Tamil Bayan Points

குர்ஆன் கூறும் அண்டவியல் தத்துவத்தை உண்மைப்படுத்திய ஸ்டீபன் ஹாக்கிங்

பயான் குறிப்புகள்: குர்ஆன் கூறும் அறிவியல்

Last Updated on September 17, 2020 by Trichy Farook

குர்ஆன் கூறும் அண்டவியல் தத்துவத்தை உண்மைப்படுத்திய ஸ்டீபன் ஹாக்கிங்

பிரபஞ்சத்தைப் பற்றிய ஆய்வுகளை நடத்திய அண்டவியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கடந்த வாரம் இங்கிலாந்தில் மரணம் அடைந்தார். இவர் கேம்பிரிட்ஜ்ப் பல்கலைக் கழகத்தின் கோட்பாட்டு அண்டவியல் மையத்தின் இயக்குநராகப் பணியாற்றினார் இவர் 1942 – ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு நகரத்தில் பிறந்தார். புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகக் கல்லூரியில் பட்டப்படிப்பை பயின்றார். அமெரிக்காவின் உயர்ந்த குடிமகனுக்கான விருதைப் பெற்றவர். 2002 ஆம் ஆண்டில், பிபிசி நடத்திய இங்கிலாந்தின் 100 பெரும் புள்ளிகள் கணிப்பில் 25வதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1979 முதல் 2009 வரை கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கணிதவியல் பேராசிரியராகப் பணியாற்றினார்.

21 வயதிலேயே, முதலாவது திருமணத்துக்குச் சற்று முன்னர் தசையூட்டமற்ற பக்க மரப்பு நோய் என அழைக்கப்படும் இயக்கு நரம்பணு நோயால் தாக்குண்டார். குணப்படுத்த முடியாத நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, படிப்படியாகக் கை, கால் முதலிய உடலியக்கங்களும் பாதிக்கப்பட்டு, பேச்சையும் இழந்த நிலையில் கணினியின் உதவியுடன் பேச்சு தொகுப்பு மூலம் மற்றவர்களிடம் பேசுவார். அதாவது இவரால் பேச முடியாது, பேச வேண்டியதை கணினி மூலம் எழுதி அதை கணினி மற்றவர்களுக்கு வாசித்து காண்பிக்கும். 50 ஆண்டுகளுக்கும் மேல் நோயுடன் போராடி பிரபஞ்சத்தைப் பற்றிய பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். கடந்த 2008- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மான்டெரே என்ற இடத்தில் ஜிணிஞி2008 அறிவியல் மாநாடு நடைபெற்றது . இந்த மாநாட்டில் ஸ்டீபன் ஹாக்கிங் “பிரபஞ்சத்தைக் கேள்வி கேட்போம்(Questioning the universe)”  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இந்த உரையின் விடியோவும், அதனுடைய எழுத்து வடிவமும் TED  இணையதளத்தில் உள்ளது. இந்த உரையில் பிரபஞ்சத்தின் தோற்றம், விரிவாக்கம், உயிரினங்களின் தோற்றம் பற்றி விரிவாக விளக்கிப் பேசியுள்ளார். ஸ்டீபன் ஹாக்கிங் உரையில் இருந்து, கி.பி.1920 -ஆம் ஆண்டு வரை இந்தப் பிரபஞ்சம் நிலையானது, மாறாதது என விஞ்ஞானிகள் கருதி வந்தனர். ஆனால் பின்னர் நடத்தப்பட்ட ஆய்வுகளில் தொலைவில் உள்ள விண்மீன் திரள்கள் நம்மை விட்டு விலகி செல்கின்றன எனக் கண்டுபிடித்தனர். இப்போது அவை நம்மை விட்டு விலகி செல்கின்றன என்றால் முன்னர் அவை நம்மோடு நெருங்கி இருந்திருக்கும். 15 பில்லியன் ஆண்டுகள் பின்னோக்கி போனால் இந்த பிரபஞ்சம் அனைத்தும் ஒரே ஒரு பொருளாக இருந்திருக்கும். இதை நாம் பெரு வெடிப்பு, பிரபஞ்சத்தின் துவக்கம் என்கின்றோம். நமக்குள் எழும் கேள்வி பெருவெடிப்பிற்கு முன் அது என்னவாக இருந்திருக்கும்?.

