Tamil Bayan Points

இறை மார்க்கம்  ஓர் எளிய மார்க்கமே!

பயான் குறிப்புகள்: சந்தர்ப்ப உரைகள்

Last Updated on December 31, 2021 by Trichy Farook

இறை மார்க்கம்  ஓர் எளிய மார்க்கமே!

2:185 شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِۚ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَـصُمْهُ ؕ وَمَنْ کَانَ مَرِيْضًا اَوْ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَيَّامٍ اُخَرَؕ يُرِيْدُ اللّٰهُ بِکُمُ الْيُسْرَ وَلَا يُرِيْدُ بِکُمُ الْعُسْرَ

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (இது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அல்லாஹ் உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான். சிரமமானதை உங்களுக்கு நாடமாட்டான்.

(திருக்குர்ஆன்:2:185.)

இந்த வசனம் முதலாவதாக  புனித மாதமான ரமலானைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. இரண்டாவதாக,  அதில் அருளப்பட்ட புண்ணிய வேதமான குர்ஆனைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. மூன்றாவதாக, கடமையாக்கப்பட்ட நோன்பில் அளிக்கப்படுகின்ற சலுகையைப் பற்றிக் கூறுகின்றது. அதன் பின்னர், ‘அல்லாஹ் உங்களுக்கு எளிதானதையே நாடுகின்றான்; சிரமமானதை நாடமாட்டான்’ என்று சொல்கின்றது.

குறைந்தது பதினான்கு மணி நேரம், அதிலும் குறிப்பாக ஐரோப்பா போன்ற நாடுகளில் கோடை காலங்களில் பதினெட்டு மணி நேரம் பசி, பட்டினி, தாகத்துடன் கிடக்கின்ற உடலை வாட்டி வருத்துகின்ற ஒரு சிரமமான வணக்கத்தைக் கடமையாக்கி விட்டு, ‘உங்களுக்கு இறைவன் எளிதையே நாடுகின்றான்’ என்று சொல்வது  நம்மை கேலி செய்வது போன்று உள்ளதே  என்ற ஒரு கேள்வி  எழலாம்.

அது நியாயமான கேள்வி தான். அல்லாஹ் அடியார்களிடம் கேலி செய்வதை விட்டும் தூய்மையானவன் என்பதை நமது கவனத்தில் வைத்துக் கொண்டு இந்தக் கேள்விக்கு ஒரு சில உதாரணத்துடன் விடை காண்போம்.

ஒருவருக்கு உடலில் இதயத்தில் ஓர் அடைப்பு ஏற்பட்டு விட்டது. இதை அறுவை சிகிச்சை செய்து தான் நீக்க முடியும் என்றால் அதை அறுவை சிகிச்சை செய்து தான் நீக்கியாக வேண்டும். அவ்வாறு அறுவை சிகிச்சை செய்யும் சில  நாட்கள் மிகவும் சிரமமானவை. அதிலும் குறிப்பாக, அறுவை சிகிச்சை செய்கின்ற அந்த சில மணி நேரங்கள் இன்னும் சிரமமானவை. ஆனால் அதன் பின்னர் அது காலமெல்லாம் சுகமானதாகவும்  எளிமையானதாகவும் ஆகி விடுகின்றது.

அதுபோல் தான் ஒருவன் நோன்பு நோற்றிருக்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். அவனது நோன்பின் போது கடும் தாகமான நேரத்தில் அவன் உலூச் செய்கின்றான். அவ்வாறு உலூச் செய்கையில் நாவில் குளிர்ந்த சுவையான தண்ணீர் வாய் கொப்பளிப்பதற்காக வாயில் பாய்கின்றது. வாயில் பாய்கின்ற அந்தத் தண்ணீர் தங்கு தடையின்றி தொண்டைக் குழி வரை பயணிக்கின்றது. தொண்டைக் குழி என்ற பள்ளத்தில் இறங்குவதற்குப் பல மைல் தொலைவோ தூரமோ இல்லை. மயிரிழை தூரம் தான் உள்ளது. ஆனாலும் தாகம் நாக்கைச் சுருட்டினாலும் அது அதில்  இறங்குவதில்லை. போன வேகத்தில் திரும்ப வந்து விடுகின்றது.

காரணம் என்ன?

எல்லாம் வல்ல அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற அவனது  அச்சம் தான்.

இந்த இறையச்சத்தைத் தருவது தான் இந்த நோன்பின் நோக்கமாகும். அப்படிப்பட்ட இறையச்சத்தை உருவாக்குகின்ற  இந்த நோன்பு உண்மையில் ஓர் அறுவை சிகிச்சை போன்றதாகும். அறுவை சிகிச்சை முடிந்த பின் இதயத்தில் உள்ள அடைப்பு சரியாகி மொத்த உடலும் சீராகி விடுகின்றதோ அது போன்று நோன்பு நோற்பவரிடம் ஏற்பட்ட அடைப்புகள் எல்லாம் சரியாகி, நல்ல ரத்தம் பாய ஆரம்பித்து விடுகின்றது. அவனிடத்தில் கெட்ட குணங்கள் மறைந்து நற்குணங்கள் உருவாகத் துவங்கி விடுகின்றன.

