Tamil Bayan Points

காலையிலும், மாலையிலும் பிரார்த்திப்போரை விரட்டாதீர்!

முக்கிய குறிப்புகள்: குர்ஆன் வசனம் இறங்கிய காரணம்

Last Updated on September 25, 2016 by Trichy Farook

தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும், மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப் படுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பி விடாதீர்! நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்து விட்டோமோ, அவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றுகிறான். அவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது. (அல்குர்ஆன் 18:28)

காலையிலும் மாலையிலும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் கூட்டத்தாருடன் இருக்குமாறும், மனோ இச்சையைப் பின்பற்றியவனுக்குக் கட்டுப்பட வேண்டாம் எனவும் இவ்வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடுகின்றது.

இறைவனைக் காலையிலும் மாலையிலும் பிரார்த்தனை செய்யும் கூட்டத்தார் எனக் குறிப்பிடப்படுவோர் இவ்வுலகின் புகழ், வசதி வாய்ப்புகள் இல்லாதவர்களாக இருந்தனர் எனவும் மனோ இச்சையைப் பின்பற்றியோர் செல்வமும் செல்வாக்கும் பெற்றவர்களாக இருந்தனர் எனவும் இந்த வசனத்தி-ருந்து அறிந்து கொள்ள முடிகின்றது. “இவ்வுலகின் கவர்ச்சியின் பால் உமது கண்களைத் திருப்ப வேண்டாம்’ என்ற சொற்றொடரி-ருந்து இதை அறிந்து கொள்ளலாம்.

இது போன்ற கருத்தை 6:52 வசனமும் கூறுகின்றது.

(முஹம்மதே!) தமது இறைவனின் திருப்தியை நாடி காலையிலும், மாலையிலும் அவனிடம் பிரார்த்திப்போரை நீர் விரட்டாதீர்! அவர்களைப் பற்றிய விசாரணையில் உமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. உம்மைப் பற்றிய விசாரணையில் அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. எனவே அவர்களை நீர் விரட்டினால் அநீதி இழைத்தவராவீர்! (அல்குர்ஆன் 6:52)

இவ்வசனத்தில் காலையிலும் மாலையிலும் இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களை விரட்டியடிக்க வேண்டாம் எனவும் அவ்வாறு விரட்டினால் அநீதி இழைத்தவராவீர் எனவும் கூறப்படுகின்றது.

இது எந்தச் சந்தர்ப்பத்தில் கூறப்பட்ட அறிவுரை என்பதைப் பின்வரும் நபிமொழியி-ருந்து அறிந்து கொள்ளலாம்.

நான், இப்னு மஸ்ஊத், ஹுதைல் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர், பிலால் மற்றும் இருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அவ்விருவரின் பெயரை நான் மறந்து விட்டேன். அப்போது இணை வைப்பவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (ஸல்) அவர்களிடம் வந்தனர். “இவர்களை விட்டு விடுவீராக! இல்லாவிட்டால் எங்கள் விஷயத்தில் இவர்களுக்குத் துணிச்சல் வந்து விடும்” என்று கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் எது ஏற்பட வேண்டும் என்று அல்லாஹ் நாடினானோ அது ஏற்பட்டு விட்டது. அப்போது தான் இந்த (6:52) வசனம் அருளப்பட்டது என்று ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

நூல் : முஸ்லிம் 2413