Tamil Bayan Points

இறைவசனம் இறங்கிய நேரங்கள்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 2

Last Updated on October 7, 2023 by Trichy Farook

முன்னுரை

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!

முதன்முதலில் நபி (ஸல்) அவர்களுக்கு ஹிரா குகையில் தான் வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலம் முதல் இறைச்செய்தி அருளப்பட்டது. அதன் பின்னர், பல்வேறு சந்தர்ப்பங்களில் நபி (ஸல்) அவர்களுக்கு காலகட்டத்திற்கேற்ப இறைச்செய்திகள் வந்தன. சில செய்திகள் முஹம்மதை பாராட்டியும், வழிகாட்டியும், அறிவுரை கூறியும், எச்சரித்தும், கண்டித்தும் வந்துள்ளது. அவ்வாறு இறைவசனங்கள் இறக்கப்பட்ட நேரங்களை பற்றி இந்த உரையில் காண்போம்.

திருக்குர்ஆன் அருளப்பட்ட காலகட்டம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த மக்கள் பல கடவுள் நம்பிக்கை உடையோராக இருந்தார்கள். ஏராளமான மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடந்தனர்!

  • கடவுளை நிர்வாணமாக வழிபட்டனர்!
  • பெண் குழந்தைகள் பிறப்பதைக் கேவலமாகக் கருதியதுடன் பெண் குழந்தை பிறந்தால் அதை உயிருடன் புதைப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்!
  • குடம் குடமாக மதுபானங்கள் அருந்தினார்கள்!
  • காமக் களியாட்டத்தில் மூழ்கித் திளைத்தனர்!
  • பெண்களை ஆடு மாடுகளைப் போன்று கருதினார்கள்!
  • தந்தை இறந்து விட்டால் தந்தையின் மனைவியை மகன் பயன்படுத்திக் கொள்வது சர்வசாதாரணமாக இருந்தது!
  • சாதி வேற்றுமையும் தலை விரித்தாடியது! 
  • நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தக் குலத்தில் பிறந்தார்களோ அந்தக் குலம் – குறைஷிக் குலம் – மிகவும் உயர்ந்த குலம் எனவும் மற்றவர்கள் அற்பமானவர்கள் எனவும் விதி செய்திருந்தனர்!
  • அரபுமொழி பேசுவோர் மட்டுமே மனிதர்கள் என்றும், மற்றமொழி பேசுவோர் அஜமிகள் (கால்நடைகள்) என்றும் கூறும் அளவுக்கு அவர்களிடம் மொழிவெறி மிகைத்திருந்தது.
  • மனித உயிர்களைக் கொன்று குவிப்பது மிகச் சிறிய குற்றமாகக் கூட அவர்களுக்குத் தோன்றவில்லை.
  • அற்பமான சண்டைகளுக்காகக் கூட கொலை செய்வார்கள்!
  • தமது குடும்பத்தில் ஒருவர் கொல்லப்பட்டால் கொலையாளியைப் பழி வாங்காமல் விடமாட்டார்கள். அவரைத் தம்மால் பழி வாங்க முடியாவிட்டால் தமது வாரிசுகளுக்கு வலியுறுத்திச் செல்வார்கள். பத்து தலைமுறைக்குப் பிறகாவது கொலையாளியின் குடும்பத்தில் ஒருவனைக் கொன்று கணக்குத் தீர்ப்பார்கள்.                                   

இத்தகைய நிலையைக் கண்டு மனம் வெறுத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சமுதாயத்தின் நடவடிக்கைகள் சரியானவை அல்ல என்று திட்டவட்டமாக உணர்ந்தார்கள். எனவே, தமது நாற்பதாம் வயதில் மக்காவிற்கு வெளியே உள்ள ‘ஹிரா’ எனும் குகைக்குச் சென்று தனிமையில் சிந்திப்பதை வழக்கமாகக் கொள்ளலானார்கள். பல நாட்களுக்குத் தேவையான உணவைத் தயார் செய்து கொண்டு குகையிலேயே தங்கி விடுவார்கள். உணவு முடிந்ததும் வீட்டுக்கு வந்து உணவு தயாரித்துக் கொண்டு மறுபடியும் குகைக்குச் சென்று விடுவார்கள்.

இவ்வாறு குகையில் இருந்தபோது வானத்தையும், பூமியையும் தொட்டுக் கொண்டிருக்கும் அளவுக்கு பிரம்மாண்டமான தோற்றத்தில் ஒருவர் நிற்பதைக் கண்டார்கள். அவர் ஜிப்ரீல் எனும் வானவர் ஆவார். அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறுகக் கட்டியணைத்து ‘ஓது’ எனக் கூறியபோது தமக்கு ஓதத் தெரியாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மீண்டும் அவர் ‘ஓது’ எனக் கூற அப்போதும் தெரியாது என்று பதிலளித்தார்கள். பின்னர் அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறுகக் கட்டியணைத்து “படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக” என்று தொடங்கும் சில வார்த்தைகளைக் கூறினார்.

اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ
خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقٍ
اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ
الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ
عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ

(முஹம்மதே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவன் மனிதனை கருவுற்ற சினைமுட்டையிலிருந்து படைத்தான். ஓதுவீராக! உமது இறைவன் கண்ணியமானவன். அவனே எழுதுகோலால் கற்றுத் தந்தான். அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத் தந்தான்.

(அல்குர்ஆன்: 96:1-5)

இப்படித்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்டு முதல் செய்தியும் அருளப்பட்டது. ஆனாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிர்ச்சியடைந்து அச்சம் கொண்டார்கள். தமது மனைவியிடம் வந்து இதைக் கூறினார்கள்.

 فَقَالَتْ خَدِيجَةُ: كَلَّا وَاللَّهِ مَا يُخْزِيكَ اللَّهُ أَبَدًا، إِنَّكَ لَتَصِلُ الرَّحِمَ، وَتَحْمِلُ الكَلَّ، وَتَكْسِبُ المَعْدُومَ، وَتَقْرِي الضَّيْفَ، وَتُعِينُ عَلَى نَوَائِبِ الحَقِّ،

“இறைவன் உங்களைக் கைவிடமாட்டான்; மக்களுக்கு நீங்கள் உதவுகிறீர்கள்; ஏழைகளுக்கு வாரி வழங்குகிறீர்கள்; உறவினர்களை உபசரிக்கிறீர்கள்; எனவே அல்லாஹ் உங்களைக் கைவிட மாட்டான்” என்று அவர்களின் மனைவி கதீஜா அவர்கள் ஆறுதல் படுத்தினார்கள்.

ஆயினும்,  தமது ஆறுதல் போதிய பயனளிக்காததைக் கண்ட கதீஜா அவர்கள் தமது உறவினர் வரகாவிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்துச் சென்றார்கள். இவர் முந்தைய வேதங்களைக் கற்றறிந்து, கிறித்தவ மார்க்கத்தையும் தழுவியிருந்தார்.

“நீர் இறைவனின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளீர்; உம்மை உமது சமுதாயத்தினர் ஊரை விட்டே வெளியேற்றும் நிலையை அடைவீர்; ஏனெனில், இறைத்தூதர்கள் பிரச்சாரம் செய்யும்போது இதுதான் நடந்துள்ளது” என்று அவர் கூறி நம்பிக்கையூட்டினார்.

நூல் : புகாரி-3  

இப்படி ஆரம்பித்த இறைச்செய்தியின் வருகை சிறிது சிறிதாகச் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப 23 ஆண்டுகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. 23 ஆண்டுகளில் சிறிது சிறிதாக அருளப்பட்ட இறைச் செய்தியின் தொகுப்பே திருக்குர்ஆன்.

நபியவர்கள் இரவு தொழுகைக்கு எழாமல் இருந்தபோது இறங்கிய இறைவசனம்

«اشْتَكَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ يَقُمْ لَيْلَتَيْنِ – أَوْ ثَلاَثًا -»، فَجَاءَتْ امْرَأَةٌ فَقَالَتْ: يَا مُحَمَّدُ، إِنِّي لَأَرْجُو أَنْ يَكُونَ شَيْطَانُكَ قَدْ تَرَكَكَ، لَمْ أَرَهُ قَرِبَكَ مُنْذُ لَيْلَتَيْنِ – أَوْ ثَلاَثَةٍ – فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {وَالضُّحَى وَاللَّيْلِ إِذَا سَجَى، مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى} [الضحى: 2]

(ஒருமுறை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டபோது ‘இரண்டு இரவுகள்’ அல்லது ‘மூன்று இரவுகள்’ (இரவுத் தொழுகைக்காகக் கூட) அவர்கள் எழவில்லை. அப்போது ஒரு பெண் வந்து, ‘முஹம்மதே! உம்முடைய ஷைத்தான் உம்மைக் கைவிட்டுவிட்டான் என நினைக்கிறேன். (அதனால்தான்) ‘இரண்டு இரவுகளாக’ அல்லது ‘மூன்று இரவுகளாக’ உம்மை ஷைத்தான் நெருங்கி வந்ததை நான் பார்க்கவில்லை’ என்று கூறினாள்.

