Tamil Bayan Points

இறந்த மீன்களைச் சாப்பிடுவது ஏன்?

கேள்வி-பதில்: பிராணிகள்

Last Updated on February 13, 2021 by

இறந்த மீன்களைச் சாப்பிடுவது ஏன்?

கேள்வி : இறந்த ஆடு, மாடு, கோழிகளைச் சாப்பிட மறுக்கும் நீங்கள் ஏன் இறந்த மீன்களை மட்டும் சாப்பிடுகிறீர்கள் என்று என் பக்கத்து வீட்டு அன்பர் கேட்கிறார்.

பதில் :

நீர் வாழ் உயிரினங்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. நீர் வாழ் உயிரினங்களுக்கு ஓடுகின்ற இரத்தம் கிடையாது. அதை உயிருடன் பிடித்து அறுத்தாலும் அதில் இரத்தம் சிறிதளவு கசியுமே தவிர இரத்தம் ஓடாது. வடிவது கூட இல்லை.

இஸ்லாமிய நம்பிக்கையின் படி ஓட்டப்படும் இரத்தம் தடை செய்யப்பட்டுள்ளது. ஆடு, மாடு போன்ற உயிரினங்களை அறுக்கும் போது வெளியாகும் இரத்தத்தை உண்ணக் கூடாது.

ஆடு, மாடு போன்றவை உயிருடன் இருக்கும் போது அறுத்தால் மட்டுமே அதிலிருந்து இரத்தம் வெளிப்படும். செத்த பிறகு அறுத்தால் இரத்தம் வெளிப்படாது. எனவே அந்த இறைச்சியைச் சாப்பிடும் போது இரத்தத்தையும் சேர்த்து சாப்பிடும் நிலை ஏற்படுகிறது.

இது மார்க்க ரீதியான காரணம்.

இரத்தத்தில் மனிதன் உட்கொள்ளக் கூடாத அணுக்களோ, கிருமிகளோ இருக்கலாம் என்பதற்காக இறைவன் இதைத் தடுத்திருக்கலாம். பிராணிகள் செத்தவுடன் இரத்தம் உறைய ஆரம்பித்து விடுகிறது. இரத்தத்தில் வாழ முடியாத கிருமிகள் மற்ற பகுதிகளுக்கும் பரவி விடுகிறது. இரத்தத்தைச் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் அனைத்தும் அந்த இறைச்சியைச் சாப்பிடும் போதும் ஏற்படும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

மீன்களில் அந்த நிலைமை கிடையாது.