Tamil Bayan Points

உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றால் குடும்பக்கட்டுப்பாடு செய்யலாமா?

கேள்வி-பதில்: நவீன பிரச்சனைகள்

Last Updated on November 22, 2016 by Trichy Farook

உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றால் குடும்பக்கட்டுப்பாடு செய்யலாமா?

அந்த  நிலை இருந்தால் செய்யலாம்.

 

கர்ப்பமாவதால் உயிருக்கு ஆபத்து இருந்தால் கர்ப்பத்தடை ஆபரேசன் செய்யலாம்.

நிரந்தரமாக கற்பத் தடை செய்து கொள்வது மார்க்கம் தடை செய்த ஒன்றாகும். நிர்பந்தம் ஏற்படும் போது தடுக்கப்பட்ட விஷயங்கள் ஆகுமானதாகி விடும்.

இனி கரு உருவானால் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றால் இது நிர்பந்தமான நிலை தான். நிர்பந்தமான நிலை ஏற்படும் போது மார்க்கத்தின் சட்ட திட்டங்கள் குறுக்கே நிற்காது. நமது உயிரைக் காப்பதற்குரிய வழி என்னவோ அதைக் கையாள வேண்டும் என்றே மார்க்கம் கூறுகின்றது.

நிர்ப்பந்தத்தில் இறை நிராகரிப்பு கூட மன்னிக்கப்பட்டு விடுகின்றது.

அல்லாஹ்வை நம்பிய பின் அவனை மறுப்போர் மீதும், மறுப்பிற்கு உள்ளத்தில் தாராளமாக இடமளிப்போர் மீதும் அல்லாஹ்வின் கோபமும், கடும் வேதனையும் உண்டு. உள்ளத்தில் நம்பிக்கை வலுப்பெற்ற நிலையில் நிர்பந்திக்கப் பட்டவர் தவிர. (அல்குர்ஆன் 16:106)

இறை நிராகரிப்பு என்பது தான் அல்லாஹ்விடத்தில் மன்னிக்க முடியாத பாவமாகும். ஆனால் அதற்கே நிர்ப்பந்தம் ஏற்பட்டால் அல்லாஹ் இந்த வசனத்தில் விதி விலக்கு வழங்குகின்றான்.

பன்றி இறைச்சி மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட உணவு. அதையும் நெருக்கடி, நிர்ப்பந்தத்தின் போது சாப்பிட்டால் அல்லாஹ் மன்னித்து விடுகின்றான் என்பதைக் கீழ்க்கண்ட வசனம் விளக்குகின்றது.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப் பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப் படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் 2:173)

எனவே இதுபோன்ற நிர்பந்த நேரத்தில்  நிரந்தரமாக குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வது தவறல்ல.