Tamil Bayan Points

கதை வடிவில் மார்க்கம் அறிவோம்

பயான் குறிப்புகள்: குடும்பவியல்

Last Updated on March 10, 2020 by

கதை வடிவில் மார்க்கம் அறிவோம்

“கண்டதைப் படி பண்டிதனாவாய்” என்பது பன்னெடுங்காலமாகத் தமிழில் சொல்லப்பட்டு வரும் பழமொழிகளில் ஒன்றாகும்.

மார்க்கத்துக்கு முரணில்லாத நல்லவற்றில் இதை வாசிப்பேன், அதை வாசிக்க மாட்டேன் என்று எந்த ஒதுக்குதலும் இல்லாமல் வாசிக்கின்றவன் நிச்சயம் கற்றுத்தேர்ந்த கல்விமானாக உருவாவான் என்பது நிதர்சனமான உண்மையும் கூட.

ஆனால், இன்றைய தலைமுறையினரின் நவீன வாழ்க்கையில் புத்தக வாசிப்பு என்பது அரிதான ஒன்றாகிவிட்டது. தான் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயத்தை ஒருவன் வாசிக்கின்ற போது கூட கண்கள் கனமாக, வெறுப்புடன் புத்தகத்தைத் தூக்கியெறிந்து, தூக்கத்தைத் துணையாக்கிக் கொள்கிறான்.

காரணம், வாசிப்பில் ஆர்வமில்லாததும், வாசித்து பழக்கமில்லாததுமேயாகும்.

இத்தகைய நிலை பொது விஷயத்தைப் படித்தறிய முற்படும்போது மட்டுமல்ல. தான் உயிர் மூச்சாகக் கொண்டிருக்கும் மார்க்கம் பற்றிய விஷயங்களைப் படிக்கின்ற போதும்தான்.

மார்ககத்தைப் படிக்க வேண்டும், கற்க வேண்டும், மார்க்க ஞானத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது இஸ்லாத்தின் முதற்கண் அறிவுரையாக இருக்கிறது.

யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச்  செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான். மக்கள் இறையில்லங்களில் ஒன்றில் ஒன்றுகூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக்கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக்கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள்மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் போர்த்திக் கொள்கிறது. அவர்களை வானவர்கள் சூழ்ந்து கொள்கின்றனர். மேலும் இறைவன், அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவுகூருகிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 5231

இவ்வளவு ஏன்? நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைப் புறத்திலிருந்து வந்த முதற்கட்டளையும் இதுவே!

(முஹம்மதே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக!

(அல்குர்ஆன்:96:1)

இவ்வாறிருப்பினும், வாசிப்புப் பழக்கம் இல்லாததால் மார்க்கச் சட்டங்களை அறிவதில் மிகப்பெரும் தேக்கம் மக்களிடத்தில் நிலவுகிறது.

மார்க்க சட்டதிட்டங்களை சொல்லித் தருகின்ற ஏராளமான புத்தகங்கள் வெளியிடப்பட்டாலும், அதைப் படிக்க மனம் எத்தனிக்காததின் காரணத்தினால் அதுவெல்லாம் வெறும் மேஜைக்குப் பாரமாகவே இருக்கிறது.

பொதுவாக எழுத்தாக்கங்கள் இரண்டு தலையாய வடிவங்களில் தான் எழுதப்படுகிறது.

ஒன்று செய்தி வடிவம். மற்றொன்று கதை வடிவம்.

ஒரு தகவல் வெறும் செய்தி வடிவில் சொல்லப்படுகின்ற போது ஒரு கட்டத்திற்கு மேல் அதை வாசிக்க ஆர்வம் தூண்டுவதில்லை. மனம் சலிப்படைந்துவிடுகிறது.

அதே தகவலை கதைக் களத்துடன் இணைத்து ஒரு நிகழ்வாகச் சொல்லும் பொழுது அதைப் படிக்க அவா ஆர்ப்பரிக்கின்றது. அதனால்தான் நாவல் போன்ற கதைக் களத்துடன் கூடிய புத்தகங்களையே மக்கள் அதிகம் விரும்புகின்றனர்.

