Tamil Bayan Points

ஆஷுரா தினத்தில் அபிவிருத்தி உண்டா?

முக்கிய குறிப்புகள்: பலவீனமான ஹதீஸ்கள்

Last Updated on June 10, 2021 by

ஆஷுரா தினத்தில் அபிவிருத்தி உண்டா?

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்:

ஆஷுரா தினத்தில் யார் தம் குடும்பத்தாரிடம் தாராளமாக நடந்து கொள்கிறாரோ அல்லாஹ் அந்த வருடம் முழுவதும் அவருக்கு தாராளமாக (அருள்) வழங்குகிறான்.

இது அபூஹுரைரா (ரலி) அவர் களின் அறிவிப்பாக ஷுஅபுல் ஈமான் (ஹதீஸ் எண் 3795), ஜுஸ்உ காஸிம் பின் மூஸா (பக்கம் 17) உள்ளிட்ட இன்னும் சில நூற்களில் பதிவாகி உள்ளது.

இதன் அறிவிப்பாளர் தொடரில் ஹஜ்ஜாஜ் பின் நுஸைர் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் ஆவார். இவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட வேண்டியவர் என்றும் பலவீனமானவர் என்றும் இமாம் அபூஹாதம் குறிப்பிட்டுள்ளார். இவரது ஹதீஸ்கள் செல்லாததாக ஆகி விட்டன என்று அலீ இப்னுல் மதீனீ விமர்சித்துள்ளார்.

தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் 3, பக்கம் 167

இவர் உறுதியானவர் அல்ல, பலவீனமானவர் என்று நஸாயியும் இப்னு மயீனும் விமர்சித்துள்ளார்கள்.

(தஹ்தீபுத் தஹ்தீப் 2/183)

மேலும் இவர் பற்றிய விமர்சனம் பார்க்க: தஹ்தீபுல் கமால் 5/461

அடுத்து இந்தச் செய்தியில் இடம் பெறும் முஹம்மத் பின் தக்வான் என்பவரும் பலவீனமானவரே.

இவரை இமாம் புகாரி மற்றும் இமாம் அபூஹாதம் உள்ளிட்டோர் இவரை ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்பட வேண்டியவர் என்று விமர்சித் துள்ளார்கள். நஸாயி இவர் உறுதியானவர் அல்ல என்று நஸாயி குறிப்பிட்டுள்ளார்.

தஹ்தீபுல் கமால் 25/182

மேலும் இதில் இடம் பெறும் சுலைமான் பின் அபீ அப்தில்லாஹ் என்பவரது நம்பகத்தன்மையும் அறியப்படவில்லை என்பதால் அபூஹுரைரா அறிவிக்கும் இந்த ஹதீஸ் முற்றிலும் பலவீனமான செய்தியாகும்.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அறிவிப்பு

மேற்கண்ட அதே செய்தி நபிகள் நாயகத்திடமிருந்து அப்துல்லாஹ்  பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள்  அறிவிப்பதாக ஷுஅபுல் ஈமான் 3513, அல்லுஅஃபாஉல் கபீர் 1408, பழாயிலு அவ்காத் 244 உள்ளிட்ட இன்னும் பல நூல்களில் பதிவாகி உள்ளது.

இதன் அனைத்து அறிவிப்புகளிலும் ஹைசம் பின் ஷத்தாஹ் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் மீது கடுமையான விமர்சனங்கள் உள்ளன.

மோசமான செய்திகளை இவர் அறிவித்துள்ளார். எனவே இவரை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது என்று இப்னு ஹிப்பான் விமர்சித்துள்ளார்.

மீஸானுல் இஃதிதால், பாகம் 4, பக்கம் 326

ஹதீஸ் துறையில் மதிப்பில்லாதவர், மறுக்கப்பட வேண்டியவர் என்று இமாம் அஸதீ விமர்சித்துள்ளார். அல்லுஃபாஃஉ வல்மத்ரூகீன் 3/180

எனவே இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கும் இந்த அறிவிப்பும் பலவீனமாகிறது.

இந்த கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. எனினும் அவை அனத்தும் பலவீனமானவையாக உள்ளன.