்கள். உங்கள் பேச்சை கேட்கும் மக்கள், ”ஒருபோதும் விடக்கூடாது” என்றால் விடஅனுமதி இல்லை(எனவே ஃபர்ள்) என்று தான் புரிந்துகொள்வார்கள். இறைவன் சிலவற்றை சுன்னத்தாக, நஃபிலாக ஆக்கியிருப்பது, கண்டிப்பாக செய்யவேண்டும் என்றில்லாமல் சலுகை தரும் வகையில் தான்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்,  ‘ஒன்றைச் செய்ய வேண்டாமென நான் உங்களுக்குத் தடை விதித்தால், அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு நான் உங்களுக்குக் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவுக்குச் செய்யுங்கள்’ (புகாரி 7288), எனவே இஸ்லாத்தில், உள்ளதை உள்ளபடி சொன்னால் போதுமானது. வழியுறுத்தப்பட்ட சுன்னத்தை ஃபர்ளை போன்றும், சிறந்ததை, கட்டாயமானதை போன்றும் காட்டத் தேவையில்லை.

 

v சலுகைகளை சொல்லுவதற்கு தயங்காதீர்கள்.

மார்க்கத்தை அதன் சலுகைகளை பற்றி பேசுவதற்கு எந்த தயக்கமும் வேண்டாம். உதாரணமாக பலதாரமணத்தை பற்றி கேள்வி கேட்டால், அதன் நியாயத்தை பற்றி பேசுவதற்கு எந்த தயக்கமும் தேவையில்லை. தைரியமாக சொல்லுங்கள். அதே  நேரத்தில் மார்க்கம் சொன்ன நிபந்தனைகளோடு அவற்றை சொல்லுங்கள்.

  • பிரயாணத்திலோ, கடுமையான பசியிலோ நோன்பை விட்டுவிடலாம்.
  • நல்ல உணவு கிடைத்தால், சுன்னத்தான நோன்பை விட்டுவிடலாம்.
  • மழை பெய்தால், பள்ளிக்கு வராமல் வீட்டிலேயே தொழுதுகொள்ளலாம்.
  • உளு செய்யமுடியாவிட்டால், மண்னைத்தொட்டு தயம்மம் செய்யலாம்.

என்பது போன்ற, மார்க்கம் தந்த எந்த சலுகையையும் தைரியமாக சொல்லுங்கள். தயக்கம் வேண்டாம்.
v கேள்வியில் உள்ள அறியாமையை நீக்குங்கள்.

சிலர் கேள்விகேட்கும் போது பயன்படுத்தும் வார்த்தைகளிலிருந்து கேட்கும் கேள்வி அல்லாத வேறு அறியாமையும் வெளிப்படும். எனவே கேட்கும் கேள்வியை உன்னித்து கவனித்து அதுபோன்றதையும் அந்த இடத்திலேயே சுட்டிக்காட்டுங்கள். உதாரணமாக ஒரு பெண்மணி கேட்கிறார், ”வித்ரு வாஜிபு தொழுதபிறகு நஃபில் தொழலாமா?“ என்று.

”வழமையாக அல்லாமல், வித்ரு தொழுகைக்குப்பிறகு நஃபில் தொழுவதற்கு அனுமதி உண்டு (ஆதாரம்:முஸ்லிம்-1220)” என்று கூறுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், ”வித்ரு வாஜிபு என்று கூறினீர்கள். அது தவறு. வித்ரு தொழுகை வாஜிபான (கடமையான) தொழுகை அல்ல. அது நஃபிலான தொழுகை” என்று விளக்குங்கள். அதாவது கேட்ட கேள்விக்கு பதில் சொல்வதுடன், கேள்வியில் ஏதேனும் அறியாமை இருந்தால் அதனையும் விளக்கவேண்டும்.


v
கேள்வியின் தொனிக்கு தகுந்தார்போல பதில் சொல்லாதீர்கள்.