ஏன் இந்த வேறுபாடு?

நாம் சிறு பிராயத்திலிருந்து இவ்வாறு பயிற்றுவிக்கப்பட்டதே இதற்குக் காரணம்.

குழந்தைப் பருவத்தில் நம்மை அரவணைத்து வளர்த்தெடுக்கும் பாட்டிமார்களும், அம்மாக்களும் சொல்லும் கதைகளில் துவங்கி நாம் பள்ளியில் படிக்கும் போது மொழி ரீதியான பாடப் புத்தகங்களில் அதிகமாக இடம்பெறும் பாடங்கள் வரை எல்லாமே கதை வடிவம்தான். தத்துவ வடிவமோ, செய்தி வடிவமோ குறைவு.

இன்னும், வீட்டுக்கு வெளியிலேயே அதிகம் விளையாடித் திரியும் குழந்தைக்குத் தாய் பயமுறுத்துவதற்காகச் சொல்லும் வார்த்தை என்னவோ ‘வெளியில் போகாதே! பூச்சாண்டி பிடித்துக் கொள்வான்’ என்பதுதான்.

ஆனால், அதைச் சொல்லும் விதம் என்ன?

ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தானாம் எனத் துவங்கி, ராஜாவுடைய மகன் வெளியிலேயே விளையாடிட்டு இருந்தானாம், என்று தொடர்ந்து சென்று அந்தப் பையனை பூச்சாண்டி பிடித்துட்டு போய்ட்டானாம்! அதனால நீ இனிமேல் வெளியில விளையாடாதே என முடியும் கதை வடிவம் தானே!

அறிவுரையாக எத்தனை முறை சொன்னாலும் கேட்காத குழந்தை கதையாக நிகழ்வோடு சேர்த்துச் சொல்லும் போது அதை அவன் மனம் ஏற்றுக்கொள்கிறது.

இந்தப் பழக்கம் தான் நம் வாழ்நாளில் தொடர்கிறது. இதில் எந்தத்  தவறும் இல்லை. செய்தி சென்றடைய வேண்டுமே தவிர அது சொல்லப்படும் விதம் கணக்கில்லை.

அதனால் தான் அல்லாஹ்வும் அவனது தூதரும் பல்வேறு இடங்களில் இந்த விதத்தில் நமக்குப் பாடம் நடத்துகிறார்கள். உதாரணத்திற்கு சிலவற்றைப் பார்ப்போம்.

நாம் செலவு செய்கின்ற பொருளாதாரத்தின் நன்மை மறுமையில் நமக்குப் பயனளிக்கும் விதமாக அமைய வேண்டும். சில தீய காரியங்களைச் செய்து அந்த நன்மையை நாம் அழித்துக் கொள்ளக்கூடாது என்ற செய்தியை இறைவன் நமக்கு எடுத்துரைக்கிறான்.

ஆனால், மேற்படி தகவலை செய்தி வடிவமாக எடுத்துச் சொல்லவில்லை. கதை வடிவமாக கதாபாத்திரங்களோடு இணைத்து ஒப்பிட்டு இறைவன் பின்வரும் வசனத்தில் நமக்குக் கூறுகிறான்.

பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் ஒருவருக்கு இருக்கிறது; அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகளும் ஓடுகின்றன; அதில் அனைத்துக் கனிகளும் அவருக்கு உள்ளன; அவருக்குப் பலவீனமான சந்ததிகள் உள்ள நிலையில் அவருக்கு முதுமையும் ஏற்பட்டு விடுகிறது; அப்போது நெருப்புடன் கூடிய புயல் காற்று வீசி அ(த்தோட்டத்)தை எரித்து விடுகிறது. இந்த நிலையை உங்களில் எவரேனும் விரும்புவாரா? நீங்கள் சிந்திப்பதற்காக இவ்வாறே அல்லாஹ் சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறான்.