இதற்கு இன்னோர் உதாரணத்தையும் கூறலாம். ரமலான் நோன்பு என்பது ஒரு குடிநீர் கிணறு தோண்டுவது போன்றாகும். ஒரு கிணறுக்காக பல இராட்சதக் கருவிகளைப் பயன்படுத்தி பூமியில் பல நூறு அடிகள் தோண்ட வேண்டும். தோண்டும் பணியின் ஊடே பாறை குறுக்கிடும் போது அவற்றை வெடி வைத்தும் தகர்க்க நேரிடும். இப்படிப்பட்ட கடினமான, பூமி அதிரக்கூடிய அளவுக்கு பாரமான பணிக்குப் பிறகு பூமியிலிருந்து ஊற்று நீர் பீறிடுகின்றது. பாறைகளிலிருந்து வெடித்து வருகின்ற, பளிங்கு போன்று  பளிச்சிட்டுப் பாய்கின்ற நீரைப் பார்த்த மாத்திரத்தில் பட்ட கஷ்டமெல்லாம் பறந்து  விடுகின்றது.  சுனைகளிலிருந்து சுதந்திரமாகத் துள்ளிக் குதித்துக் கொப்பளிக்கின்ற சுவை நீர் சுண்டிய முகத்தின் சுருக்கங்களை மகிழ்ச்சியில் விரிவடையச் செய்து விடுகின்றது.

தலைமுறை தலைமுறைக்கும் தாகம் தணிக்கும் தடாகம்  உருவாகி விடுகின்றது.

நோன்பும் இது போன்று தான். நோற்கும் போது சிரமம். நோன்பின் பயன்களைப் பார்க்கும் போது நோன்பின் சிரமங்கள் அத்தனையும் நம்மிடமிருந்து மறைந்து விடுகின்றன. இந்த பலன்களைப் பற்றித் தெரிவதற்கு நாம் ரொம்ப தூரம் செல்ல வேண்டியதில்லை. அந்த அருள் மிகு ரமலானிலேயே கண்கூடாக, கை மேல் பலனாகப் பார்க்கின்றோம்.

  1. கடமையான தொழுகைகளில் பள்ளிவாசல் நிரம்பி வழிதல்.
  2. இரவுத் தொழுகைகளுக்கு மக்கள் வெள்ளம்.
  3. தான தர்மங்கள் பொங்கி வழிதல்.
  4. பிந்திய பத்துகளில் லைலத்துல் கத்ரைத் தேடி இரவுகளை உயிர்ப்பித்தல்.
  5. குர்ஆன் இறங்கிய மாதத்தில் அதிகமதிகம் குர்ஆன் ஓதுதல்.
  6. நகை, நில புலன்கள், விளைச்சல், வணிக லாபம் ஆகியவற்றுக்கு ஜகாத் ரமலானில் தான் வழங்க வேண்டும் என்பதில்லை. இருப்பினும் ரமலானில் கோடிக்கணக்கான ஜகாத் ஏழை எளியவர்களை நோக்கிக் கரை புரளுதல்.

இப்படி நோன்பின் மாண்புகளை நாம் பார்க்கின்றோம். ஒவ்வொரு ரமலான் வந்து சென்றதும் அது கொடுத்த பயிற்சியில் எத்தனையோ சகோதரர்கள் இரவுத் தொழுகையைத் தொடர்வதை நாம் பார்க்கின்றோம். ரமலான் ஏற்படுத்திய தாக்கத்திற்கு இதை ஓர் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இவை எல்லாம் ரமலான் ஏற்படுத்திய வெளிப்படையான  மாற்றங்கள்! அவை தான் செயல்பாடுகளில் பளிச்சிடுகின்றன.

அதே சமயம் அது ஏற்படுத்திய உளவியல் ரீதியான மாற்றங்களை நாம் பட்டியல் இட முடியாது.  அவை அபரிமிதமானவை. அவை எந்த அளவுகோலிலும் அளவிட முடியாதவை. அந்த அளவுக்கு ரமலான் மாபெரும் பலன்களை அளிக்கக் கூடிய ஓர் அருட்கொடையாகும். இப்படிப்பட்ட ரமலான் நோன்பு கஷ்டமானது என்றாலும் அது ஏற்படுத்துகின்ற நல்ல விளைவுகளினால் அது ஒரு கஷ்டமில்லை என்றாகி விடுகின்றது. அந்த அடிப்படையில் எழுப்பப்பட்ட கேள்வி அர்த்தமற்றதாகி விடுகின்றது.

அடுத்து  ‘‘அல்லாஹ் உங்களுக்கு எளிதானதையே நாடுகின்றான். சிரமமானதை நாடமாட்டான்” என்று அல்லாஹ் கூறக் கூடிய கருத்தை இப்போது பார்ப்போம். நோன்பின் போது பயணம் மேற்கொண்டாலோ அல்லது நோய் ஏற்பட்டு விட்டாலோ அதற்காக அந்த ரமலானிலேயே உடலை வருத்திக் கொண்டு நோன்பு நோற்க வேண்டிய கட்டாயமில்லை என்று எளிமையை மக்களுக்கு வழங்கியதை இங்கே குறிப்படுகின்றான் என்பதை நாம் அனைவரும் அறிவோம். நோன்பில் மட்டுமில்லாமல் ஏனைய வணக்கங்களிலும் இதைத் தான் வழிமுறையாகக் கொண்டிருக்கின்றான்.

