Tamil Bayan Points

ஒட்டகம் ஓர் அற்புதம்

பயான் குறிப்புகள்: குர்ஆன் கூறும் அறிவியல்

Last Updated on August 24, 2021 by

ஒட்டகம் ஓர் அற்புதம்

ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா?

(அல்குர்ஆன்:88:17.)

இது அல்லாஹ் எழுப்புகின்ற கேள்வியாகும். மனித சிந்தனையைத் தூண்டுகின்ற, மனிதனை அறிவியல் ஆய்வுக்குக் கொண்டு செல்கின்ற அற்புதமான கேள்வி இது!

தன்னுடைய பாலைவனப் படைப்பான ஒட்டகத்தின் அற்புதத்தைப் பற்றி மனிதனை சிந்தித்துப் பார்க்கச் சொல்கிறான். ஒட்டகத்தின் அற்புத ரகசியங்களின் முடிச்சுகளை அவிழ்க்கின்ற ஒரு கட்டுரை அண்மையில் இந்து தமிழ் நாளிதழில் வெளியானது. அந்தக் கட்டுரை இதோ:

50 டிகிரியிலும் வியர்க்காது

ஆடுகளையும், மாடுகளையும் பார்த்துப் பழகிய நமக்கு ஒட்டகம் என்பது விந்தையான விலங்காக இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால், ராஜஸ்தான் மாநிலத்தில் ஒட்டகங்கள் மந்தை மந்தையாகச் சுற்றித் திரிகின்றன.

இந்தியாவில் காணப்படும் ஒட்டகங்கள் ஒற்றைத் திமில் ஒட்டகங்கள். அரேபியன் வகையைச் சேர்ந்தவை. சராசரியாக 300 கிலோ எடை முதல் ஆயிரம் கிலோ எடைவரை வளரும். உயரம் 7 முதல் 8 அடி உயரம் வரை. சாதுவாகக் காணப்படும் ஒட்டகங்கள், மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் திறன் படைத்தவை என்பது ஆச்சரியம்.

ஒட்டகம் குறுகிய கால இடைவெளியில் 30 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப மாற்றத்தைத் தாங்கும் உடல் அமைப்பைப் பெற்றது. 50 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில்கூட இதன் உடலில் இருந்து வியர்வை வெளியேறாது. அதனால்தான் பாலைவனத்தில் தாக்குப்பிடிக்க முடிகிறது.

பாலைவன மணல் பகுதியில் சுற்றித் திரியும் விலங்கினம் என்பதால், இயற்கையாகவே ஒட்டகங்களுக்கு வித்தியாசமான சுவாச உறுப்புகள் அமைந்துள்ளன. மூக்கு, வாய்ப் பகுதிகள் மிகவும் தடிமனாக இருப்பதால், இதன் மூக்குக்குள் எளிதாக மணல் புகாது. முன்னங்கால்களையும் பின்னங்கால்களையும் வித்தியாசமாக மடக்கிவைத்து இது படுத்திருப்பது வித்தியாசமான காட்சி.

ஒட்டகத்தின் தண்ணீர் அறை

பாலைவனங்கள் என்றால் தண்ணீரே இருக்காது. அங்கு வாழும் ஒட்டகங்களுக்குத் தண்ணீர் தாகம் எடுத்தால் என்ன செய்யும்? தண்ணீர்த் தேவையை எப்படிப் பூர்த்தி செய்துகொள்ளும்? உலகில் வாழும் பல உயிரினங்களுக்கும், வாழ்வதற்கு ஏற்ற உடலமைப்பை இயற்கையே கொடுத்திருக்கிறது. அதில் ஒட்டகமும் ஒன்று. ஒட்டகத்தின் முதுகுப் பகுதியில் திமில் போன்ற மேட்டுப் பகுதியைப் பார்த்திருக்கிறீர்களா? இந்த இடத்தில் கொழுப்பு உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்படுகின்றன.

