Tamil Bayan Points

குர்ஆனுடன் தொடர்பு வைப்போம்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

Last Updated on September 19, 2023 by Trichy Farook

முன்னுரை

இறைவன் இந்த உலகத்தை படைத்து இந்த உலகத்திலே சிறந்த படைப்பாக மனித சமுதாயத்தை உருவாக்கினான். இவ்வுலக வாழ்க்கைக்கு பிறகு மறுமைநாளில் வெற்றி பெறுவதற்காக அந்த இறைவனுக்கு விருப்பமான வழிகாட்டுதல், வாழ்கை முறை என்ன என்பதை அவனுடைய திருமறை குர்ஆன் மூலமும் அவன் தூதர் மூலமும் விளக்கியுள்ளான்.

يَاأَيُّهَا النَّاسُ قَدْ جَاءَتْكُمْ مَوْعِظَةٌ مِنْ رَبِّكُمْ وَشِفَاءٌ لِمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ

மனிதர்களே! உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரையும், உள்ளங்களில் உள்ளதற்கு நோய் நிவாரணமும், நம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழியும், அருளும் வந்து விட்டன.

(அல்குர்ஆன்: 10:57)

உங்களுடைய உள்ளங்களில் இருக்கக் கூடிய ஷிர்க்கையும் உங்களுடைய உள்ளங்களில் இருக்கக் கூடிய தவறான எண்ணங்கள் அனைத்தையும் போக்கும் நிவாரணியாக இந்த குர்ஆன் இருக்கிறது.

யாரிடம் இஸ்லாத்திற்கு முரணான கொள்கைகள் உள்ளனவோ அவர் இந்த குர்ஆனை படித்தால், அதனுடன் தொடர்பு வைத்தால், அதில் உள்ள சட்டங்களை விளங்கினால் அவர்களுடைய உள்ளங்களில் இருக்கக்கூடிய தவறான எண்ணங்களும் தவறான கொள்கைகளும் அழிந்து விடும்.

முஸ்லிம்கள் இந்த குர்ஆனோடு எப்படி தொடர்பு வைத்திருக்கிறார்கள்? ஏதோ ஒரு மந்திர சொல்லைப் போன்று தான் இந்த குர்ஆனை பார்க்கிறார்கள். யாரேனும் மரணித்தார்கள் என்றால் மற்ற சமுதாயம் எவ்வாறு திதி, திவஷம் என்று ஒன்றாவது, மூன்றாவது, ஏழாவது நாள்களில் சில சடங்குகளை செய்கிறார்களோ அவ்வாறு இந்த திருக்குர்ஆனையும் பயன்படுத்தி வருகின்றனர். யாரவது இறந்தால்தான் திருக்குர்ஆனின் நினைப்பே இந்த சமுதாயத்திற்கு வருகிறது.

மரணித்தவருக்கு ஓதுவதற்குதான் இந்த குர்ஆன் அருளப்பட்டுள்ளது என்று எண்ணுகின்றனர். இன்னும் சிலர் வழிகாட்டும் திருக்குர்ஆன் வசனங்களை தண்ணீரில் கரைத்து குடிப்பது, அல்லது தாயத்துகளில் அடைத்துக் கொள்வதுதான் திருக்குர்ஆனோடு அவர்களின் தொடர்பாக உள்ளது.

அல்லாஹ் இது போன்று செய்ய கட்டளையிட்டுள்ளானா? அல்லது சில வசனங்களை தகட்டில் எழுதி வீட்டில் மாட்டி வைக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளானா என்றால் அவ்வாறு எங்கும் அல்லாஹ் கூறவில்லை. திருக்குர்ஆன் மனிதர்களுக்கு வழிகாட்டி என்றுதான் கூறியுள்ளான். உள்ளங்களில் இருக்கக் கூடிய கசடுகள், உங்களுடைய உள்ளங்களில் இருக்கக் கூடிய தவறான எண்ணங்கள் அனைத்தையும் போக்கும் மருந்து என்றுதான் கூறுகிறான்.

