Tamil Bayan Points

கிறிஸ்மஸ் விருந்து கூடுமா?

கேள்வி-பதில்: நவீன பிரச்சனைகள்

Last Updated on November 22, 2016 by Trichy Farook

கிறிஸ்மஸ் விருந்து கூடுமா?

பூஜிக்கப்படாத உணவாக இருந்தால் ஹராம் இல்லை. அந்த சபைக்கு சென்று உண்ணக்கூடாது,

ஆகுமான உணவுப் பொருட்களை மாற்று மதத்தினர் நமக்கு அளித்தால் அதை உண்பது தவறல்ல. எனினும் இஸ்லாம் தடை செய்த பொருட்களை அவர்கள் தந்தால் அவற்றை நாம் பயன்படுத்தக் கூடாது.

பன்றி இறைச்சி அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாத பிராணியின் இறைச்சி தானாக செத்தவை இரத்தம் மற்றும் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக பூஜை செய்யப்பட்ட பொருட்கள் ஆகியவை ஹராம் என்று குர்ஆன் கூறுகின்றது.

சிலைகளுக்குப் படைத்த பொருட்களை பண்டிகைக் காலங்களிலோ அல்லது மற்ற காலங்களிலோ தந்தாலும் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது.

وَلَا تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرْ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَإِنَّهُ لَفِسْقٌ وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَى أَوْلِيَائِهِمْ لِيُجَادِلُوكُمْ وَإِنْ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ لَمُشْرِكُونَ(121)6

அல்லாஹ்வின் பெயர் கூறப்படாததை உண்ணாதீர்கள்! அது குற்றம்.

அல்குர்ஆன் (6 : 121)

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்திருக்கிறான். யார் வரம்பு மீறாதவராகவும், வலியச் செல்லாதவராகவும் நிர்பந்திக்கப்படுகிறாரோ அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் 16:115)

அறுக்கப்பட்டவை என்று மொழிபெயர்க்கப்பட்ட இடத்தில் அரபு மூலத்தில் “உஹில்ல” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சப்தமிடப்பட்டவை என்பது இதன் பொருள். சிலைகளுக்கு முன்னால் மந்திரங்கள் சொல்லி பூஜிக்கப்பட்டவை மற்றும் மந்திரங்கள் சொல்லி அறுக்கப்பட்டவைகளையும் இந்தச் சொல் எடுத்துக் கொள்ளும்.

எனவே பூஜை செய்து தரும் பொருட்கள், அல்லாஹ் அல்லாத பெயர் கூறி அறுக்கப்பட்டவை, மது போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் இவற்றை அவர்கள் தரும் போது வாங்கக் கூடாது. மற்றவற்றைப் பெற்றுக் கொள்வதில் தவறேதும் இல்லை.

விருந்தில் இஸ்லாம் தடை செய்த மேற்கண்ட பொருட்கள் வழங்கப்பட்டிருந்தால் அது ஹராமாகும். இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட பொருளாக இருந்தால் அது ஹலாலாகும். அதை உண்பது தவறல்ல.

உணவைப் பொருத்தவரை அது நமக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதா என்பதை நாம் கவனிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

உணவு ஹலாலாக இருந்தால் அதை நாம் உண்ணலாம்.

அது போல் இன்னொரு விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாம் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் வழங்கப்ப்டும் உணவு ஹலாலாக இருப்பதுடன் விருந்து வழங்கப்படும் சபையும் மார்க்கத்துக்கு முரணானவை இடம் பெறாமல் இருக்க வேண்டும். மார்க்கத்துக்கு முரணான காரியங்கள் நடக்கும் சபைகளில் நாம் கலந்து கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.

