Tamil Bayan Points

ஏழைகளுக்கு தனியாக விருந்து வைக்கலாமா?

கேள்வி-பதில்: திருமணம்

Last Updated on September 28, 2021 by

ஏழைகளுக்கு தனியாக விருந்து வைக்கலாமா?

கூடாது.

ஏழைகள் புறக்கணிக்கப்பட்டு பணக்காரர்கள் மட்டும் அழைக்கப்படும் விருந்துகள் தான் மிக கெட்ட விருந்து என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் ஏழைகளுக்குத் தனியாக விருந்து வைக்கலாமா?

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பயன்படுத்திய வாசகம் என்ன கருத்தைக் கூறுகிறது என்பதைப் புரிந்து கொண்டால் இந்தக் கேள்விக்கு விடை கிடைக்கும்.

ஏழைகள் விடப்பட்டு பணக்காரர்கள் மட்டும் அழைக்கப்படுவதை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தடுத்தது ஏழைகளுக்கு உணவு கிடைக்க வேண்டும் என்பதை மட்டும் குறிக்காது. ஏற்ற தாழ்வு கற்பிக்கக் கூடாது என்பதும் இதனுள் அடங்கியுள்ள கருத்தாகும்.

பணக்காரர்களுக்கு அவர்களுக்கு ஏற்ற வகையில் உணவு அளித்து ஏழைகளுக்கு தனியாக விருந்து வைத்தால் ஏழைகளை ஏழைகள் என்ற காரணத்துக்காக இழிவு படுத்துகிறோம்; அவர்களும் செல்வந்தர்களும் சமமானவர்கள் அல்ல என்று கருதுகிறோம் என்பது தான் பொருள்.

எந்த விருந்துக்கு பணக்காரர்களை அழைக்கிறீர்களோ அந்த விருந்துக்குத் தான் ஏழைகளை அழைக்க வேண்டும். அந்த விருந்துக்கு அவர்கள் தகுதி இல்லாதவர்கள் என்று நிலை நாட்டும் வகையில் தனி விருந்து அளித்தால் ஏழைகளைக் கேவலப்படுத்தி சோறு போட்டதாகத் தான் ஆகும். செருப்பால் அடித்து விட்டு சோறு போடுவது போல் தான் இது அமைந்துள்ளது.