திருக்குர்ஆனை மனிதர்களின் வழிகாட்டி என்று பார்க்காததால்தான் இன்று பலர் தர்ஹாவிற்கு படைஎடுக்கிறார்கள். தங்கள் தேவைகளை முறையிட இறந்துவிட்ட ஒருவரிடம் செல்பவர்கள் பின்வரும் வசனத்தை சிந்தித்துப் பார்க்கட்டும்.

أَلَيْسَ اللَّهُ بِكَافٍ عَبْدَهُ

தனது அடியாருக்கு அல்லாஹ் போதுமானவன் இல்லையா?

(அல்குர்ஆன்: 39:36)

அல்லாஹ்வை விட்டு எங்கே போகிறாய்? அவனை விட்டு யாரிடம் கேட்கிறாய்? அல்லாஹ்விடம் எதுவும் இல்லையா? கொடுக்கமாட்டானா? கொடுக்கக் கூடாது என்ற எண்ணம் உள்ளவனா? அல்லது அவனிடம் செல்வம் இல்லையா? அல்லது கொடுப்பதற்கு சக்தி இல்லையா? ஏன் படைத்தவனை விட்டுவிட்டு படைப்பினங்களிடம் செல்கிறீர்கள்? என்று பல பொருள்களில் இந்த வசனத்தை அல்லாஹ் அமைத்துள்ளான்.

உனக்கு அல்லாஹ் போதுமானவன் இல்லையா? என்ற வசனத்தை ஒழுங்காக படித்திருந்தால் தர்ஹாவின் பக்கம்கூட யாரும் செல்ல மாட்டார்கள். திருக்குர்ஆனோடு சரியான தொடர்பை வைத்திருக்க முஸ்லிம்கள் முன்வந்தால் மூட நம்பிக்கைகள், இணைவைப்புகள் அடியோடு மறைந்துவிடும்.

திருக்குர்ஆனோடு தொடர்புக்கே முதலிடம்

நபிகளார் அவர்கள் திருக்குர்ஆனோடு தொடர்பு வைத்திருந்தவர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.

உஹுதுப் போரில் கொல்லப்பட்ட உயிர் தியாகிகளை எவ்வாறு அடக்கம் செய்வது? யாரை முதலாவதாக வைப்பது? அடுத்து யாரை வைப்பது என்பது தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைகள்: இவர்களில் குர்ஆனை அதிகம் மனனம் செய்தவர்கள் யார் என்று பார்த்து அவரை முதலாவது இடத்திலும் அதற்கு பிறகு அதைவிட குறைந்த வசனங்களை யார் அறிந்து வைத்தார்கள் என்பதைப் பார்த்து அவர்களுக்கு பிறகு அடுத்தடுத்ததாக அடக்கம் செய்யச் செய்தார்கள் என்று வழிகாட்டியுள்ளார்கள்.

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا
أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَانَ يَجْمَعُ بَيْنَ الرَّجُلَيْنِ مِنْ قَتْلَى أُحُدٍ فِي ثَوْبٍ وَاحِدٍ ثُمَّ يَقُولُ أَيُّهُمْ أَكْثَرُ أَخْذًا لِلْقُرْآنِ فَإِذَا أُشِيرَ لَهُ إِلَى أَحَدِهِمَا قَدَّمَهُ فِي اللَّحْدِ وَقَالَ أَنَا شَهِيدٌ عَلَى هَؤُلاَءِ وَأَمَرَ بِدَفْنِهِمْ بِدِمَائِهِمْ وَلَمْ يُصَلِّ عَلَيْهِمْ وَلَمْ يُغَسِّلْهُمْ.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் உஹுதுப் போரில் கொல்லப்பட்டவர்களை இரண்டிரண்டு பேராக ஒரே ஆடையில் கஃபனிட்டுவிட்டு, “இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?” எனக் கேட்டார்கள். இருவரில் ஒருவர் சுட்டிக் காட்டப்பட்டதும் அந்த ஒருவரது உடலைக் கப்றின் உட்குழியில் முதலில் வைத்துவிட்டு, “இவர்களுக்கு மறுமை நாளில் நானே சாட்சியாவேன்” எனக் கூறினார்கள். பின்பு இரத்தத்துடனேயே அடக்குமாறு கட்டளையிட்டார்கள். இவர்கள் நீராட்டப்படவில்லை; இவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தவுமில்லை.

