Tamil Bayan Points

குலா மற்றும் தலாக் வேறுபாடு

முக்கிய குறிப்புகள்: குடும்ப வழக்குகள்

Last Updated on October 18, 2016 by Trichy Farook

 

தலாக்
மனைவியுடன் சேர்ந்து வாழ கணவன் விரும்பாவிட்டால் கணவன் மனைவியை விவாகரத்துச் செய்வதற்கு தலாக் என்று கூறப்படும்.

குலா
கனவனுடன் சேர்ந்து வாழ மனைவிக்கு விருப்பம் இல்லாவிட்டால் மனைவி கணவனை விவாகரத்துச் செய்வதற்கு குலா என்று கூறப்படும். விவாகரத்துச் செய்யும் உரிமை ஆண்களுக்கு இருப்பதைப் போன்று பெண்களுக்கும் இஸ்லாத்தில் உண்டு.

 

ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) அவர்களின் துணைவியார் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) ஸாபித் பின் கைஸின் குணத்தையோ, மார்க்கப் பற்றையோ நான் குறை கூறவில்லை. ஆனால், நான் இஸ்லாத்தில் இருந்து கொண்டே இறை நிராகரிப்புக்குரிய செயலைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன்” என்று கூறினார். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஸாபித் உனக்கு (மணக் கொடையாக) அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்து விடுகிறாயா?” என்று கேட்டார்கள். அவர், “ஆம் (தந்து விடுகிறேன்)” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), “தோட்டத்தை ஏற்றுக் கொண்டு, அவளை ஒரு முறை தலாக் சொல்லி விடுங்கள்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி (5273)

மேற்கண்ட செய்தியிலிருந்து நபி (ஸல்) அவர்களின் காலத்திலிருந்த நடைமுறையை அறியலாம். ஒரு பெண்ணுக்கு கணவனைப் பிடிக்காவிட்டால் அவள் சமுதாயத் தலைவரிடம் முறையிட வேண்டும். அந்தத் தலைவர் அவள் கணவனிடமிருந்து பெற்றிருந்த மஹர் தொகையை திரும்பக் கொடுக்குமாறும் அந்த மஹர் தொகையை கணவன் பெற்றுக் கொண்டு மனைவியை விட்டு விலகுமாறு கணவனுக்கு கட்டளையிட வேண்டும். திருமணத்தையும் இரத்துச் செய்ய வேண்டும் என்பதை இந்தச் செய்தியிலிருந்து அறியலாம்.

பெண்கள் தாமாகவே விவாக ஒப்பந்தத்தை முறித்துவிடாமல் தலைவர் முன்னிலையில் முறையிடுவது அவசியமாகின்றது. ஏனெனில் பெண்கள் கணவனிடமிருந்து ஊரறிய மஹர் தொகை பெற்றிருப்பதாலும் அதைத் திரும்பவும் கணவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதாலும் இந்த நிபந்தனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் விவாகரத்துப் பெற்றதற்குப் பின்னால் பெண்களே அதிக சிரமத்திற்கு ஆளாக நேர்வதால் இத்தகைய முடிவுக்கு அவர்கள் அவசரப்பட்டு வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் இந்த ஏற்பாடு அவசியமாகின்றது. சமுதாயத் தலைவர் அவளுக்கு நற்போதனை செய்ய வழி ஏற்படுகின்றது. எனவே சமுதாயத் தலைவரிடம் தெரிவித்து விட்டு அவர் மூலமாகப் பிரிந்து கொள்வதே அவளுக்குச் சிறந்ததாகும்.

பிடிக்காத கணவனுடன் சேர்ந்து வாழுமாறு பெண்னைக் கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூட பரீரா என்ற பெண்ணிற்கு பிரிந்த தன் கணவனுடன் சேர்ந்து வாழுமாறு பரிந்துரை செய்தார்களே தவிர நிர்பந்திக்கவில்லை.

பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு முஃகீஸ் என்று (பெயர்) சொல்லப்படும். அவர் (பரீரா தம்மைப் பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தமது தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது. அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் “அப்பாஸ் அவர்களே! முஃகீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும், பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா?” என்று கேட்டார்கள். (முஃகீஸிடமிருந்து பரீரா பிரிந்துவிட்ட போது) நபி (ஸல்) அவர்கள் “முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக் கூடாதா?” என்று (பரீராவிடம்) கேட்டார்கள். அதற்கு பரீரா “அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் தாங்கள் கட்டளையிடுகின்றீர்களா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “(இல்லை.) நான் பரிந்துரைக்கவே செய்கின்றேன்” என்றார்கள். அப்போது பரீரா, “(அப்படியானால்,) அவர் எனக்குத் தேவையில்லை” என்று கூறிவிட்டார்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரலி

நூல் : புகாரி (5283)