சில தொனிகள் கேட்கும் கேள்வியையே மாற்றும் தொனிகளாக இருக்கும். உதாரணமாக, ”ஏழாவது நாள் அகீகா கொடுக்கனுமா?” என்பதற்கு பதிலாக, ”ஏழாவது நாள் அகீகா கொடுத்தே ஆகனுமா?” என்று தொனியை மாற்றும் போது, கேட்கும் கேள்வியே மாறிவிடுகிறது. முதல் கேள்விக்கு சுன்னத்தைப்பற்றி கேட்கிறார் என்பதால் ”ஆம்” என்று சொல்வோம், இரண்டாவது கேள்வி பர்ளா என கேட்கிறார் என்பதால் ”இல்லை” என்று சொல்வோம். இது சாதாரணமாக நாம் சந்திக்கும் கேள்வி.

ஆனால் சிலகேள்விகள் தொனியை மாற்றினாலும் பதில் மாறாது. ஒரே கேள்வியை மக்கள் இரண்டு விதமாக கேட்பார்கள். புதியவர்கள் செய்யும் தவறுகளில் ஒன்று, சிந்திக்காமல் கேள்வியின் தொனிக்கு தகுந்தார்போல பதில் சொல்லிவிடுவது. உதாரணமாக)

  • உறவினர் தீமை செய்யும் போது வெறுத்து ஒதுக்கிவிடலாமா? என்று கேட்டால் ”கூடாது. சேர்ந்துதான் வாழவேண்டும். அதே நேரத்தில் தீமையை சுட்டிக்காட்டுங்கள்” என்று பதிலளிப்பார்.
  • அதே கேள்வியை வேறுவிதமாக, ”உறவினர் தீமை செய்தாலும், உறவாட வேண்டுமா?” என்று கேட்டால், ”கூடாது. தீமை செய்பவர்களை வெறுத்து ஒதுக்குவது இஸ்லாத்தில் உள்ளது” என்பார்.

சட்டங்களை சரியாக புரிந்து கொள்ளாமல், கேள்வியின் தொனியை மட்டும் கவனித்து அதற்கு தகுந்தார்போல் பதில் சொல்வது தான், இதற்கு காரணம். கேள்வி எப்படி இருந்தாலும் பதில் ஒன்று தான்.

”தீமையென்று தெரிந்துகொண்டே விடாப்பிடியாக செய்பவரை, நாம் அவரிடத்தில் பேசாமல் இருந்தால் அவர் திருந்துவார் என்று இருந்தால் பகைக்கவேண்டும், பேசாமல் இருக்கவேண்டும். ”நீ பேசாவிட்டால் ரொம்ப சந்தோஷம்” என்று சொல்பவரிடம் பேசாமல் இருப்பது உறவை முறிப்பதாகத்தான் ஆகும். அதனால் எந்த பிரயோஜனமுமில்லை” என்று பதிலளிக்கவேண்டும். இது இதற்கு மட்டும் உரியதல்ல. எந்த கேள்விக்கும் அதன் தொனிக்கு தகுந்தார்ப்போல் பதில் சொல்லாமல், கேள்வியை ஒருகணம் சிந்தித்து பதில் சொல்லவேண்டும்.

 

v நகைச்சுவை என்று நினைத்து மட்டம் தட்டிவிடக்கூடாது.
எப்போதும் சீரியஸாக பேசிக்கொண்டிருக்காமல், கேஸுவலாகவும் நகைச்சுவையாகவும் பேசுவதும், கேள்விகளுக்கு பதிலளிப்பதும் விரும்பத்தக்கது தான். அதேநேரம் ஜோக் அடிக்கிறோம் என்று நினைத்துக்கொண்டு பேசுவது சிலநேரம் மக்களை இழிவுபடுத்துவது போல் ஆகிவிடுகிறது. உதாரணமாக, ஒருபெண்மணி கேட்கிறார், ”ஆடையில்லாமல் குளிக்கலாமா?”, இதற்கு, ”அதுல என்ன உங்களுக்கு சிரமம்?” என்பதுபோல் எதாவது கேட்டால் சுற்றி உள்ளவர்கள் சிரிக்கலாம். கேள்விகேட்டவருக்கு மிகுந்த சங்கடமாக இருக்கும். யோசிக்காமல் நகைச்சுவையாக பேசுகிறோம் என்று நினைத்துக்கொண்டு வாயில் வருவதையெல்லாம் பேசிவிடக்கூடாது.