தொழுகைக்காக உலூவையும் அது போல் இந்திரியம் வெளிப்பட்டால் குளிப்பையும் கடமையாக்கிய அல்லாஹ், தண்ணீர் இல்லாத கட்டத்தில் மண்ணைத் தொட்டு தயம்மம் செய்ய அனுமதி அளித்திருக்கிறான். பயணத்தின் போது நான்கு ரக்கஅத்துகளை இரண்டாகக் குறைத்துக் கொள்ள அனுமதி.

பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் தொழுகை ரத்து.

இதுபோன்ற சில எடுத்துக்காட்டுகள் இந்த மார்க்கத்தைப் பின்பற்றுவதற்கு அல்லாஹ் எளிமையாக்கியிருப்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

ரமலான் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையில் இமாமாக நின்று தொழுவிப்பதைத் தவிர்த்ததும் தன் சமுதாயத்திற்கு எளிதையே நாடியுள்ளார்கள் என்பதை உணர்த்துகின்றது.

ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் இரவில் தம் அறையில் தொழுபவர்களாக இருந்தனர். அவர்களின் தலையை மக்கள் பார்க்கும் அளவுக்கு அந்த அறையின் சுவர் குட்டையாக இருந்தது. மக்கள் அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள். மறுநாள் காலையில் மக்கள் இது பற்றிப் பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். இரண்டாம் நாளில் நபி(ஸல்) அவர்கள் தொழுதபோது மக்களும் அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள். இவ்வாறு இரண்டு மூன்று இரவுகள் செய்யலானார்கள். அதன்பின்னர் நபி(ஸல்) அவர்கள் தொழவராமல் உட்கார்ந்துவிட்டார்கள். காலையில் மக்கள் இது பற்றிப் பேசிக் கொள்ளலானார்கள். ‘இரவுத் தொழுகை உங்களின் மீது கடமையாக்கப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சினேன்; (அதனாலேயே வரவில்லை.)’ என்று கூறினார்கள்.

நூல்: புகாரி-729 , 924

ஆனால் அல்லாஹ்வுடைய, அவனுடைய திருத்தூதர் (ஸல்) அவர்களுடைய அணுகுமுறைக்கு மாற்றமாக ஆலிம்கள் மார்க்கத்தைக் கடினமானதாக ஆக்கி விட்டார்கள்.

  1. தொழுகை எனும் வணக்கத்தில் அன்றாடம் அந்த அந்தந்த வேளைகளில் தொழுவதைத் தான் அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். பயணத்தில் இருந்தால் ஒரு தொழுகையை மறு தொழுகையுடன் சேர்த்துத் தொழுது கொள்ள அனுமதியளித்திருக்கின்றான். ஆனால் அந்தத் தொழுகையை ஒத்திப் போட்டு அல்லது தள்ளி வைத்து களாவாகத் தொழுவதற்கு அனுமதியில்லை, ஆனால் இவர்களோ மார்க்கத்தில் களா என்ற பெயரில் இல்லாததைக் கடமையாக்கி வைத்திருக்கின்றனர்.

ஒருவர் 16 வயதில் பருவம் அடைந்திருக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவர் தன் 50 வயது வரை தொழாமல் இருந்து பின்னர் குற்ற உணர்வு ஏற்பட்டு அவர் தொழ முன் வருகின்ற போது, நீ கடந்த 34 ஆண்டுகளுக்கான அத்தனை ஐவேளைத் தொழுகைகளையும் சேர்த்துத் தொழ வேண்டும் என்று இவர்கள் மார்க்கத் தீர்ப்பு அளிக்கின்றனர்.

திருந்தி வந்தவர் அவ்வளவு தான் திரும்ப போய் விடுகின்றார். இவ்வளவு பெரிய கடினத்தையும், கஷ்டத்தையும் மக்கள் மீது இந்த ஆலிம்கள் மார்க்கம் என்ற பெயரில் திணித்து அநியாமும் அக்கிரமும் புரிகின்றனர். இது தொழுகை என்ற வணக்கத்தில் மக்கள் மீது ஏற்படுத்திய  கடினமும் கஷ்டமும் ஆகும்.

ஜகாத் எனும் வணக்கத்தில் ஆண்டு தோறும் கொடுத்த பொருளுக்கே மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற ஜகாத்  வணக்கத்திலும் கடினத்தை ஏற்படுத்தினர்.

இந்த ஆலிம்கள் ரமலான் மாதத்திலாவது, ரமலான் தொடர்பான வசனத்திலிருந்து பாடம் பெற்று அல்லாஹ் எளிதாக்கிய மார்க்கத்தை அதன் தூய வடிவில் தொடர முன் வருவார்களா? இந்த ரமலான் அவர்களுக்குப் பாடம் தரும் என்று எதிர்பார்ப்போமாக!