Tamil Bayan Points

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

Last Updated on May 29, 2019 by

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

காளைகளை ஓடவிட்டு அதை அடக்கி வீரத்தை வெளிப்படுதல் என்று சொல்லி தமிழர்களின் விளையாட்டாக ஜல்லிக்கட்டு என்ற விளையாட்டு தமிழகத்தில் விளையாடப்படுகின்றது. இது இஸ்லாமிய அடிப்படையில் கூடுமா? இஸ்லாம் இதை அங்கீகரிக்கின்றதா என்பதை நாம் அறிந்து கொள்வது அவசியம். காரணம் என்னவெனில், ஜல்லிக்கட்டு நடத்துவது கூடும் என்றும், ஜல்லிக்கட்டு நடத்துவது கூடாது என்றும் இரண்டு வகையான கருத்துக்கள் நிலவி வருகின்றன.

இவ்விரு கருத்துக்களில் எது சரியானது என்று ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கம். ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு என்ற காரணத்தால் அது அனுமதிக்கப்பட்ட விளையாட்டு என்று சிலர் வாதிடுகின்றனர். அது வீர விளயாட்டா அல்லவா என்பதைப் பின்னர் பார்ப்போம். அது வீர விளையாட்டு என்று வைத்துக் கொண்டாலும் மார்க்கத்தில் அது கூடும் என்பதற்கு அது மட்டும் ஆதாரமாக ஆகாது. வீர விளையாட்டாக இருந்தாலும் சாதாரண விளையாட்டாக இருந்தாலும் வேறு எந்தக் காரியமானாலும் அதில் மதரீதியான தத்துவம் அடங்கி உள்ளதா என்பதைத்தான் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உதாரணமாக ஒருவர் ஆயுத பூஜை தினத்தில் சுண்டல் தருகிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது அது ஒரு உணவு என்று மட்டும் நாம் பார்க்கக் கூடாது. அது படையல் செய்யப்பட்ட புனிதமான உணவு என்ற நம்பிக்கை அதற்குள் அடங்கியுள்ளது. அதையும் சேர்த்துக் கவனத்தில் கொண்டுதான் இந்த சுண்டல் விஷயமாக நாம் முடிவு எடுக்க வேண்டும். இது படையல் செய்யப்பட்ட உணவாக உள்ளதால் அது உணவுப் பொருளாக இருந்தாலும் அது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகி விடுகிறது.

ஜல்லிக்கட்டு என்பது மாடுகளை ஓட விட்டு விரட்டிப் பிடிப்பது மட்டும் அல்ல. மாறாக இந்துக்கள் தங்கள் கடவுள்களுக்கு அந்த மாடுகளை வைத்து பூஜை செய்து அதன் பின்னர்தான் மாடுகளை விரட்டி விடுகின்றனர். இது இந்துமதம் சார்ந்த ஒருவழிபாடு என்பதைக் காட்டுகிறது. மேலும் இப்படி கடவுளுக்காக பூஜை செய்து ஜல்லிக் காட்டு நடத்தினால் வறுமை விலகும்; மழை பொழியும் என்றும் அதை நடத்தும் மக்கள் நம்புகின்றனர்.

இந்துத்துவ இயக்கங்கள் இது இந்துக்களின் வழிபாட்டு முறை; இதில் முஸ்லிம்களுக்கு என்ன வேலை என்றும் வெளிப்படையாகக் கேள்வி எழுப்புகின்றனர். அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய வணக்கத்தைக் கூட பிறமத வழிபாடுகள் நடக்கும் இடத்தில் செய்யக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

“புவானா” என்ற இடத்தில் அறுத்துப் பலியிடுவதாக நான் அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தேன்’ என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார். ‘அந்த இடத்தில் இணை வைப்பவர்கள் வழிபடக்கூடியவை ஏதுமுள்ளதா?’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டார்கள். அம்மனிதர் இல்லை’ என்றார். ‘இணை வைப்பவர்கள் அங்கே விழா நடத்துவதுண்டா?’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்ட போது, இல்லை’ என்றார். ‘அப்படியானால் உனது நேர்ச்சையை நிறைவேற்று’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.                                  அறிவிப்பவர்: ஸாபித் பின் லஹ்ஹாக் (ரலி) நூல்: அபூதாவூத் 2881

ஜல்லிக்கட்டு என்பது மாடுகளைத் தெய்வங்களாக வணங்கும் பண்டிகை தான் என்பதில் ஐயம் இல்லை ஜல்லிக்கட்டு விளையாட்டில் எந்த விதமான கேடுகளும் இல்லாவிட்டால் கூட அல்லாஹ் அல்லாத தெய்வங்களை வணங்கும் திருநாள் என்பதால் அதில் முஸ்லிம்கள் பங்கெடுப்பது பாவமாகும். ஆயுத பூஜை போன்ற நிலையில் வைத்துப் பார்க்கப்பட வேண்டியதாகும்.