அப்போது மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ்,

وَالضُّحَى (1) وَاللَّيْلِ إِذَا سَجَى (2) مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى (3)

முற்பகல் மீது சத்தியமாக! மூடிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக! (முஹம்மதே!) உமது இறைவன் உம்மைக் கைவிடவும் இல்லை; வெறுக்கவும் இல்லை.

எனும் (அல்குர்ஆன்: 93:1-3) வசனங்களை அருளினான்.

அறிவிப்பவர் : ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ் இப்னி சுஃப்யான் (ரலி)
நூல் : புகாரி-4950 

நபியவர்களின் விருந்தினருக்கு உணவளித்தபோது இறங்கிய இறைவசனம்

ஒருவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து எனக்கு (தாங்க முடியாத பசித்) துன்பம் ஏற்பட்டுள்ளது, இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரிடம் ஆளனுப்பி (அவர்களிடம் உணவு ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டு வரச்சொன்)னார்கள். அவர்களிடம் ஏதும் இருக்கவில்லை. அப்போது, ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), ‘இன்றிரவு இவருக்கு விருந்தளிக்கும் ஆள் உண்டா? அவருக்கு அல்லாஹ் அருள் புரிவான்’ என்று கேட்டார்கள்.

அப்போது அன்சாரிகளில் ஒருவர், ‘நான் (இவருக்கு விருந்தளிக்கிறேன்), இறைத்தூதர் அவர்களே!’ என்று சொல்லி (அவரை அழைத்துக் கொண்டு) தம் வீட்டாரிடம் சென்று தம் துணைவியாரை நோக்கி, ‘(இவர்) இறைத்தூதர் (ஸல்) அவர்களின் விருந்தாளி. (இவருக்குத் தராமல்) எதனையும் நீ (உன்னிடமே) சேமித்து வைத்துக்கொள்ளாதே!’ என்று கூறினார்.

அதற்கு அவர் மனைவி, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நம் குழந்தைகளின் உணவைத் தவிர என்னிடம் வேறெதுவுமில்லை’ என்று பதிலளித்தார். அவர், ‘(நம்) குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களை (எப்படியாவது சமாதானப்படுத்தி) தூங்கச் செய்துவிடு! பிறகு நீ வந்து, (வீட்டிலிருக்கும் உணவைத் தயாராக எடுத்து வைத்துவிட்டு, விளக்கை ஏற்றிவிடுவது போல் பாவனை செய்து) விளக்கை அணைத்துவிடு! (இருப்பதை விருந்தாளிக்குக் கொடுத்துவிட்டு) இன்றிரவு நாம் வயிற்றைச் சுருக்கிக் கொள்வோம்’ என்று கூறினார்.

அவ்வாறே அவர் (மனைவி) செய்தார். பிறகு, (விருந்தளித்த) அம்மனிதர் காலையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘இன்னார் இன்னாரை (உங்கள் இருவரை)க் கண்டு மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ் ‘வியப்படைந்தான்’ அல்லது (மகிழ்ச்சியால்) ‘சிரித்துக்கொண்டான்’ என்று கூறினார்கள். அப்போது மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ்,

‘தமக்கே தேவை இருந்தும் கூட தம்மைவிடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள் எனும் கீழ்க்கண்ட (அல்குர்ஆன்: 59:9) வது வசனத்தை அருளினான்.

وَالَّذِيْنَ تَبَوَّؤُ الدَّارَ وَالْاِيْمَانَ مِنْ قَبْلِهِمْ يُحِبُّوْنَ مَنْ هَاجَرَ اِلَيْهِمْ وَلَا يَجِدُوْنَ فِىْ صُدُوْرِهِمْ حَاجَةً مِّمَّاۤ اُوْتُوْا وَيُـؤْثِرُوْنَ عَلٰٓى اَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ ؕ وَمَنْ يُّوْقَ شُحَّ نَـفْسِهٖ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‌ۚ

அவர்களுக்கு முன்பே நம்பிக்கையையும், இவ்வூரையும் தமதாக்கிக் கொண்டோருக்கும் (உரியது). ஹிஜ்ரத் செய்து தம்மிடம் வருவோரை அவர்கள் நேசிக்கின்றனர். அவர்களுக்குக் கொடுக்கப்படுவது குறித்து தமது உள்ளங்களில் காழ்ப்புணர்வு கொள்ள மாட்டார்கள். தமக்கு வறுமை இருந்தபோதும் தம்மை விட (அவர்களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி-4889 

வியாபாரத்தையும், வீணானதையும் காணும் போது இறங்கிய இறைவசனம்

أَقْبَلَتْ عِيرٌ يَوْمَ الجُمُعَةِ، وَنَحْنُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَثَارَ النَّاسُ إِلَّا اثْنَيْ عَشَرَ رَجُلًا، فَأَنْزَلَ اللَّهُ: {وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انْفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا} [الجمعة: 11]

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் வெள்ளிக்கிழமை (ஜுமுஆத் தொழுகையில்) இருந்தபோது, (வியாபாரத்திற்காக உணவுப் பொருட்களை ஏற்றிக்கொண்டு) ஒட்டகக் குழு ஒன்று வந்தது. (அதைக் கண்ட மாத்திரத்தில், நபிகளாரின் முன்னிலையிலிருந்த மக்கள்) கலைந்து சென்றார்கள். பன்னிரண்டு நபர்களே எஞ்சியிருந்தனர். அப்போதுதான் ‘அவர்கள் வியாபாரத்தையோ விளையாட்டு வேடிக்கையையோ கண்டுவிட்டால் அவற்றின் பக்கம் விரைந்து சென்றுவிடுகின்றனர்’ எனும் கீழ்க்கண்ட (அல்குர்ஆன்: 62:11) வது வசனத்தை அல்லாஹ் அருளினான்.

وَاِذَا رَاَوْا تِجَارَةً اَوْ لَهْوَا۟ اۨنْفَضُّوْۤا اِلَيْهَا وَتَرَكُوْكَ قَآٮِٕمًا‌ ؕ قُلْ مَا عِنْدَ اللّٰهِ خَيْرٌ مِّنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ‌ ؕ وَاللّٰهُ خَيْرُ الرّٰزِقِيْنَ

“(முஹம்மதே) அவர்கள் வியாபாரத்தையோ, வீணானதையோ கண்டால் நின்ற நிலையில் உம்மை விட்டு விட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர். அல்லாஹ்விடம் இருப்பது வீணானதையும், வியாபாரத்தையும் விட சிறந்தது. அல்லாஹ் உணவளிப்போரில் சிறந்தவன்” எனக் கூறுவீராக!. (அல்குர்ஆன்: 62:11)

அறிவிப்பவர் : ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி)
நூல் : புகாரி-4899 

கிப்லா திசையை மாற்றி தொழும்போது இறங்கிய இறைவசனம்

‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுதார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவை நோக்கித் தொழ வேண்டுமென ஆசைப்பட்டார்கள். அப்போது ‘நீர் வானத்தை நோக்கி உம்முடைய முகத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருப்பதை அறிவோம்’ எனும் கீழ்க்கண்ட (அல்குர்ஆன்: 02:144) வசனத்தை அல்லாஹ் அருளினான். உடனே கஅபாவை முன்னோக்கித் தொழ ஆரம்பித்தார்கள்.

قَدْ نَرٰى تَقَلُّبَ وَجْهِكَ فِى السَّمَآءِ‌‌ۚ فَلَـنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضٰٮهَا‌ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَـرَامِؕ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوْا وُجُوْهَكُمْ شَطْرَهٗ ‌ؕ وَاِنَّ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ لَيَـعْلَمُوْنَ اَنَّهُ الْحَـقُّ مِنْ رَّبِّهِمْ‌ؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُوْنَ

(முஹம்மதே!) உம்முடைய முகம் வானத்தை நோக்கி அடிக்கடி திரும்புவதைக் காண்கிறோம். எனவே நீர் விரும்புகிற கிப்லாவை நோக்கி உம்மைத் திருப்புகிறோம். எனவே உமது முகத்தை (கஅபா எனும்) புனிதப்பள்ளியின் திசையில் திருப்புவீராக! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! “இதுவே தமது இறைவனிடமிருந்து வந்த உண்மை” என்று வேதம் கொடுக்கப்பட்டோர் அறிவார்கள். அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.

(அல்குர்ஆன்: 2:144)

سَيَقُوْلُ السُّفَهَآءُ مِنَ النَّاسِ مَا وَلّٰٮهُمْ عَنْ قِبْلَتِهِمُ الَّتِىْ كَانُوْا عَلَيْهَا ‌ؕ قُل لِّلّٰهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ ؕ يَهْدِىْ مَنْ يَّشَآءُ اِلٰى صِراطٍ مُّسْتَقِيْمٍ

“(முஸ்லிம்கள்) ஏற்கனவே இருந்த தமது கிப்லாவை விட்டும் ஏன் திரும்பி விட்டனர்?” என்று மனிதர்களில் அறிவிலிகள் கேட்பார்கள். “கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. அவன் நாடியோரை நேரான வழியில் செலுத்துகிறான்” என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 02:142) என்ற வசனம் அருளப்பட்டதும் ஒருவர் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டு வெளியே வந்து அன்ஸாரிக் கூட்டத்தாரிடம் சென்றார். அவர்கள் பைத்துல் முகத்தஸை நோக்கி அஸர் தொழுது கொண்டிருந்தபோது, ‘நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதேன். அவர்கள் கஅபாவை முன்னோக்கித் தொழுதார்கள் என்று நான் சாட்சி சொல்கிறேன்’ என்று அவர் அவர்களிடம் கூறினார். உடனே தொழுது கொண்டிருந்தவர்கள் கஅபாவை முன்னோக்கித் திரும்பினார்கள்’.

