Tamil Bayan Points

இரவுத் தொழுகையைப் பின்பற்றி இஷா தொழலாமா?

கேள்வி-பதில்: தொழுகை

Last Updated on January 21, 2017 by Trichy Farook

இரவுத் தொழுகையைப் பின்பற்றி இஷா தொழலாமா?

முஹம்மது ரம்ஸி

இருவரது தொழுகையும் வெவ்வேறாக உள்ளதால் இக்கேள்வி எழுகின்றது. இருவருடைய தொழுகையும் ஒரே தொழுகையாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

இமாமுடைய தொழுகை கடமையானதாகவும், பின்பற்றித் தொழுபவரின் தொழுகை நஃபிலாகவும் இருக்கலாம். அது போன்று இமாமுடைய தொழுகை அஸராகவும், பின்பற்றித் தொழுபவரின் தொழுகை லுஹராகவும் இருக்கலாம். இவ்வாறு இருவருடைய தொழுகையும் வேறுபடுவதற்கு நபிவழியில் ஆதாரங்கள் உள்ளன.

முஆத் (ரலி) அவர்கள் தம் சமுதாயத்தாருக்கு இமாமாக இருந்தார்கள். அவர்கள் நபியவர்களுடன் ஜமாஅத்தாக தொழுகையைத் தொழுது விட்டு பிறகு தமது கூட்டத்தாருக்கு ஏற்கனவே தாம் தொழுத தொழுகையைத் தொழுவிப்பார்கள். இதை நபியவர்கள் ஆட்சேபணை செய்யவில்லை.

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுத் தமது சமுதாயத்தாருக்குத் தொழுவிப்பார்கள். (ஒருமுறை) முஆத் (ரலி) அவர்கள் இஷாத் தொழுகை தொழுவித்தபோது (நீண்ட அத்தியாயமான) அல்பகராவை ஓதினார்கள். அப்போது (அவர்களுக்குப் பின்னால் தொழுதுகொண்டிருந்த) ஒரு மனிதர் (தொழுகையிலிருந்து) விலகிச் சென்றுவிட்டார். எனவே முஆத் (ரலி) அவர்கள் அந்த மனிதரைக் கடுமையாக ஏசினார் போலும். (இந்தச் செய்தி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது (முஆத் (ரலி) அவர்களிடம்) “(நீரென்ன) குழப்பவாதியா? குழப்பவாதியா? குழப்பவாதியா?” என்று மூன்று முறை கேட்டார்கள். நடுத்தர (அவ்சாத்துல் முஃபஸ்ஸல்) அத்தியாயங்களிலிருந்து இரண்டை ஓதுமாறு முஆத் (ரலி) அவர்களைப் பணித்தார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல் : புகாரி 701

முஆத் (ரலி) அவர்கள் நபியவர்களுடன் ஜமாஅத்தாகத் தொழுத போதே அவர்களின் கடமை நிறைவேறிவிட்டது. பிறகு அதே தொழுகையை தம் கூட்டத்தாருக்கு இமாமாக நின்று தொழுவிக்கிறார் என்றால் இரண்டாவதாகத் தொழுவிக்கும் தொழுகை அவருக்கு உபரியாக ஆகும்.

நஃபிலாக தொழுபவரைப் பின்பற்றி அவர்களது கூட்டாத்தார்கள் கடமையான தொழுகை தொழுதுள்ளார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

இது நபியவர்களின் கவனத்திற்கு வந்த போது முஆத் (ரலி) நீண்ட அத்தியாயங்களை ஓதி தொழுவித்ததைக் கண்டித்தார்களே தவிர இவ்வாறு இமாமத் செய்வது கூடாது என்று கண்டிக்கவில்லை. எனவே இமாமுடைய தொழுகையும், பின்பற்றுபவர்களின் தொழுகையும் வேறுபடுவதற்கு நபிகளாரின் அங்கீகாரம் உள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.

மேலும் இது போன்ற நிகழ்வு நபிகளாரின் முன்னிலையில் அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே நிகழ்ந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய நிலையில் ஒரு மனிதர் வந்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (இவருடன் சேர்ந்து தொழுவதன் மூலம்) இவருக்கு லாபம் அளிக்கக்கூடியவர் யார்? என்று கேட்டனர். ஒரு மனிதர் முன்வந்தார். அவருடன் வந்த மனிதர் சேர்ந்து தொழுதார்

அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ரலி)

நூல்கள் : திர்மிதி (204) அபூதாவூத் 487

நபியவர்களுடன் ஜமாஅத்தாகத் தொழுகையை நிறைவேற்றி விட்டு அமர்ந்திருக்கும் ஒருவரை தாமதமாக வந்த ஒருவருடன் தொழுமாறு நபிகள் நாயகம் கூறுகிறார்கள். இங்கும் இருவருடைய தொழுகையும் வேறுபடுகிறது. ஒருவருக்கு கடமையாகவும், மற்றவருக்கு நபிலாகவும் அமைகிறது.

எனவே இருவரின் தொழுகைகள் வெவ்வேறாக இருக்கலாம் என்பதற்கு நபியவர்களுடைய வழிகாட்டுதல் மற்றும் அனுமதி உள்ளதால் இரவுத் தொழுகையை தொழும் இமாமுடன் சேர்ந்து கொண்டு ஒருவர் இஷாத் தொழுகையை தொழலாம். அது அனுமதிக்கப்பட்டதாகும்.