நூல் : புகாரி-1347 

திருக்குர்ஆனோடு தொடர்புள்ளவரே இமாம்

தொழுகையில் யார் இமாமாக நிற்க வேண்டும் என்பதை முடிவு செய்வதில் திருக்குர்ஆனை யார் நன்றகாக ஓதத்தெரிந்தவர்? நன்கு மனனம் செய்தவர் யார் என்பதையே முதலாவதாக நபிகளார் கவனிக்கச் சொல்லியுள்ளார்கள்.

عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-
« إِذَا كَانُوا ثَلاَثَةً فَلْيَؤُمَّهُمْ أَحَدُهُمْ وَأَحَقُّهُمْ بِالإِمَامَةِ أَقْرَؤُهُمْ ».

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் மூன்று பேர் இருந்தால் அவர்களில் ஒருவர் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்; அவர்களில் நன்கு ஓதத் தெரிந்தவரே அவர்களுக்குத் தொழுவிக்க அதிகத் தகுதியுடையவர் ஆவார்.

அறி : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல் : முஸ்லிம்-1191 

ஆறு வயதில் இமாமத் செய்த அம்ர் பின் சலமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நாங்கள் மக்கள் கடந்து செல்லும் பாதையிலிருந்த ஒரு நீர் நிலையின் அருகே இருந்தோம். வாகனத்தில் பயணிப்பவர்கள் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களிடம், “மக்களுக்கென்ன? மக்களுக்கென்ன? இந்த மனிதருக்கு (முஹம்மதுக்கு) என்ன?” என்று கேட்டுக் கொண்டிருந்தோம். அதற்கு அவர்கள், “அந்த மனிதர், தன்னை அல்லாஹ் (இறைத் தூதராக) அனுப்பியிருப்பதாக…. அல்லது அல்லாஹ் அவரை இன்ன (குர்ஆன்) போதனைகளைக் கொடுத்து அனுப்பியிருப்பதாகக்…. கூறுகிறார்” என்று (குர்ஆனின் சில வசனங்களை ஓதிக் காட்டிக்) கூறுவார்கள். உடனே நான் அந்த (இறை)வாக்கை மனப்பாடம் செய்து கொள்வேன். அது என் நெஞ்சில் பதிக்கப்பட்டது போல ஆகிவிட்டது.

அரபுகள், தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மக்கா வெற்றியை (தக்க தருணமாகக் கருதி) எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே அவர்கள், “அவரை அவருடைய குலத்தா(ரான குறைஷிய)ருடன் விட்டு விடுங்கள். ஏனெனில், அவர்களை அவர் வென்றுவிட்டால் அவர் உண்மையான இறைத்தூதர் தாம் (என்று நிரூபணமாகிவிடும்)” என்று சொன்னார்கள். மக்கா வெற்றியாளர்கள் சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர்.

என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து இஸ்லாத்தை ஏற்றார். நபி (ஸல்) அவர்களிடமிருந்து என் தந்தை திரும்பி வந்த போது, “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உண்மையிலேயே நபி (ஸல்) அவர்களிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன். நபி (ஸல்) அவர்கள், “இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள். தொழுகை (வேளை) வந்து விட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் எவர் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளாரோ அவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்’ என்று சொன்னார்கள்” எனக் கூறினார்கள்.