அறிவிப்பவர் : பராஉ இப்னு ஆஸிப் (ரலி)
நூல் : புகாரி-399 

இருவர் சண்டையிடும் போது சமாதானம் செய்ய வேண்டி இறங்கிய இறைவசனம்

قِيلَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَوْ أَتَيْتَ عَبْدَ اللَّهِ بْنَ أُبَيٍّ، «فَانْطَلَقَ إِلَيْهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَكِبَ حِمَارًا، فَانْطَلَقَ المُسْلِمُونَ يَمْشُونَ مَعَهُ وَهِيَ أَرْضٌ سَبِخَةٌ»، فَلَمَّا أَتَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِلَيْكَ عَنِّي، وَاللَّهِ لَقَدْ آذَانِي نَتْنُ حِمَارِكَ، فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ مِنْهُمْ: وَاللَّهِ لَحِمَارُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَطْيَبُ رِيحًا مِنْكَ، فَغَضِبَ لِعَبْدِ اللَّهِ رَجُلٌ مِنْ قَوْمِهِ، فَشَتَمَهُ، فَغَضِبَ لِكُلِّ وَاحِدٍ مِنْهُمَا أَصْحَابُهُ، فَكَانَ بَيْنَهُمَا ضَرْبٌ بِالْجَرِيدِ وَالأَيْدِي وَالنِّعَالِ، فَبَلَغَنَا أَنَّهَا أُنْزِلَتْ: {وَإِنْ طَائِفَتَانِ مِنَ المُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا} [الحجرات: 9]

நபி (ஸல்) அவர்களிடம், ‘தாங்கள் அப்துல்லாஹ் இப்னு உபையிடம் வந்தால் நன்றாயிருக்கும்’ என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அவனிடம் செல்ல ஒரு கழுதையில் ஏறினார்கள். முஸ்லிம்களும் நபி (ஸல்) அவர்களுடன் நடந்து சென்றார்கள். அவர்கள் சென்ற பாதை உவர் நிலமாக இருந்தது. அவனை நபி (ஸல்) அவர்கள் சென்றடைந்தபோது அவன், ‘தூர விலகிப் போ! அல்லாஹ்வின் மீதாணையாக! உன் கழுதையின் துர்நாற்றம் என்னைத் துன்புறுத்திவிட்டது’ என்று கூறினான்.

அப்போது அவர்களிடையே இருந்த அன்சாரி (தோழர்) ஒருவர், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதருடைய கழுதை உன்னை விட நல்ல வாசனையுடையதாகும்’ என்று கூறினார். அப்துல்லாஹ்வுக்காக அவனுடைய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் ஆத்திரமடைந்து அந்த அன்சாரியை ஏசினார்.

அந்த இருவருக்காகவும் அவரவருடைய நண்பர்கள் கோபமடைந்தார்கள். தங்களுக்கிடையே ஈச்சங் (கிளையின்) குச்சியாலும், கைகளாலும் செருப்புகளாலும் அடித்துக் கொண்டார்கள். அப்போது,

‘மேலும், இறைநம்பிக்கையாளர்களில் இரண்டு குழுவினர் தங்களுக்குள் சண்டையிட நேர்ந்தால் அவர்களிடையே சமாதானம் செய்து வையுங்கள்’ (அல்குர்ஆன்: 49:09) என்னும் கீழ்க்கண்ட வசனம் அருளப்பட்டிருக்கிறது என்னும் செய்தி எங்களுக்கு எட்டியது.

وَاِنْ طَآٮِٕفَتٰنِ مِنَ الْمُؤْمِنِيْنَ اقْتَتَلُوْا فَاَصْلِحُوْا بَيْنَهُمَا‌ۚ فَاِنْۢ بَغَتْ اِحْدٰٮهُمَا عَلَى الْاُخْرٰى فَقَاتِلُوا الَّتِىْ تَبْغِىْ حَتّٰى تَفِىْٓءَ اِلٰٓى اَمْرِ اللّٰهِ ‌ۚ فَاِنْ فَآءَتْ فَاَصْلِحُوْا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَاَقْسِطُوْا ؕ‌ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُقْسِطِيْنَ‏

நம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள்! அக்கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள்! நீதி செலுத்துங்கள்! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். (அல்குர்ஆன்: 49:09)

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி-2691 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) எவ்வாறு துவங்கிற்று?

أَنَّ الحَارِثَ بْنَ هِشَامٍ رَضِيَ اللَّهُ عَنْهُ سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ يَأْتِيكَ الوَحْيُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحْيَانًا يَأْتِينِي مِثْلَ صَلْصَلَةِ الجَرَسِ، وَهُوَ أَشَدُّهُ عَلَيَّ، فَيُفْصَمُ عَنِّي وَقَدْ وَعَيْتُ عَنْهُ مَا قَالَ، وَأَحْيَانًا يَتَمَثَّلُ لِيَ المَلَكُ رَجُلًا فَيُكَلِّمُنِي فَأَعِي مَا يَقُولُ»

ஹாரிஸ் இப்னு ஹிஷாம் (ரலி) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு இறைச்செய்தி எவ்வாறு வருகிறது?’ எனக் கேட்டதற்கு, ‘சில வேளைகளில் அது மணி ஓசையைப் போன்று என்னிடம் வரும். அவ்வாறு வருவது எனக்கு மிகக் கடினமாக இருக்கும். அவர் (வானவர்) கூறியதை நான் நினைவுபடுத்திய நிலையில் அவர் என்னைவிட்டுப் பிரிந்துவிடுவார். மேலும், சில வேளைகளில் அ(வ்வான)வர் ஓர் ஆடவர் போன்று எனக்குக் காட்சியளித்து, என்னுடன் உரையாடுவார். அப்போது அவர் கூறுவதை நினைவிலிருத்திக் கொள்வேன்’ என்று இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

மேலும், ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

‘கடும் குளிரான நாள்களில் நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) இறங்குவதை கண்டேன். அவர் (வானவர்) நபி (ஸல்) அவர்களை விட்டு விலகிச் செல்லும்போது (குளிரிலும்) அவர்களின் நெற்றியிலிருந்து வியர்வை சொட்டும்’ என கூறினார்.

அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி)
நூல் : புகாரி-2

இரவுத் தொழுகையை பற்றி இறைவசனம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் மிகவும் சிரமத்திற்குரிய நிலையிலும், பலவீனமான நிலையிலும் இருந்தபோது கீழ்க்கண்ட வசனம் அருளப்படுகிறது.

اِنَّ رَبَّكَ يَعْلَمُ اَنَّكَ تَقُوْمُ اَدْنىٰ مِنْ ثُلُثَىِ الَّيْلِ وَ نِصْفَهٗ وَثُلُثَهٗ وَطَآٮِٕفَةٌ مِّنَ الَّذِيْنَ مَعَكَ‌ؕ وَاللّٰهُ يُقَدِّرُ الَّيْلَ وَالنَّهَارَ‌ؕ عَلِمَ اَنْ لَّنْ تُحْصُوْهُ فَتَابَ عَلَيْكُمْ‌ فَاقْرَءُوْا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْاٰنِ‌ؕ عَلِمَ اَنْ سَيَكُوْنُ مِنْكُمْ مَّرْضٰى‌ۙ وَاٰخَرُوْنَ يَضْرِبُوْنَ فِى الْاَرْضِ يَبْتَغُوْنَ مِنْ فَضْلِ اللّٰهِ‌ۙ وَاٰخَرُوْنَ يُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ ۖ  فَاقْرَءُوْا مَا تَيَسَّرَ مِنْهُ‌ ۙ وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاَقْرِضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا‌ ؕ وَمَا تُقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ مِّنْ خَيْرٍ تَجِدُوْهُ عِنْدَ اللّٰهِ هُوَ خَيْرًا وَّاَعْظَمَ اَجْرًا‌ ؕ وَاسْتَغْفِرُوا اللّٰهَ ‌ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ

“(முஹம்மதே!) நீரும், உம்முடன் உள்ள ஒரு தொகையினரும் இரவில் மூன்றில் இரு பகுதிக்கு நெருக்கமாகவும், இரவில் பாதியும், இரவில் மூன்றில் ஒரு பகுதியும் நின்று வணங்குகின்றீர்கள்” என்பதை உமது இறைவன் அறிவான். அல்லாஹ்வே இரவையும், பகலையும் அளவுடன் அமைத்துள்ளான். நீங்கள் அதைச் சரியாகக் கணிக்க மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிவான். எனவே அவன் உங்களை மன்னித்தான்.