அங்கு வழங்கப்படும் உணவு ஹராம் என்பதற்காக அல்ல. மாறாக ஒரு தீமை நடக்கக் கண்டால் அதைப் புறக்கணிக்க வேண்டும் என்பதற்காகவே அதைப் புறக்கணிக்க வேண்டும்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபிகள் நயகம் (ஸல்) அவர்கள், (தமது மகள்) ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டுக்கு வந்தார்கள். ஆனால், அவர்களிடம் செல்லவில்லை. (திரும்பிப் போய் விட்டார்கள்.) (இதற்கிடையில் அங்கே) அலீ (ரலி) அவர்கள் வந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் விஷயத்தைச் சொன்னார்கள். அலீ (ரலி) அவர்கள் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சொல்ல, “நான் ஃபாத்திமாவின் வீட்டு வாசலில் பல வண்ணச் சித்திரங்கள் வரையப்பட்ட திரைச் சீலை ஒன்றைக் கண்டேன். எனக்கும் இந்த (ஆடம்பரமான) உலகத்திற்கும் என்ன தொடர்பு? (அதனால் தான் திரும்பி வந்து விட்டேன்)” என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள், ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் சென்று, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதைச் சொன்னார்கள். அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், “அந்தத் திரைச் சீலையின் விஷயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தாம் விரும்புவதை எனக்குக் கட்டளையிடட்டும். (அதன்படியே நான் நடந்து கொள்கிறேன்)” என்று கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அதை இன்னாரின் வீட்டாரிடம் அனுப்பி விடு. அவர்களுக்குத் தேவையுள்ளது” என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 2613

ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டில் நபிகள் நாயகம் கண்ட வண்ணத்திரை மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதல்ல. தடை செய்யப்பட்டதாக இருந்தால் மற்றவருக்கு அதைக் கொடுக்குமாறு நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறி இருக்க மாட்டார்கள். ஆனாலும் அது ஆடம்பரமாக நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்குப்பட்டுள்ளது. அதன் காரணமாக பெற்ற மகளின் இல்லத்துக்குள் நுழையாமல் திரும்பி விட்டார்கள்.

ஃபாத்திமா ரலி வீட்டில் உள்ள உணவு ஹராம் என்பதற்காக நபிகள் நாயகம் ஸல் அவர்கள் புறக்கணிக்கவில்லை. மாறாக ஆடம்பரம் என்று தோன்றிய காரணத்துக்காகத் தான் புறக்கணித்துள்ளனர். அப்படியானால் மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட காரியங்கள் நடக்கும் சபைக்கு நாம் எப்ப்டிச் செல்லலாம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்னும் சொல்வதாக இருந்தால் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விஷயம் அளவுக்கு அதிகமான பகட்டாகத் தென்பட்டால் அதையும் புறக்கணிக்க வேண்டும் என்பதை இதில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் அல்லாஹ் நரகில் ஒன்று சேர்ப்பான்.

திருக்குர்ஆன் 4:140)

ஒரு சபையில் அல்லாஹ்வின் கட்டளை மீறப்படுகிறது. இதன் மூலம் அல்லாஹ்வின் வசனங்கள் கேலி செய்யப்படுகிறது என்றால் அந்தச் சபைகளில் நாம் அமரவே கூடாது. அவ்வாறு அமர்ந்தால் நாம் அவர்களைப் போல் இறைவனால் கருதப்படுவோம் என்ற எச்சரிக்கை காரணமாகவே சில நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்கச் சொல்கிறோம். அவர்கள் தரும் உணவு ஹராம் என்பதற்காக அல்ல.

உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அதைக் கையால் தடுக்கட்டும். அதற்கு இயலாவிட்டால் தனது நாவால் தடுக்கட்டும். அதற்கும் இயலாவிட்டால் தனது உள்ளத்தால் தடுக்கட்டும். (அதாவது அதை உள்ளத்தால் வெறுக்கட்டும்.) இது தான் ஈமானில் கடைசி நிலையாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

நூல் : முஸ்லிம் 70

மனதால் வெறுப்பது அந்தச் சபையைப் புறக்கணிப்பதன் மூலம் தான் உறுதியாகும். அதில் கலந்து கொண்டாலோ, அங்கு போய் சாப்பிட்டாலோ தீய காரியம் நடக்கும் போது செய்ய வேண்டிய குறந்தபட்ச எதிர்ப்பைக் கூட தெரிவிக்கவில்லை என்பதே பொருளாகும். சிறிதளவும் அவருக்கு ஈமான் இல்லை என்பது மேற்கண்ட நபிமொழியில் இருந்து தெரிகிறது.