(அல்குர்ஆன்:2:266)

மேலும், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் மக்கள் விரைவாக விளங்கிக்கொள்வதற்காக தன் போதனையை ஒரு கதைக்களத்துடன் ஒப்பிட்டு கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்களிடத்தில் உமர் (ரலி) வருகிறார்கள். அப்போது நபியவர்களோ ஒரு பாயின் மீது உறங்கிக் கொண்டிருக்க அப்பாயின் சுவடுகள் அவர்களின் முதுகில் பதிந்துள்ளது. இதைப் பார்த்த உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இதை விட மென்மையான விரிப்பை நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாதா?’’ என கேட்டார்கள்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், “எனக்கும் இந்த உலகத்திற்கும் என்ன (தொடர்பு) இருக்கிறது? ஒரு பயணி உஷ்ணமிகுந்த நாளில் பயணம் செய்கிறான். அப்போது, அவன் பகலின் சிறிது நேரம் ஒரு மரத்தின் கீழ் நிழல் பெற்று ராஹத் பெறுகிறான். பிறகு, அம்மரத்தை விட்டுவிட்டுச் சென்றுவிடுகிறான். இதுபோன்று தான் எனக்கும் இவ்வுலகுக்கும் மத்தியில் உள்ள தொடர்பு இருக்கிறது’’ என்று கூறினார்கள்.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: அஹ்மது 2744

இந்தச் செய்தியில் நபி (ஸல்) அவர்களால் சொல்லப்படும் தகவல், தனக்கும் இவ்வுலகத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இவ்வுலகம் அற்பமானதே என்பது தான். ஆனால் அதை நபி (ஸல்) சொன்ன விதமோ கதா பாத்திரத்தோடு இணைந்த கதை வடிவம் தானே!

இன்னும், இதுபோன்று ஏராளமான செய்திகள் ஹதீஸ்களில் நிறைந்து காணப்படுகின்றன.

எனது நிலையும் எனக்கு முன்பிருந்த இறைத்தூதர்களின் நிலையும், ஒரு வீட்டைக் கட்டி அதை அழகாக அலங்கரித்து, ஒரு மூலையில் ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டு விட்ட ஒரு மனிதரின் நிலை போன்றதாகும். மக்கள் அதைச் சுற்றிப் பார்த்து விட்டு ஆச்சரியமடைந்து, “இந்தச் செங்கல் (இங்கே) வைக்கப்பட்டிருக்கக் கூடாதா?’’ என்று கேட்கலானார்கள். நான் தான் அந்தச் செங்கல். மேலும், நான் தான் இறைத் தூதர்களில் இறுதியானவன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 3535

மேற்படி ஹதீஸில் நபியவர்களால் சொல்லப்படும் தகவல், நபிமார்களில் இறுதியானவன் நானே என்பது தான். ஆனால் அதை, வீட்டை அழகாகக் கட்டி ஒரு சிறு இடத்தை மட்டும் விட்டுவிட்டுப் பிறகு பூர்த்திசெய்துவிட்ட ஒரு மனிதனின் கதைக் களத்தை ஒப்பீடாக நபி (ஸல்) அவர்கள் கூறுவதைப் பார்க்கிறோம்.

அடுத்து, இறையடியார்கள் பாவமன்னிப்புக் கோருகையில் இறைவனது சந்தோஷம் எத்தகையது என்பதை அல்லாஹ்வுடைய தூதர் விளக்கும் விதத்தைப் பாருங்கள்!

“ஒரு மனிதர் உணவோ நீரோ கிடைக்காத வறண்ட பாலைவனத்தில் (ஓய்வெடுத்துக்கொண்டு) இருந்தபோது, அவரது ஒட்டகம் தனது கடிவாளத்தை இழுத்துக்கொண்டு ஓடிவிட்டது. அந்த மனிதரின் உணவும் பானமும் அதன் மீதே இருந்தன. அந்த மனிதர் அதைத் தேடிப் புறப்பட்டார். அதனால் அவர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்.

