Tamil Bayan Points

இஸ்லாம் என்றாலே அமைதிதான்: சுஷ்மா பேச்சு

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

Last Updated on July 8, 2019 by

இஸ்லாம் என்றாலே அமைதிதான்: சுஷ்மா பேச்சு

இஸ்லாம் குறித்து முஸ்லிம்கள் கூறுவதை விட முஸ்லிம் அல்லாதவர்கள் சொன்னால் அந்தக் கருத்து நல்ல முறையில் ரீச் ஆகும். அதுவும் இஸ்லாத்தினையும் இஸ்லாமியர்களையும் அழிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ள சங் பரிவாரைச் சேர்ந்தவர்கள் இஸ்லாம் குறித்து சிலாகித்துச் சொன்னால் அந்தக் கருத்து இன்னும் மக்கள் மத்தியில் மேலோங்கும். இந்தியாவில் இஸ்லாமிய வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்று முழு மூச்சாய் பணியாற்றும் சங் பரிவார சக்திகள்.,

அரபு நாடுகளுக்குச் செல்லும் போது அப்படியே தாழ்ந்து பணிந்து இஸ்லாத்தினைப் பற்றி உண்மையை பேசும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றார்கள். இது எப்போதாவது நடக்கும் காரியம் அல்ல! அவ்வப்போது நடந்து வரும் காரியங்களின் தொடர்ச்சிதான். உத்தமத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் கூட இஸ்லாத்திற்கு எதிரியாக இருந்தவர்கள் இஸ்லாம் குறித்து அண்டை நாடுகளில் புகழ்ந்து பேசிய வரலாறுகள் இன்றைக்கும் வரலாற்று நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ரோமப் பேரரசை ஆட்சி செய்த ஹெர்குலிஸ் மன்னருக்கு இஸ்லாம் குறித்த செய்திகளை கடிதமாக அனுப்புகின்றார்கள். அந்த நேரத்தில் சிரியாவுக்கு வியாபார நிமித்தமாக வந்திருந்த அபு சுப்யான் அவர்களை தன் அவைக்கு அழைக்கும் ஹெர்குலிஸ் மன்னர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குறித்தும் இஸ்லாம் குறித்தும் கேள்விகளை எழுப்புகின்றார்.அபுசுப்யான் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உறவினராக இருந்தும் அவர்கள் அந்த நேரத்தில் இஸ்லாத்தினை ஏற்கவில்லை.

ஆனால் நபிகள் நாயகம் பற்றியும் இஸ்லாம் குறித்தும் மன்னர் ஹெர்குலிஸ் கேள்வி எழுப்பும் போது அதற்கு உண்மையான பதில்களை அபுசுப்யான் அவர்கள் தெரிவிக்கின்றார்கள். முஹம்மது இதுவரை பொய் சொல்லியிருக்கிறாரா? வாக்குத் தவறி இருக்கிறாரா? என்ற கேள்விக்கு., அபுசுப்யான் அவர்கள் இல்லை என்றே பதிலளிக்கின்றார்கள். முஹம்மது., பிரச்சாரம் செய்யும் மார்க்கம் வளர்கின்றதா? தேய்கின்றதா? என்று கேட்கும் போது, கடுமையான வளர்ச்சியடைகின்றது என்று பதிலளிக்கின்றார்கள்.

உள்ளூரில் முஹம்மது நபிக்கு விரோதியாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிரச்சாரம் செய்யும் மார்க்கத்திற்கு எதிரியாக இருந்த அபுசுப்யான் அவர்கள் சிரியாவுக்குச் சென்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குறித்து கூறும் போது உண்மையையே பேசினார்கள். அந்த வரலாற்றின் தொடர்ச்சியைத்தான் நடப்பு காலத்திலும் கண்கூடாகக் காண்கின்றோம். இஸ்லாமியர்களுக்கு எதிரான சிந்தனை கொண்டு இஸ்லாமியர்களை அழிக்க வேண்டும் என்ற கருத்தில் உடைய சங்பரிவார கொள்கையைச் சேர்ந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்.

