Tamil Bayan Points

ஒரே நாளில் 37 பேருக்கு தண்டனை வழங்கிய சவூதி அரேபியா.!

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

Last Updated on July 13, 2019 by

ஒரே நாளில் 37 பேருக்கு தண்டனை வழங்கிய சவூதி அரேபியா

கடமையைச் செய்யாத சட்டம் பெண்களை மிரட்டும் பாலியல் கும்பல்! இஸ்லாமிய சட்டத்தைக் கடைபிடித்து வரும் சவூதி அரேபியாவில் குற்றம் நிறுபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு தண்டனை நிச்சயம். தண்டனை என்று சொன்னால் நான்கு சுவற்றுக்குள் யாருக்குமே தெரியாமல் தண்டனையை நிறைவேற்றுவது அல்ல! மாறாக அனைவரின் முன்னிலையிலும் அனைவரும் பார்க்கும் வகையிலும் குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்படும். இவ்வாறு நிறைவேற்றப்படும் தண்டனைகளின் காரணமாகவே சவூதி அரேபியாவில் குற்றங்கள் மிகவும் குறைந்து காணப்படுகின்றது.

தவறு செய்தால் உயிர் பறிக்கப்படுவது நிச்சயம் என்று தெரிந்தால் அவன் தவறு செய்ய அச்சப்படுவான். அதையும் மீறி நடைபெறும் சில குற்றங்களுக்கு சவூதி அரசாங்கம் கடும் தண்டனைகளை வழங்குகின்றது. அந்த வகையில் கடந்த வாரத்தில் ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சவூதி அரேபியாவில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்ட 37 பேர்களுக்கு கடந்த வாரம் விதிக்கப்பட்ட தண்டனை உலகம் முழுவதும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவூதி அரேபியாவில் தீவிரவாதச் செயல்கள் செய்தல் அதற்கு ஆதரவாகச் செயல்படுதல் போன்றவைகள் கடும் குற்றமாகக் கருதப்படுகின்றன. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் மீதான குற்றச்சாட்டுகள் நிறுபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை நிச்சயம். அந்த வகையில்தான் கடந்த வாரம் தீவிரவாதக் குற்றத்தில் ஈடுபட்ட 37 பேருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது.

இதுகுறித்து சவூதி அரேபியாவில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மரண தண்டனை வழங்கப்பட்ட அனைவரும் தீவிரவாதத்தில் ஊறிப்போனவர்கள் என்றும், சவூதியில் தீவிரவாதிகளுக்கு இடமில்லை என்றும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மரண தண்டனை வழங்கப்பட்ட 37 பேரும் சவூதி அரேபியாவில் வகுப்புவாதக் கொள்கைகளைப் பரப்பி வந்ததாகவும், வன்முறைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தக் குற்றவாளிகளில் பலர் நாட்டின் பாதுகாப்பு அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் என்றும் இந்தத் தாக்குதல்களில் பல்வேறு பாதுகாப்புப் படை வீரர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட தீவிரவாதிகள் அனைவரும் குவாசிம் மற்றும் ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வருகின்றது. இந்தத் தீவிரவாதிகள் நாட்டிற்கு எதிரான அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டது.

அதுமட்டுமின்றி நாட்டிற்கு எதிரான பல குற்ற்றச் செயல்களிலும் இந்த பயங்கரவாதிகள் ஈடுபட்டு வந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீதான் குற்றங்களை விசாரிக்க சிறப்பு குற்றவியல் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. இந்த நீதிமன்றங்கள் தீவிரவாதக் குற்றவாளிகளின் வழக்குகளை விசாரித்தது. விசாரணையில் இந்தத் தீவிரவாதிகளின் மீதான குற்றங்கள் நிறுபிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் இந்த பயங்கரவாதிகள் அனைவருக்கும் நீதிமன்றங்கள் மரண தண்டனை விதித்தன.

அந்த வகையில் கடந்த வாரத்தில் பொதுமக்களின் முன்னிலையில் 37 பயங்கரவாதிகளுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சவூதி அரசின் மரணதண்டனை வழக்கப்படி குற்றவாளிகளின் தலையை வெட்டி தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. தீவிரவாதத்திற்கு சரியான தண்டனையைக் கொடுத்து தீவிரவாதத்தை அடியோடு கிள்ளி எறிந்துள்ளது சவூதி அரசு. சவூதி அரசின் இது போன்ற தண்டனைச் சட்டங்களை அனைத்து நாடுகளும் பின்பற்றினாலே போதும் தீவிரவாதம் முற்றிலும் ஒழிந்து விடும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 

Source:unarvu(10/5/2019)