Tamil Bayan Points

இரண்டை விட்டுச் செல்கிறேன்

முக்கிய குறிப்புகள்: மாற்றப்பட்ட நிலைப்பாடுகள்

Last Updated on March 10, 2022 by

இரண்டை விட்டுச் செல்கின்றேன். அவ்விரண்டையும் நீங்கள் பற்றிப்பிடிக்கும் காலமெல்லாம் வழிதவறவே மாட்டீர்கள் என்ற கருத்தில் ஆதாரப்பூர்வமான செய்திகளும் உள்ளன. பலவீனமான செய்திகளும் உள்ளன. பலவீனமான செய்தி எது என்பதை அறிந்து அதைத்­ தவிர்த்துவிட்டு சரியான செய்திகளையே நாம் மக்களுக்குச் சொல்ல வேண்டு­ம்.

அறிவிப்பு : 1

மாலிக் அவர்கள் தொகுத்த ஹதீஸ் நூலான முவத்தா என்ற நூலில் பின்வரும் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

1395و حَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تَرَكْتُ فِيكُمْ أَمْرَيْنِ لَنْ تَضِلُّوا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا كِتَابَ اللَّهِ وَسُنَّةَ نَبِيِّهِ رواه مالك في الموطأ

நான் உங்களிடம் இரண்டை விட்டுச் சொல்கிறேன். அதை பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழிதவற மாட்டீர்கள். 1. அல்லாஹ்வின் வேதம் (திருக்குர்ஆன்).2. அவனுடைய நபியின் வழிமுறைகள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : முஅத்தா (1395)

இந்தச் செய்தியை அறிவிக்கும் மாலிக் அவர்கள் நபிகளார் கூறியதாக நேரடியாக அறிவிக்கிறார்கள். இவர் நபித்தோழர் அல்லர் . மாறாக தபஉத் தாபியீன்களில் உள்ளவராவார். அதாவது நபிகளாருக்குப் பின் இரண்டு தலைமுறைக்குப் பிறகு வந்தவர்.மாலிக் அவர்களுக்கும் நபிகளாருக்கும் இடையில் குறைந்த பட்சம் இரண்டு அறிவிப்பாளர்கள் இருக்க வேண்டும். அந்த இருவர் யார் என்ற விபரம் இல்லை என்பதால் இந்தச் செய்தி முஃளல் என்ற வகையைச் சார்ந்த தொடர்பு அறுந்த செய்தியாகும். இதன் காரணத்தால் இந்தத் தொடர் பலவீனமானதாக உள்ளது.

அறிவிப்பு : 2

இதே செய்தி இப்னு அப்தில் பர் அவர்களின் ஜாமிவு பயானில் இல்மி வ ஃபழ்லிஹி என்ற நூலில் முழுமையான அறிவிப்பாளர் வரிசையுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிப்பதாக இந்தத் தொடர் கூறுகின்றது.

جامع بيان العلم وفضله – مؤسسة الريان – (2 / 55(724- حدثنا سعيد بن عثمان، قال: حدثنا أحمد بن دحيم، قال: حدثنا محمد بن إبراهيم الدؤلي، قال: حدثنا علي بن زيد الفرائضي، قال: حدثنا الحنيني، عن كثير بن عبد الله بن عمرو بن عوف، عن أبيه، عن جده، قال: قال رسول الله, صلى الله عليه وسلم: “تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما: كتاب الله وسنة نبيه, صلى الله عليه وسلم”.

அறிவிப்பவர் : அவ்ப் பின் மாலிக் (ரலி) நூல் : ஜாமிஉ பயானில் இல்மி வபள்லிஹி (பாகம் 2 : பக்கம் : 55)

இதில் இடம்பெறும் இரண்டாவது மூன்றாவது மற்றும் நான்காவது அறிவிப்பாளர்கள் பலவீனமானவர்களாவர். இரண்டாவது அறிவிப்பாளர் அம்ர் பின் அவ்ஃப் என்பவரை இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு எவரும் நம்பகமானவர் பட்டியலில் சேர்க்கவில்லை. இப்னு ஹிப்பான் எந்தக் குறையும் சொல்லப்படாத யாரெனத் தெரியாதவரை நம்பக்கமானவர் பட்டியலில் இணைக்கும் பழக்கம் உள்ளவர் என்பதால் இதை கவனத்தில் கொள்ளத் தேவையில்லை. மூன்றாவது அறிவிப்பாளர் கஸீர் பின் அப்துல்லாஹ் என்பவர் பலவீனமானவர் என்று ஹதீஸ் துறை சார்ந்த அறிஞர்கள் கூறியுள்ளனர். சிலர் இவரை பொய்யர் என்றும் கூறியுள்ளார்கள்.

இது போன்ற ஏராளமான அறிவிப்புகள் இருந்தாலும், அனைத்தும் பலவீனமானவையாகவே உள்ளன.