கடந்த வாரம் துபாய் நாட்டில் நடத்தப்பட்ட இஸ்லாமியக் கூட்டமைப்பு நாடுகளின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இஸ்லாமிய கூட்டுறவு கூட்டமைப்பில் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா கண்டங்களைச் சேர்ந்த 57 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டமைப்பின் 46 வது மாநாடு கடந்த மார்ச் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் அபுதாபியில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்தக் கூட்டமைப்பின் மாநாட்டில் இந்தியா அழைக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சுஷ்மா, இஸ்லாம் என்றாலே அமைதிதான் என்றும், இஸ்லாமியரல்லாத மக்களுடன் இந்திய இஸ்லாமியர்கள் ஒருமைப் பாட்டுடனும் ஒற்றுமையுடனும் வாழ்ந்து வருகின்றார்கள் என்றும் ஆனால் இஸ்லாமியர்களில் ஒரு சிலர் மட்டுமே பயங்கரவாதத்தின் நச்சுப் பிரச்சாரத்திற்கு இரையாகின்றனர் என்றும் பேசியிருக்கிறார் சுஷ்மாவின் வார்த்தைகளில் 90% உண்மையையே காணமுடிகின்றது. இந்தியாவில் பயங்கரவாதத்தின் தாய் யாரென்று கேட்டால், சங் பரிவார பயங்கரவாதிகள் என்று பிறந்த குழந்தை கூட தெரிவிக்கும்.

குஜராத்தில் பயங்கரவாதிகள் ஆடிய வெறியாட்டங்களை சொல்லிக் காட்டினால் எல்லா நாட்டுக்காரர்களுக்கும் கண்களில் கண்ணீர் கசியும். எனவே சுஷ்மா அவர்கள், அந்த ஒரு சிலரும் நல் வழிக்குத் திரும்ப வேண்டுமானால் சங் பரிவார பயங்கரவாதிகளை அடக்கி ஒடுக்கி வைத்தாலே முழுமையான தீவிரவாதம் ஒழிந்து இந்தியா அமைதிப்பூங்காவாக மாறும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

பயங்கரவாதத்திற்கு எதிராக இஸ்லாமிய நாடுகள்

இஸ்லாம் என்றாலே அமைதி மார்க்கம் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியிருப்பதைப் போல மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இஸ்லாம் குறித்த உண்மைகள் சிலவற்றை பேசியிருக்கின்றார். இஸ்லாமிய கூட்டுறவு கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு கடந்த வாரம் அபுதாபியில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு இந்தியா அழைக்கப்பட்டதால் பாகிஸ்தான் சார்பாக யாரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.

இந்த மாநாடு குறித்து கடந்த வாரம் நடந்த தேசிய புலனாய்வுக் கட்டடத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இஸ்லாமிய நாடுகள் தீவிரவாதத்திற்கு எதிரான கருத்தைக் கொண்டுள்ளன என்று பேசியுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்புக் கூட்டத்தில் இந்தியா முதன்முறையாகப் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கும் விடயமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தைப் பொறுத்தவரைக்கும் அதை ஒரு சாதி மதத்திற்கு மட்டுமே தொடர்புடையதாகக் கருதமுடியாது என்றும், பயங்கரவாதத்தை ஒரு மதத்துடன் சேர்ப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், சிலர் மதத்துடன் பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்துகிறார்கள் இது சரியானது அல்ல என்றும் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். ராஜ்நாத் சிங் தெரிவித்திருப்பது போல தீவிரவாதத்திற்கு ஆதரவாக எந்த இஸ்லாமிய நாடுகளும் இல்லை. இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிப்பதும் இல்லை.

ஒரு மனிதரைக் கொலை செய்தவர் ஒரு சமுதாயத்தையே கொலை செய்தவர் ஆவார் என்றும், ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் ஆவார் என்றும் திருக்குர்ஆன் மிக அழகாக எத்தி வைக்கின்றது. எனவே தெரிந்தோ தெரியாமலோ சுஷ்மா சுவராஜும், ராஜ்நாத் சிங்கும் இஸ்லாம் குறித்து கூறியிருக்கும் கருத்துகள் முந்தைய வரலாற்றுச் சுவடுகளின் தொடர்ச்சியாகும். இஸ்லாம் என்பது தீவிரவாதத்திற்கு எதிரான மார்க்கம் என்பதை எதிரிகளின் வாய்களில் இருந்தே கொண்டு வரும் அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்.

Source:unarvu(08/03/2019)