அதுபோன்று ஒருவர் கேட்கிறார், ”என் மனைவி பொய் பேசுகிறாள். புறம் பேசுகிறாள். பர்தா அணிவதில்லை. எப்படி திருத்துவது?” என்று. இதற்கு, ”அப்ப ஒன்னா நம்பர் ஷைத்தான்னு சொல்லுங்க!” என்று சொன்னால், அரங்கமே சிரிப்பலையால் நிரம்பும். ஆனால் கேள்விகேட்டவரோ, அவரது மனைவியோ மிகுந்த வேதனைப்படுவார்கள். நம்மையும் இதுபோன்று எதாவது சொல்லுவாரோ என்ற எண்ணத்தில், இதுபோன்று கேள்வி கேட்கவிரும்பும் பிறரும், கேள்வி கேட்கமாட்டார்கள். கவனம். இது சரியான செயல் அல்ல.

 

v கிண்டல்கள் பதிலாகாது.
தப்லீக் ஜமாத் சரியா? தொப்பி அவசியமா? தப்ரூக்(சீரணி) புனிதமானதா? என்பது போன்ற எதாவது கேள்வியை கேட்கும் போது, சிலபேச்சாளர்கள் அதற்குரிய சரியான பதிலை சொல்லாமல், வெறும் கிண்டலோடு முடித்துக்கொள்கின்றனர். தரமற்ற பேச்சாளரின் அடையாளங்களில் இதுவும் ஒன்று. அறியாமை காலத்து செயல்களை நினைத்து சிரிப்பதற்கு அனுமதி உண்டு.

حَدَّثَنِي يَحْيَى بْنُ يَحْيَى قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ ابْنِ شِهَابِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَبَاغَضُوا وَلَا تَحَاسَدُوا وَلَا تَدَابَرُوا وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا وَلَا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثٍ حَدَّثَنَا حَاجِبُ بْنُ الْوَلِيدِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ الزُّبَيْدِيُّ عَنْ الزُّهْرِيِّ أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ح و حَدَّثَنِيهِ حَرْمَلَةُ بْنُ يَحْيَى أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي يُونُسُ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ أَنَسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِ حَدِيثِ مَالِكٍ حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ وَابْنُ أَبِي عُمَرَ وَعَمْرٌو النَّاقِدُ جَمِيعًا عَنْ ابْنِ عُيَيْنَةَ عَنْ الزُّهْرِيِّ بِهَذَا الْإِسْنَادِ وَزَادَ ابْنُ عُيَيْنَةَ وَلَا تَقَاطَعُوا حَدَّثَنَا أَبُو كَامِلٍ حَدَّثَنَا يَزِيدُ يَعْنِي ابْنَ زُرَيْعٍ ح و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ كِلَاهُمَا عَنْ عَبْدِ الرَّزَّاقِ جَمِيعًا عَنْ مَعْمَرٍ عَنْ الزُّهْرِيِّ بِهَذَا الْإِسْنَادِ أَمَّا رِوَايَةُ يَزِيدَ عَنْهُ فَكَرِوَايَةِ سُفْيَانَ عَنْ الزُّهْرِيِّ يَذْكُرُ الْخِصَالَ الْأَرْبَعَةَ جَمِيعًا وَأَمَّا حَدِيثُ عَبْدِ الرَّزَّاقِ وَلَا تَحَاسَدُوا وَلَا تَقَاطَعُوا وَلَا تَدَابَرُوا

