Tamil Bayan Points

15) இருப்பில் அமரும் முறைகள்

நூல்கள்: தொழுகையின் சட்டங்கள்

Last Updated on November 25, 2023 by

முதல் இருப்பு

இரண்டாவது ரக்அத்தில் இரண்டாம் ஸஜ்தாவை முடித்து, இருப்பில் அமரும் போது அதற்குத் தனியான முறை இருக்கிறது.

கடைசி இருப்பாக இருந்தால் ஒரு விதமாகவும் இருப்பிற்குப் பிறகு தொழுகை தொடர்ந்தால் வேறு விதமாகவும் அமர வேண்டும்.

மூன்று, நான்கு ரக்அத் தொழுகைகளின் போது முதலாம் இருப்பில் இடது கால் மீது அமர்ந்து வலது காலை நாட்டி வைத்து அதன் விரல்களை கஅபாவை நோக்கி மடக்கி வைக்க வேண்டும்.

பார்க்க படம் போட்டோ…

கடைசி இருப்பாக இருந்தால் மண்டியிட்டுத் தரையில் இருப்பிடம் படியுமாறு அமர்ந்து இடது காலை, வலது காலுக்குக் கீழ் வெளிப்படுத்தி, வலது காலை நாட்டி, அதன் விரல்களை கஅபாவை நோக்கி வைக்க வேண்டும்.

பார்க்க படம்…

فَإِذَا جَلَسَ فِي الرَّكْعَتَيْنِ جَلَسَ عَلَى رِجْلِهِ اليُسْرَى، وَنَصَبَ اليُمْنَى، وَإِذَا جَلَسَ فِي الرَّكْعَةِ الآخِرَةِ قَدَّمَ رِجْلَهُ اليُسْرَى، وَنَصَبَ الأُخْرَى وَقَعَدَ عَلَى مَقْعَدَتِهِ

நபி (ஸல்) அவர்கள் இரண்டாம் ரக்அத்தில் அமரும் போது இடது கால் மீது அமர்ந்து, வலது காலை நாட்டி வைத்துக் கொண்டார்கள். கடைசி இருப்பின் போது இடது காலை வெளிப்படுத்தி, வலது காலை நாட்டி வைத்து, தமது இருப்பிடம் தரையில் படுமாறு அமர்ந்தார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

அறிவிப்பவர்: அபூஹுமைத் (ரலி)
நூல்: புகாரீ-828

இருப்பின் போது அமரும் முறைகள்

وَوَضَعَ كَفِّهِ الْيُسْرَى عَلَى فَخِذِهِ وَرُكْبَتِهِ الْيُسْرَى، وَجَعَلَ حَدَّ مِرْفَقِهِ الْأَيْمَنِ عَلَى فَخِذِهِ الْيُمْنَى،

நபி (ஸல்) அவர்கள் இடது கையை இடது தொடையின் மீதும், இடது மூட்டுக் கால் மீதும் வைப்பார்கள். வலது முழங்கையின் மூட்டுப் பகுதியை வலது தொடையின் மீது வைப்பார்கள்.

நூல்: நஸாயீ-889 (879)

وَوَضَعَ يَدَهُ الْيُسْرَى عَلَى رُكْبَتِهِ الْيُسْرَى، وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى،

நபி (ஸல்) அவர்கள் இடது கையை இடது மூட்டுக் கால் மீதும், வலது கையை வலது தொடையின் மீதும் வைத்தார்கள்.

நூல்: முஸ்லிம்-1014 (909) 

وَيَدَهُ الْيُسْرَى عَلَى رُكْبَتِهِ بَاسِطَهَا عَلَيْهَا»

நபி (ஸல்) அவர்கள் இரு கைகளையும் இரு மூட்டுக் கால்கள் மீதும் வைத்தார்கள்.

நூல்: முஸ்லிம்-1016 (911)