Tamil Bayan Points

2) ஈமான் இஸ்லாம் வேறுபாடு

நூல்கள்: விதி ஓர் விளக்கம்

Last Updated on February 24, 2022 by

ஈமான் இஸ்லாம் வேறுபாடு

மனதால் நம்ப வேண்டியவை, செயல்படுத்த வேண்டியவை என இஸ்லாத்தின் கடமைகள் இரு வகைகளில் அமைந்துள்ளன.

மனதால் நம்ப வேண்டியவை ஈமான் (நம்பிக்கை கொள்ளுதல்) எனவும் செயல்படுத்த வேண்டியவை இஸ்லாம் (கட்டுப்பட்டு நடத்தல்) எனவும் குறிப்பிடப்படுகிறது.

செயல்படுத்த வேண்டியவைகளில் ஒரு முஸ்லிம் குறைவைத்தால் அதன் காரணமாக அவன் இஸ்லாத்தை விட்டு வெளியேற மாட்டான். பாவம் செய்த முஸ்லிமாக இஸ்லாத்தில் நீடிப்பான்.

நம்பிக்கை கொள்ள வேண்டியவைகளை ஒருவன் நம்ப மறுத்தால் அவன் முஸ்லிம் என்ற வட்டத்தில் இருந்து வெளியேறியவனாக இறைவனால் கருதப்படுவான். உலகில் அவன் தன்னைப் பற்றி முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டாலும் மற்றவர்கள் அவனை முஸ்லிம் என்று அழைத்தாலும் முஸ்லிமுக்குக் கிடைக்கும் எந்தப் பாக்கியமும் அவனுக்கு மறுமையில் கிடைக்காது. 

ஈமான் என்பதை கொள்கை எனவும் இஸ்லாம் என்பதை சட்டதிட்டங்கள் எனவும் சுருக்கமாகக் குறிப்பிடலாம்.

உடலால், பொருளால், நாவால் செய்ய வேண்டியவை குறித்து இம்மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட அனைத்தும் இஸ்லாம் என்ற வகையில் சேரும்.

மனதில் கொள்ள வேண்டியவை அனைத்தும் ஈமானில் சேரும்.

மனதால் நம்ப வேண்டியவை ஆறு தலைப்புகளுக்குள் அடங்கும்.

1.     அல்லாஹ்வை நம்புதல்

2.     வானவர்களை நம்புதல்

3.     வேதங்களை நம்புதல்

4.     இறைத் தூதர்களை நம்புதல்

5.     இறுதி நாளையும், திரும்ப உயிர்ப்பிக்கப்படுவதையும் நம்புதல்

6.     விதியை நம்புதல்

ஆகிய ஆறு விஷயங்களையோ, அல்லது ஆறில் ஏதேனும் ஒன்றையோ ஒருவன் நம்ப மறுத்தால் அவன் இஸ்லாம் என்ற வட்டத்தில் இருந்து உடனே வெளியேறி விடுவான்.

ஜிப்ரீல் (அலை) அவர்கள் முஸ்லிம்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து கேள்வி கேட்க அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். 

நீண்ட இந்த ஹதீஸில் . . . .

இஸ்லாம் என்றால் என்ன என்ற கேள்விக்கு “அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்காமல் அல்லாஹ்வை வணங்க வேண்டும்; தொழுகையை நிலை நாட்ட வேண்டும்; கடமையான ஜகாத்தை வழங்க வேண்டும்; ரமலான் மாதம் நோன்பு நோற்க வேண்டும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஈமான் என்றால் என்ன என்ற கேள்விக்கு “அல்லாஹ்வையும், வானவர்களையும்,  வேதங்களையும்,  தூதர்களையும், இறுதி நாளையும், விதியையும் நீ நம்ப வேண்டும்” என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 50, 4777

ஈமான் இஸ்லாம் என்பதன் வேறுபாட்டை இந்த நபிமொழி மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.