மாடுகளை துன்புறுத்துதல்: 

ஒரு மாட்டை 100 பேர் சேர்ந்து கொடுமைப்படுத்துதல், மாடுகளின் வாலை வாயால் கடித்து அதற்கு வெறியேற்றிவிடுதல் மாடுகளுக்கு வெறியை அதிகப்படுத்த மாடுகளின் வாயில் சாராயத்தை ஊற்றுதல் போன்ற செயல்களும் அதில் கலந்துள்ளதால் இத்தகைய கொடுமைகளை இஸ்லாம் ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகங்களுக்கு மத்தியில் ஓட்டப் பந்தயம் வைத்துள்ளார்கள்; குதிரை யேற்றத்தைக் கற்றுக் கொடுக்கச் சொல்லியுள்ளார்கள்; அம்பெறிந்து விளையாடும் போட்டிகளை ஊக்கப்படுத்தியுள்ளார்கள்; மல்யுத்தப் போட்டிகளை ஆதரித்துள்ளார்கள்; அப்படியானால் இந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஜல்லிக்கட்டை நடத்தலாம் என்று சில முஸ்லிம்கள் வாதம் செய்கின்றனர். இதுதான் அவர்களது வாதம். இவர்கள் கூறும் ஆதாரங்களில் பிறமத நம்பிக்கை எதுவும் இல்லை.

அல்லாஹ் அல்லாதவர்களை வழிபடும் கொண்டாட்டமும் இல்லை. ஆனால் ஜல்லிக்கட்டில் இவை உள்ளன. எனவே இரண்டுக்கும் உள்ள முக்கிய வித்தியாசத்தை இவர்கள் கவனிக்கவில்லை. நபிகள் நாயகம் நடத்தியது ஒட்டகங்களுக்கும் ஒட்டகங்களுக்கும் இடையே வைக்கப்பட்ட போட்டி. மாடுகளை ஓடவிட்டு அதை 100 பேர் சேர்ந்து அடக்குவது வேறாகும். விலங்குகளை துன்புறுத்துவதை நபிகளார் தடுத்துள்ளார்கள். அந்த விலங்கை அறுக்கும் போதுகூட கூர்மையான ஆயுதங்களால்தான் அதை அறுக்க வேண்டும்.

குட்டிக்கு பால் கொடுக்கும் நிலையில் உள்ள விலங்குகளை அறுக்கக்கூடாது; பூனையை பட்டினி போட்ட பெண்ணுக்கு நரக தண்டனை வழங்கப்படும்; பறவைக் குஞ்சுளை அதன் தாயிடத்தில் இருந்து பிரிக்கக்கூடாது; மிருகங்களை பட்டினி போட்டு வதைக்கக் கூடாது என்றெல்லாம் நபிகளார் எச்சரித்துள்ள நிலையில் மாடுகளின் வாலைக் கடித்து குதறுவதையும், மாடுகளை துன்புறுத்துவதையும், அவைகளைப் பாடாய்ப்படுத்துவதையும் இஸ்லாம் எப்படி அங்கீகரிக்கும்?

மேலும் அம்பெறிந்து பயிற்சி எடுப்பதில் நாம் குறிபார்க்கும் போது கூட உயிருள்ள பிராணிகளைக் குறிபார்த்து அம்பெறிந்து பயிற்சி எடுப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளார்கள். நாம் அந்த விலங்குகளின் மீது ஏறிப் பயணிப்பது என்பது நமக்குத் தேவையான ஒன்று; அத்தியாவசியத்தின் காரணமாக அதை நாம் பயன்படுத்துகின்றோம்; தேவையில்லாமல் அதைக் குறிவைத்து அம்பெறிந்து அந்த அம்பு அந்த விலங்குமேல் பட்டு அவை துன்புறுவதை அல்லாஹ்வுடைய தூதர் ஏற்றுக் கொள்ளவில்லை. மாடுகளை துன்புறுத்துபவர்கள் உழவுத்தொழிலுக்கு அதைப் பயன்படுத்தத்தானே செய்கின்றோம்;

