Tamil Bayan Points

எழுச்சி கண்ட வீழ்ச்சி

பயான் குறிப்புகள்: குடும்பவியல்

Last Updated on June 3, 2021 by

எழுச்சி கண்ட வீழ்ச்சி- இலட்சியத்தில் அலட்சியம்

குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் வாழ்ந்து காட்டுவோம் என்று உறுதிமொழி எடுத்ததற்குப் பிறகு அதை நடைமுறைப்படுத்தாமல், மார்க்கம் முழுமையடைந்ததற்குப் பிறகு இறை வசனங்களுககும், நபிகளாரின் பொன்மொழிகளுக்கும் உயிரூட்டாமல், ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதும் ஏன்?

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர் கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர் களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.

(அல்குர்ஆன்:2:221.)

நம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி.

(அல்குர்ஆன்:2:208.)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகின்றாள்:

  1. அவளது செல்வத்திற்காக.
  2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.
  3. அவளது அழகிற்காக.
  4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக.

ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிருகரங்களும் மண்ணாகட்டும்!

நூல்: புகாரி-5090

இறைவனுக்கு இணை கற்பிக்கின்ற வீட்டில் பிறந்து வளர்ந்த ஒர் ஏழைப் பெண் அழகிலும், செல்வத்திலும், அந்தஸ்திலும் குறைந்தவளாக இருக்கின்றாள். ஆனால் அவள் மனதிலோ இந்த ஏகத்துவக் கொள்கை மிக உறுதியாக இருக்கின்றது. இந்த ஏகத்துவத்திற்காக தனது குடும்பத்தில் உள்ள அனைவரையும் பகைத்து, தான் ஒரு தவ்ஹீத்வாதியைத் தான் திருமணம் முடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும், நம்பிக்கையுடனும் தன் வாழ்நாளை கழித்துக் கொண்டிருக்கிறாள்.

நீங்கள் மார்க்கத்தைத் தான் உண்மையில் நேசித்தீர்கள் என்றால் மார்க்கத்திற்காக போராடிக் கொண்டிருக்கின்ற இந்தப் பெண்ணையே தேர்ந்தெடுத்திருப்பீர்கள். அழகும், அந்தஸ்தும் உள்ள பெண்கள் அவர்களது ஒழுக்கம் குறை சொல்லப்படக்கூடிய அளவில் இருந்தாலும் அவர்கள் 17 வயது முதல் 20 வயதிற்குள் பெரும்பாலும் திருமணம் முடிக்கப்பட்டு விடுகின்றனர். தேங்குவதெல்லாம் கொள்கைப் பிடிப்புள்ள பெண்கள் தான். இவர்கள் பல ஊர்களிலும் இருக்கின்றனர்.

இதன் மூலம் நாங்கள் மார்க்கத்திற்கு முன்னுரிமை கொடுக்கவில்லை. அழகிற்கும் அந்தஸ்திற்குமே முன்னுரிமை கொடுக்கின்றோம் என்று சொல்லாமல் செயல் வடிவில் நிரூபித்துக் கொண்டிருக்கின்றீர்க்ள். மார்க்கத்தை முதன்மைப்படுத்துவதாக இருந்தால் கொள்கைப் பிடிப்புள்ள பெண்கள் உங்கள் கண்களை விட்டும் மறைந்திருக்க மாட்டார்கள். இப்போதாவது சிந்திக்க வேன்டாமா? சுய பரிசோதனை செய்ய வேண்டாமா? நாம் யாரை, யாருக்காக, எதற்காகத் திருமணம் முடித்திருக்கின்றோம் என்பதை…

சத்தியக் கொள்கைக்கு வந்த பெண்களை அழகை, அந்தஸ்தை, செல்வத்தை, பட்டங்களைக் காரணம் காட்டி அசத்தியவாதிகளிடம் அனுப்பிக் கொண்டிருக்கின்றீர்களே! இவர்கள் விஷயத்தில் இவர்களுக்காக என்ன பிரச்சாரம் செய்யப் போகிறீர்கள்?

நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை (ஏக இறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப் பட்டோர் அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப் பட்டோரும் அல்லர். அவர்கள் (இப்பெண்களுக்காக) செலவிட்டதை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்!