ஆகவே, மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்த போது நான் பயணிகளிடம் கேட்டு அறிந்துகொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும் (எங்களிடையே) இருக்கவில்லை. ஆகவே, (தொழுவிப்பதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய(சிறு)வனாக இருந்தேன். நான் ஒரு சால்வையைப் போர்த்தி யிருந்தேன். நான் சஜ்தா செய்யும் போது அது என் முதுகை (விட்டு நழுவிப் பின் புறத்தைக்) காட்டிவந்தது.

ஆகவே, அந்தப் பகுதிப் பெண்மணியொருவர், “”உங்கள் ஓதுவாரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க மாட்டீர்களா?” என்று கேட்டார். ஆகவே, அவர்கள் (துணியொன்றை) வாங்கி வந்து எனக்குச் சட்டையொன்றை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போல வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை.

அறி : அம்ர் பின் சலமா (ரலி)
நூல் : புகாரி-4302 

அடிமையாக இருந்தாலும் திருக்குர்ஆனை அதிகம் ஓதி மனனம் செய்திருந்தால் அவர் பின்னால்தான் மற்றவர்களும் தொழவேண்டும். ஹுதைஃபா (ரலி) அவர்களின் அடிமை ஸாலிம் அவர்கள் அதிகம் திருக்குர்ஆனை மனனம் செய்திருந்ததால் அவர்கள் அடிமையாக இருந்தும் மற்றவர்களுக்கு தொழுவித்தார்கள்.

 عَنِ ابْنِ عُمَرَ قَالَ :
لَمَّا قَدِمَ الْمُهَاجِرُونَ الأَوَّلُونَ الْعُصْبَةَ – مَوْضِعٌ بِقُبَاءٍ – قَبْلَ مَقْدَمِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم كَانَ يَؤُمُّهُمْ سَالِمٌ مَوْلَى أَبِي حُذَيْفَةَ ، وَكَانَ أَكْثَرَهُمْ قُرْآنًا.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முதல்கட்டமாக (மதீனாவிற்கு நாடு துறந்து வந்த) முஹாஜிரீன்கள்-குபா பகுதியில் உள்ள- அல்உஸ்பா எனும் இடத்திற்கு வந்(து சேர்ந்)த போது அங்குள்ள மக்களுக்கு அபூஹுதைஃபா (ரலி) அவர்களின் அடிமை சாலிம் (ரலி) அவர்களே அவர்களுக்கு தலைமை தாங்கித் தொழுவித்துக்கொண்டிருந்தார்கள். இது நபி (ஸல்) அவர்கள் நாடு துறந்து (மதீனாவிற்கு) வருவதற்கு முன்பு நடைபெற்றது. அவர் (சாலிம்) குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்தவராக இருந்தார்.

நூல் : புகாரி-692 

திருக்குர்ஆனை படித்தால் திருந்திவிடுவார்கள்

திருக்குர்ஆனோடு நாம் தொடர்பு வைத்திருந்தால் ஏகத்துவ கொள்கைக்கு சென்றுவிடுவார்கள் என்பதை நபிகளார் காலத்தில் வாழ்ந்த இணைவப்பவர்கள் நன்கு தெரிந்திருந்தார்கள். அதனால்தான் திருக்குர்ஆன் ஓதப்படும் போது கேட்காதீர்கள், கூச்சல் போடுங்கள் என்று கூறினார்கள்.

وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ

இக்குர்ஆனைக் கேளாதீர்கள்! நீங்கள் மிகைப்பதற்காக அதில் (குழப்புவதற்காக) வீணான காரியம் செய்யுங்கள்!” என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறுகின்றனர்.