அப்போது அதைத் துன்புறுத்துவது மட்டும் நியாயமா எனக் கேள்வி எழுப்புகின்றனர். நாம் அதற்கு ஒரு வேலை கொடுப்பது என்பது வேறு; அதை தேவையில்லாமல் துன்புறுத்துவது என்பது வேறு. ஒரு தொழிலாளியை நமக்குக் கீழ் அழைத்து ஒரு மாதம் முழுவதும் வேலை வாங்குகின்றோம்; அது மனித உரிமை மீறலாக யாரும் சொல்லமாட்டார்கள்; அதே நேரத்தில் அவரை தேவையில்லாமல் அவரை நூறுபேர் கூட்டமாக அடித்து உதைத்தால் அதை மனித உரிமை மீறல் என்போம்; அதுபோலத்தான் இதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வீர விளையாட்டா?

அடுத்ததாக ஜல்லிக்கட்டை ஆதரிப்பவர்கள் சொல்லும் காரணம் நமது வீரத்திற்கான பயிற்சிதான் இந்த விளையாட்டு என்று கூறுகின்றனர். இதுவும் தவறான வாதமாகும். ஒரு வீரத்திற்கான பயிற்சி என்பது தொடர்ச்சியாக இருக்க வேண்டும்; அப்போதுதான் அது பயிற்சியாகும். ஒருவர் கராத்தே பயிற்சி எடுப்பதாக வைத்துக் கொள்வோம்; அவர் ஆண்டு முழுவதும் அந்தப் பயிற்சியை எடுத்தால்தான் அது உண்மையிலேயே பயிற்சியாகும். வருடத்தில் ஏதாவது ஒரு நாள் மட்டும் அவர் கராத்தே பயிற்சி எடுத்துவிட்டு அது வீரப்பயிற்சி என்று சொல்வது பயிற்சியாக ஆகாது;

அதுபோலத் தான் ஆண்டுக்கு ஒரு தடவை ஜல்லிக்கட்டு போட்டியில் ஓடி வரும் காளைகளை 100க்கும் மேற்பட்டோர் சேர்ந்து அடக்குவதாகச் சொல்லிக் கொண்டு அதைக் கொடுமைப்படுத்துவது எப்படி வீரமாகும்? அது எப்படி பயிற்சியாகும்? மாடுகளை இருநூறு பேர் சேர்ந்து விரட்டுவது வீரமா? ஆண்டு முழுவதும் இந்த செயலைச் செய்தால் கூட அது வீரமாகக் கருதப்படாத நிலையில், வருடத்திற்கு ஒரு தடவை இதுபோல மாடுகளை வதை செய்துவிட்டு அந்தச் செயலை வீரப்பயிற்சி என்று சொல்வதை புத்திசாலிகள் யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்;

ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகளை அடக்கி ஆண்டுக்கு ஒருநாள் பயிற்சி எடுத்தால் நம் நாடு எதிரி நாட்டுடன் போர் செய்யும் போது, எதிரிநாட்டு இராணுவ வீரர்களை புரட்டி எடுத்துவிடலாம் என்று சொல்வது எப்படி சரியாகும்? வீரவிளையாட்டுப் பயிற்சி என்றால் தினமும் காளைகள் சீறிப்பாய்ந்து மக்களை முட்டித்தள்ளி காயப்படுத்தி வந்தால் மக்களைக் காப்பதற்காக காளை பிடிக்கும் பயிற்சி அவசியமாகலாம். அதுவும் ஒரே ஒரு நாள் செய்யாமல் அடிக்கடி செய்து பயிற்சி எடுக்க வேண்டும். காளைகளால் மக்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லாத போது பயிற்சி என்று சொல்வது பொருத்தமற்ற காரணமாகவே உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிருகங்களை எப்படி நாம் கையாள வேண்டும் என்று காட்டித்தந்துள்ளார்களோ, அந்த வழிமுறைகளுக்கு முற்றிலும் மாற்றமாக நடைபெறும் ஜல்லிக்கட்டை மேற்கண்ட காரணங்களாலும் முஸ்லிம்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும்.

Source : unsrvu ( 03/02/2017 )