அவர்களுக்குரிய (மணக்) கொடைகளை நீங்கள் வழங்கினால் அவர்களை நீங்கள் மணந்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை. ஏக இறைவனை மறுக்கும் பெண் களுடன் (முன்னர் செய்த) திருமண ஒப்பந்தங்களைத் தொடராதீர்கள். நீங்கள் செலவிட்டதை நீங்கள் கேளுங்கள்! அவர்கள் செலவிட்டதை அவர்கள் கேட்கட்டும். இதுவே அல்லாஹ்வின் கட்டளை. உங்களுக் கிடையே அவன் தீர்ப்பளிக்கிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானம் மிக்கவன். (அல்குர்ஆன்:60:10.)

மேலும் முஷ்ரிக்கான பெண்ணை மணமுடிப்பது ஒழுக்கம் கெட்டவளை (விபச்சாரியை) மணமுடிப்பதை விட கேவலமான செயலாகும். ஏனெனில் இணைவைப்பு என்பது அல்லாஹ்வுக்குச் செய்கின்ற மாபெரும் அநீதியாகும். இவ்வாறு தான் இறைவனும் கூறிக்காட்டுகின்றான்.

விபச்சாரம் செய்தவன், விபச்சாரம் செய்தவளையோ இணை கற்பிப் பவளையோ தவிர மற்றவர்களை மணந்து கொள்ளமாட்டான். விபச்சாரம் செய்தவளை, விபச்சாரம் செய்தவனோ இணை கற்பிப்பவனோ தவிர மற்றவர்கள் மணந்து கொள்ள மாட்டார்கள். இது நம்பிக்கை கொண்டோர் மீது தடை செய்யப்பட்டுள்ளது.

(அல்குர்ஆன்:24:3.)

இவ்வளவு பெரிய மாபெரும் கண்டனத்திற்குப் பிறகு அசத்தியத்தில் இருக்கின்ற பெண்களுக்கு உங்கள் மனதில் இடம் தரப்போகிறீர்களா? சத்தியத்தில் உள்ள நம் கொள்கைச் சொந்தங்களை அசத்தியவாதிகளிடம் அனுப்பி வைக்கலாமா? இப்பெண்கள் கொள்கைக்காகப்படும் வேதனைகளை, துன்பங்களை சிந்தித்துப் பாருங்கள்.

  1. தவ்ஹீதை ஏளனமாகப் பார்ப்பவர்களுக்கு முன்பு தலைகுனிவு.
  2. திருமணம் சம்பந்தமாக உறவினர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமை.
  3. தங்கள் வயதிற்கு ஒத்த அல்லது தங்களை விட வயதில் குறைந்த பெண்களுக்கெல்லாம் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள்.
  4. பொதுவான சபைகளுக்குச் செல்ல முடியவில்லை. தோழிகளின் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடிவதில்லை. கண்களில் கண்ணீரைத் தவிர வாழ்த்துச் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.
  5. வயது முதிர்ந்த பெற்றோருக்குப் பாரமாகவும், உடன் பிறந்த அண்ணன், தம்பி, தங்கைகளின் திருமணம் தன்னால் தடைபடுகின்றதே என்ற மனக்கவலையும் ஒவ்வொரு நாளும் அவளை வாட்டி வதைக்கின்றது.

இவை தான் அவர்களுக்கு நீங்கள் அளிக்கின்ற பரிசா? ஒருவரை அல்லாஹ்வுக்காக நேசிப்பது ஈமானின் சுவையில் ஒன்றாகும். உங்களுக்கு வரவிருக்கின்ற வாழ்க்கைத் துணையை அல்லாஹ்வுக்காக நேசித்து மணமுடிக்கின்றீர்களா? அல்லது காதல் எனும் வலையில் விழுந்ததற்காக மணமுடிக்கின்றீர்களா? கொள்கைக் குன்றுகளை விட்டு விட்டு அழகைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்.

முன்மாதிரி நபித்தோழர்கள்

எந்த ஒரு விஷயத்திற்கும் அல்லாஹ்வின் தூதர் பக்கம் பக்கமாக பயான் பேசவில்லை. நபிகளாரின் கட்டளைக்கு, “செவியுற்றோம், கட்டுப்பட்டோம்’ என்று மதிப்பளித்தார்கள் நபித்தோழர்கள்.

