Tamil Bayan Points

குழந்தைக்குப் பாலூட்டும் ஆண்டை வரையறுத்த திருக்குர்ஆன்!

பயான் குறிப்புகள்: குர்ஆன் கூறும் அறிவியல்

Last Updated on September 17, 2020 by Trichy Farook

குழந்தைக்குப் பாலூட்டும் ஆண்டை வரையறுத்த திருக்குர்ஆன்!

1400 ஆண்டுகளுக்கு முன்னதாக இறைவன் குர்ஆனில் கூறியவை நாம் வாழும் சமகாலத்தில் அறிவியலின் மூலமாக உண்மைப்படுத்தப்பட்டு வருகிறது. அதிலொன்றாக, பிறந்த குழந்தைக்குப் பாலூட்டுவதைப் பற்றி குர்ஆன் கூறும்போது இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டுமென்று கூறுகிறது.

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள்.

(குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை உண்டு. இருவரும் ஆலோசனை செய்து மனம் விரும்பி பாலூட்டுவதை நிறுத்த முடிவு செய்தால் இருவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. உங்கள் குழந்தைகளுக்கு (வேறு பெண் மூலம்) பாலூட்ட வேண்டும் என நீங்கள் விரும்பினால் (பெற்றவளுக்குக்) கொடுக்க வேண்டியதை நல்ல முறையில் கொடுத்து விட்டால் உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! திருக்குர்ஆன் 2:233

இந்த வசனத்தில் இறைவன் பாலூட்டுவதற்கான சட்டங்களைப் பற்றி பேசுகிறான். அதில் ஒன்றாக பாலூட்டுவதற்கான ஆண்டைப் பற்றி கூறும்போது இரண்டு ஆண்டுகள் முழுமையாகப் பாலூட்ட வேண்டுமென்று இறைவன் கூறுகிறான். தற்போது உலக சுகாதார அமைப்பானது, பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற்காக ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பிறந்த குழந்தைக்கு முதல் இரண்டு ஆண்டுகள் முழுமையாகத் தாய்ப்பால் ஊட்டினால் ஆண்டுதோறும் 8.2 இலட்சம் குழந்தைகளின் உயிரிழப்பைத் தடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறந்த குழந்தைக்கு இரண்டு ஆண்டுகள் பாலூட்டுவதின் மூலமாக, குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும், நோய் எதிர்ப்பு சக்தியில்லாமல் இறந்து போதல் போன்றவைகள் ஏற்படாது எனத் தெரிந்து கொள்ளலாம். இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டுமென குர்ஆன் கூறுவதற்கான காரணம் இதுதான் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தைதான் என்பதற்கு சான்றாக உள்ள ஏராளமான தற்போதைய கண்டுபிடிப்பு…

 

Source : unarvu ( 04/05/2018 )