ஜாபிர்பின் சமுரா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள், ”நபி(ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுதுவிட்டு, சூரியன் உதயமாகும் முன் எழுந்திருக்கமாட்டார்கள், அப்போது, மக்கள் அறியாமை காலத்து செயல்களை கூறி சிரித்துக்கொண்டிருப்பார்கள், அதைக்கேட்டு அல்லாஹ்வின் தூதர் புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள்” (முஸ்லிம் 4641). எனவே கிறுக்குத்தனமான செயல்களை காணும் போது சிரிப்பு வரத்தான் செய்யும். சிரித்துக்கொள்ளுங்கள். தடையில்லை. எனினும், அந்த சிரிப்பிற்கு பின்னால், அந்த செயல் எதனால் தவறு என்பதை ஹதீஸ் ஆதாரங்களோடு விளக்கவேண்டும். சிரிப்பது ஆதாரமாகாது.
v எந்த கேள்வியையும் இன்முகத்தோடு வரவேற்பது.
சிலர் கேள்வி கேட்பதாக நினைத்துக்கொண்டு, தனது கருத்தை சொல்வார்கள், சிலர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவார்கள். அப்போதும் சரி மற்ற நேரங்களிலும் சரி முடிந்தஅளவு எந்த கேள்வியையும் ”அர்த்தமே இல்லை” என்று அலட்சியப்படுத்தக்கூடாது. ”புத்திசாலித்தனமான கேள்வியை மட்டும் தான் கேட்கவேண்டும்” என்று நினைத்து மக்கள் கேள்வி கேட்க தயங்குவார்கள். எந்த கேள்வியையும் இன்முகத்தோடு வரவேற்பது, அனுபவமுள்ள பேச்சாளர்களின் வழிமுறையாக இருக்கிறது. ”சரியா கேட்டீங்க. தேவையான கேள்வியை கேட்டிருக்கீங்க” என்று கேள்வியை வரவேற்பதால், மற்ற மக்களும் தயக்கமின்றி கேள்விகேட்பார்கள்.

 

ஒரே ஒரு நேரத்தில் மட்டும் கேள்வி கேட்டவரை கண்டிக்கவேண்டியிருக்கும். அதாவது, முஸ்லிமாக இருந்துகொண்டு, இறைவனின் கட்டளைகளையோ, நபியின் செயல்களையோ குறைசொல்லும் வகையில் கேள்விகேட்பது.

 

உதாரணமாக, ”பெண்களுக்கு சமஉரிமை தராமல் இருப்பதற்கு காரணம் உள்ளதா?” என்று கேட்டால் பிரச்சனை இல்லை. மாறாக, ”பெண்களுக்கு சமஉரிமை தராமல் அல்லாஹ் ஏன் இழிவுபடுத்துறான்?” என்று ஒரு முஸ்லிம் கேட்டால், இந்த கேள்விக்கு கண்டனம் தெரிவிக்கவேண்டும்.
முஸ்லிமல்லாதவர் இப்படி கேட்டால் ஒன்றும் செய்யமுடியாது, அவர் ஈமான் கொள்ளவில்லை. அவருக்கு அல்லாஹ் என்றால் யார் என்றே தெரியாது. தன்னை முஸ்லிம் என்று சொல்லிக்கொள்ளும் ஒருவர் இப்படி கேட்டால், ”அல்லாஹ்வுக்கு பயந்துகொள்ளுங்கள். நீங்கள் கேட்ட கேள்விக்கு நியாயமான பதில் இருப்பது ஒருபக்கம். பதில் தெரியாவிட்டாலும் இறைவனின் கட்டளையை முழுமனதோடு ஏற்பதுதான் ஒரு முஸ்லிமின் கடமை” என்று கடுமையாகவே சொல்லுங்கள். எதைவேண்டுமானலும் கேட்கலாம் என்பதை தவறாக புரிந்துகொண்டதுதான் இதற்கு காரணம். இந்த போக்கை கடுகளவும் அனுமதிக்காதீர்கள்.

 

v சூழ்நிலையை உணர்ந்து பதில் சொல்லுங்கள்

சிலநேரங்களில் மக்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காதா என்ற எண்ணத்தில் வருவார்கள். அதுபோன்ற நேரங்களில், சற்று நிதானமாக கேள்வி கேட்டவருடைய சூழ்நிலையை உணர்ந்து பதில் சொல்லுங்கள்.

ஒருவர் கேட்கிறார், ”நான் வேலைக்கு போற இடத்தில தொழ முடியவில்லை. என்ன செய்வது?” இதற்கு, ”தொழமுடியாத வேலையை விட்டுவிடுங்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைய்யுங்கள்” என்று பதில் சொல்வது சரியா?

தொழமுடியாவிட்டால் கண்டிப்பாக வேலையை விடவேண்டும் தான், ஆனால் அதை சொல்வதற்கு முன்னால், ”மதிய உணவு நேரத்தில், லுஹர், அஸரை சேர்ந்து எங்காவது ஒரு ஓரத்தில் நின்று தொழுதுவிடுங்கள், மஃரிப், இஷாவை வீட்டில் வந்து தொழுதுகொள்ளுங்கள். வேறு நல்லவேலையை தேடிக்கொண்டிருங்கள்.” என்று சொல்லுங்களேன்.