ஒட்டகத்தின் இரைப்பையில் 3 அறைகள் உள்ளன. முதல் இரு அறைகளின் சுவர்களில் தனித்தன்மை வாய்ந்த நீர்ச் செல்கள் உள்ளன. இதில்தான் ஒட்டகம் நீரைச் சேமித்து வைக்கிறது. இதோடு, ஒட்டகத்தின் தசைகளிலும் இணைப்புத் திசுக்களிலும் நீர் சேமித்து வைக்கும் அமைப்பு உள்ளது. திமிலில் சேமிக்கப்படும் கொழுப்பு உணவுப் பொருட்களின் மூலம் வளர்சிதை மாற்றம் ஏற்படும். இந்த வளர்சிதை மாற்றம் மூலம் ஒட்டகத்துக்குத் தானாகவே நீர் கிடைத்துவிடும்.

இதை வைத்தே சில வாரங்கள் வரை நீர் அருந்தாமல் ஒட்டகத்தால் தாக்குப்பிடிக்க முடியும். இப்படி மீண்டும் மீண்டும் நீரைச் சேமித்து வைத்துக் கொள்ளவும் ஒட்டகத்தால் முடியும். உடலுக்குள்ளே நீரைத் தேக்கி வைத்துக் கொள்வதால் தான் ஒட்டகத்தைப் “பாலைவனக் கப்பல்’ என்றழைக்கிறார்கள்.

நன்கு வளர்ந்த ஒட்டகம் ஏழு அடி உயரமும், 400 முதல் 600 கிலோ எடையும் இருக்கும். ஒரு நன்கு வளர்ந்த ஒட்டகத்தின் திமில் 75 செ.மீ. உயரம் இருக்கும். 40 முதல் 50 ஆண்டுகள் இவை உயிர் வாழும். அதிகப்பட்சமாக 65 கி.மீ. வேகத்தில் ஓடும் இவற்றால் சராசரியாக 40 கி.மீ. வேகத்தில் தொடர்ந்து ஓட இயலும். பெரும்பாலான நாடுகளில் ஒட்டகங்கள் பொதி சுமக்கும் விலங்குகளாகவும், வண்டி இழுக்கவும் பயன்படுத்துகின்றனர். பாலைவனப் பகுதிகளில் இராணுவத்திலும் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

இவை இந்து தமிழ் நாளிதழில் வெளியான தகவல்களாகும். இந்தக் கட்டுரை ஒட்டகத்தின் அற்புதத்தை ஒரு குறுகிய கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்கின்றது. நாம் இதை இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போம்.

30 டிகிரி முதல் 40 டிகிரி வரை வெப்பத்தைத் தாங்கும் ஒட்டகத்தின் உடல்வாகையும் வலிமையையும் இந்தக் கட்டுரை விவரிக்கின்றது. மனித உடலில் இயல்பான வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும். கோடையில் வளிமண்டல வெப்பநிலை 40 முதல் 45 டிகிரி செல்சியஸ் ஆகும்.

இந்த வெப்பத்தை மனித உடல் தாங்காது என்பதற்காக, அதைக் குளிர்விப்பதற்காக வியர்வை சுரப்பிகள் மூலம் வியர்வை மழையை இறைவன் கொட்டச் செய்கிறான். இதனால் மனித உடலில் தண்ணீர் இருப்பு குறைகின்றது. அதைச் சரிகட்ட தாகம் எடுக்கின்றது. குடம் குடமாக நீரை உடலில் கொட்டி இழந்த நீர்ச்சத்தை மனிதன் ஈடுகட்டி விடுகின்றான். கோடையில் மனிதனின் நிலை இது!