இந்தக் கேள்விக்கு விடையாக ஸ்டீபன் ஹாக்கிங் சொல்வது ““The universe can spontaneously create itself out of nothing” பிரபஞ்சம் எதுவும் இல்லாமல் தானாக தோன்றி இருக்கும். அதாவது திடீர் என தோன்றி இருக்கும். கோள்களும், நட்சத்திரங்களும் ஒரு காலத்தில் இணைந்திருந்தது என்பதையும், இந்தப் பிரபஞ்சம் விரிவடைகின்றது என்பதையும் கி.பி. 1920 வரை அறிவியலாளர்கள் அறிந்து வைத்திருக்கவில்லை. ஆனால் குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன் இதைத் தெளிவாக விளக்குகின்றது.

வானங்களும் பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை)   மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? திருக்குர்ஆன் 21:30

(நமது) வலிமையால் வானத்தைப் படைத்தோம். மேலும் (அதை) நாம் விரிவுபடுத்துவோராவோம். திருக்குர்ஆன் 51:47

மேலும் இந்தப் பிரபஞ்சம் ஏதும் இல்லாமல் உருவானது எனக் குறிப்பிடுகின்றார். திருக்குர்ஆனில் பிரபஞ்சத்தின் படைப்பு பற்றி அல்லாஹ் கூறும் போது “ஆகு” என்னும் கட்டளையால் படைத்தேன் எனக் குறிப்பிடுகின்றான்.

(அவன்) வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். ஒரு காரியத்தை அவன் முடிவு செய்யும்போது அது குறித்து ‘ஆகு’ என்றே கூறுவான். உடனே அது ஆகி விடும். திருக்குர்ஆன் 2:117

பூமியில் உயிரினங்கள் படைப்பு பற்றி ஸ்டீபன் ஹாக்கிங் கூறும் போது. இந்தப் பூமியானது பிரபஞ்சம் தோன்றிய உடனே உருவாகவில்லை, பெரு வெடிப்பு ஏற்பட்டு சில பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகே தோன்றி இருக்கும் எனக் கூறுகின்றார் அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறும் போது வானத்தையும் பூமியையும் 6 யுகங்களில் படைத்ததாகக் கூறுகின்றான். பூமி உடனே உருவாகவில்லை; பிரபஞ்சத்தின் தோற்றத்திற்குப் பிறகு படிப்படியாக உருவாகி இருக்கின்றது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்.  திருக்குர்ஆன் 7:54 “

பூமியை இரண்டு நாட்களில் படைத்தவனையா மறுக்கிறீர்கள்? மேலும் அவனுக்கு நிகரானவர்களைக் கற்பனை செய்கிறீர்கள். அவனே அகிலத்தின் அதிபதியாவான்” என்று கூறுவீராக! நான்கு நாட்களில் அதன் மேலே முளைகளை ஏற்படுத்தினான். அதில் பாக்கியம் செய்தான். அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே. திருக்குர்ஆன் 41:9,10

அல்லாஹ்வின் புறத்தில் ஒரு நாள் என்பது நாம் தற்போது கணக்கிடும் நாளின் நேரத்திற்கு ஒப்பானது இல்லை.  1400 ஆண்டுகளுக்கு முன் அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறிய அண்டவியல் தத்துவங்களை, தொடர்ந்து ஆய்வாளர்களும் அறிவியல் அறிஞர்களும் உண்மைப்படுத்தி வருகின்றனர். இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த ஆய்வாளர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள் இல்லை. குர்ஆனை மெய்ப்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இவர்கள் தங்கள் ஆய்வுகளைச் செய்வதில்லை.

தங்களுடைய ஆராய்ச்சிக்காக இவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிடுகின்றனர். இவர்களின் தற்போதைய கண்டுபிடிப்புகளை அல்லாஹ் குர்ஆனில் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே குறிப்பிட்டுள்ளது, குர்ஆன் இறை வேதம் தான் என்பதற்குச் சான்றாக அமைகின்றது. அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறும் போது வானத்தையும் பூமியையும் எவ்வளவு தான் ஆய்வு செய்தாலும் அல்லாஹ்வின் படைப்பில் எந்தக் குறையையும் காணமுடியாது, குர்ஆனைப் பொய்ப்பிக்க பிரபஞ்சத்தை யாராவது ஆய்வு செய்தால் ஆய்வு செய்பவர் தான் தோற்றுப்போவாரே தவிர குர்ஆனை யாராலும் பொய்ப்பிக்க முடியாது.

அவனே ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான். அளவற்ற அருளாளனின் படைப்பில் எந்த முரண்பாடுகளையும் நீர் காணமாட்டீர். மீண்டும் பார்ப்பீராக! ஏதேனும் குறையைக் காண்கிறீரா? இரு தடவை பார்வையைச் செலுத்திப்பார்! களைப்புற்று இழிந்ததாக பார்வை உம்மைத் திரும்ப அடையும். திருக்குர்ஆன் 67:3,4

 

Source : unarvu ( 23/03/218 )