வேலையை விட்டுவிடுங்கள் என்ற ஒருவரியில் சொல்லிவிட்டுச் செல்பவர்கள், தங்களுக்கு இதுபோன்ற சூழ்நிலை இருந்தால், எடுத்த எடுப்பிலேயே வேலையை விட்டுவிடுவார்களா? அல்லது வேறு அனுமதிக்கப்பட்ட வழியை முயற்சிப்பார்களா? எனவே கேள்வி கேட்டவருடைய சூழ்நிலையை உணர்ந்து பதில் சொல்லுங்கள்.

 

v கேள்விக்கு சீட்டு பெறுவது பாதுகாப்பான முறை.

இளம் பிரச்சாரகர்கள் உடனுக்குடன் நேருக்குநேர் பதில் சொல்லாமல், கேள்வி கேட்பவர்களிடம் சீட்டில் எழுதித்தாருங்கள் என்று எழுதி வாங்கிக்கொள்ளுங்கள். பதட்டம் இல்லாமல் பதில் சொல்லமுடியும். பத்துஇருபது சீட்டுகள் வரும் போது, அதிலிருந்து முதலில் தெரிந்த கேள்விகளுக்கு மட்டும், இருக்கும் நேரத்தில் பதிலை சொல்லி முடித்துக் கொள்ளமுடியும்.

ஒருவேளை நேருக்குநேர் பதில் சொல்லும் நிர்பந்தம் ஏற்பட்டு,  பதில் தெரியாத கேள்வியை சந்தித்தால், எதையாவது உளறிகொட்டி மாட்டிக்கொண்டு முழிப்பதைவிட, நாளை சொல்கிறேன் என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை.

 

v மக்களுக்கு பரிசளிப்பது புத்திசாலித்தனமான செயல்.

தற்போது, பலஇடங்களில் கேள்வி கேட்டவருக்கு மார்க்க புத்தகம், சிறு பாத்திரம் என எதாவது ஒன்றையோ பரிசாக தருகின்றனர். இது மிகவும் புத்திசாலித்தனமான செயல். மக்களை தொடர்ந்து பயானுக்கு வர ஆர்வமூட்டுவதில் இந்த யுக்தி நன்றாக பயனளிக்கக்கூடியது. பலஆயிரம் ரூபாய் கொடுத்து பொருட்கள் வாங்க வசதி உள்ளவராக இருந்தாலும், மக்கள் மத்தியில் 10 ரூபாய்க்கு ஒரு அன்பளிப்பு கிடைத்தால், அதை அதிகம் விரும்புவார். இது அனைவருக்கும் உள்ள குணம். பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் இந்த குணம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். எனவே இந்த யுக்தியை பயன்படுத்த மறக்காதீர்கள்.

இதைவிட முக்கியமாக, மக்களுக்கு தேனீரோ, குளிர்பானமோ கொடுப்பதில் பொருளாதார செலவை பொருட்படுத்தாதீர்கள், இது அனைவரும் செயல்படுத்தும் சாதாரண செயலாக இருந்தாலும், இதன் முக்கியத்துவத்தை மறந்துவிடக்கூடாது என்பதற்காக குறிப்பிடுகிறேன், ஆங்காங்கே நடத்தப்படும் பெண்கள்-சிறுவர்கள் பயானில் மறக்காமல் ஏதேனும் பானம் வழங்கவேண்டும், கேள்விக்கு பதில் சொல்லும் மக்களுக்கு முடிந்தால் பரிசளிக்கவேண்டும்.

பிறமதத்தினருக்கு தாஃவா செய்யுங்கள் என்று மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், உள்ளங்கள் ஈர்க்கப்படவேண்டிய அவர்களுக்கு ஜகாத்தை கொடுங்கள் (9:60) என்ற இறைவனின் கட்டளையிலிருந்து, பொருளாதாரத்தை செலவு செய்தும் மக்களை ஈர்க்கமுடியும் என்பதை விளங்கலாம்.