Tamil Bayan Points

இப்றாஹீம் நபியின் தந்தை சம்பவம்

முக்கிய குறிப்புகள்: மாற்றப்பட்ட நிலைப்பாடுகள்

Last Updated on March 10, 2022 by

இப்றாஹீம் நபி சம்பவம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் தந்தை) ஆஸரை, மறுமை நாளில் சந்திப்பார்கள். ஆஸருடைய முகத்தில் (புகையின்) கருமையும், புழுதியும் படிந்திருக்கும். அப்போது அவரிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள், ”நான் உங்களிடம் எனக்கு மாறு செய்ய வேண்டாம் என்று கூறவில்லையா?” என்று கேட்பார்கள்.

அதற்கு அவர்களின் தந்தை ”இன்று உனக்கு நான் மாறு செய்ய மாட்டேன்” என்று கூறுவார். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள் ”இறைவா! மக்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில் என்னை இழிவுபடுத்த மாட்டாய் என்று எனக்கு நீ வாக்களித்திருந்தாய். (உன் கருணையி­ருந்து) வெகு தொலைவில் இருக்கும் என் தந்தையை விட வேறெது (எனக்கு) அதிகம் இழிவு தரக்கூடியது?” என்று கேட்பார்கள்.

அப்போது உயர்வான அல்லாஹ் இப்ராஹீம் அவர்களிடம் ”நான் சொர்க்கத்தை இறை மறுப்பாளர்களுக்குத் தடை செய்து விட்டேன்” என்று பதிலளிப்பான்.
பிறகு ”இப்ராஹீமே! உங்கள் கால்களுக்குக் கீழே என்ன இருக்கிறது என்று பாருங்கள்” என்று கூறப்படும். அவர்கள் கீழே பார்ப்பார்கள். அப்போது அங்கே இரத்தத்தில் தோய்ந்த முடிகள் நிறைந்த கழுதைப்பு­ ஒன்று கிடக்கும். பின்னர் அதன் கால்களைப் பிடித்துத் தூக்கப்பட்டு நரகத்தில் அது போடப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி­)
நூல்: புகாரி 3350
அல்லாஹ் வாக்கு மீற மாட்டான் என்று இப்ராஹீம் (அலை) அவர்கள் திட்டமாக அறிந்திருந்தார்கள். இதை அவர்கள் விளங்கியிருக்கும் போது தமது தந்தைக்கு ஏற்பட்டதைத் தமக்கு ஏற்பட்ட இழிவாக அவர்கள் எப்படிக் கருதியிருப்பார்கள்? என்று இஸ்மாயீலீ கூறியுள்ளார்.

இப்ராஹீம் தம் தந்தைக்காக பாவமன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே! அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதி­ருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர். சகிப்புத் தன்மை உள்ளவர்’ என்ற இந்த இறைவனுடைய வெளிப்படையான கூற்றுக்கு இந்த ஹதீஸ் முரண்படுகிறது என்று இஸ்மாயீலீ மட்டுமின்றி மற்றவர்களும் விமர்சித்துள்ளார்கள்.
நூல்: ஃபத்ஹுல்பாரீ, பாகம்: 8, பக்கம்: 500