(அல்குர்ஆன்: 41:26)

அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் தன்னுடைய வீட்டின் முற்றத்தில் நின்று கொண்டு தொழுதார்கள் அந்த குர்ஆன் வசனத்தை சத்தமிட்டு ஓதுவார்கள். இதனால் தங்கள் குடும்பத்தினர் இதைக் கேட்டு ஏகத்துவ கொள்கைக்கு சென்றுவிடுவார்கள் என்று பயந்து அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு துன்பம் கொடுத்தனர். துன்பம் எல்லை மீறிய போது அவர்கள் எத்தியோப்பியா செல்ல முன்றார்கள். இது தொடர்பாக புகாரியில் இடம்பெறும் செய்தியை பாருங்கள் :

முஸ்லிம்கள் (எதிரிகளின் கொடுமைகளால்) சோதனைக்குள்ளாக்கப்பட்ட போது, அபூபக்ர் (ரலி) அவர்கள் தாயகம் துறந்து அபிசீனியாவை நோக்கி சென்றார்கள். பர்குல் ஃகிமாத்’ எனும் இடத்தை அவர்கள் அடைந்த போது அப்பகுதியின் தலைவர் இப்னு தஃகினா என்பவர் அவர்களைச் சந்தித்தார். அவர் அவர்களிடம், “எங்கே செல்கிறீர்?” என்று கேட்டார். அபூபக்ர் (ரலி) அவர்கள் என் சமுதாயத்தவர் என்னை வெளியேற்றி விட்டனர்; எனவே, பூமியில் பயணம் (செய்து வேறுபகுதிக்குச்) சென்று என் இறைவனை வணங்கப் போகிறேன்! என்று கூறினார்கள்.

அதற்கு இப்னு தஃகினா, “உம்மைப் போன்றவர் வெளியேறவும் கூடாது; வெளியேற்றப்படவும் கூடாது! ஏனெனில், நீர் ஏழைகளுக்காக உழைக்கிறீர்; உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர்; பிறருக்காகச் சிரமங்களைத் தாங்கிக்கொள்கிறீர்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்; துன்பமுற்றவர்களுக்கு உதவுகிறீர்! எனவே, நான் உமக்கு அடைக்கலம் தருகிறேன்! ஆகவே, திரும்பி உமது ஊருக்குச் சென்று இறைவனை வணங்குவீராக! எனக் கூறினார்.

இப்னு தஃகினா, தம்முடன் அபூபக்ர் (ரலி) அவர்களை அழைத்துக்கொண்டு குறைஷிக் காஃபிர்களின் பிரமுகர்களைச் சந்தித்தார். அவர்களிடம், அபூபக்ரைப் போன்றவர்கள் வெளியேறவும் கூடாது; வெளியேற்றப்படவும் கூடாது! ஏழைகளுக்காக உழைக்கின்ற, உறவினர்களுடன் இணங்கி வாழ்கின்ற; விருந்தினரை உபசரிக்கின்ற, பிறருக்காகச் சிரமங்களைத் தாங்கிக்கொள்கின்ற, துன்பப்படுவர்களுக்கு உதவுகின்ற ஒரு மனிதரை நீங்கள் வெளியேற்றலாமா?’என்று கேட்டார். ஆகவே, குறைஷியர் இப்னு தஃகினாவின் அடைக்கலத்தை ஏற்று அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தனர்.

மேலும் இப்னு தஃகினாவிடம், “தமது வீட்டில் தம் இறைவனைத் தொழுது வருமாறும், விரும்பியதை ஓதுமாறும், அதனால் எங்களுக்குத் தொந்தரவு இல்லாமல் பார்த்துக்கொள்ளுமாறும், அதை பகிரங்கமாகச் செய்யாதிருக்கும்படியும் அபூபக்ருக்கு நீர் கூறுவீராக! ஏனெனில், எங்களுடைய மனைவி மக்களை அவர் குழப்பி (சோதனைக்குள்ளாக்கி) விடுவார் என நாங்கள் அஞ்சுகிறோம்! என்றனர்.