ஆனால் ஒட்டகத்தின் நிலை இப்படி இருந்தால் என்னாவது? பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு மனிதனை அது சுமந்து செல்கின்றது. அதனுடைய உடலில் Flexible Thermostat எனும் எளிதில் வளையத்தக்க வெப்ப நீர்நிலைக் கருவி போன்ற அமைப்பு உள்ளது. அதனால் அதன் உடல் 42 டிகிரி வெப்பநிலையை அடைகின்ற வரை அதற்கு வியர்ப்பதில்லை. 50 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு 8 நாட்கள் உணவு, நீர் இன்றி ஒட்டகம் உயிர் வாழும்.

ஒட்டகம் ஒரு தடவை தண்ணீர் குடித்தால் தனது உடலின் மூன்றில் ஒரு பகுதி அளவுக்கு சுமார் 137 லிட்டர் தண்ணீரைக் குடித்துக் கொள்கிறது. ஒட்டகம் குடிக்கின்ற தண்ணீர் அதன் உடலில் எங்கே சேமித்து வைக்கப்படுகின்றது? இந்தத் தண்ணீர் ஒட்டகத்தின் திமில்களில் தான் சேமித்து வைக்கப்படுவதாகப் பரவலாக நம்புகின்றார்கள். ஆனால் உண்மை அதுவல்ல!

திமில்களில் இருப்பது சுமார் 40 கிலோ அளவிலான கொழுப்பாகும். இந்தக் கொழுப்பு, ஒட்டகத்தின் உடலில் உள்ள தண்ணீர் ஆவியாகிவிடாமல் தடுக்கின்றது. வெப்பத்தின் தாக்கம் உள்ளே பாயாமல் காக்கும் அரணாகத் திகழ்கின்றது. இந்தக் கொழுப்பு Metabolism – வளர்சிதை மாற்றம் அடைகின்ற போது, அதாவது உடலுக்குத் தேவையான சத்தாக மாறுகின்ற போது, அப்பொழுதும் அங்கு ஓர் அற்புதம் நிகழ்கின்றது.

அதன் ஒவ்வொரு கிராம் கொழுப்புக்கு ஈடாக ஒரு கிராம் தண்ணீரை ஒட்டகத்தின் உடல் பெறுகின்றது. ஒட்டகம் சுவாசிக்கின்ற ஆக்ஸிஜன் இந்த எதிர் வினையாக்கத்தை நிகழ்த்துகின்றது. குடிக்கும் நீரில் குறிப்பிட்ட அளவு நீரை முதலில் இரத்தத்தின் சிகப்பு அணுக்களுக்கு அனுப்புகிறது.

அதற்காக இரத்தத்தின் சிகப்பு அணுக்கள் அதன் உண்மையான அளவை விட 200 மடங்கு பிரிந்து இடமளிக்கிறது. குட்டி போட்டுப் பாலூட்டும் மற்ற பிராணிகள் அனைத்திற்கும் இரத்தத்தின் சிகப்பு அணுக்கள் வட்ட வடிவமாக இருக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் முட்டை வடிவத்தில் இருக்கும். ஒட்டகத்தின் உடலில் 40% நீர் குறைந்தாலும் கூட எந்த பாதிப்பும் இல்லாமல் வாழும் சிறப்பம்சம் கொண்டது.

நீர்ச்சத்து வீணாவதை விட்டும் தடுக்கக்கூடிய வகையில் தான் ஒட்டகத்தின் குடலும், சிறுநீரகமும் மிக வலுவாக அமைக்கப்பட்டுள்ளன. ஒட்டகத்தின் சிறுநீர் மிகவும் அடர்த்தியானதாகும். இதன் அடர்த்தி கடல்நீரை விட அதிகமானது. அதன் சிறுநீர் மருந்துத் திரவம் அல்லது பழச்சாறு போன்று அமைந்திருக்கின்றது. ஒட்டகத்தின் சிறுநீரில் மருத்துவ குணம் இருக்கின்றது என்று இன்றைய அறிவியல் உலகம் கூறுகின்றது.

