Tamil Bayan Points

இஷா ஜமாஅத்தில் சேர்ந்து மஹ்ரிப் தொழலாமா?

கேள்வி-பதில்: தொழுகை

Last Updated on January 4, 2017 by Trichy Farook

இஷா ஜமாஅத்தில் சேர்ந்து மஹ்ரிப் தொழலாமா?
? வேலையின் காரணமாக ஒரு நாள் மக்ரிப் தொழுகையை விட்டு விட்டேன். இஷா தொழுகைக்கு இகாமத் சொல்லப் பட்டு விட்டது. இப்போது நான் மக்ரிப் தொழ வேண்டுமா? அல்லது இஷா தொழ வேண்டுமா? அல்லது இஷா ஜமாஅத்தில் சேர்ந்து மக்ரிப் தொழலாமா? விளக்கவும்.

ஏ. ஜெஹபர் சாதிக், அதிராம்பட்டிணம்

அகழ்ப் போரின் போது சூரியன் மறைந்த பின் உமர் (ரலி) அவர்கள் குறைஷிக் காஃபிர்களை ஏசிக் கொண்டே வந்து, “அல்லாஹ்வின் தூதரே! சூரியன் மறையும் வரை நான் அஸர் தொழவில்லையே!” என்று கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நானும் அஸர் தொழவில்லை” என்று கூறினார்கள். நாங்கள் பத்ஹான் என்ற பள்ளத்தாக்கை நோக்கிச் சென்றோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அஸர் தொழுகைக்காக உளூச் செய்தார்கள். நாங்களும் அதற்காக உளூச் செய்தோம். சூரியன் மறைந்த பின் அஸர் தொழுதார்கள். அதன் பின் மக்ரிப் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

நூற்கள்: புகாரி 596, முஸ்லிம் 1000, திர்மிதி 164

இந்த ஹதீஸில் மக்ரிப் தொழுகையின் நேரம் வந்து விட்டாலும் அஸரை முதலில் தொழுத பின்னரே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்ரிப் தொழுகின்றார்கள். இதை வைத்து தொழுகையைக் களாச் செய்யலாம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.

இதே அறிவிப்பு நஸயீயில் 655வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் போர்க் காலங்களில் தொழுவது தொடர்பான 4:102 வசனம் அருளப்படுவதற்கு முன்னர் இடது டைபெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த வசனம் அருளப்பட்ட பின் போர்க் காலங்களில் கூட தொழுகையை நேரம் தவறித் தொழுவதற்குத் தடை விதிக்கப் பட்டு விட்டது.

தூக்கம், மறதி ஆகிய காரணங்களைத் தவிர வேறு எதற்காகவும் தொழுகையை நேரம் தவறித் தொழுவதற்கு அனுமதியில்லை. எனினும் தூக்கம், மறதி அல்லாத வேறு காரணத்திற்காக லுஹர் தொழுகையை அஸருடனும், மக்ரிப் தொழுகையை இஷாவுடனும் சேர்த்து, “ஜம்உ’ ஆக தொழுவதற்கு அனுமதியுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் மக்ரிப், இஷாவை ஏழு ரக்அத்துகளாகவும், லுஹர் அஸரை எட்டு ரக்அத்துகளாகவும் தொழுவித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 543

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் பயமோ, மழையோ இன்றி லுஹரையும் அஸரையும் ஒரு நேரத்திலும், மக்ரிபையும் இஷாவையும் ஒரு நேரத்திலும் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : திர்மிதீ 172

தொழுகையை நேரம் தவறித் தொழுவதற்குத் தடை விதிக்கப்பட்டு விட்டாலும், இங்கு அகழ்ப் போர் குறித்த புகாரி 596வது ஹதீஸை நாம் ஆதாரமாகக் காட்டியிருப்பது, தொழுகையை வரிசை மாற்றித் தொழாமல் வரிசைப்படியே தொழ வேண்டும் என்பதற்காகத் தான்.

இஷா தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டாலும் மக்ரிப் தொழாமல் இஷா தொழுவதற்கு அல்லது இஷாவுக்குப் பின் மக்ரிப் தொழுவதற்கு அனுமதியில்லை. இமாம் ஒரு ரக்அத் முடித்த பின் இஷா ஜமாஅத்தில் சேர்ந்து மக்ரிப் தொழுது விட்டு பின்னர் இஷாவைத் தனியாகத் தொழுது கொள்ளலாம்.

இமாமுடைய நிய்யத்தும் பின்பற்றித் தொழுபவரின் நிய்யத்தும் வெவ்வேறாக இருக்கலாம் என்பதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது. கடமையான தொழுகையைப் பிற்படுத்தும் ஆட்சியாளர்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது, உரிய நேரம் வந்ததும் தொழுகையை நிறைவேற்றி விட்டு ஜமாஅத் நடக்கும் போது அதை நஃபிலாகத் தொழுது கொள்ளுமாறு ஒரு நபித்தோழருக்குக் கட்டளையிட்ட செய்தி முஸ்லிமில் 1027வது ஹதீஸில் இடம் பெற்றுள்ளது.

(குறிப்பு: 2004 மார்ச் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)