ஏக இறைவனை மறுக்கும் பெண்களுடன் திருமண ஒப்பந்தங்களைத் தொடராதீர்கள் என்ற வசனம் இறக்கப்பட்டவுடன் மக்காவில் உள்ள தனது மனைவியை விவாகரத்து செய்த உமர் (ரலி) அவர்கள் எங்கே? தவ்ஹீத் என்ற போர்வையில் இருந்து கொண்டு முஷ்ரிக்கான பெண்கள் என்று தெரிந்தும் அவர்களைக் கரம் பிடிக்கும் நமது ஆண்கள் எங்கே?

இப்பெண்களுக்காக இரக்கப்படுங்கள் என்று கேட்கவில்லை. குர்ஆன், ஹதீசுக்குக் கட்டுப்படுங்கள் என்றே கேட்கின்றோம். உயிரை விட இந்தத் தூதருக்கே முன்னுரிமை என்று வாயளவில் கூறிவிட்டு நழுவிச் செல்லாமல் அதற்கு உயிரூட்டி யவர்கள் நபித்தோழர்கள் என்பதற்குக் கீழ்கண்ட ஹதீஸ் சிறந்த எடுத்துக் காட்டாகும்.

ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாத, (அரை) நிர்வாணிகளான, வட்டமாய் கிழிந்த கம்பளி ஆடை அல்லது நீளங்கி அணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துகளில்) வாட்களைத் தொங்கவிட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்.

அவர்களில் பெரும்பாலானோர் முளர் குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இல்லை; அவர்களில் அனைவருமே முளர் குலத்தைச் சேர்ந்தவர்கள் தாம். அவர்களது ஏழ்மை நிலையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறமாறிவிட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருவிதத் தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் சென்று விட்டு வெளியே வந்து, பிலால் (ரலி) அவர்களிடம் உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டு, மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, “மக்களே! உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனை பயந்து கொள்ளுங்கள் எனும் (4:1ஆவது) இறைவசனத்தை முழுமையாக ஓதிக்காட்டினார்கள். மேலும், அல்ஹஷ்ர் அத்தியாயத் திலுள்ள, “நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொரு ஆன்மாவும் நாளைக் கென்று தாம் செய்த வினையை கவனிக்கட்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்‘ எனும் (59:18ஆவது) வசனத்தையும் ஓதிக்காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி)னார்கள்.

அப்போது (உங்களில்) ஒருவர் தமது பொற்காசு, வெள்ளிக்காசு, துணி, ஒரு ஸாஉ கோதுமை, ஒரு ஸாஉ பேரீச்சம் பழம் ஆகியவற்றைத் தர்மம் செய்யட்டும் என்று கூறி, பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் தர்மம் செய்யட்டும் என்று வலிலியுறுத்தினார்கள். உடனே (நபித்தோழர்களில்) ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த பொற்காசுகளிலிருந் தும், வெள்ளிக் காசுகளிலிலிருந்தும், ஆடைகளிலிலிருந்தும் ஒரு ஸாஉ கோதுமையிலிலிருந்தும் ஒரு ஸாஉ பேரீச்சம் பழத்திலிலிருந்தும் தர்மம் செய்தார்கள்.

அப்போது அன்சாரிகளில் ஒருவர் ஒரு பை (நிறைய பொருட்களைக்) கொண்டுவந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது; தூக்கவே முடியவில்லை. பின்னர் தொடர்ந்து மக்கள் (தங்களின் தர்மப் பொருட்களுடன்) வந்து கொண்டிருந்தனர். இறுதியில் உணவுப் பொருட்களாலும், ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்துவிட்டதை நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் பொன்னைப் போன்று மின்னிக் கொண்டிருப்பதையும் நான் கண்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு; அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. அவ்வாறே, யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல் படுபவர்களின் பாவமும் – அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல் – உண்டு என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம்-1848

சமுதாயப் பணி

திருமணம் என்பது ஒர் ஆண், பெண் சம்மந்தப்பட்ட பிரச்சனை இல்லை. மாறாக இது ஒரு சமுதாயப் பிரச்சனை. ஆணோ பெண்ணோ வழி தவறாமல் இருப்பதற்கும் சமுதாயம் ஒழுக்கக்கேட்டில் செல்லாமல் இருப்பதற்கும் திருமணம் தான் வடிகாலாகும். இதை உரிய முறையில் நடத்தி வைக்கவில்லையென்றால் சமுதாயம் சீர்குலைந்து விடும்.