இதை இப்னு தகினா, அபூபக்ர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தார். பிறகு, அபூபக்ர் (ரலி) அவர்கள் வீட்டிற்கு வெளியே தொழுது, ஓதி பகிரங்கப்படுத்தாமல் தமது வீட்டிற்குள்ளேயே தம் இறைவனை வணங்கலானார்கள். பிறகு, அவர்களுக்கு ஏதோ தோன்ற, தமது வீட்டிற்கு முன்புறத்திலுள்ள காலியிடத்தில் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டி வெளியே வந்து தொழுதார்கள்.

அந்தப் பள்ளிவாசலில் தொழவும், குர்ஆன் ஓதவும் தொடங்கினார்கள். இணைவைப்பாளர்களின் மனைவி மக்கள் திரண்டு வந்து ஆச்சரியத்துடன் அவரை கவனிக்கலாயினர். அபூபக்ர் (ரலி) அவர்கள் குர்ஆன் ஓதும்போது (மனம் உருகி வெளிப்படும்) தமது கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் அதிகம் அழுபவராக இருந்தார்கள்.

இணை வைப்போரான குறைஷிப் பிரமுகர்களுக்கு இது கலக்கத்தை ஏற்படுத்தியது. இப்னு தஃகினாவை உடனே அழைத்துவரச் செய்து, அபூபக்ர் அவர்கள், தமது வீட்டில் தான் வணங்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே நாங்கள் அவருக்குப் பாதுகாப்பளித்திருந்தோம். அவர், அதை மீறித் தமது வீட்டின் முன்னால் உள்ள காலியிடத்தில் பள்ளிவாசலைக் கட்டிவிட்டார்; பகிரங்கமாக தொழவும் ஓதவும் தொடங்கிவிட்டார். அவர் எங்கள் மனைவி மக்களைக் குழப்பி (சோதனைக்குள்ளாக்கி) விடுவார் என நாங்கள் அஞ்சுகிறோம்.

எனவே, அவர் தம் இறைவனைத் தமது வீட்டில் மட்டும் வணங்குவதாக இருந்தால் செய்யட்டும்; பகிரங்கமாகத்தான் செய்வேன் என்று அவர் கூறிவிட்டால் நீர் கொடுத்த அடைக்கலத்தை மறுத்துவிடும்படி அவரிடம் கேளும்! ஏனெனில், உம்மிடம் செய்த ஒப்பந்தத்தை முறிக்கவும் நாங்கள் விரும்பவில்லை; அதே சமயம் அபூபக்ர் அவர்கள் பகிரங்கமாகச் செயல்படுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவும் (தயாராக) இல்லை! என்று அவர்கள் கூறினார்கள்.

உடனே இப்னு தகினா, அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து எந்த அடிப்படையில் நான் உமக்கு அடைக்கலம் தந்தேன் என்பதை நீர் அறிவீர்! நீர் அதன்படி நடக்க வேண்டும்! இல்லையென்றால் எனது அடைக்கலத்தை என்னிடமே திருப்பித் தந்துவிட வேண்டும்! “இப்னு தஃகினா செய்த உடன்படிக்கையை அவரே மீறிவிட்டார் என்று பிற்காலத்தில் அரபியர் (என்னைப் பற்றிப்) பேசக்கூடாது என்று நான் விரும்புகிறேன்!’எனக் கூறினார். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் “உமது அடைக்கல ஒப்பந்தத்தை நான் உம்மிடமே திரும்பத் தந்துவிடுகிறேன்! என்று கூறினார்கள்.

அறி : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி-2298 

முடிவுரை

இறைமறுப்பாளர்களின் உள்ளங்களையே புரட்டி போடும் திருக்குர்ஆன் நம்மை சீர்திருத்தாதா? மனிதனின் வழிகாட்டி என்ற எண்ணத்துடன் நாம் படிக்கும் போது நிச்சயமாக திருக்குர்ஆன் நம் உள்ளங்களை சீர்படுத்தி நல்வழிப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

வலியுல்லாஹ், பேர்ணாம்பட்டு