Tamil Bayan Points

இமாம் தொழுகையில் ருகூவில் இருக்கும் போது சேருபவர் கைகளைக் கட்டிவிட்டு ருகூவு செய்கிறார்கள். இது சரியா?

கேள்வி-பதில்: தொழுகை

Last Updated on January 21, 2017 by Trichy Farook

இமாம் தொழுகையில் ருகூவில் இருக்கும் போது சேருபவர் கைகளைக் கட்டிவிட்டு ருகூவு செய்கிறார்கள். இது சரியா?

ஜமாஅத் தொழுகை நடந்து கொண்டிருக்கும் போது ஒருவர் தாமதமாக வந்தால் இமாம் எந்த நிலையில் இருக்கிறோரோ அந்த நிலையில் அல்லாஹு அக்பர் என்று கூறி சேர்ந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் இகாமத் சொல்வதைச் செவியுற்றால் தொழுகைக்குச் செல்லுங்கள்; அப்போது நீங்கள் அமைதியாகவும், கண்ணியமாகவும் செல்லுங்கள்; அவசரமாகச் செல்லாதீர்கள்; உங்களுக்குக் கிடைத்ததைத் தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல்கள் : புகாரீ 636, முஸ்லிம் 1053

தாமதமாக வந்தாலும் தொழுகையில் நுழைவதற்கு அல்லாஹு அக்பர் என்று கூறிய பின்னரே சேர வேண்டும்.

தொழுகையின் திறவுகோல் சுத்தமாகும். அதன் துவக்கம் தக்பீர் (அல்லாஹு அக்பர்) ஆகும். அதன் முடிவு தஸ்லீம் (அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்) ஆகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்கள்: திர்மிதீ 3, அபூதாவூத் 56, இப்னுமாஜா 271, அஹ்மத் 957

கைகளைக் கட்டிய பின்னர் தான் இமாம் இருக்கும் நிலைக்குச் செல்ல வேண்டும் என்பதற்கு ஆதாரம் இல்லை.