Tamil Bayan Points

குர்ஆனை ஓதுவோம்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

Last Updated on September 26, 2023 by Trichy Farook

முன்னுரை

அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தந்த நற்செயல்களைச் செய்யும் போது ஏராளமான நன்மைகளை அல்லாஹ் பரிசாக வழங்குகின்றான். இந்த நன்மைகளில் குறிப்பிடத்தகுந்த ஒன்று குர்ஆனை ஓதுவது.

 عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ

خَرَجَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- وَنَحْنُ فِى الصُّفَّةِ فَقَالَ « أَيُّكُمْ يُحِبُّ أَنْ يَغْدُوَ كُلَّ يَوْمٍ إِلَى بُطْحَانَ أَوْ إِلَى الْعَقِيقِ فَيَأْتِىَ مِنْهُ بِنَاقَتَيْنِ كَوْمَاوَيْنِ فِى غَيْرِ إِثْمٍ وَلاَ قَطْعِ رَحِمٍ ». فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ نُحِبُّ ذَلِكَ. قَالَ « أَفَلاَ يَغْدُو أَحَدُكُمْ إِلَى الْمَسْجِدِ فَيَعْلَمَ أَوْ يَقْرَأَ آيَتَيْنِ مِنْ كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ خَيْرٌ لَهُ مِنْ نَاقَتَيْنِ وَثَلاَثٌ خَيْرٌ لَهُ مِنْ ثَلاَثٍ وَأَرْبَعٌ خَيْرٌ لَهُ مِنْ أَرْبَعٍ وَمِنْ أَعْدَادِهِنَّ مِنَ الإِبِلِ

நாங்கள் பள்ளியின் திண்ணையில் இருக்கும் போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். “உங்களில் ஒருவர் பாவத்திலும் உறவைத் துண்டிப்பதிலும் ஈடுபடா வண்ணம், புத்ஹான் அல்லது அகீக் என்ற இடத்திற்குச் சென்று கொழுத்த திமில் உடைய இரு பெண் ஒட்டகங்களைக் கொண்டு வர விரும்புவாரா?” என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள் “அல்லாஹ்வின் தூதரே! அதை நாங்கள் விரும்புகின்றோம்” என்று பதிலளித்தோம்.

“உங்களில் ஒருவர் அதிகாலையில் பள்ளிக்குச் சென்று மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்வின் வேதத்திலிருந்து இரண்டு வசனங்களை விளங்கவோ அல்லது ஓதவோ கூடாதா? அவ்வாறு சென்று இரு வசனங்களை ஓதுவது இரு பெண் ஒட்டகங்களை விடவும் சிறந்தது. மூன்று வசனங்கள் மூன்று பெண் ஒட்டகங்களை விடச் சிறந்தது. நான்கு வசனங்கள் நான்கு ஒட்டகங்களை விடச் சிறந்தது. இந்த அளவுக்கு வசனங்கள் இதே அளவுக்கு ஆண் ஒட்டகங்களை விடச் சிறந்தது” என்று சொன்னார்கள்.

அறி : உக்பா பின் ஆமிர் (ரலி)
நூல் : முஸ்லிம்-1469

ஓதுபவருக்கு உவமை

عَنْ أَبِي مُوسَى ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ
مَثَلُ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ كَالأُتْرُجَّةِ طَعْمُهَا طَيِّبٌ وَرِيحُهَا طَيِّبٌ وَالَّذِي لاَ يَقْرَأُ الْقُرْآنَ كَالتَّمْرَةِ طَعْمُهَا طَيِّبٌ ، وَلاَ رِيحَ لَهَا وَمَثَلُ الْفَاجِرِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الرَّيْحَانَةِ رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا مُرٌّ وَمَثَلُ الْفَاجِرِ الَّذِي لاَ يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الْحَنْظَلَةِ طَعْمُهَا مُرٌّ ، وَلاَ رِيحَ لَهَا

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனை ஓதுகின்ற(நல்ல)வரின் நிலையானது எலுமிச்சை போன்றதாகும். அதன் சுவையும் நன்று! வாசனையும் நன்று! (நல்லவராக இருந்து) குர்ஆன் ஓதாமல் இருப்பவர், பேரீச்சம்பழத்தைப் போன்றவராவார். அதன் சுவை நன்று அதற்கு வாசனை கிடையாது.

