Tamil Bayan Points

19) குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்

நூல்கள்: இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு

Last Updated on December 12, 2019 by

குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்வது பெற்றோர்கள் செய்ய வேண்டிய முக்கியமான காரியமாகும். நாம் எவ்வளவு தான் திருத்துவதற்கு முயற்சி செய்தாலும் அல்லாஹ் நாடாவிடால் நம் குழந்தைகள் நல்லவர்களாக உருவெடுக்க முடியாது. எனவே இந்த விஷயத்தில் அல்லாஹ்வின் உதவியை அவசியம் கேட்க வேண்டும்.

இறைத்தூதரின் மகனாக இருந்தாலும் அல்லாஹ்வின் நாட்டம் இருந்தால் தான் அவன் நல்லவனாக முடியும். எனவே தான் நபிமார்கள் தங்கள் பிள்ளைகள் நல்லவர்களாகத் திகழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன் ; நிகரற்ற அன்புடையோன் (என்று இப்ராஹீமும் இஸ்மாயீலும் பிரார்த்தனை செய்தார்கள்).

 (அல்குர்ஆன் 2 : 128)

என் இறைவா! என்னையும், என் சந்ததிகளிலும் தொழுகையை நிலை நாட்டுவோராக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! எனது பிரார்த்தனையை ஏற்பாயாக! (என்று இப்ராஹீம் கூறினார்.)

 (அல்குர்ஆன் 14 : 40)

“எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!” என்று அவர்கள் கூறுகின்றனர்.

 (அல்குர்ஆன் 25 : 74)

இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். “உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்” என்று அவன் கூறினான். “எனது வழித் தோன்றல்களிலும்” (தலைவர்களை ஆக்குவாயாக!) என்று அவர் கேட்டார். “என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது” என்று அவன் கூறினான்.

 (அல்குர்ஆன் 2 : 124)