“உக்ல்‘ அல்லது “உரைனா‘ குலத்தாரில் சிலர் (மதீனாவிற்கு) வந்தனர். அவர்களுக்கு மதீனாவின் தட்ப வெப்பநிலை ஒத்துக் கொள்ளவில்லை. எனவே (அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க) பால் ஒட்டகங்களைச் சென்றடைந்து, அவற்றின் சிறு நீரையும் பாலையும் பருகிக்கொள்ளுமாறு அவர்களை நபியவர்கள் பணித்தார்கள். அவ்வாறே அவர்களும் (ஒட்டகங்களை நோக்கி) நடந்தனர். (அவற்றின் சிறுநீரையும் பாலையும் பருகி) அவர்கள் உடல் நலம் தேறினார்கள்.

நூல்: புகாரி-233

நபி (ஸல்) அவர்கள் உரைனா கூட்டத்தினரை ஒட்டகத்தின் சிறுநீர் குடிக்கச் சொன்னதன் அறிவியல் உண்மையும் நமக்குப் புலனாகின்றது. ஒட்டகம் ஓர் அனைத்துண்ணி ஆகும். சைவம், அசைவம் என அனைத்தையும் சாப்பிடுகின்ற கால்நடைப் பிராணி ஆகும்.

பெரும்பான்மையான பாலைவன உணவு உலர்ந்த, முள்ளடர்ந்த தாவர இனங்கள். எத்தகைய கூரிய முட்செடிகளையும் இழுத்து வளைத்து சாப்பிடக்கூடிய அளவுக்கு அதனுடைய உதடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஜீரண உறுப்புக்களும் சவால்களைச் சந்திக்கின்ற வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. மாமிசம், எலும்பு, உப்பு, இனிப்பு என அனைத்து வகை உணவுப் பொருட்களிலும் ஒட்டகம் பாரபட்சம் காட்டுவது கிடையாது. தண்ணீரில் நல்ல தண்ணீர், உப்புத் தண்ணீர் என பேதம் கொள்வதில்லை.

பாலைவனங்களில் வீசுகின்ற பாலைவனப் புயல் ஒரு வித்தியாசமான புயலாகும். தூசியையும் மணல் துகள்களையும் மணற்பரப்பின் அடிப்பகுதியிலிருந்து அப்படியே வாரியிறைக்கும். கண் இமைகளை மூடவில்லை என்றால் கண்ணின் கருவிழிகளில் ஊடுறுவி பதம் பார்த்துவிடும். மணிக்கு பல கிலோ மீட்டர் வேகத்தில் வீசுகின்ற பாலைவனப் புயலின்போது ஒட்டகம் தன் இமைகளை இறுக மூடிக் கொள்கிறது.

அப்படியானால் பயணம் எப்படி என்று பயப்படத் தேவையில்லை. இமைகள் மூடினாலும் பார்வையை மறைப்பதில்லை. இமைகளின் தோல்கள் கண்ணாடிகள் போன்று ஒளி ஊடுறுவும் தன்மை கொண்டதாகும். அதனால் அவை கண்களை மூடிக் கொண்டு வெளியே பார்க்கும் சக்தி கொண்டவை. ஒட்டகத்தின் இந்தப் பார்வையிலும் அல்லாஹ்வின் அற்புதங்கள் ஒளிந்திருக்கின்றன.

ஒட்டகத்தின் உடலமைப்பு

ஒட்டகத்தின் உடல் மெல்லிய மயிர் தோலில் அமைந்துள்ளது. இந்தத் தோலமைப்பு ஒட்டகத்தைப் பகல் நேரத்தில் கரித்துப் பொசுக்குகின்ற சூரிய வெப்பக்கதிர்களின் பிரதிபலிப்பிலிருந்து காப்பதற்காகத் தான். அதே சமயம் இரவு நேரத்தில் வெப்பநிலை பூஜ்யத்திற்கும் கீழே போகும் போது அந்தக் குளிரின் கோர ஆட்டத்திலிருந்தும் இந்தத் தோலமைப்பு காக்கின்றது.

