Tamil Bayan Points

காதியானிகள் வரலாறு-5

பயான் குறிப்புகள்: பிற கொள்கைகள்

Last Updated on April 30, 2021 by

யூசுஃப் நபிக்குப் பிறகு இறைத்தூதர்கள் இல்லையா?

காதியானிகளின் வாதம்

முன்னர் யூஸுஃப் உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார். அவர் உங்களிடம் கொண்டு வந்ததில் சந்தேகத்திலேயே இருந்தீர்கள். அவர் மரணித்ததும் “இவருக்குப் பின் எந்தத் தூதரையும் அல்லாஹ் அனுப்பவே மாட்டான்’’ எனக் கூறினீர்கள். வரம்பு மீறி சந்தேகம் கொள்பவனை அல்லாஹ் இப்படித்தான் வழிகெடுக்கிறான்.

(அல்குர்ஆன்:40:34.)

இவ்வசனத்தில் யூஸுஃப் உங்களிடம் கொண்டு வந்ததில் சந்தேகத்திலேயே இருந்தீர்கள். அவர் மரணித்ததும் “இவருக்குப் பின் எந்தத் தூதரையும் அல்லாஹ் அனுப்பவே மாட்டான்’’ எனக் கூறினீர்கள். வரம்பு மீறி சந்தேகம் கொள்பவனை அல்லாஹ் இப்படித்தான் வழிகெடுக்கிறான் என்று அல்லாஹ் கூறுகிறான். யூஸுஃப் நபிக்குப் பின் நபி வரமாட்டார் எனக் கூறி நபிமார்களை நிராகரித்த ஒரு கூட்டத்தைப் பற்றி அல்லாஹ் இங்கே எச்சரிக்கிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் நபிமார்கள் வரமாட்டார்கள் என்று நாம் கூறுகிறோம்.

யூஸுஃப் நபிக்குப் பின் நபி வரமாட்டார் என்று முந்தைய சமுதாயம் கூறியதற்கு ஒப்ப இந்தக் கூற்றும் உள்ளது. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பிறகும் நபி வரலாம். அது நான் தான் என்று பொய்யன் மிர்ஸா கதியானி வாதிட்டான்.

நமது பதில்:

யூஸுஃப் நபி கடைசி நபியாக இல்லாத நிலையில் அவர்கள் இவ்வாறு அந்தச் சமுதாயத்தினர் கூறியது தவறாகும்.

முஹம்மத் உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களில் முத்திரையாகவும் இருக்கிறார். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.

(அல்குர்ஆன்:33:40.)

முஹம்மது நபி தான் கடைசி நபி என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. அவற்றைக் கடந்த தொடரில்  விளக்கியுள்ளோம். ஆனால் இந்தச் சிறப்பு யூஸுஃப் நபிக்கு இல்லை. எனவே யூஸுஃப் நபிக்குப் பிறகு நபிமார்கள் வரமாட்டார்கள் என்று அம்மக்கள் கூறியதை இறைவன் கண்டிக்கிறான்.

முஹம்மது நபி இறுதி நபியாக இருப்பதால் அவர்களுக்குப் பின் நபிமார்கள் வரமாட்டார்கள் என்று தான் கூற வேண்டும். இந்த வித்தியாசத்தை இவர்கள் விளங்கவில்லை. ஒரு நியாயவிலைக் கடையில் தினமும் ஐம்பது பேருக்கு இலவச அரிசி வழங்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம்.

முதல் நபருக்குப் பொருள் விநியோகம் செய்த பின், ‘இனி யாருக்கும் வழங்கப்படாது’ என்று கூறி ஒருவன் மக்களை விரட்டினால் அது குற்றமாகும். இப்படி 49 நபர்கள் வரை யாரை விரட்டினாலும் அது குற்றமாகும். ஆனால் ஐம்பதாவது நபருக்கு விநியோகம் செய்யும்போது இவருக்குப் பின் யாருக்கும் இன்று ரேஷன் இல்லை என்றால் அது குற்றமாகுமா?

49 பேர் விஷயத்தில் இவ்வாறு கூறியது தவறு என்பதால் ஐம்பதாவது நபருக்குப் பின் கூறுவதும் தவறாகி விடுமா? யூஸுஃப் நபிக்குப் பிறகு இறைத்தூதர்களின் வருகை முற்றுப்புள்ளி வைக்கப்படாத காரணத்தால், அவருக்குப் பிறகு தூதரே வரமாட்டார் எனக் கூறுவது குற்றமாகும்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பொறுத்த வரை அவர்களுடன் தூதர்களின் வருகைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. நபிகள் நாயகத்துக்குப் பிறகு தூதர்கள் வருவார்கள் என்று சொன்னால் அது தான் குற்றமாகும். எனவே யூஸுஃப் நபிக்குப் பிறகு தூதர்கள் வர மாட்டார்கள் என்று கூறுவது தான் குற்றமே தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் தூதர்கள் வர மாட்டார்கள் என்று கூறுவது இவ்வசனத்திற்கு எதிரானது அல்ல.