ஆகவே குர்ஆனில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள். உங்களில் நோயாளிகளும், அல்லாஹ்வின் அருளைத் தேடி பூமியில் பயணம் செய்வோரும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும் உருவாவார்கள் என்பதை அவன் அறிந்து வைத்துள்ளான். எனவே அதில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள்! தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஜகாத் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுங்கள்! உங்களுக்காக நீங்கள் முற்படுத்தும் நன்மையை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். அதுவே சிறந்தது. மகத்தான கூலி. அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன்: 73:20)

செவியும், பார்வைகளும், தோல்களும் எதிராக சாட்சியம் அளிக்கும் என்று இறங்கிய இறைவசனம்

كَانَ رَجُلاَنِ مِنْ قُرَيْشٍ وَخَتَنٌ لَهُمَا مِنْ ثَقِيفَ – أَوْ رَجُلاَنِ مِنْ ثَقِيفَ وَخَتَنٌ لَهُمَا مِنْ قُرَيْشٍ – فِي بَيْتٍ، فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ: أَتُرَوْنَ أَنَّ اللَّهَ يَسْمَعُ حَدِيثَنَا؟ قَالَ: بَعْضُهُمْ يَسْمَعُ بَعْضَهُ، وَقَالَ بَعْضُهُمْ: لَئِنْ كَانَ يَسْمَعُ بَعْضَهُ لَقَدْ يَسْمَعُ كُلَّهُ، فَأُنْزِلَتْ: {وَمَا كُنْتُمْ تَسْتَتِرُونَ أَنْ يَشْهَدَ عَلَيْكُمْ سَمْعُكُمْ وَلاَ أَبْصَارُكُمْ} [فصلت: 22] الآيَةَ

(ஒருமுறை) ‘குறைஷியரில் இருவரும் அவர்களின் துணைவியரின் உறவினரான ஸகீஃப் குலத்தைச் சேர்ந்த ஒருவரும்’ அல்லது ‘ஸகீஃப்’ குலத்தைச் சேர்ந்த இரண்டு பேரும், குறைஷிக் குலத்தைச் சேர்ந்த இரண்டு பேரும், குறைஷிக் குலத்தைச் சேர்ந்த அவர்களின் மனைவிமார்களின் உறவுக்காரர் ஒருவரும்’ (ஆக மூவருமாக) ஒரு வீட்டில் (அமர்ந்து கொண்டு) இருந்தனர். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம் ‘நம்முடைய பேச்சை அல்லாஹ் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்று நீங்கள் கருதுகிறீர்களா?’ என்று கேட்டார்.

அவர்களில் ஒருவர், ‘(நம்முடைய பேச்சுகளில்) சிலவற்றை மட்டும் அவன் கேட்கிறான்’ என்று பதிலளித்தார். மற்றொருவர் ‘நம்முடைய பேச்சுகளில் சிலவற்றை அவன் கேட்டுக்கொண்டிருப்பதானால் அனைத்தையும் அவன் கேட்கத்தானே செய்வான்’ என்று கூறினார். அப்போதுதான், ‘(உலகில் நீங்கள் குற்றங்கள் புரிந்தபோது) உங்கள் காதுகளும் கண்களும் தோல்களும் உங்களுக்கெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக் கூட (குற்றங்களிலிருந்து) தவிர்ந்து கொள்பவர்களாக நீங்கள் இருக்கவில்லை’ (அல்குர்ஆன்: 41:22) எனும் கீழ்க்கண்ட வசனம் அருளப்பெற்றது.

وَمَا كُنْتُمْ تَسْتَتِرُوْنَ اَنْ يَّشْهَدَ عَلَيْكُمْ سَمْعُكُمْ وَلَاۤ اَبْصَارُكُمْ وَلَا جُلُوْدُكُمْ وَلٰكِنْ ظَنَنْتُمْ اَنَّ اللّٰهَ لَا يَعْلَمُ كَثِيْرًا مِّمَّا تَعْمَلُوْنَ‏

உங்கள் செவியும், பார்வைகளும், உங்கள் தோல்களும் உங்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்காமலிருக்க (அவற்றுக்குத் தெரியாமல்) நீங்கள் மறைத்ததில்லை. நீங்கள் செய்தவற்றில் அதிகமானவற்றை அல்லாஹ் அறிய மாட்டான் என்று நினைத்தீர்கள். (அல்குர்ஆன்: 41:22)

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி)
நூல் : புகாரி-4816 

நபி அவர்கள் பாவமன்னிப்பு கேட்கும் போது இறங்கிய இறைவசனம்

أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ فِي صَلاَةِ الفَجْرِ وَرَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ قَالَ: «اللَّهُمَّ رَبَّنَا، وَلَكَ الحَمْدُ فِي الأَخِيرَةِ»، ثُمَّ قَالَ: «اللَّهُمَّ العَنْ فُلاَنًا وَفُلاَنًا»، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {لَيْسَ لَكَ مِنَ الأَمْرِ شَيْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَالِمُونَ} [آل عمران: 128]

நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ருத் தொழுகையில் கடைசி ரக்அத்தின்போது தம் தலையை ருகூஉவிலிருந்து உயர்த்தி, ‘அல்லாஹும்ம ரப்பனா வலக்கல் ஹம்து’ (இறைவா! எங்கள் அதிபதியே! உனக்கே புகழனைத்தும்) என்று சொல்லிவிட்டுப் பிறகு, ‘இறைவா! இன்னாரையும் இன்னாரையும் உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள்.

உடனே கண்ணியமும் மகத்துவமும் பொருந்திய அல்லாஹ், ‘அவர்களை அல்லாஹ் மன்னிக்கும் வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவனே அவர்களை வேதனை செய்யும்வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே!) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை’ (அல்குர்ஆன்: 03:128) எனும் கீழ்க்கண்ட வசனத்தை அருளினான்.

لَيْسَ لَكَ مِنَ الْاَمْرِ شَىْءٌ اَوْ يَتُوْبَ عَلَيْهِمْ اَوْ يُعَذِّبَهُمْ فَاِنَّهُمْ ظٰلِمُوْنَ‏

(முஹம்மதே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள். (அல்குர்ஆன்: 3:128)

அறிவிப்பவர் : இப்னு உமர்(ரலி)
நூல் : புகாரி-7346 

தானாக செத்தவை அருந்த தடைவிதித்த இறைவசனம்

நபி (ஸல்) வர்களின் இறுதி காலத்தில் இறங்கிய இறை வசனம்.

அல்லாஹ் அல்லாதவறுக்காகவும், அல்லாஹ் பெயர் சொல்லி அறுக்காதவை பற்றி வசனம் அப்போதுதான் இறங்கியது.

جَاءَتِ الْيَهُودُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا: نَأْكُلُ مِمَّا قَتَلْنَا، وَلَا نَأْكُلُ مِمَّا قَتَلَ اللَّهُ، فَأَنْزَلَ اللَّهُ: {وَلَا تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ} [الأنعام: 121] ” إِلَى آخِرِ الْآيَةِ

யூதர்கள் நபி (ஸல்) அவைகளிடம் வந்து கேட்டார்கள்: நாங்கள் கொலை செய்யப்பட்டதையும், சாப்பிடுகின்றோம். அல்லாஹ் (வால் தானாக) கொலை செய்யப்பட்டதையும் சாப்பிடுகின்றோம் என்றவுடன் (அல்குர்ஆன்: 6:121) என்ற கீழ்கண்ட வசனம் இறங்கியது.

وَلَا تَاْكُلُوْا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللّٰهِ عَلَيْهِ وَاِنَّهٗ لَفِسْقٌ ؕ وَاِنَّ الشَّيٰطِيْنَ لَيُوْحُوْنَ اِلٰٓى اَوْلِيٰٓـٮِٕـهِمْ لِيُجَادِلُوْكُمْ‌ ۚ وَاِنْ اَطَعْتُمُوْهُمْ اِنَّكُمْ لَمُشْرِكُوْنَ

அல்லாஹ்வின் பெயர் கூறப்படாததை உண்ணாதீர்கள்! அது குற்றமாகும். உங்களுடன் தர்க்கம் செய்யுமாறு ஷைத்தான்கள் தமது தோழர்களுக்குக் கூறுகின்றனர். நீங்கள் அவர்களுக்குக் கட்டுப்பட்டால் நீங்கள் இணை கற்பிப்பவர்களே. (அல்குர்ஆன்: 6:121)

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அபூதாவூத்-2819 

உஹதுப் போரில் நபியை கண்டித்து அல்லாஹ் இறக்கிய வசனம்

நபியவர்கள் உஹதுப்போரில் காயம்பட்டதை இரத்தம் சிந்தியபடி நபியை காயப்படுத்திவிட்டீர்கள். நீங்கள் உறுப்புடுவீர்களா என்றார்கள். அதற்கு அல்ஹவிடமிருந்து கண்டித்து வசனம் இறங்குகிறது.

أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُسِرَتْ رَبَاعِيَتُهُ يَوْمَ أُحُدٍ، وَشُجَّ فِي رَأْسِهِ، فَجَعَلَ يَسْلُتُ الدَّمَ عَنْهُ، وَيَقُولُ: «كَيْفَ يُفْلِحُ قَوْمٌ شَجُّوا نَبِيَّهُمْ، وَكَسَرُوا رَبَاعِيَتَهُ، وَهُوَ يَدْعُوهُمْ إِلَى اللهِ؟»، فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ: {لَيْسَ لَكَ مِنَ الْأَمْرِ شَيْءٌ} [آل عمران: 128]

உஹுதுப் போர் நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய முன்வாய்ப் பற்களில் (கீழ் வரிசையில் வலப்புறப் பல்) ஒன்று உடைக்கப்பட்டது. அவர்களது முகம் காயப்படுத்தப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காயத்திலிருந்து வழிந்த இரத்தத்தைத் துடைத்தபடியே, “தங்களுடைய நபியைக் காயப்படுத்தி, அவரது பல்லை உடைத்த ஒரு சமுதாயம் எப்படி உருப்படும்? அவரோ அவர்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்துக்கொண்டிக்கிறார்” என்று கூறலானார்கள். அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “(நபியே!) அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை” (அல்குர்ஆன்: 3:128) எனும் கீழ்க்கண்ட வசனத்தை அருளினான்.

   لَيْسَ لَكَ مِنَ الْاَمْرِ شَىْءٌ اَوْ يَتُوْبَ عَلَيْهِمْ اَوْ يُعَذِّبَهُمْ فَاِنَّهُمْ ظٰلِمُوْنَ

(முஹம்மதே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம்-3667 

மனைவிமார்களுக்காக தேனை ஹராமாக்கிய போது அல்லாஹ் இறக்கிய வசனம்

நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களிடையே ஏற்பட்ட பிரச்சனைகளுக்காக அல்லாஹ் ஹலாலாக்கிய தேனை ஹராமாக்கினார்கள். இதனை கண்டித்து அல்லாஹ் பின்வரும் வசனங்களை இறக்கினான். இதன் விவரம்:

நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் (அவர்களின் அறையில் அதிக நேரம்) தங்கியிருந்து தேன் சாப்பிடுவது வழக்கம். எனவே, (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் எங்களுக்குள் ‘நபி (ஸல்) அவர்கள் (ஸைனபின் அறைக்குச் சென்றுவிட்டு) நம்மில் யாரிடம் முதலில் வந்தாலும் தங்களிடமிருந்து கருவேலம் பிசினின் துர்வாடை வருகிறதே! பிசின் சாப்பிட்டீர்களா? என்று கூறிட வேண்டும்’ என்று கூடிப் பேசி முடிவு செய்து கொண்டோம்.

எங்களில் ஒருவரிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தபோது முன்பு பேசிவைத்திருந்தபடி கூறினோம். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘(அப்படியெல்லாம்) ஒரு குறையும் நடந்திடவில்லை. ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரின் அறையில்) தேன் அருந்தினேன். (அவ்வளவுதான் சத்தியமாக) இனிமேல் ஒருபோதும் இவ்வாறு செய்யமாட்டேன்’ என்று கூறினார்கள். எனவே,

‘நபியே! உங்களுடைய துணைவியரின் திருப்தியை எதிர்பார்த்து, அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த ஒன்றை நீங்கள் ஏன் விலக்கிக் கொள்கிறீர்கள்?’ என்று தொடங்கி ‘நீங்கள் இருவரும் – இதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் (அது உங்களுக்கே நன்று)’ என முடியும் கீழ்க்கண்ட (அல்குர்ஆன்: 66:1-4) வசனங்களை அல்லாஹ் அருளினான்.

يٰۤاَيُّهَا النَّبِىُّ لِمَ تُحَرِّمُ مَاۤ اَحَلَّ اللّٰهُ لَـكَ‌ۚ تَبْتَغِىْ مَرْضَاتَ اَزْوَاجِكَ‌ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ
قَدْ فَرَضَ اللّٰهُ لَـكُمْ تَحِلَّةَ اَيْمَانِكُمْ‌ؕ وَاللّٰهُ مَوْلٰٮكُمْ‌ۚ وَهُوَ الْعَلِيْمُ الْحَكِيْمُ‏
وَاِذْ اَسَرَّ النَّبِىُّ اِلٰى بَعْضِ اَزْوَاجِهٖ حَدِيْثًا‌ۚ فَلَمَّا نَـبَّاَتْ بِهٖ وَاَظْهَرَهُ اللّٰهُ عَلَيْهِ عَرَّفَ بَعْضَهٗ وَاَعْرَضَ عَنْۢ بَعْضٍ‌ۚ فَلَمَّا نَـبَّاَهَا بِهٖ قَالَتْ مَنْ اَنْۢبَاَكَ هٰذَا‌ؕ قَالَ نَـبَّاَنِىَ الْعَلِيْمُ الْخَبِیْر
اِنْ تَتُوْبَاۤ اِلَى اللّٰهِ فَقَدْ صَغَتْ قُلُوْبُكُمَا‌ۚ وَاِنْ تَظٰهَرَا عَلَيْهِ فَاِنَّ اللّٰهَ هُوَ مَوْلٰٮهُ وَجِبْرِيْلُ وَصَالِحُ الْمُؤْمِنِيْنَ‌ۚ وَالْمَلٰٓٮِٕكَةُ بَعْدَ ذٰلِكَ ظَهِيْرٌ‏

(இந்த 66:4 வது வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள) ‘நீங்கள் இருவரும்’ என்பது ஆயிஷா(ரலி) அவர்களையும், ஹஃப்ஸா (ரலி) அவர்களையுமே குறிக்கிறது. (அல்குர்ஆன்: 66:3) வது வசனத்தில் ‘நபி தம் துணைவியரில் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசியமாகச் சொல்லியிருந்தார்’ என்பது

“இல்லை. நான் தேன்தான் அருந்தினேன். (சத்தியமாக இனி நான் அதனை அருந்தமாட்டேன். இது குறித்து யாரிடமும் சொல்லிவிடாதே)” என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டதையே குறிக்கிறது.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி-5267 

கடுகடுத்தார்

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் ஒரு உயர்ந்த குலத்தவரிடம் இஸ்லாத்தை எடுத்துரைக்கும் போது ஒரு தாழ்ந்த நிலையில் உள்ள ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் முகமன் கூறும்போது அந்த உயர்ந்த குலத்தவரை கருத்தில் கொண்டு முகமன் கூறிய தாழ்ந்த குலத்தவருக்கு பதிலுரைக்கவில்லை. இதனையும் மனிதன் என்ற அடிப்படையில் அவர்கள் செய்த பிழை தான். இதையும் அல்லாஹ் கண்டித்தான்.

عَبَسَ وَتَوَلَّى (1) أَنْ جَاءَهُ الْأَعْمَى (2) وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّى (3) أَوْ يَذَّكَّرُ فَتَنْفَعَهُ الذِّكْرَى (4) أَمَّا مَنِ اسْتَغْنَى (5) فَأَنْتَ لَهُ تَصَدَّى (6)

தன்னிடம் அந்த குருடர் வந்ததற்காக இவர் (முஹம்மது) கடுகடுத்தார். அலட்சியம் செய்தார். அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படி தெரியும்? அல்லது அவர் அறிவுரை பெறலாம். அறிவுரை பெறலாம். யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர். 

(அல்குர்ஆன்: 80:1-6)

 பாகப்பிரிவினை பற்றிய வசனம் இறங்கிய நேரம்

جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُنِي، وَأَنَا مَرِيضٌ لاَ أَعْقِلُ، فَتَوَضَّأَ وَصَبَّ عَلَيَّ مِنْ وَضُوئِهِ، فَعَقَلْتُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ لِمَنِ المِيرَاثُ؟ إِنَّمَا يَرِثُنِي كَلاَلَةٌ، فَنَزَلَتْ آيَةُ الفَرَائِضِ

‘நான் நோயுற்றிருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரிக்க வந்தார்கள். நான் மயக்கநிலையில் இருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்துவிட்டு அந்தத் தண்ணீரை என் மீது ஊற்றினார்கள். உடனே நான் மயக்கத்திலிருந்து (தெளிந்து) உணர்வு பெற்றேன். அப்போது நபி (ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! என்னுடைய சொத்துக்கு வாரிசு யார்? என்னுடன் உடன் பிறப்புகள் மட்டுமே எனக்கு வாரிசாகும் நிலையில் நான் உள்ளேனே?’ என்று நான் கேட்டபோது பாகப்பிரிவினை பற்றிய கீழ்க்கண்ட (அல்குர்ஆன்: 04:176) வது வசனம் அருளப்பட்டது.