ஒட்டகம் பாலைவனத்தின் தரையில் படுக்கின்ற போது, தரைச் சூடு அதன் உடலில் தாவி, வாட்டி வதைத்துவிடக் கூடாது என்பதற்காக அதன் உடல் அமைப்பில் சில குறிப்பிட்ட தோல் பகுதிகள் பல அடுக்குகளால் ஆகியிருக்கின்றது. மனிதனின் பாதங்களின் அடிப்பகுதியில் தோலமைப்பு உடலின் இதர தோலை விட முற்றிலும் வேறுபாடானது. சற்று தடிமனாக அமைந்திருக்கின்றது. இந்தத் தடிமனான பாதப் பகுதி நடந்து, நடந்து காய்த்துப் போவதால் ஏற்பட்டதல்ல. பிறக்கும் போதே அப்படியே அமைந்துள்ளது.

இதுபோன்றே ஒட்டகமும் பிறக்கும் போதே அதன் தோல் பகுதி வெப்பம், குளிர் போன்றவற்றைத் தாக்குப்பிடிக்கும் அளவுக்குத் தடிமனாக அமைந்துள்ளது. மனிதன் பயணிக்கின்ற இந்த பாலைவனக் கப்பலில் தான் அல்லாஹ்வின் எத்தனை தொழில்நுட்பங்கள் அமைந்துள்ளன.

அல்லாஹு அக்பர்! இது மிகப் பெரிய இறை ஏற்பாடாகும்.

ஒட்டகத்தின் உயிரணுக்கள்

பாலூட்டிகளின் இரத்த அணுக்கள் வட்ட வடிவமானவை! ஆனால் ஒட்டகத்தின் உயிரணுக்கள் முட்டை வடிவமானவை! நீர்ச்சத்து குறையும் போது அதன் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு! ஒட்டகம் அதிகமான தண்ணீர் பருகும் போது இந்த உயிரணுக்களில் தண்ணீர் ஊடுறுவுகின்ற போது அது பாதிப்புக்குள்ளாகிவிடக் கூடாது என்பதற்காக அல்லாஹ் இப்படி ஓர் அமைப்பை ஆக்கியுள்ளான்.

மூக்கு துவாரத்தை மூடும் கதவுகள்

பாலைவனப் புயலின் போது பொடிப்பொடி மணல் துகள் மூக்கில் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக, மூக்கை மூடக்கூடிய விஷேச மூடிகள் உள்ளன. அவற்றை வைத்து மூக்கு துவாரத்தை மூடிக் கொள்கின்றன.

நாசித்துவாரத்தைக் குளிரூட்டுவதற்காக இறைவனின் தனி ஏற்பாடும் நாசிப் பகுதியில் அமைந்துள்ளது. அந்த அலாதியான அற்புத ஏற்பாடு, ஒட்டகம் சுவாசிக்கின்ற மூச்சுக் காற்று மூக்கின் வழியே கடந்து சொல்லும் போது அதன் நீர்ச்சத்தைக் குறைத்துவிடக் கூடாது என்பதற்காகத் தான்.

ஒட்டகத்தின் பாதங்கள்

இந்த ஒட்டகத்தின் பாதங்கள் மனிதர்கள் அணிகின்ற ஷூக்கள் போன்று தரைச் சூட்டின் தாக்குதலிலிருந்து அதைப் பாதுகாக்கின்றது. அதிக எடை கொண்ட பாரங்களை ஒட்டகம் சுமந்து செல்கின்ற போது பாலை மணலில் புதைந்து உள்வாங்கிவிடக் கூடாது என்பதற்காக ஒரு பிரத்தியேக தொழில்நுட்பத்தில் அதன் பாதங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இப்படி ஒட்டகத்தின் ஒவ்வொரு உள், வெளி உறுப்புகளும் தனித்தனி அற்புதத்தைத் தாங்கி நிற்கின்றன.

இதனால் தான் அல்லாஹ், “ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா?” (88:17) என்று கேட்கின்றான்.