(ஓடிப்போன) அந்த ஒட்டகம் ஒரு மரத்தைக் கடந்தபோது அதன் கடிவாளம் அந்த மரத்தின் வேரில் மாட்டிக்கொண்டது. அதில் சிக்கிக்கொண்டு இருந்தபோது அந்த மனிதர் அதைக் கண்டார். அப்போது அந்த மனிதர் அடையும் மகிழ்ச்சியைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?’’ என்று நபி(ஸல்) அவர்கள்கேட்டார்கள்.

அதற்கு நாங்கள், “மிகவும் அதிகமாக (மகிழ்ச்சி அடைந்திருப்பார்), அல்லாஹ்வின் தூதரே!’’ என்று சொன்னோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அறிந்துகொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! தனது ஒட்டகத்தைக் கண்ட அந்த மனிதர் அடையும் மகிழ்ச்சியை விடத் தன் அடியான் பாவமன்னிப்புக் கோரி மீட்சி பெறுவதால் அல்லாஹ் அதிகமாக மகிழ்ச்சி அடைகிறான்’’ என்று சொன்னார்கள்.

இதை பராஉ பின் ஆஸிப்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் 5299

மனிதன் பாவமன்னிப்புக் கோரும்போது இறைவன் அளவற்ற மகிழ்ச்சியுறுகிறான் என்பது மேலுள்ள ஹதீஸில் இடம்பெறும் தகவல். ஆனால், அதை மக்கள் அதிகம் உணர்ந்து விளங்க வேண்டும் என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் சொன்ன விதம் கதை வடிவம் தான்.

அடுத்து, தொழுகையினால் ஏற்படும் நன்மையைப் பற்றி விளக்க நபி (ஸல்) அவர்கள் கையாண்ட விதத்தைப் பாருங்கள்!

ஒருவரது வீட்டு வாசலில் ஆறு ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் அவரோ தினமும் ஐந்து தடவை குளிக்கின்றார். இவ்வாறு அவர் குளிக்கையில் அவரது மேனியில் அழுக்குகள் ஏதேனும் எஞசியிருக்குமா? என நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

அதற்கு மக்கள், அவரது மேனியில் எந்த அழுக்கும் எஞ்சியிராது என்று பதிலளித்தார்கள். அதற்கு, நபி(ஸல்) அவர்கள் “இதுதான் ஐவேளைத் தொழுகையின் நிலையாகும்; இ(வற்றை நிறைவேற்றுவ)தன் மூலம் அல்லாஹ் பாவங்களை நீக்குகிறான்’’ என்று கூறினார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 528

தொழுகை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக அமைகிறது என்பதுதான் இந்தச் செய்தியில் நபியவர்களால் எடுத்துரைக்கப்படும் தகவல். இத்தகவலை நபி (ஸல்) அவர்கள் பல்வேறு இடங்களில் நமக்குச் சொல்லியுள்ளார்கள்.

குறிப்பிட்ட மேற்படி ஹதீஸில் சொன்ன விதம் என்ன?

மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, ஆற்றில் ஐவேளை நீராடும் ஒருவரின் கதைக்களத்தை நபி (ஸல்) அவர்கள் எடுத்துச் சொல்லியுள்ளார்கள்.

இவ்வாறு பல்வேறு இடங்களில் அல்லாஹ்வும், நபி (ஸல்) அவர்களும் மக்கள் எளிமையாக விளங்கிக் கொள்வதற்காகப் பல்வேறு கதைக்களங்களை எடுத்துச் சொல்லியுள்ளார்கள்.

மார்க்கத்தை மக்களுக்கு இப்படியும் எடுத்துச் சொல்லலாம் என்பதற்கு இவைகளெல்லாம் சான்றுகளாக இருக்கின்றன.

மக்கள் மார்க்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு என்னென்ன வழிமுறைகள் இருக்கிறதோ, எவ்வழிமுறையைக் கையாண்டால் மக்களுக்கு மார்க்கம் எளிமைப்படுத்தப்படுமோ  அவைகளை ஆராய்ந்து மார்க்கத்தை எடுத்துரைக்கலாம்.