 يَسْتَفْتُوْنَكَ ؕ قُلِ اللّٰهُ يُفْتِيْكُمْ فِى الْـكَلٰلَةِ‌ ؕ اِنِ امْرُؤٌا هَلَكَ لَـيْسَ لَهٗ وَلَدٌ وَّلَهٗۤ اُخْتٌ فَلَهَا نِصْفُ مَا تَرَكَ‌ ۚ وَهُوَ يَرِثُهَاۤ اِنْ لَّمْ يَكُنْ لَّهَا وَلَدٌ‌  ؕ فَاِنْ كَانَـتَا اثْنَتَيْنِ فَلَهُمَا الثُّلُثٰنِ مِمَّا تَرَكَ‌ ؕ وَاِنْ كَانُوْۤا اِخْوَةً رِّجَالًا وَّنِسَآءً فَلِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَيَيْنِ‌ ؕ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمْ اَنْ تَضِلُّوْا‌ ؕ وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ

“கலாலா பற்றி (முஹம்மதே!) உம்மிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்கின்றனர். “அல்லாஹ் இது குறித்து தீர்ப்பளிக்கிறான்” எனக் கூறுவீராக! பிள்ளை இல்லாத ஒரு மனிதன் இறக்கும்போது அவனுக்கு ஒரு சகோதரி இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் பாதி அவளுக்கு உண்டு. (அவள் இறக்கும்போது) அவளுக்குப் பிள்ளை இல்லாவிட்டால் அவ(ளது சகோதர)ன் அவளுக்கு வாரிசாவான். இரண்டு சகோதரிகள் இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு அவர்களுக்கு உண்டு. ஆண்களும், பெண்களுமாக உடன் பிறப்புக்கள் இருந்தால் இரண்டு பெண்களுக்குரிய பங்கு ஓர் ஆணுக்கு என்ற விகிதத்தில் உண்டு. நீங்கள் வழிதவறி விடாமல் இருக்க அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் அறிந்தவன். (அல்குர்ஆன்: 4:176)

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல்: புகாரி-194 

இணைக்கற்ப்பித்தவர்கள் சிலர் அதிலிருந்து விடுபடும்போது இறங்கிய இறைவசனம்

இணைவைப்பவர்களில் ஒரு சிலர் தான் திருந்தியவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து தான் செய்து வந்த தீமையான காரியம் குறித்து உணர்ந்து அதனை சரி செய்ய வேண்டி அறிவுரை கேட்டனர். அப்போது அவர்களுக்கான திருக்குர் ஆனில் இடம்பெற்றுள்ள (அல்குர்ஆன்: 25:68) என்ற இறைவசனம் இறங்கியது.

أَنَّ نَاسًا، مِنْ أَهْلِ الشِّرْكِ كَانُوا قَدْ قَتَلُوا وَأَكْثَرُوا، وَزَنَوْا وَأَكْثَرُوا، فَأَتَوْا مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ  فَقَالُوا: إِنَّ الَّذِي تَقُولُ وَتَدْعُو إِلَيْهِ لَحَسَنٌ، لَوْ تُخْبِرُنَا أَنَّ لِمَا عَمِلْنَا كَفَّارَةً فَنَزَلَ: {وَالَّذِينَ لاَ يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ، وَلاَ يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالحَقِّ، وَلاَ يَزْنُونَ} [الفرقان: 68] وَنَزَلَتْ {قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ، لاَ تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ} [الزمر: 53]

இணைவைப்பவர்களில் சிலர், நிறையக் கொலைகளைப் புரிந்தனர்; விபசாரம் அதிகமாகச் செய்திருந்தனர். (ஒருநாள்) அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் வந்து, நீங்கள் கூறிவருகிற (போதனை முதலிய)வையும் நீங்கள் அழைப்புவிடுகிற (இஸ்லாமிய) மார்க்கமும் உறுதியாக நல்லவையே! நாங்கள் புரிந்துவிட்ட பாவங்களுக்குப் பரிகாரம் ஏதேனும் உண்டா என நீங்கள் எங்களுக்குத் தெரிவித்தால் (நன்றாயிருக்குமே)’ என்று கூறினர்.

அப்போது, ‘(ரஹ்மானின் உண்மையான அடியார்களான) அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. மேலும், (கொலை செய்யக்கூடாது) என்று அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் முறையின்றி அவர்கள் கொலை புரிவதில்லை; மேலும் விபசாரம் செய்வதில்லை…’ எனும் கீழ்க்கண்ட (அல்குர்ஆன்: 25:68) வது வசனம் அருளப்பெற்றது.

وَالَّذِيْنَ لَا يَدْعُوْنَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ وَلَا يَقْتُلُوْنَ النَّفْسَ الَّتِىْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَـقِّ وَلَا يَزْنُوْنَ‌ ۚ وَمَنْ يَّفْعَلْ ذٰ لِكَ يَلْقَ اَثَامًا

அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களைப்பிரார்த்திக்க மாட்டார்கள். அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள். விபச்சாரம் செய்ய மாட்டார்கள். இதைச் செய்பவன் வேதனையைச் சந்திப்பான்.

(அல்குர்ஆன்: 25:68)

மேலும், ‘(நபியே!) கூறுங்கள்: வரம்புமீறி தமக்குத் தாமே அநீதியிழைத்துக்கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணையில் அவநம்பிக்கை கொள்ளாதீர்கள்..’ எனும் கீழ்க்கண்ட (அல்குர்ஆன்: 39:53) வது வசனமும் அருளப்பெற்றது.

   قُلْ يٰعِبَادِىَ الَّذِيْنَ اَسْرَفُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ لَا تَقْنَطُوْا مِنْ رَّحْمَةِ اللّٰهِ‌ ؕ اِنَّ اللّٰهَ يَغْفِرُ الذُّنُوْبَ جَمِيْعًا‌ ؕ اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி-4810 

இணைவைத்து இறந்தவருக்காக பிரார்த்திக்கக்கூடாது என்று இறங்கிய வசனம்

(நபி-ஸல்-அவர்களின் பெரிய தந்தை) அபூதாலிப் அவர்களுக்கு மரணவேளை வந்துவிட்டபோது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அங்கே, அவரருகே அபூஜஹ்லையும், அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யா இப்னி முஃகீரா வையும் கண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘என் பெரிய தந்தையே! ‘லா இலாஹா இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை)’ என்று சொல்லுங்கள்! இந்த (ஏகத்துவ உறுதிமொழிக்கான) சொல்லை வைத்து நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் வாதாடுவேன்’ என்று கூறினார்கள்.

அப்போது அபூஜஹ்லும், அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவும் ‘அபூ தாலிபே! நீங்கள் (உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா வெறுத்து ஒதுக்கப்போகிறீர்கள்?’ என்று கேட்டனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதிமொழியைக் கூறும்படி அவர்களை வற்புறுத்திக் கொண்டேயிருந்தார்கள். அவ்விருவரும் தாம் முன்பு சொன்னதையே சொல்லி (அவரைத் தடுத்து)க் கொண்டேயிருந்தார்கள்.

இறுதியில் அபூதாலிப் கடைசியாக அவர்களிடம் பேசியது, ‘நான் (என் தந்தை) அப்துல் முத்தலிப் மார்க்கத்தில் இருக்கிறேன்’ என்பதாகவே இருந்தது. ‘லாஇலாஹா இல்லல்லாஹ்’ எனும் உறுதிமொழியைச் சொல்ல அவர் மறுத்துவிட்டார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குத் தடை விதிக்கப்படும்வரை உங்களுக்காக நான் பாவமன்னிப்புக் கேட்டுக் கொண்டேயிருப்பேன்’ என்று கூறினார்கள்.

அப்போதுதான், ‘இணைவைப்போருக்காகப் பாவமன்னிப்புக் கோர இறைத்தூதருக்கும், இறைநம்பிக்கையாளர்களுக்கும் உரிமை இல்லை’ எனும் கீழ்க்கண்ட (அல்குர்ஆன்: 09:113) வது வசனத்தை அல்லாஹ் அருளினான்.

مَا كَانَ لِلنَّبِىِّ وَالَّذِيْنَ اٰمَنُوْاۤ اَنْ يَّسْتَغْفِرُوْا لِلْمُشْرِكِيْنَ وَ لَوْ كَانُوْۤا اُولِىْ قُرْبٰى مِنْۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ اَنَّهُمْ اَصْحٰبُ الْجَحِيْمِ‏

இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது. (அல்குர்ஆன்: 9:113)

அபூதாலிப் தொடர்பாக (நபியவர்கள் வருந்தியபோது) அல்லாஹ் ‘(நபியே!) நீங்கள் விரும்பியவரை(யெல்லாம்) நேர்வழியில் செலுத்திவிடமுடியாது. மாறாக, அல்லாஹ்தான் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான்’ எனும் கீழ்க்கண்ட (அல்குர்ஆன்: 28:56) வது வசனத்தையும் அருளினான்.

