Tamil Bayan Points

இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புக்கள்!

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

Last Updated on June 4, 2019 by

லெக்கின்ஸ் அணிந்த பெண்கள் விமானத்தில் பயணிக்கத் தடை:
இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புக்கள்!

ஆபாச ஆடைகளை அணிந்து கொண்டு வலம் வருவதுதான் பெண்களுக்கான சுதந்திரம் என்று பலரும் தவறாக நினைத்து வருகின்றார்கள். ஆனால் ஆபாச ஆடை அணிவது பெண்களுக்கு பாதுகாப்பல்ல; அதுதான் அவர்களுக்கு ஆபத்தை வரவழைக்கும் என்று இஸ்லாம் வழிகாட்டுகின்றது. அதனால் தான் பெண்கள் ஆபாச ஆடை அணிய இஸ்லாம் தடை விதிக்கின்றது. அதை இப்போதுதான் ஒவ்வொருவராக உணர ஆரம்பித்துள்ளார்கள்.

லெக்கின்ஸ் அணிந்து வந்த 2 இளம் பெண்களை அமெரிக்க விமானத்தில் பயணம் செய்ய யுனைடெட் ஏர்லைன்ஸ் தடை விதித்தது. லெக்கின்ஸ் எனப்படும் இறுக்கமான பேண்ட் அணிந்து, அப்படியே உடலின் கன பரிமாணங்கள் வெளியே தெரிய, பொது வெளியில் சுற்றுவது ஆபாசத்தின் உச்சகட்டமாக ஆகிவிட்டது; இவ்வாறு லெக்கின்ஸ் என்ற அந்த ஆபாச ஆடையை அணிந்து கொண்டு அமெரிக்க விமானத்தில் பயணம் செய்த இரு இளம் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

அமெரிக்காவில் டென்வரில் இருந்து மின்னெ பொலீஸ் நகருக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. அதில் பயணம் செய்ய 2 இளம் பெண்கள் வந்தனர். அப்போது அவர்கள் இறுக்கமான பேண்டை அணிந்திருந்தனர். அது பெருத்த ஆபாசமாக இருந்தது. இதனால் அந்த விமானத்தில் பயணம் செய்ய அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. வேறு உடை இருந்தால் மாற்றிக் கொள்ளுமாறும் அல்லது லெக்கின்ஸ் மேல் அந்த கூடுதல் ஆடையை அணிந்து கொள்ளுமாறும் கூறப்பட்ட போதிலும் அவர்களிடம் வேறு ஆடைகள் இல்லாததால் அந்த விமானத்தில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

மாற்று ஆடை அணிந்த மற்றொரு பெண்ணுக்கு அனுமதி: இதே போன்று லெக்கின்ஸ் அணிந்து கொண்டு வந்த மற்றொரு இளம் பெண்ணும் தடுத்து நிறுத்தப்பட்டார். எனினும் அவரிடம் மாற்று ஆடை இருந்ததால் அவர் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவத்துக்கு சக பயணிகள் வழக்கம் போல இது தங்களது சுதந்திரத்தைப் பறிப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து அந்நாட்டு விமானத்தின் ஏஜெண்ட் தெரிவிக்கையில், விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் இதுபோன்ற ஆபாச ஆடைகளை அணிவதால் அது அவர்களது பாலியல் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி விடுகின்றது;

எனவே இந்தப் பெண்களின் பாலியல் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது அவர்களது பாதுகாப்புக்கு உண்டான நடவடிக்கைதான் என்று தெரிவித்தார். இவர்கள் இப்போது சொல்லும் இந்த சட்டத்தை

இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தெளிவுபடுத்திவிட்டது. நபியே! (முஹம்மதே!) உமது மனைவி யருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய)நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக!அவர்கள் அறியப்படவும், தொல்லைப்படுத்தப் படாமல் இருக்கவும் இது ஏற்றது. ”அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். அல்குர்-ஆன் 33 : 59

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக்கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்ற வற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமதுமுக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். அல்குர்-ஆன் 24 : 31

 ஆபாச ஆடையே கற்பழிப்புக்கு காரணம்:

லண்டன் ஆய்வு முடிவுகள்: லண்டனில் கற்பழிப்பு குற்றம் நிகழ்வதற்கு என்ன காரணம் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின் முடிவில் அவர்கள் வெளியிட்ட காரணங்கள்:

1. இளம் பெண்கள் குட்டையான பாவாடை போன்று தொடை தெரியும் அளவிற்கு கவர்ச்சியாக உடை அணிவது.

2. ஆண் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது.

3. ஆண் நண்பர்களின் வீட்டில் தங்குதல்.

4. விருந்து நிகழ்ச்சியில் மேலாடை விலகுவதுகூட தெரியாமல் நடனம் ஆடுவது. இதனால் தான் கற்பழிப்பு குற்றங்கள் நடக்கின்றன. கற்பழிக்கப்பட்ட பெண்களில் 50% பேர் போலீசில் சொல்வதில்லை. மூன்றில் ஒரு ஆண் குற்றத்தை ஒப்புக் கொள்வதில்லை என்றும் அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

மேற்கண்ட ஆய்வின் முடிவுகளை தினமலர் நாளிதழ் ஏற்கனவே வெளியிட்டிருந்தது. மேலும், நாட்டில் நடக்கும் பல பாலியல் சேட்டைகளுக்கும், கற்பழிப்புகளுக்கும் பெண்கள் அணியும் கவர்ச்சி உடைதான் காரணம் என்பதை பல நிகழ்வுகள் வாயிலாக கண்கூடாகக் கண்டு வருகின்றோம். அதை உறுதிப்படுத்தும் விதத்தில் தான் அமெரிக்காவின் விமான நிறுவனத்தின் செயல்பாடுகளும் அமைந்துள்ளன. 

Source : unarvu ( 31/03/2017 )