இரத்தத் துளிகளால் வளர்ந்த ஏகத்துவம், குஃப்ரில் உள்ள பெண்களைக் கரம் பிடிப்பதால் அழிந்துவிடக் கூடாது. இதற்குக் காதல் என்ற சீர்கேடே காரணம். குடும்பச் சூழல் மற்றும் வறுமையின் காரணமாக மணமுடிக்கப்படாத ஆண்களுக்கும், பெண்களுக்கும் திருமணத்தை நடத்தி வைக்குமாறு இறைவன் கட்டளையிடுகிறான்.

உங்களில் வாழ்க்கைத் துணை யற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

(அல்குர்ஆன்:24:32.)

தமீமுத்தாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “மார்க்கம் (தீன்) என்பதே “நலம் நாடுவது‘ தான்” என்று கூறினார்கள். நாங்கள், “யாருக்கு (நலம் நாடுவது)?” என்று கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கும், அவனுடைய வேதத்துக்கும், அவனுடைய தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர்களுக்கும், அவர்களில் பொதுமக்களுக்கும்” என்று பதிலளித்தார்கள்.

நூல்: முஸ்லிம்-95

எனவே தவ்ஹீத்வாதிகள் வாழ்க்கையிலும், தனது குடும்பத்தினர் திருமண விஷயத்திலும் ஏகத்துவத்தில் உள்ள பெண்களுக்கு முன்னுரிமை வழங்கி முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.  இது போன்ற விஷயங்களில் மக்களுக்கு செயல் முறைகள் தான் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனைத்து விஷயங்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்பதற்காக நபியவர்களது வளர்ப்பு மகன் ஸைத் தனது மனைவியை விவாகரத்துச் செய்த பிறகு ஸைனப் (ரலி) அவர்களை நபியவர்களுக்கு திருமணம் முடித்து வைக்கிறான்.

யாருக்கு அல்லாஹ் அருள் புரிந்து (முஹம்மதே!) நீரும் அவருக்கு அருள் புரிந்தீரோ, அவரிடம் “உமது மனைவியை உம்மிடமே வைத்துக் கொள்! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்” என்று நீர் கூறியதை எண்ணிப் பார்ப்பீராக! அல்லாஹ் வெளிப்படுத்த இருந்ததை உமது மனதுக்குள் மறைத்துக் கொண்டீர். மனிதருக்கு அஞ்சினீர்! நீர் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே தகுதியானவன். ஸைத் என்பார் அவரிடம் தன் தேவையை முடித்துக் கொண்ட போது உமக்கு அவரை மணமுடித்துத் தந்தோம். வளர்ப்பு மகன்கள் தம் மனைவியரிடம் தமது தேவையை முடித்துக் கொண்டால் (விவாகரத்துச் செய்தால்) அவர்களை (வளர்ப்புத் தந்தையரான) நம்பிக்கை கொண்டோர் மணந்து கொள்வது குற்றமாக ஆகக் கூடாது என்பதற்காக (இவ்வாறு செய்தோம்). அல்லாஹ்வின் கட்டளை செய்து முடிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.

(அல்குர்ஆன்:33:37.)

அன்றைய அரபிகளிடத்தில் வளர்ப்பு மகனின் மனைவியைத் திருமணம் முடிப்பது கேவலமாகப் பார்க்கப்பட்டது. போலியான உறவுகளுக்கு இஸ்லாத்தில் எந்த உரிமைகளும் கிடையாது என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காகத் தான் அல்லாஹ் இத்திருமணத்தை நடத்தி வைத்தான்.

இதை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், நமது தவ்ஹீத்வாதிகள் திருமண விஷயத்தில் உறுதியாகச் செயல்பட்டு மக்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்பதற்காகத் தான்.