தீயவனாகவும் இருந்து கொண்டு குர்ஆனை ஓதிவருகின்றவனின் நிலை துளசிச் செடியின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் வாசனை நன்று, சுவையோ கசப்பு! தீமையும் செய்து கொண்டு குர்ஆனையும் ஓதாமல் இருப்பவனின் நிலை குமட்டிக் காயின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் சுவையும் கசப்பு, அதற்கு வாசனையும் கிடையாது.

அறி : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)
நூல் : புகாரி-5020 

மலக்குகளுடன் சஞ்சரிப்பவர்

عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم
الْمَاهِرُ بِالْقُرْآنِ مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ وَالَّذِى يَقْرَأُ الْقُرْآنَ وَيَتَتَعْتَعُ فِيهِ وَهُوَ عَلَيْهِ شَاقٌّ لَهُ أَجْرَانِ

குர்ஆனை நன்கு மனனம் செய்து தங்கு தடையின்றி சரளமாக ஓதுபவர் இறைவனுக்குக் கட்டுப்பட்ட கண்ணியமிக்க வானவத் தூதர்களுடன் இருக்கின்றார். சிரமம் மேற்கொண்டு தட்டுத் தடுமாறி ஓதுபவருக்கு இரு கூலிகள் இருக்கின்றன என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : ஆயிஷா (ரலி)
நூல்கள் : முஸ்லிம்-1462 , திர்மிதீ-2904 

பொறாமைப்படுதல்

لاَ حَسَدَ إِلاَ عَلَى اثْنَتَيْنِ رَجُلٌ آتَاهُ اللَّهُ الْكِتَابَ وَقَامَ بِهِ آنَاءَ اللَّيْلِ وَرَجُلٌ أَعْطَاهُ اللَّهُ مَالاً فَهْوَ يَتَصَدَّقُ بِهِ آنَاءَ اللَّيْلِ وَالنَّهَار

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமை கொள்ளக் கூடாது.

1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேத ஞானத்தை வழங்கியுள்ளான். அதனை அவர் இரவு நேரங்களில் ஓதி வழிபடுகின்றார்.

2. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை அளித்துள்ளான். அவர் அதனை இரவு, பகல் எல்லா நேரங்களிலும் தானம் செய்கின்றார்.

அறி : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல் : புகாரி-5025 

எழுத்துக்குப் பத்து நன்மை!

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللَّهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ، وَالحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا، لَا أَقُولُ الم حَرْفٌ، وَلَكِنْ أَلِفٌ حَرْفٌ وَلَامٌ حَرْفٌ وَمِيمٌ حَرْفٌ

“அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஓர் எழுத்தை ஓதுபவருக்கு ஒரு நன்மை உண்டு! ஒரு நன்மை பத்து நன்மைகளைப் போன்றதாகும். அலிஃப், லாம், மீம் – என்பதை ஓர் எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக, அலிஃப் ஓரெழுத்து, லாம் ஓரெழுத்து, மீம் ஓரெழுத்து என்று தான் கூறுவேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல் : திர்மிதீ-2910

சூழ்கின்ற அருட்கொடையும் சுற்றி நிற்கும் வானவர் படையும்

وَمَا اجْتَمَعَ قَوْمٌ فِى بَيْتٍ مِنْ بُيُوتِ اللَّهِ يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ إِلاَّ نَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَحَفَّتْهُمُ الْمَلاَئِكَةُ وَذَكَرَهُمُ اللَّهُ فِيمَنْ عِنْدَهُ وَمَنْ بَطَّأَ بِهِ عَمَلُهُ لَمْ يُسْرِعْ بِهِ نَسَبُهُ

“அல்லாஹ்வுடைய வீடுகளில் ஒரு வீட்டில் மக்கள் கூடி அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதி தங்களுக்கு மத்தியில் அதை ஓதிக் காட்டி, பாடம் படிக்கும் போது அமைதி அவர்கள் மீது இறங்காமல் இருக்காது. அவர்களை அருள் அரவணைத்துக் கொள்கின்றது. மலக்குகள் அவர்களைச் சூழ்ந்து விடுகின்றனர். குர்ஆன் ஓதும் அவர்களை அல்லாஹ் தன்னிடம் உள்ள மலக்குகளிடம் நினைவு கூர்கின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம்-5231

இந்தச் செய்திகளின் அடிப்படையில் குர்ஆனை அதிகமதிகம் ஓதி நன்மையை அடைவோமாக!

 

திருக்குர்ஆனை ஓதுவோம்! எம். ஷம்சுல்லுஹா