Tamil Bayan Points

உண்டியல் மூலம் பணம் அனுப்புவது கூடுமா?

கேள்வி-பதில்: வியாபாரம்

Last Updated on November 23, 2020 by Trichy Farook

உண்டியல் மூலம் பணம் அனுப்புவது கூடுமா?

ஒருவர் வெளிநாட்டிலிருந்து நமது நாட்டிற்குப் பணம் அனுப்பினால் அந்தப் பணத்துக்கு அரசாங்கம் வரி வாங்குகிறது. இந்த வரியைச் செலுத்தாமல் இருப்பதற்காக அரசுக்குத் தெரியாத வகையில் மறைமுகமாக பணத்தை அனுப்புவதற்கு உண்டியல் முறை என்று சொல்லப்படுகின்றது. இவ்வாறு செய்வதும் இதையே தொழிலாக செய்வதும் மார்க்கத்தில் கூடுமா? என்று கேள்வி கேட்டுள்ளீர்கள்.

நாம் சம்பாதிக்கும் பணத்தை நாம் விரும்பும் வகையில் பயன்படுத்த இஸ்லாம் அனுமதிக்கிறது. இஸ்லாமியச் சட்டப்படி அமைந்த அரசாங்கத்தில் உண்டியல் போன்ற செயல்கள் சட்ட விரோதமாகக் கருதப்படாது.

உண்டியல் மூலம் ஒருவர் தனது சொந்தப் பணத்தை அனுப்பினால் அதற்காக மறுமையில் இறைவன் கேள்வி கேட்க மாட்டான். இறைவனிடம் குற்றவாளியாக ஆக மாட்டோம்.

ஆனால் நாம் வாழும் நாட்டில் அது குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அதனால் ஏற்படும் விளைவுகளை நீங்கள் சுமக்க வேண்டியது வரும். இது போன்ற தொழில்களைச் செய்யும் போது ஏதோ கொலைகாரனைப் போல் அரசாங்கம் நம்மை அடையாளப்படுத்தும் . நமது கொளரவதுக்கு பங்கம் ஏற்படும். சுய மரியாதை இழந்து குற்றவாளிகள் போல் நிற்கும் நிலை ஏற்படும். மேலும் இது போன்ற தொழில் செய்பவர்களின் குடும்பத்து பெண்களும் சொல்லொணாத துன்பங்களுக்கு உள்ளாக்கப்படுவார்கள். சமூகத்தில் ஏதோ கேடிகளைப் போல் நம்மை ஆக்கி விடுவார்கள் என்பதைக் கவனிப்பது நல்லது.

மக்கள் சட்டப்படி பணம் அணுப்பாமல் உண்டியல் மூலம் அனுப்புவதற்கு அரசாங்கத்தின் வரிவிதிப்பு முறையும் காரணமாக உள்ளது. கொள்ளைக்காரர்களுக்கு நிகராக அநியாய வரி விதிக்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நாற்பது சதவிகிதம் அறுபது சதவிகிதம் வரி விதித்தால் எல்லோரும் அதில் இருந்து தப்பிக்கவே நினைப்பார்கள்.

அதுவும் பல வகையான வரிகள் விதிக்கப்படும் நாடுகளில் இந்தியா தான் முன்னனியில் உள்ளது.

இரண்டு முதல் ஐந்து சதம் அளவுக்கு ஒரே ஒரு வரி மட்டும் விதிக்கப்பட்டால் நாட்டு மக்கள் அனைவரும் அந்தச் சட்டத்தைப் பேணுவார்கள். சட்டத்தைப் பேணும் மக்கள் உருவாவதை விட வேறு சிறப்பு என்ன வேண்டும்.

நமது நாட்டில் எல்லா சட்டமும் மீறப்படுவதற்குக் காரணமே இது போன்ற அரசாங்கத்தின் அநியாயக் கொள்ளை தான். உண்டியல் மூலம் மக்கள் பணம் அனுப்புவதற்கும், கள்ளக் கணக்கு எழுதுவதற்கும் அரசாங்கமே முழுப் பொறுப்பு என்பதையும் மறுக்க முடியாது.