எழுச்சியும் வீழ்ச்சியும்

  1. பொதுவாக, ஒரு பெண்ணால் தன் பெற்றோரிடம் தனது திருமணத்தைப் பற்றி கருத்துச் சொல்ல முடியாது. ஆனாலும் அல்லாஹ்வின் கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதற்காக பெற்றோரை எதிர்த்து ஒரு ஏகத்துவவாதியைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பெண்கள் கூறுவது ஏகத்துவம் ஏற்படுத்திய எழுச்சியாகும்.

ஆனால் இதற்கு மாற்றமாக எந்த ஒரு  விஷயத்திலும் பெற்றோர் பேச்சைக் கேட்காத ஆண்களோ திருமணப் பொறுப்பை மட்டும் தாய், தந்தையரிடம் ஒப்படைக்கத் துடிப்பது எதனால்? தனது பெற்றோர் தனக்கு அழகான, அந்தஸ்தான பெண்ணை மணமுடித்துத் தருவாள் என்பதற்காகத் தானே? இது தவ்ஹீத் கண்ட வீழ்ச்சியாகும்.

  1. தனது மகளுக்கு முஷ்ரிக்கை மணமுடித்து வைத்தால் அவனுடன் அவள் தொடர்ந்து வாழமாட்டாள் என்பதை அவளது பெற்றோர்கள் புரிந்து கொள்ளுமளவிற்கு ஒரு பெண் போராடுகிறாள். இறுதியில் தனது பெற்றோர்கள் முஷ்ரிக்கைத் திருமணம் முடித்து வைப்பதில் தான் தீவிரமாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்த உடன் தவ்ஹீத் மாப்பிள்ளையைப் பார்த்து தருமாறு மூன்றாவது நபரிடம் ஒரு பெண் கேட்கின்றாளே! இது பெண்களிடத்தில் ஏற்பட்ட எழுச்சி.

ஆனால் ஆண்களோ, இணைவைப்பவர்களின் வீட்டில் பெண் எடுக்கின்றார்கள். அவர்களைப் பொறுத்த வரை இது இரட்டிப்பு மகிழ்ச்சி. ஒரே கல்லில் இரண்டு மாங்காய். 1. வரதட்சனை கொடுக்கத் தேவையில்லை. 2. தவ்ஹீதை எதிர்ப்பவர்களுக்கே, அவர்கள் எவ்வித முயற்சியும் செய்யாமல் தவ்ஹீத் மாப்பிள்ளை.

அப்படியானால் ஏகத்துவவாதியைத் தவிர வேறு மாப்பிள்ளையை மணக்க மாட்டேன் என்ற உறுதியுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தவ்ஹீத் பெண்கள் யாரைத் திருமணம் முடிப்பது? என்ற கேள்விக்கு பதிலளியுங்கள். ஏகத்துவ வாதியைத் தான் மணமுடிப்போம் என்பவர்களைக் கை கழுவி விட்டு முஷ்ரிக் வீட்டில் கை நனைக்கின்றீர்கள்.

ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட இந்தப் பெண்கள், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் காதலித்ததற்காகத் தான் இந்த சத்தியப் போராட்டமே தவிர சில கழிசடைகளை நேசித்ததற்காக அல்ல!

ஒரு சமயம் அந்தப் பெண் பெற்றோர்களின் நிர்ப்பந்தத்திற்கு உட்பட்டு சோதனையில் சோர்வடைந்து ஒரு முஷ்ரிக்கை மணமுடித்துவிட்டால் அந்தப் பாவத்தை சுமப்பது யார்?

அதிகமான இளைஞர்கள் தவ்ஹீத் கொள்கை விளங்கி வருகிறீர்கள். ச்மூகம் சார்ந்த போராட்டங்களில் மிகைத்துக் காணப்படும் இளைஞர்களில் பலரை மணமகன் போட்டோக்களில் காண முடிவதில்லை. எனவே ஒவ்வொரு இளைஞனும் மணமுடித்தால் கொள்கைவாதிப் பெண்ணை தான் மணமுடிப்பேன் என்று இத்தருணத்தில் உறுதி மொழி எடுக்க வேண்டும். ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றொருவருக்கு முன்னோடியாக முன்மாதிரியாகத் திகழ்வதற்கு அல்லாஹ்விடம் உதவி தேடுவோமாக!

“எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், சந்ததிகளிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!” என்று அவர்கள் கூறுகின்றனர்.

(அல்குர்ஆன்:25:74.)