Tamil Bayan Points

விபச்சாரம் செய்த கணவருடன், சேர்ந்து வாழலாமா?

முக்கிய குறிப்புகள்: குடும்ப வழக்குகள்

Last Updated on October 18, 2016 by Trichy Farook

மனைவியின் புகார்

எனது கணவர் விபச்சார குற்றம் செய்துவிட்டார். இப்போது அது தவறு என்று வருந்துகிறார். நான் அவருடன் சேர்ந்து வாழலாமா?

 

தீர்வு

  • விபச்சாரக் குற்றம் என்பது தண்டனைக்குரிய மாபெரும் குற்றமாகும். இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் போது சாட்சிகளின் அடிப்படையில் விபச்சாரக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் திருமணம் செய்தவர்களாக இருந்தால் அவர்களுக்கு கல்லெறிதல் மூலம் மரணதண்டனை நிறைவேற்றப்படும். நீங்கள் விரும்பினாலும் சேர்ந்து வாழ இயலாது.
  • திருமணம் ஆகாதவர்களாக இருந்தால் அவர்களுக்கு கசையடி தண்டனை வழங்கப்படும்.

  • அதே நேரத்தில் ஒருவர் விபச்சாரம் செய்து அதனை அல்லாஹ் வெளியில் யாருக்கும் தெரியாமல் மறைத்து விட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விட்டு விடப்படுகின்றார். அல்லாஹ் நாடினால் அவரை மன்னிப்பான். அல்லாஹ் நாடினால் அவரைத் தண்டிப்பான். இதனை பின்வரும் நபிமொழியிலி ருந்து அறிந்து கொள்ளலாம்.


நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்துகொண்டிருந்தோம். அப்போது அவர்கள், ”அல்லாஹ்விற்கு எதையும் இணை கற்பிக்கமாட்டீர்கள்; விபசாரம் புரியமாட்டீர்கள்; திருடமாட்டீர்கள் என்று எனக்கு உறுதிமொழி அளிப்பீர்களா?” என்று கேட்டுவிட்டுப் பெண்கள் பற்றிய (60:12ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள். தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள், ”உங்களில் எவர் (இந்த உறுதி மொழியை) நிறைவேற்றுகிறாரோ அவருக்குரிய பிரதிபலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். மேற்கூறப்பட்ட (விபசாரம் முதலான)வற்றில் எதையாவது ஒருவர் செய்து அதற்காக (இவ்வுலகில் இஸ்லாமியச் சட்டப்படி) அவர் தண்டிக்கப்பட்டுவிட்டால், அதுவே அவருக்குப் பரிகாரமாகிவிடும். மேற்கூறப்பட்டவற்றில் எதையவாது ஒருவர் செய்து, பின்னர் அல்லாஹ் அதனை (யாருக்கும் தெரியாமல்) மறைத்துவிட்டால், அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படு கின்றார். அவன் நாடினால் அவரை வேதனை செய்வான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : உபாதா பின் ஸாமித் (ரலி) நூல் : புகாரி (4894)

அல்லாஹ் நாடினால் மன்னிப்பான் என்று வருகின்ற காரணத்தினால் விபச்சாரக் குற்றம் என்பது இறைவனின் மன்னிப்பிற்குரிய பாவம்தான் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

எனவே விபச்சாரம் செய்தவர்கள் மரணமடைந்து விட்டாலும் நாம் அவர்களுக்கு பாவமன்னிப்பு தேடுவதில் தவறு கிடையாது. நிச்சயமாக நம்முடைய துஆவின் மூலம் இறைவன் அவர்களது பாவங்களை மன்னிக்கக்கூடும்.

மேலும் விபச்சாரக் குற்றம் செய்தவர் இணைகற்பிக்காத நிலையில் மரணித்திருந்தால் நிச்சயமாக அவர் விபச்சாரம் செய்திருந்தாலும் அவர் சுவனம் செல்லவார். இதனை பின்வரும் நபிமொழியிலி ருந்து அறிந்து கொள்ளலாம்.

அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ”எனது இரட்சகனிட மிருந்து ஒரு(வான)வர் என்னிடம் வந்து ஒரு சுபச் செய்தியை அறிவித்தார். அதாவது ‘எனது சமுதாயத்தில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் இறக்கின்றாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நான், ”அவர் விபசாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலுமா?” எனக் கேட்டேன். அவர் விபசாரத்திலோ திருட்டிலோ லிலி ஈடுபட்டிருந்தாலும்தான்” என்று பதிலளித்தார்கள்.’
அறிவிப்பவர் : அபூதர் (ரலி ) நூல் : புகாரி (1237)

மேற்கண்ட நபி மொழியிலிருந்தும் விபச்சாரக் குற்றம் பெரும் பாவமாக இருந்தாலும் இறைவனின் மன்னிப்பிற்குரிய குற்றம்தான் என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஒருவர் பெரும் பாவம் என்று அறியாமல் விபச்சாரம் செய்து விட்டால், பின்னர் அது தவறு என்று அறிந்து மனம் வருந்தி இறைவனிடம் பிரார்த்தனை செய்தால் நிச்சயமாக இறைவன் அந்தப் பாவத்தை மன்னிப்பான். இறைவனின் கருணையிலிருந்து நாம் நிராசையடைந்து விடக்கூடாது.

அறியாமல் தீய காரியம் செய்து விட்டு தாமதமின்றி மன்னிப்புக் கேட்போருக்கே அல்லாஹ்விடம் பாவ மன் னிப்பு உண்டு. அவர்களையே அல்லாஹ் மன்னிப்பான். அல்லாஹ் அறிந்தவனாக வும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். தீமைகளைச் செய்து விட்டு மரணம் நெருங்கும் வேளையில் ”நான் இப்போது மன்னிப்புக் கேட்கிறேன்” எனக் கூறு வோருக்கும், (ஏக இறைவனை) மறுப் போராகவே மரணித்தோருக்கும் மன்னிப்பு இல்லை. அவர்களுக்காகவே துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம். (அல்குர்ஆன் 4 : 17, 18)

(முஹம்மதே!) நமது வசனங்களை நம்புவோர் உம்மிடம் வந்தால் ”உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்” எனக் கூறுவீராக! உங்கள் இறைவன் அருள் புரிவதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான். உங்களில் எவரேனும் அறியாமையின் காரணமாக தீமையைச் செய்து விட்டு, அதன் பின்னர் மன்னிப்புக் கேட்டு திருந்திக் கொண்டால் அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 6 : 54)

மேலும் அறியாமையினால் விபச்சாரம் என்ற பெரும்பாவத்தைச செய்தவர்கள் மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்புக் கோரினால் நிச்சயமாக இறைவன் அவர்களுடைய பாவங்களை மன்னிப்பான்.

  • அவருடன் வாழுவது உங்கள் மீது குற்றமில்லை.
  • எனினும், அவருடன் வாழ பிடிக்க வில்லையெனில், இஸ்லாமிய அடிப்படையில், நியாயமான முறையில் நீங்கள் குலா பெற முடியும்.