اِنَّكَ لَا تَهْدِىْ مَنْ اَحْبَبْتَ وَلٰـكِنَّ اللّٰهَ يَهْدِىْ مَنْ يَّشَآءُ‌ؕ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِيْنَ‏

(முஹம்மதே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர்வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான். அவன் நேர்வழி பெற்றோரை நன்கறிந்தவன். (அல்குர்ஆன்: 28:56)

அறிவிப்பவர் : முஸய்யப் இப்னு ஹஸன் (ரலி)
நூல் : புகாரி-4772 

அல்லாஹ்வின் தூதரின் மனைவிமார்களின் பர்தா சட்டம் பற்றி அறிவிக்கும் இறைவசனம்

பர்தா (சட்டம்) தொடர்பான இந்த இறைவசனத்தை மக்களிலேயே அதிகமாக அறிந்தவன் நான்தான். (நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் மணப்பெண்ணாக அனுப்பி வைக்கப்பட்டு அவர்களுடன் வீட்டில் இருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (‘வலீமா’விருந்துக்கான) உணவைத் தயாரித்து மக்களை அழைத்தார்கள். மக்கள் (சாப்பிட்டுவிட்டு) பேசிக்கொண்டே அமர்ந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் வெளியே வரவும் திரும்பச் செல்லவுமாக இருந்தார்கள். மக்களோ பேசிக் கொண்டே அமர்ந்திருந்தனர்.

அப்போதுதான் அல்லாஹ்’ இறைநம்பிக்கையாளர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள். அவ்வாறு (நபியின் இல்லத்தில் நடக்கும்) விருந்துக்காக உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலும், அப்போதும் கூட உணவு தயாராவதை எதிர்பார்த்து (அங்கே காத்து) இராதீர்கள். மாறாக, (உணவு தயார்; வாருங்கள் என) நீங்கள் அழைக்கப்படும்போது நுழையுங்கள்.

சாப்பிட்டு முடிந்ததும் கலைந்து சென்றுவிடுங்கள். பேசிக்கொண்டிருப்பதில் ஆர்வமாய் இருந்துவிடாதீர்கள். நிச்சயமாக உங்களின் இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கிறது. ஆயினும், இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுகிறார்.

ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை. நபியின் துணைவியரிடம் நீங்கள் ஏதேனும் ஒரு பொருளை (அவசியப்பட்டு) கேட்கவேண்டுமென்றால், திரைக்குப் பின்னாலிருந்து கேளுங்கள்’ எனும் (அல்குர்ஆன்: 33:53) கீழ்க்கண்ட வசனத்தை அருளினான்.

 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُيُوْتَ النَّبِىِّ اِلَّاۤ اَنْ يُّؤْذَنَ لَـكُمْ اِلٰى طَعَامٍ غَيْرَ نٰظِرِيْنَ اِنٰٮهُ وَلٰـكِنْ اِذَا دُعِيْتُمْ فَادْخُلُوْا فَاِذَا طَعِمْتُمْ فَانْتَشِرُوْا وَلَا مُسْتَاْنِسِيْنَ لِحَـدِيْثٍ ؕ اِنَّ ذٰلِكُمْ كَانَ يُؤْذِى النَّبِىَّ فَيَسْتَحْىٖ مِنْكُمْ وَاللّٰهُ لَا يَسْتَحْىٖ مِنَ الْحَـقِّ ؕ وَاِذَا سَاَ لْتُمُوْهُنَّ مَتَاعًا فَسْـَٔـــلُوْهُنَّ مِنْ وَّرَآءِ حِجَابٍ ؕ ذٰ لِكُمْ اَطْهَرُ لِقُلُوْبِكُمْ وَقُلُوْبِهِنَّ ؕ وَمَا كَانَ لَـكُمْ اَنْ تُؤْذُوْا رَسُوْلَ اللّٰهِ وَلَاۤ اَنْ تَـنْكِحُوْۤا اَزْوَاجَهٗ مِنْۢ بَعْدِهٖۤ اَبَدًا ؕ اِنَّ ذٰ لِكُمْ كَانَ عِنْدَ اللّٰهِ عَظِيْمًا‏

நம்பிக்கை கொண்டோரே! நபியின் வீடுகளில் அனுமதிக்கப்பட்டால் தவிர உண்பதற்கு நுழையாதீர்கள்! அவரது பாத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள்! மாறாக அழைக்கப்பட்டால் செல்லுங்கள்! உணவு உட்கொண்டதும் சென்று விடுங்கள்! பேச்சில் லயித்து விடாதீர்கள்! இது நபிக்குத் தொந்தரவாக இருக்கும். உங்களிடம் (கூற) அவர் வெட்கப்படுவார். உண்மை(யைக் கூறும்) விஷயத்தில் அல்லாஹ் வெட்கப்பட மாட்டான்.

(நபியின் மனைவியரான) அவர்களிடம் எதையேனும் நீங்கள் கேட்டால் திரைக்கப்பால் இருந்தே கேளுங்கள்!500 இதுவே உங்கள் உள்ளங்களுக்கும், அவர்களின் உள்ளங்களுக்கும் தூய்மையானது. அல்லாஹ்வின் தூதரை நீங்கள் தொந்தரவு செய்யக் கூடாது. அவருக்குப் பின் ஒருபோதும் அவரது மனைவியரை நீங்கள் மணக்கவும் கூடாது. இது அல்லாஹ்விடம் மகத்தானதாக இருக்கிறது.

(அல்குர்ஆன்: 33:53)

இதையடுத்துத் திரை போடப்பட்டது. மக்களும் எழுந்துவிட்டார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் (ரலி)
நூல் : புகாரி-4792 

கிப்லாவை முன்னோக்கி தொழுமாறு இறங்கிய வசனங்கள்

‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுதார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவை நோக்கித் தொழ வேண்டுமென ஆசைப்பட்டார்கள். அப்போது ‘நீர் வானத்தை நோக்கி உம்முடைய முகத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருப்பதை அறிவோம்’ (அல்குர்ஆன்: 2:144) என்ற கீழ்க்கண்ட வசனத்தை அல்லாஹ் அருளினான்…

قَدْ نَرٰى تَقَلُّبَ وَجْهِكَ فِى السَّمَآءِ‌‌ۚ فَلَـنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضٰٮهَا‌ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَـرَامِؕ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوْا وُجُوْهَكُمْ شَطْرَهٗ ‌ؕ وَاِنَّ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ لَيَـعْلَمُوْنَ اَنَّهُ الْحَـقُّ مِنْ رَّبِّهِمْ‌ؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُوْنَ‏

(முஹம்மதே!) உம்முடைய முகம் வானத்தை நோக்கி அடிக்கடி திரும்புவதைக் காண்கிறோம். எனவே நீர் விரும்புகிற கிப்லாவை நோக்கி உம்மைத் திருப்புகிறோம். எனவே உமது முகத்தை (கஅபா எனும்) புனிதப்பள்ளியின் திசையில் திருப்புவீராக! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! “இதுவே தமது இறைவனிடமிருந்து வந்த உண்மை” என்று வேதம் கொடுக்கப்பட்டோர் அறிவார்கள். அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை. (அல்குர்ஆன்: 2:144)

…உடனே கஅபாவை முன்னோக்கித் தொழ ஆரம்பித்தார்கள்.

سَيَقُوْلُ السُّفَهَآءُ مِنَ النَّاسِ مَا وَلّٰٮهُمْ عَنْ قِبْلَتِهِمُ الَّتِىْ كَانُوْا عَلَيْهَا ‌ؕ قُل لِّلّٰهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ ؕ يَهْدِىْ مَنْ يَّشَآءُ اِلٰى صِراطٍ مُّسْتَقِيْمٍ‏

(முஸ்லிம்கள்) ஏற்கனவே இருந்த தமது கிப்லாவை விட்டும் ஏன் திரும்பி விட்டனர்?” என்று மனிதர்களில் அறிவிலிகள் கேட்பார்கள். “கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. அவன் நாடியோரை நேரான வழியில் செலுத்துகிறான்” என்று கூறுவீராக! (அல்குர்ஆன்: 2:142)

என்ற வசனம் அருளப்பட்டதும், ஒருவர் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டு வெளியே வந்து அன்ஸாரிக் கூட்டத்தாரிடம் சென்றார். அவர்கள் பைத்துல் முகத்தஸை நோக்கி அஸர் தொழுது கொண்டிருந்தபோது, “நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதேன். அவர்கள் கஅபாவை முன்னோக்கித் தொழுதார்கள் என்று நான் சாட்சி சொல்கிறேன்” என்று அவர் அவர்களிடம் கூறினார். உடனே தொழுது கொண்டிருந்தவர்கள் கஅபாவை முன்னோக்கித் திரும்பினார்கள்’.

அறிவிப்பவர் : பராஉ இப்னு ஆஸிப் (ரலி)
நூல்: புகாரி-399 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ
بَيْنَا النَّاسُ بِقُبَاءٍ فِي صَلاَةِ الصُّبْحِ، إِذْ جَاءَهُمْ آتٍ، فَقَالَ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أُنْزِلَ عَلَيْهِ اللَّيْلَةَ قُرْآنٌ، وَقَدْ أُمِرَ أَنْ يَسْتَقْبِلَ الكَعْبَةَ، فَاسْتَقْبِلُوهَا، وَكَانَتْ وُجُوهُهُمْ إِلَى الشَّأْمِ، فَاسْتَدَارُوا إِلَى الكَعْبَةِ»

‘குபா பள்ளி வாசலில் மக்கள் ஸுபுஹ் தொழுது கொண்டிருந்தபோது அவர்களிடம் ஒருவர் வந்து, ‘சென்ற இரவில் கஅபாவை முன்னோக்கித் தொழுமாறு நபி (ஸல்) அவர்களுக்கு இறைவசனம் அருளப்பட்டது’ என்று கூறினார். (பைத்துல் முகத்தஸ் இருக்கும் திசையான) ஷாம் நாட்டை நோக்கித் தொழுது கொண்டிருந்த அவர்கள் அப்படியே கஅபாவை நோக்கித் திரும்பினார்கள்’.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி-403 

உமர் (ரலி ) அவர்களின் வார்த்தைகளில் அல்லாஹ் பேசுகிறான்

உமர் (ரலி) அவர்கள் பல்வேரு சந்தர்ப்பங்களில் கூறிய அறிவுரை, ஆலோசனை யாவும் அல்லாஹ்வின் வஹீக்கு ஒப்பாக அமைந்தது. அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களை பற்றி உமருடைய வார்த்தையில் அல்லாஹ் பேசுவதாக சிலாகித்து கூறினார்கள்.

‘மூன்று விஷயங்களில் நான் அல்லாஹ்வுக்கு இசைவான கருத்துக் கொண்டேன்’ அல்லது ‘என் இறைவன் மூன்று விஷயங்களில் எனக்கு இசைவாகக் கருத்துக் கொண்டான்.

1 . நான் (நபி (ஸல்) அவர்களிடம்) ‘இறைத்தூதர் அவர்களே! இப்ராஹீம் (அலை) அவர்கள் (கஅபாவைக் கட்டும்போது) நின்ற இடத்தைத் தொழுமிடமாக நீங்கள் ஆக்கிக் கொள்ளலாமே!’ என்று கேட்டேன். (அவ்வாறே ஆக்கிக் கொள்ளும்படி அல்லாஹ்வும் வசனத்தை அருளினான்.)

2 . மேலும், நான், (அவர்களிடம்), ‘இறைத்தூதர் அவர்களே! தங்களிடம் நல்லவரும் கெட்டவரும் (எல்லாவகை மனிதர்களும்) வருகிறார்கள். எனவே, (தங்கள் துணைவியரான) இறை நம்பிக்கையாளர்களின் அன்னையரை பர்தா அணியும்படி தாங்கள் கட்டளையிடலாமே!’ என்று கேட்டேன் உடனே, அல்லாஹ் பர்தா (சட்டம்) குறித்த வசனத்தை அருளினான்.

3 . நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரில் சிலர் மீது அதிருப்தி அடைந்திருப்பதாக எனக்குச் செய்தி எட்டியது. எனவே, அவர்களிடம் நான் சென்று, ‘நீங்கள் (நபி (ஸல்) அவர்களுக்குச் சங்கடம் ஏற்படுத்துவதை) நிறுத்திக் கொள்ள வேண்டும்! இல்லையென்றால், அல்லாஹ் தன் தூதருக்கு உங்களைவிடச் சிறந்தவர்களை (உங்களுக்கு) பதிலாகத் தருவான்’ என்று சொன்னேன்.

இந்நிலையில் அவர்களின் துணைவியரில் ஒருவரிடம் நான் சென்றபோது, ‘உமரே! தம் துணைவியருக்கு உபதேசம் செய்ய இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குத் தெரியாதா? நீங்கள் ஏன் எங்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும்!’ என்று கேட்டார்.

அப்போது அல்லாஹ், ‘இறைத்தூதர் உங்களை விவாக விலக்குச் செய்தால், உங்களைவிடச் சிறந்த முஸ்லிமான துணைவியரை (உங்களுக்கு பதிலாக) அல்லாஹ் அவருக்கு வழங்கலாம்’ எனும் கீழ்க்கண்ட (அல்குர்ஆன்: 66:5) வது வசனத்தை அருளினான்.

عَسٰى رَبُّهٗۤ اِنْ طَلَّقَكُنَّ اَنْ يُّبْدِلَهٗۤ اَزْوَاجًا خَيْرًا مِّنْكُنَّ مُسْلِمٰتٍ مُّؤْمِنٰتٍ قٰنِتٰتٍ تٰٓٮِٕبٰتٍ عٰبِدٰتٍ سٰٓٮِٕحٰتٍ ثَيِّبٰتٍ وَّاَبْكَارًا‏

உங்களை அவர் விவாகரத்துச் செய்துவிட்டால் உங்களை விடச் சிறந்த முஸ்லிம்களான நம்பிக்கை கொண்ட, கட்டுப்பட்டு நடக்கிற, திருந்திக் கொள்கிற, வணக்கம் புரிகிற, நோன்பு நோற்கிற விதவைகளையும், கன்னியரையும் மனைவியராக அவரது இறைவன் மாற்றித்தரக் கூடும்.

(அல்குர்ஆன்: 66:5)

அறிவிப்பவர்: உமர் (ரலி)
நூல் : புகாரி-4483 

ஈமானுள்ளவரே நேர்வழி பெறுவார் என்ற வசனம் இறங்கியது

قَالَ: لَمَّا نَزَلَتْ: { الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ } [الأنعام: 82] قَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّنَا لَمْ يَظْلِمْ؟ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ} لقمان: 13

‘இறைநம்பிக்கை கொண்டு அதில் அக்கிரமத்தைக் கலக்காதவர்களுக்கே (இம்மையிலும் மறுமையிலும்) அச்சமற்ற நிலை உண்டு. மேலும் அவர்களே நேர்வழி பெற்றவர்களுமாவார்’ (அல்குர்ஆன்: 06:82) என்ற கீழ்க்கண்ட…

 اَلَّذِيْنَ اٰمَنُوْا وَلَمْ يَلْبِسُوْۤا اِيْمَانَهُمْ بِظُلْمٍ اُولٰۤٮِٕكَ لَهُمُ الْاَمْنُ وَهُمْ مُّهْتَدُوْنَ

நம்பிக்கை கொண்டு, தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்து விடாமல் இருப்போர்க்கே அச்சமற்ற நிலை உள்ளது. அவர்களே நேர்வழி பெற்றோர். (அல்குர்ஆன்: 6:82)

…இறைவசனம் அருளப்பட்டபோது நபித்தோழர்கள் ‘நம்மில் யார் அக்கிரமம் செய்யாமலிருக்க முடியும்?’ எனக் கேட்டனர். அப்போது, ‘நிச்சயமாக (அல்லாஹ்வுக்கு எவரையும்) இணையாக்குவதுதான் மிகப் பெரும் அக்கிரமம். (அல்குர்ஆன்: 31:13) என்ற கீழ்க்கண்ட வசனத்தை அல்லாஹ் அருளினான்.

وَاِذْ قَالَ لُقْمٰنُ لِا بْنِهٖ وَهُوَ يَعِظُهٗ يٰبُنَىَّ لَا تُشْرِكْ بِاللّٰهِ ؔؕ اِنَّ الشِّرْكَ لَـظُلْمٌ عَظِيْمٌ

லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும்போது “என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்” என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக!

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி)
நூல்: புகாரி-32 

பொய் கூறி வியாபாரம் செய்தவருக்காக இறங்கிய வசனம்

أَقَامَ رَجُلٌ سِلْعَتَهُ، فَحَلَفَ بِاللَّهِ لَقَدْ أَعْطَى بِهَا مَا لَمْ يُعْطِهَا»، فَنَزَلَتْ: {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا} [آل عمران: 77]

ஒருவர் (கடைத் தெருவில்) தம் சரக்கை (மக்கள் முன்) வைத்து, அல்லாஹ்வின் பெயரால் சத்தியமிட்டு, அதற்கு அவர் தராத விலையைத் தந்திருப்பதாக (பொய்) கூறினார். அப்போது கீழ்க்கண்ட இறைவசனம் அருளப்பட்டது.

 اِنَّ الَّذِيْنَ يَشْتَرُوْنَ بِعَهْدِ اللّٰهِ وَاَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيْلًا اُولٰٓٮِٕكَ لَا خَلَاقَ لَهُمْ فِى الْاٰخِرَةِ وَلَا يُكَلِّمُهُمُ اللّٰهُ وَلَا يَنْظُرُ اِلَيْهِمْ يَوْمَ الْقِيٰمَةِ وَلَا يُزَكِّيْهِمْ وَلَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ

அல்லாஹ்விடம் செய்த உறுதிமொழியையும், தமது சத்தியங்களையும் அற்பமான விலைக்கு விற்றோருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லை. கியாமத் நாளில் அவர்களுடன் அல்லாஹ் பேசவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (அல்குர்ஆன்: 3:77)

அறிவிப்பவர் : அபூஅவ்ஃபா (ரலி)
நூல்: புகாரி-2675 

இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக ஆனபின்பு பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு வசனங்கள் இறங்கியது. ஆகவே இறைவசனக்களுக்கு கட்டுப்பட்டு வாழும் உண்மையான முஸ்லிம்களாக நாம் வாழ வேண்டும். அதன்படி வாழ்வதற்கு அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாக.!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.